சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் மற்றும் IMF பேச்சுவார்த்தைகளுக்கான நியமிக்கப்பட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
கலந்துரையாடலை முடித்துக்கொண்டதன் பின்னர் விசேட அறிக்கை ஒன்றை இன்று (04) வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், இந்த தூதுக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
குறித்த அறிக்கையில்,
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிதி சவால்கள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கையின் பொருளாதார குழுவுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டோம்.
2022 ஆம் ஆண்டில் இலங்கை எதிர்க்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கடின வெற்றிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
“சீர்திருத்த முயற்சிகளுக்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, எம்மை ஊக்குவிக்கிறது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிப்பதில் உறுதியான பங்காளியாக உள்ளதுடன் நாட்டின் பொருளாதார சீர்திருத்த இலக்குகளை அடைவதில் உதவ தயாராக உள்ளது.
சர்வதேச நாணய நிதியகத்தின் ஆதரவு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வுக்கான திகதியை நிர்ணயிப்பதற்காக சர்வதேச நாணய நிதிய குழு இலங்கையின் பொருளாதார குழுவுடன் அதன் நெருங்கிய ஈடுபாட்டைத் தொடருந்தும் பேணுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.