தையிட்டியை வைத்து இனக்கலவரத்தை ஏற்படுத்த சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகள் தீவிர முயற்சி !
சிங்கள பௌத்த நாட்டில் தையிட்டி திஸ்ஸ பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது. இது அரசாங்கத்தின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சரத் வீரசேகர, தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது. வடக்கில் பௌத்த மத உரிமைகள் மறுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தை இனவாதிகளுக்கு அரசாங்கம் வழங்கி விட்டதா ? என்று எண்ணத்தோன்றுகிறது. இதனை மறைப்பதற்காகவா, தலதா மாளிகை உற்சவம் நடத்தப்படுகிறது . அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையில் பௌத்த மதம் போதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
தையிட்டி விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காத தமிழ் தேசிய சட்டத்தரணிகளின் கட்சிகள் தேர்தல் காலங்கள் என்றவுடன் தையிட்டியையும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களையும் அரசியலாக்கி வருகின்றனர். இதன் வெளிப்பாடாக ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 23 இல் தையிட்டி விகாரை முன்பாக ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது தெரிந்ததே. இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் இனவாத அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வருவதை விரும்பாத சிங்கள – தமிழ் இனவாத சக்திகள் தங்கள் வாக்கு வங்கிக்காக ஒரு இனக்கலவரத்தையும் சில உயிர்ப்பலிகளையும் எதிர்பார்த்து தவம் கிடக்கின்றனர்.