சர்வதேச நாணய நிதியமம்

சர்வதேச நாணய நிதியமம்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவுவது சந்தேகமே.. ! – பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே

தேவையான மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்

ஆகவே இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம் என ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே வலியுறுத்தியுள்ளார்.

இல்லையெனில் கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவுவது சந்தேகமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே நீண்ட கால கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு நாட்டில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும்.”  – இந்திரஜித் குமாரசுவாமி

“சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை நாடுவதை போன்றது.அதனூடாக பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும்.”  என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்,

நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது என்றும், அதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி முகாமைத்துவம் ஆதரிக்கப்பட வேண்டும். இலங்கை மத்திய வங்கியை அபிவிருத்தி வங்கியாகக் கருதாது அதன் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இலங்கையில் செயற்படுத்தப்பட்ட மானியத் திட்டத்திற்கு அதிகப் பணம் செலவழித்ததன் காரணமாக வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மேலும் அதிகரித்தது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு உதவ சர்வதேசநாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை – கோத்தாபாய என்ன செய்ய போகிறார்..?

மோசமான பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச பதவியில் இருக்கும் வரை அந்த நிதியுதவிகளை வழங்க முடியாது என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சி  இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து  மீண்டு வருவதற்கு தீர்வாக அப்போதைய நிதியமைச்சர் அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன் டொலர் நிதி உதவி கோரியிருந்தார்.

எனினும் அந்த நிதி உதவி கோட்டாபய ராஜபக்ச இல்லாத அரசாங்கத்திற்கே வழங்கப்படும் என இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதென உங்களுக்கு தெரியுமா? புதிய அரசாங்கத்திற்கே நாங்கள் உதவுவோம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தற்போது புதிய வைன் பழைய போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ளது. இன்னமும் அமைச்சரவை ஒன்று நியமிக்க முடியாமல் போயுள்ளது. கோட்டாபய இல்லாத அரசாங்கம் ஒன்றிற்கே உதவிகள் கிடைக்கும். எனினும் தற்போது அரசாங்கம் ஒன்றே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

“சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவிக்கான எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை .” – மசாஹிரோ நொஸாகி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளிடம் அரசாங்கம் நிதியுதவிக்கான எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என்றும் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் மசாஹிரோ நொஸாகி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், சர்வதேச நாணய நிதியத்தினால் அனைத்து அங்கத்துவ நாடுகளுடனும் குறித்த கால இடைவெளியில் இருதரப்புக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதன்போது பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் ஆராயப்படும்.

அக்கலந்துரையாடல்களின் இறுதியில் அதிகாரிகளால் தயாரிக்கப்படும் அறிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் கையளிக்கப்படும்.

அதன்படி கடந்த 7 அம் திகதி நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் 4 ஆம் சரத்து தொடர்பில் பேச்சுவார்த்தைகளையும் ஆராய்வுகளையும் முன்னெடுத்திருந்ததுடன் கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை அதன் பணிகளை முடிவிற்கு கொண்டுவந்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளிடம் நிதியுதவிக்கான கோரிக்கைகள் எதனையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என்று மசாஹிரோ நொஸாகி தெரிவித்துள்ளார்.