சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை !

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது.

ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் உபாலி ஹேவகேவுக்கு கடிதம் மூலம் இந்தத் தடை குறித்து அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற உத்தியோகபூர்வ தேர்தலில் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய அதிகாரிகள் சபை நியமிக்கப்பட்ட போதிலும், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் புதிய அதிகாரிகள் சபையை ஏற்றுக்கொள்ளாததால், முன்னாள் பொதுச் செயலாளரின் பெயருக்கு குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற அலுவலகத் தேர்தலில் விளையாட்டுத்துறை அமைச்சர் மூன்றாம் தரப்பாக தலையிட்டமை, விளையாட்டு அமைச்சினால் வாக்குறுதியளிக்கப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளாமை மற்றும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் முன்னர் இணங்கிய விதிகளுக்கு அமைய செயற்படாமை போன்ற காரணங்களினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடையின்படி, இலங்கை மற்றும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வீரரும், பயிற்றுவிப்பாளரும் அல்லது அதிகாரியும் சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு எந்த போட்டிகளிலோ பங்கேற்க முடியாது.

“சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும்.”- சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை !

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் உதைபந்தாட்ட விதிகளுக்கமைய செயற்படாவிட்டால், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொஷான் ரணசிங்கவிற்கு நேற்று அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றின் மூலமே இவ்வாறு குறிப்பிட்ப்பட்டுள்ளது.

இலங்கையில் விளையாட்டுச் சட்டத்தில் சில புதிய ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியிருந்ததோடு, அதற்கு எதிராக தற்போது பல தேசிய விளையாட்டு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைமை உறுப்பினர் சங்க அதிகாரி கென்னி ஜீன் மேரி அனுப்பியுள்ள கடிதத்தில்,

“இலங்கையில் கால்பந்து அதிகாரிகளுக்கான தேர்தலில் வெளியுலக தலையீடுகள் இடம்பெறுவதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக எதிர்க்கிறது. 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பு மற்றும் காலக்கெடுவிற்கு அமைவாக உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

இதற்கு அடுத்த வருடம் ஜனவரி 22ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கையில் கால்பந்தாட்டத்தை தடை செய்வதுடன், நிதித் தடைகள் விதிக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் வெளிநாட்டில் இருப்பதால், சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுப்பிய கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் முன்னாள் செயலாளர் உபாலி ஹெவே ஆகியோர் விளையாட்டு அமைச்சுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.