இலங்கை அணி தொடர்ந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று (21) அஹமதாபாத்தில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கடந்த 10 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை எடுத்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கோரிக்கையை செவிமடுத்ததன் பின்னர் இருதரப்பு கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை அணியால் பங்கேற்க முடியும் என இன்று தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கைக்கு வழங்கப்படும் பிரதான கொடுப்பனவு கட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வாவும் கலந்துகொண்டிருந்தார்.