சலீம்

சலீம்

பாகம் 17: புளொட் கட்டுப்பாட்டுக்குழுவினுள் முளைவிட்ட குழுவாதமும் அதிகாரத்தின் மீதான மோகமும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 17 (ஒளிப்பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 17

தேசம்: உமா மகேஸ்வரன் வந்ததை ஒட்டித்தான் இந்த சுழிபுரம் மாணவர் படுகொலைகள் நடந்தது. உமாமகேஸ்வரன் என்ன காரணத்துக்காக திடீரென இந்த தளத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என தெரியுமா?

அசோக்: பின் தளத்துக்கு நிறைய தோழர்கள் போகமுடியாத சூழல் இருந்தபடியால், எல்லா அமைப்புகளையும் சந்தித்து ஒரு சுமுகமான உரையாடல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த சந்திப்புக்களுக்கும், உரையாடலுக்குமாகத்தான் வந்தாரா என்பது சந்தேகம்தான்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் ஏனைய இயக்கத் தலைவர்கள் யாரும் தளத்தில் இருக்கேல.

அசோக்: யாருமே வரவே இல்லை.

தேசம்: உமாமகேஸ்வரன் தான் முதன்முதலில் வாரார்.

அசோக்: முக்கியமான தலைவர் உமாமகேஸ்வரன் தான் வருகின்றார். உமா மகேஸ்வரன் இப்படி ரிஸ்க் எடுத்து இப்படியான உரையாடலுக்கு வந்து இருப்பாரா என்பதில் சந்தேகம் இருந்தது. பிறகுதான் கேள்விப்பட்டோம், கிளிநொச்சி வங்கிக் கொள்ளை நகை தொடர்பாகத்தான் தளம் வந்தவர் என்று. நகைகள் ஒரு பகுதி யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்டு வைக்கப்பட்டதாகவும், அது உமா மகேஸ்வரனுக்கு மட்டும்தான் தெரியும் என்றும், அதை எடுக்கத்தான் உமாமகேஸ்வரன் வந்ததாகவும் அறிய முடிந்தது.

தேசம்: ஆனால் அதை அவர் வேறு யாரிடமும் சொல்லியும் எடுத்திருக்கலாம் தானே…

அசோக்: இவருக்கு தானே தெரியும், இவர் புதைத்த இடம்…

தேசம்: இந்த விஜயத்தின் போது உமா மகேஸ்வரனை நீங்களும் சந்தித்து இருக்கிறீர்கள். உங்களுடைய உரையாடல்கள் எப்படி இருந்தது ?

அசோக்: முகுந்தன் தளம் வந்த காலகட்டம் ஒரு முக்கியமான காலம் . புளொட் வட கிழக்கில் மக்கள் மத்தியில் தீவிரமாக மக்கள் அமைப்புக்களை, தொழில் முறைசார்ந்த பல்வேறு தொழிற் சங்கங்களை, மாணவர் அமைப்புக்களை, பெண்கள் அமைப்புக்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பெருநம்பிக்கைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த நேரத்தில் முகுந்தனின் வருகை நம்பிக்கையை எங்களுக்கு தந்தது. நானும் கேசவனும் இரண்டு தடவை சந்திருப்போம் என நினைக்கிறன். சந்தித்து இங்க இருந்த நிர்வாகங்கள், நிர்வாக சிக்கல்கள் எப்படி போகுது என்று ஒரு நிர்வாக உரையாடலாக தான் இருந்தது.

நிறைய பேர் சந்தித்தவர்கள். மக்கள் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்பு க்களை ச் சேர்ந்த தோழர்கள் ஆழமான அரசியல் கருத்துக்களை உரையாடி இருக்கிறார்கள். சந்தேகங்கள் முரண்பாடுகள் பல்வேறு உரையாடல்கள் எல்லாம் நடந்திருக்கு. முகுந்தன் இவ்வாறான ஒரு தளத்தை எதிர்பார்க்கவில்லை. முகுந்தனின தள வருகை தந்த நம்பிக்கையை பிறகு சுழிபுரம் படுகொலைகள் இல்லாமல் செய்து விட்டது. உண்மையில் அதன் பின் நாங்கள் எல்லாம் கடுமையாக மன ரீதியாக பாதிக்கப்பட்டோம். மிக சோர்வும், எங்கள் நம்பிக்கைகள் மீது சந்தேகம் வரத் தொடங்கிய காலம் என்று அதை சொல்லலாம்.

தேசம்: ஃப்ரெண்ட்லியா இருந்ததா அல்லது முரண்பாடா…

அசோக்: நோர்மலா இந்த உரையாடல்கள் பிரெண்ட்லியாகத்தான் இருந்தது. பெருசா அதுக்குள்ள கருத்து முரண்பாடு வரேல்ல.

நாங்கள் எல்லா பேரும் சந்தித்த பிறகு தான் இந்த படுகொலை நடக்கிறது.

தேசம்: இது எத்தனையாவது சந்திப்பு உமாமகேஸ்வரனுடன் உங்களுக்கு நேரடியாக சந்தித்தது?

அசோக்: இந்த சந்திப்புக்கு முதல் இரண்டு மூன்று தரம் சென்றல் கமிட்டி மீட்டிங் கில் சந்தித்திருக்கிறன்.

தேசம்: இந்த மூன்று நான்கு சந்திப்பையும் வைத்துக்கொண்டு உமா மகேஸ்வரனை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்திருந்தீர்கள்?

அசோக்: உமாமகேஸ்வரனுடன் நீங்கள் கதைக்கலாம். உமா மகேஸ்வரன் உரையாடலுக்கான ஒருவர். எதுவும் கதைக்கலாம் நீங்கள்.

தேசம்: முரண்படுறதுலயும் பிரச்சினை இல்லை.

அசோக்: ஆரம்ப காலங்களில் பெரிதாக முரண்பாடுகள் வந்ததாக நான் காண வில்லை. முரண்பாடுகள் , பிரச்சனைகள் பற்றி யாரும் கதைப்பதில்லைத்தானே. உண்மையில் முகுந்தன் அரசியல்வாதியாக மாற வேண்டிய ஒரு ஆள். ஒரு தேர்ந்த அரசியல்வாதிக்குரிய எல்லா இயல்புகளும் கொண்ட ஒரு மனுசன். எந்த ரொபிக்கிலயும் கதைக்கலாம் நீங்கள். அவர் மார்க்சிஸ்ட் இல்லாட்டியும், மார்க்சிஸ்ட் மாதிரியா மற்றவர்களை நம்பவைக்கக்கூடிய ஒருத்தர். மாக்சிசம் கதைப்பார். பெண்ணியம் கதைப்பார். பெரியாரியம் கதைப்பார். எல்லாம் கதைக்கக் கூடிய ஒரு ஆள். ஆனால் ஆழமான அரசியல் சித்தாந்த புரிதல் அவரிடம் இல்லை. ஒரு மேடைப் பேச்சுக்குரிய கதாபிரசங்கித்தனம் அவரிடம் இருந்தது. முகுந்தனை சரியான தலைமைக்குரியவராக வளர்த்தெடுக்க கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்த தோழர்கள் தவறிட்டாங்க. முகுந்தன் முற்போக்கான இயக்கம் ஒன்றிக்கு தலைமை தாங்கக் கூடிய நபர் அல்ல.

ஒரு காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் புளொட்டுக்குள்ள 84 வரையும் கட்டுப்பாட்டு குழு தான் பெரிய அதிகார மையமாக இருந்தது. அது முகுந்தன், சந்ததியார், கண்ணன், ரகுமான் ஜான், சலீம்.

அந்த அதிகாரத்தில் ஒரு ஒரு அங்கமாகத்தான் உமா மகேஸ்வரன் இருந்தாரே ஒழிய, உமாமகேஸ்வரன் பெரிய அதிகாரம் மிக்கவராக இருக்கல. எப்ப உமாமகேஸ்வரன் தனியானதொரு அதிகார மையமாக வாரார் என்றால் இவர்களுக்குள் முரண்பாட்டுக்கு பிற்பாடுதான்.

தேசம்: உமா மகேஸ்வரனை வென்றெடுக்க மற்ற மூன்று உறுப்பினர்களும் பிற்காலத்தில் தீப்பொறியில் போன அந்த மூன்று உறுப்பினர்களும் ஏதாவது முயற்சி எடுத்திருந்தார்களா… ?

அசோக்: வரலாற்றை பின் நோக்கி பார்த்தோமென்றால், கட்டுப்பாட்டுக் குழு, அரசியல் கல்வி என்பது ஒரு அமைப்பின் தலைமை வழிகாட்டிகளுக்கு மிக அவசியம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. மத்திய குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மார்ச்சிய அரசியல் சித்தாந்தம், புளொட்டின் அரசியல் தளம், அதன் கோட்பாடு, நடை முறை பற்றிய வகுப்புக்களை தெளிவை ஏற்படுத்தி இருக்கவேண்டும். இவை எதுவுமே இல்லை. மத்திய குழுவில் இருந்த பலருக்கு அடிப்படை அரசியல் அறிவு கூட கிடையாது.

உண்மையிலேயே பார்க்கப்போனால், சொல்லுறம் தானே பிற்காலத்தில் உமாமகேஸ்வரன் ஒரு அதிகார மையமாக படுகொலைகளுக்கு உடந்தையாக போனார் என்று. அதற்கான காரணங்களை நாங்கள் முதலே தடுத்திருக்கலாம். ஏனென்றால் நாங்கள் தானே அந்த அதிகார மையமாக இருந்தம்.

எல்லாத் தவறுகளுக்கும் காரணமாகவும் உடந்தையாகவும் இருந்து விட்டு கடைசியில் தனி நபர் முகுந்தன் மீது நாங்க எப்படி குற்றம் சுமத்த முடியும். எனக்குபுரியல்ல. கட்டுப்பாட்டு குழுவில் பார்த்தீர்கள் என்றால் முகுந்தனும் கண்ணனும் தான் பழைய புலிகளின் அரசியல் கொண்டவர்கள். ஆனல் மற்றவர்கள் அப்படி இல்லையே; கண்ணன் கூட…

தேசம்: கண்ணன் என்பது …

அசோக்: யோதீஸ்வரன்.

தேசம்: அவரும் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் இருந்து வந்தவரா?

அசோக்: இடதுசாரி பாரம்பரியம். ஆனால் கொஞ்சம் முகுந்தனின் விசுவாசி. கண்ணனின் அரசியல் முகுந்தனோடு உடன் பட்டதல்ல. கண்ணன் தளத்தில் நின்ற சமயம் நான் நிறைய நேரம் கண்ணனோடு உரையாடி இருக்கிறன். இடதுசாரிய அரசியல் ஆர்வம் கொண்டவர். இதை விட முக்கியம் கற்றுக் கொள்ள அறிந்து கொள்ள, உரையாடக் கூடிய மனநிலை அவரிடம் இருந்தது. நியாயமாக உரையாடக்கூடிய ஒரு ஆள். அப்ப கட்டுப்பாட்டு குழுவில் இருந்தது சந்ததியார், ரகுமான் ஜான், சலீம், உமா மகேஸ்வரன், யோதீஸ்வரன் கண்ணன் இவங்க தான். இவங்க நினைத்திருந்தால் இயக்கத்தை சரியான திசை வழி நோக்கி கொண்டு போய்இருக்கமுடியும். முகுந்தனை கட்டுபடுத்தி இருக்கமுடியும்.

தேசம்: மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக இவர்கள் இருந்துள்ளார்கள்…

அசோக்: உண்மைதான். ஆனால் இதனால் எந்த பிரயோசனமும் இல்லை, எந்த மாற்றங்களையும் இவர்கள் ஏற்படுத்தவில்லை. பல பிரச்சனைகளை தீர்த்து இருக்கலாம். ஆனால் இது பற்றிய எந்த அக்கறையும் இருகல்ல. அமைப்பின் அரசியல் முன்னேற்றத்தை விட நாங்க ஒவ்வொருவரும் எங்களின் தனிப்பட்ட நலன் சார்ந்த அதிகாரம் சார்ந்த விடயங்களில்தான் கவனம் செலுத்தினம். எங்கட அதிகார நலன்களினால்தானே முகுந்தன், சந்ததியார் முரண்பாடு உருவாகிறது. குழுவாதம் ஆரம்பமாகிறது. இப்ப பார்க்கப் போனால் அதிகாரப் போட்டியாகத் தான் பார்க்கிறேன் அதை. அதிகார போட்டியின் நிமித்தமாக உருவான முரண்பாடுதான் இதை இரண்டு குழுக்களாக உருவாக்குது. சந்ததியார் குழுவாகவும் முகுந்தன் குழுவாகவும். இடையில அகப்பட்டது தளத்தில் இருந்த நாங்கள்தான். நாங்க சந்ததியாரும் இல்லை முகுந்தனும் இல்லை.

தேசம்: நீங்கள் மட்டும் இல்லை இந்த அமைப்பை நம்பி சேர்ந்த ஆயிரக்கணக்கான போராளிகளும் தான்

அசோக்: உண்மைதான். உதாரணமாக எனக்குத் தெரியும் தோழர் கேசவனுக்கு அரசியல்துறைப் பொறுப்பாளராக வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. உண்மையில் அந்த அரசியல் தகமை கேசவனுக்கு இருந்தது. வாசுதேவா அரசியல் துறை பொறுப்பாளருக்கு தகுதி அற்றவர். ஆனால் அதை முகுந்தன் வாசுதேவாவுக்குக்கு கொடுத்து விட்டார். கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்தவர்கள் இந்த நியமனத்தை தடுத்து இருக்கவேண்டும். ஆனால் இவங்க வாயே திறக்கல்ல.

தோழர் ரகுமான் ஜான் பாலஸ்தீன பயிற்சி முடித்து வரும் போது அவருக்கு இராணுவதுறைச் செயலர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிரபார்ப்பு பலரிடம் இருந்தது. இதற்கு முழு தகமையும் கொண்டவர் அவர். அவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது, தொடர்ந்து இராணுவப் பொறுப்பாளாராக கண்ணனே இருக்கிறார். மாற்றங்கள் நடந்திருக்க வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளும் ஜனநாயக மனநிலையை, பண்பை உட் கட்சி ஜனநாயகத்தை நாங்க தலைமை மட்டத்தில் ஏற்படுத்தி இருக்க வேண்டும். முகுந்தனின் தன்னிச்சையான போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாங்க என்ன செய்தம். முகுந்தன் சர்வாதிகாரியாக வளர்வதற்கு நாம் ஆரம்பத்தில் துணை போனோம். முகுந்தன் பயன்படுத்திக் கொண்டார்.

அடுத்தது குழுவாதம் இருக்குதானே, இரண்டு சமனான நபர்கள் இருக்கும் போது அவங்களுக்குள் புரிந்துணர்வு இல்லையென்றால் இயல்பாகவே குழு வாதங்கள் உருவாகும். அவங்களுக்குள்ள ஆரோக்கியமான தலைமைத்துவ ஜனநாயக பண்பு இல்லை என்று சொன்னால் குழு வாதம் உருவாகும். அது இயல்பாகவே உருவாகிவிட்டது. முகுந்தன் – சந்ததியார் என்ற முரண்பாட்டு உருவாக்கம் வந்தவுடனே அவர்களைச் சுற்றி குழுக்கள் உருவாகும் போது, முரண்பாடுகளும், பகைகளும் உருவாகும். அது வளரும். இது இயல்வுதானே.

தேசம்: இந்த அதிகாரத்துக்கான போட்டிதான் இந்தப் பிரிவினையை கொண்டு வருதேயொழிய ஒரு ஜனநாயக கோரலா இருக்கல என்று நினைக்கிறீர்கள்.

அசோக்: புளொட்டுக்குள்ள பின் தளத்தில் உயர் மட்டங்களில் உட்கட்சி ஜனநாயகம், தோழமை என்றதே இருக்கல எப்பவும். பதவிகளை அரசியல் ஆளுமை, தகமை, தேர்ச்சி கொண்டவர்களுக்கு வழங்கும் நிலை இருந்ததே இல்லை. இவ்வாறான அரசியல் கலாச்சார அடித்தளத்தை ஆரம்பத்திலேயே உருவாக்க நாங்க தவறிவிட்டோம்.

தேசம்: பிரிய வெளிக்கிட்டவர்களுக்கு கூட அந்த ஜனநாயகம் இருக்கேல என்று சொல்லுறீங்களா?

அசோக்: ஜனநாயக மத்தியத்துவம் இருந்தால், நீங்கள் எப்படி தன்னிச்சையான மத்திய குழுவை உருவாக்க இயலும். ஆரம்பத்தில். குறைந்தபட்சம் ஜனநாயக ரீதியிலான மத்திய குழுவை உருவாக்கி இருந்ததால், தளத்தில் நிறைய தோழர்கள் வேலை செய்தவர்கள்.

அவர்களை உள்வாங்கி இருக்க வேண்டும். இந்த மத்தியகுழு உருவாக்கம் பற்றி முன்னரே கதைத்திருக்கிறம். சிறையில் இருந்து வந்த ஆட்களையும், உங்களுக்கு வேண்டப்பட்டவர்களையும்தானே தானே நீங்கள் மத்திய குழுவுக்கு எடுத்தனீங்கள். அரசியல் ரீதியாக எந்த வளர்ச்சியும் இல்லாத இராணுவக் கண்ணோட்டம் உள்ள பல்வேறு பிரச்சனைகளால் சிறைக்குப் போன ஆட்கள் சிறை உடைப்பின் பின்னர் வாறாங்கள்.

மத்திய குழு உருவாக்கும் போது அரசியல் ரீதியாக வளர்ந்த ரகுமான்ஜான், சந்ததியர், கேசவன் ,சலீம், பார்த்தன் இவங்களெல்லாம் அரசியல் ரீதியாக மார்க்சிய ஐடியாலஜி கொண்ட தோழர்கள்… இவங்கள் மறுத்திருக்க வேண்டும், இவ்வாறானவர்களை கொண்டு வரக்கூடாது என்று சொல்லி. ஆரோக்கியமான ஒரு மத்திய குழுவை உருவாக்கி இருக்க வேண்டும் இவர்கள். ஆனால் என்ன நடந்தது, இவர்களும் சேர்ந்து தங்கள் தங்களுக்குரிய வேண்டியவர்களை நியமித்து ஆரம்பத்திலேயே குழு வாத மனநிலையை உருவாக்கி விட்டாங்க. பிறகு எப்படி இவங்களிட்ட ஜனநாயக பண்புகள் இருக்கமுடியும்.

தேசம்: மற்றது ஒன்று சொல்லுவார்கள் புளொட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் சுழிபுரம் தான் என்று. அப்படி பாக்கேட்க சந்ததியார், சுந்தரத்தால் கொண்டுவரப்பட்டவர்கள்தான் பெரும்பாலான புளொட் உறுப்பினர்கள். அவர்களை எப்படி உமாமகேஸ்வரன் வென்றெடுக்கக் கூடியதாக இருந்தது… ?

அசோக்: உமாமகேஸ்வரன் ஒரு அரசியல் சாணக்கியன். சந்ததியார் என்ன செய்வார் என்று கேட்டால் எல்லாவற்றிலும் கட்டுப்பாடாக இருப்பார், ஒழுங்கை எதிர்பார்ப்பார். பல விடயங்களில் கடுமையானவர். குறிப்பாக பண விடயங்களில் சிக்கனமாக, எளிமையாக வாழ வேண்டும் என்ற நியாயமான கொள்கை கொண்டவர்.

ஒரு காலகட்டத்தில் பார்த்தீர்களென்றால், படுகொலையுடன் சம்பந்தப்பட்ட, சந்ததியாருக்கு எதிராக மாறின தோழர்கள் எல்லோரும், சுழிபுர தோழர்கள் தான். முழுப்பேரும் சந்ததியாரால் கொண்டுவரப்பட்ட ஆட்கள்தான். சந்ததியாருடைய உறவினர்களும் கூட. முரண்பாடுகள் எப்படி ஏற்படுகிறதென்றால், சந்ததியார் சிக்கனமும் எளிமையும் வேண்டும் என நினைப்பவர். இதில் கடுமையாக இருப்பார். கணக்கு வழக்குகள் எல்லாம் பாப்பார். ஆனால் பின் தளத்தில் இருந்த பலரும் இதற்கு எதிர்மாறானவர்கள்.

சங்கிலியன் தலைமையில் இருந்த உளவுப்பிரிவு எந்த அரசியலும் அற்ற வெறும் வன்முறை மனநிலை கொண்ட கூட்டம். இவங்களின்ற செலவுகள் எதற்கும் வரையறை கணக்கு வழக்கு எதுவும் இல்லை. தன்னிச்சையான போக்கு. உண்மையிலேயே புளொட்டின் உளவுத்துறைக்கு எக்கச்சக்கமான பணம் செலவழிக்க பட்டிருக்கு. எதற்கும் கணக்கு வழக்கு இல்லை. கந்தசாமி தலைமையிலான உளவுத்துறை என்ன செய்கிறதென்றே யாருக்கும் தெரியாது. ஒரு அரசியல் இராணுவ இயக்கத்தின் உளவுத்துறை என்பது எப்படியான கட்டமைப்பு கொண்டு இருக்க வேண்டுமோ, அதற்கு எதிர்மாறாகத்தான் புளொட்டின் உளவுத்துறை இருந்தது.

அரசியல் அற்ற வெறும் சண்டியர்கள் கூட்டம் அது. இது தோழர் சந்ததியாருக்கு பிடிப்பதே இல்லை. இந்த முரண்பாட்டை முகுந்தன் சாணக்கியமாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். இவங்களுக்கு பணம், பூரண சுதந்திரம், அதிகாரம், ஆசிர்வாதம் எல்லாம் முகுந்தன் பக்கத்திலிருந்து தாராளமாக கிடைத்தது. அப்ப என்ன நடக்கும். சந்ததியாரோடு முரண்பாடு பகை வரும். குழுவாதம் உருவாகும். முகுந்தன் விசுவாசம் உருவாகும். இதுதான் நடந்தது. முகுந்தன் விசுவாசி என்றால் யாரும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. இந்தப் போக்கை முகுந்தன் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். விசுவாசிகளும் நன்றாக பயன்படுத்தினாங்க. இது உளவுத் துறையில் மாத்திரம் அல்ல, எல்லா மட்டங்களிலும் இருந்தது. புளொட்டில் பின் தளத்தில் எதற்கும் எந்தவித கணக்கு வழக்கும் இல்லை. முகுந்தன் விசுவாசியாக இருந்தால் எந்த கணக்கு வழக்கும் காட்டத்தேவையில்லை என்ற நிலைதான் இருந்தது.

தேசம்: உளவுத்துறையை உருவாக்கினது யார் ?

அசோக்: உளவுத்துறையை உருவாக்கியது கட்டுப்பாட்டுக் குழுதான். மத்திய குழுவுக்கும் அதற்கும் தொடர்பில்லை. உளவுத்துறை உமா மகேஸ்வரனுக்கு கீழ தான் இருந்தது. ஆரம்ப காலத்தில் உறவு துறை வந்து விட்டது. இந்தக் கட்டுப்பாட்டு குழு என்ன செய்திருக்க வேண்டும் ஆரோக்கியமான உளவுத்துறையை உளவுத்துறைக்கான தேர்ச்சி அறிவு கொண்டவர்களை கொண்டு உருவாக்கி இருக்கவேண்டும். தங்களுடைய கட்டுப்பாட்டிக்குள் வைத்திருக்க வேண்டும். புளொட் உளவுத்துறைக்கு தெரிந்த விடயம் கொலை செய்யவும், சித்திரவதை செய்யவும்தானே.

ஒரு தடவை தளத்தில் இருந்து மத்திய குழுகூட்டத்திற்கு போன நான், கேசவன், முரளி, ஈஸ்வரன் அப்ப குமரனும் வந்திருந்தவர். எங்களிடம் சந்ததியார் இந்த பிரச்சனைகளை பற்றி சொல்லி, புளாட்டின் கணக்கு வழக்கு, வரவு செலவு பற்றிய விபரங்களை மத்திய குழுவில் எங்களை கேட்கும்படி சொன்னார். எனென்றால், தளத்தில் எங்களிடம் ஒழுங்கான வரவு செலவு அறிக்கை இருந்தது. பின் தளத்தில் அது இல்லை. தளத்தில் நாங்கள் கணக்கு வழக்கு எல்லாம் ஒழுங்காக வைத்திருக்கிறோம். நீங்க கேளுங்க என்று சொன்னார். அப்ப மத்திய குழுக் கூட்டம் நடக்கேக்கை நாங்க கேட்க எண்ணி இருந்தம். தோழர் குமரன் கேட்பதாக சொன்னார்.

தேசம்: இது எத்தனையாவது மத்திய குழுக் கூட்டம்?

அசோக்: இது 84 நடுவுக்க இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

தேசம்: அப்ப இது ஒரு நாலாவது ஐந்தாவது மத்திய குழுக் கூட்டம் ஆக இருந்திருக்கலாம்.

அசோக்: அனேகமாக மூன்றாவது கூட்டமாக இருக்கலாம். நிர்வாகம் எல்லாம் ஒழுங்கமைக்கப்பட்டதுக்கு பிறகுதான் இது வருது. தளத்தில் கணக்கு வழக்கு எல்லாம் ஒழுங்காக வைத்திருக்கிறோம். அப்ப மத்திய குழு கூட்டத்தில் குமரன் கேட்பார் என்று பார்க்க குமரன் கேட்கேல.

தேசம்: இது உமாமகேஸ்வரன் தளம் வந்துட்டு போனதற்கு முதலா? பிற்பாடா இந்த கூட்டம் நடக்குது.

அசோக்: அதுக்கு முதல் நடந்தது. கடைசியில் நான்தான் கேட்டேன். அப்ப உடனே முகுந்தன் சொன்னார் மணியம் நாங்கள், மணியம் என்றால் சந்ததியார். மணியம் நாங்கள் கட்டுப்பாட்டு குழுவில் இதை தீர்மானித்து போட்டு, மத்திய குழுவுக்கு அறிவிப்பம் என்று. அப்ப நான் சொன்னேன் மத்தியகுழுவில் இங்க அதைப்பற்றி இப்ப கதைக்கலாம்தானே என்று. உடனே முகுந்தன் கட்டுப்பாட்டுக்குழுவில்தான் இதுபற்றி முதலில் கதைக்க வேண்டும். என்ன மணியம் என்றார். உடனே சந்ததியார் சொன்னார் ஓமோம் அப்படி செய்யலாம் என்று. ஆனால் கேட்கச் சொன்னதே இவர்தான். அதோட கதை முடிந்து விட்டது. இந்த கணக்கு வழக்கு பற்றி சொஞ்சமாவது அன்றைக்கு உரையாடி இருக்வேண்டும். உரையாடி இருந்தால் சில தீர்மானங்களை கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்க முடியும்.

தேசம்: சந்ததியார் அப்படி செய்யல்ல.

அசோக்: ஓம். அப்ப என்ன சொல்லி இருக்க வேண்டும் அவர். இல்லை இல்லை மத்திய குழுவிலேயே கதைப்போம் என்று சொல்லி இருக்க வேண்டும். பிறகு அந்தக் கதை அதோடயே போயிட்டுது. அப்ப என்ன பிரச்சினை என்று கேட்டால் ஸ்ட்ராங்கா ஃபைட் பண்ணக்கூடிய நபரா சந்ததியார் இருக்கல. சந்ததியார் என்ன செய்தவர் என்று கேட்டாள், நீங்க கேளுங்க, அவங்க கேளுங்க என்று சொல்வார். அவங்க ஓமோம் என்று சொல்லி விட்டு முகுந்தனிடம் இவர் சொன்னதை முரண்பாடாக்கி சொல்லி விடுவார்கள். முரண்பாடுகளைத் தூண்டி விடுவார்கள். சந்ததியார் ஆளுமையான அரசியல் தளம் ஒன்றை பின் தளத்தில் உருவாக்கி இருக்க முடியும். அதற்கான காலம் ஆரம்பத்தில் இருந்தது. அவருக்கு பின்னால ஒரு உறுதியான அரசியல் அணியை திரட்டி இருக்கலாம். அது அவரால் முடியாமல் போய் விட்டது. முகுந்தனின் தன்னிச்சையான போக்குகளும் அதிகாரமும் உச்ச நிலையை அடைந்த பின் கடைசி காலங்களில் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை.

தேசம்: அவரை நம்பி போவதற்கான சூழல் இருக்கல.

அசோக்: அந்த நேரம் முகுந்தனின் அதிகாரம் எல்லா இடங்களிலும் நிலைபெற்றுவிட்டது. சந்ததியார் அதை எதிர்க்க கூடிய உறுதியுள்ளவராக இருக்கல்ல. காலம் கடந்துவிட்டது. அவருடைய சுழிபுரத் தோழர்களை ஒழுங்காக அரசியல்மயப்படுத்தி ஜனநாயக பண்பு கொண்ட மனிதர்களாக, அதிகாரங்களுக்கு எதிரானவங்களாக வளர்த்தெடுத்து இருந்தாலே, புளாட் இந்த அழிவை சந்தித்திருக்க முடியாது. சந்ததியாருடைய மிக விசுவாசிகள் தானே முகுந்தன் பக்கம் போனது. அவர் பிரச்சனைகளை அரசியல் ரீதியாகவும், சிநேக பூர்வமாகவும் கையாண்டிருந்தால் குழுவாதத்தை தவிர்த்திருக்க முடியும். முகுந்தனின் அதிகாரத்தை இல்லாமல் செய்திருக்க முடியும்.

முகுந்தன் என்ன செய்தார் என்றால் தவறான நபர்களுக்கு மிகவும் தாராளவாதத்தை, அதிகாரத்தை கொடுத்தார். உண்மையில் புளொட்டின் அழிவு என்பது முகுந்தனோடு எங்களையும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி பார்க்க வேண்டிய ஒன்று.

தேசம்: உங்களுடைய கருத்துப்படி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பிரகடனப்படுத்தப்பட்டு 84 டிசம்பர் காலப்பகுதி வரைக்கும் உட் படுகொலைகள் என்று சொல்லுமளவுக்கு எதுவும் நடக்கலை

அசோக்: அப்படி சொல்ல முடியாது. இது பற்றிமுன்னமே கதைத்திருக்கிறம். உட் படுகொலைகள் தொடர்பாக சந்தேகம் வந்திருக்கு. உள்ளுக்குள்ள கொலைகள் நடக்குது என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக கதைகள் வர தொடங்கிட்டுது 84 க்கு பிற்பாடு.

தேசம்: 84 டிசம்பருக்கு முதலா? பிறகா?

அசோக்: 84 கடைசியில் இந்தக் கதைகள் வந்துவிட்டது. எங்களை நோக்கி இந்தக் கேள்விகள் வர தொடங்கிவிட்டது.

தேசம்: குறிப்பாக அப்படி யாருடைய படுகொலைகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

அசோக்: கொலைகள் நடக்குது என்று தெரியுமே ஒழிய விபரங்கள் தெரிநதிருக்கவில்லை.

தேசம்: யார் என்றது அது உண்மையா பொய்யா என்பது தெரியாது உங்களுக்கு…

அசோக்: தெரியாது. கேம்பில் படுகொலைகள் சித்திரவதைகள் நடக்குது என்று சொல்லி கதைகள் எல்லாம் வரத் தொடங்கி இருந்தது. நான் நினைக்கிறேன், ஒரு சென்ட்ரல் கமிட்டி மீட்டிங்க்கு பின்தளம் போன நாங்க பயிற்சி முகாம்களுக்கு போய் இருந்தம். எங்களை சந்தித்த தோழர் ஒருவர் சித்திரவதைகள், கொலைகள் நடப்பதாக தோழர்கள் சந்தேகப்படுவதாக சொல்கிறார். ஆனா எந்த ஆதாரமும் இல்லை. மத்திய குழுவில் இதைக் கேட்க வேண்டும் என்று யோசிக்கிறம். அங்க மத்திய குழு கூட்டத்திற்கு போனா யாருமே கேட்கவில்லை.

தேசம்: இது சம்பந்தமா நீங்கள்…

அசோக்: அப்ப அந்தக் கூட்டத்தில் நான் கேட்கிறேன். முகுந்தன் கோபத்தோடு கேட்டார் எங்க கேள்விப் பட்டீங்க என்று. அப்ப நான் சொன்னேன் தளத்தில் என்று. ஏனென்றால் கேம்பில கேள்விப்பட்ட து என்று சொன்னால் யார் சொன்னது என்று அடுத்த கேள்வி வரும் என்று எனக்கு தெரியும். முகுந்தன் உடனே உணர்ச்சிவசப்பட்டு கடும் கோபத்தில் சொன்னார் ஆதாரம் இல்லாமல் எதுவும் கதைக்கக் கூடாது என்று சொல்லி. எல்லாரும் கப்சிப். யாருமே அந்த கூட்டத்துல கதைக்கேல. அந்தக் கூட்டத்தில் ரகுமான்ஜான் இல்ல. ரகுமான்ஜான் இருந்திருந்தால் கதைத்திருக்ககூடும்.

தேசம்: அந்த கூட்டத்தில் சந்ததியார் இருக்கிறார்.

அசோக்: ஓம். எல்லாரும் இருக்கினம்.

தேசம்: அதற்கு பிறகு நீங்கள் அந்த கேள்விய விட்டுட்டீங்க…

அசோக்: யாருமே சப்போர்ட் பண்ணல. அதனோடு அந்த உரையாடல் முடிந்து விட்டது.

தேசம்: சந்ததியார் உங்களுக்கு காந்தியத்தின் மூலமாகவும் தெரியும் தானே. அவரோட உங்களுக்கு நெருக்கம் இருக்கும் தானே. கூட்டத்துக்கு வெளியிலயும் அவர் இதை பத்தி உங்களோட கதைக்கவில்லையா?

அசோக்: வெளியில கதைப்பார். கூட்டத்தில நாங்கள்தான் முரண்படுவமேயொழிய யாருமே கதைக்க மாட்டாங்க.

தேசம்: இதைப்பற்றி கேட்டிருக்கிறீர்களா சந்ததியாரிட்ட நீங்கள்?

அசோக்: இல்லை இல்லை. தோழர் சந்ததியாரும் சிலவேளைகளில் அதிகாரம் கொண்டவராகவும் நடப்பார். அது எங்களிட்ட மாத்திரம்தான்.

ஒருதடவை அவரோடு முரண்பட வேண்டி வந்தது. தமிழீழ மாணவர் பேரவை டெசோ பொங்கும் தமிழமுது என்ற சஞ்சிகையை வெளியிட்டது. இதன்ற ஆசிரியராக இருந்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அதன் பொறுப்பு மெட்ராஸில் இருந்தது. மெட்ராஸில் தோழர் கேசவன் பொறுப்பில் இருந்தவர். பேராசிரியர் வித்தியானந்தனின் மருமகன் என்று நினைக்கிறேன்.

தேசம்: தமிழகத்தை சேர்ந்தவரா சஞ்சிகை ஆசிரியர்…

அசோக்: ஓம். தமிழகத்தைச் சேர்ந்த இலக்கிய ஆர்வம் கொண்ட தோழர் அவர். ஆனால் அவர் கண்ணதாசனுடைய ரசிகர். ஒரு தடவை பொங்கும் தமிழமுது கண்ணதாசன் சிறப்பிதழாக வெளி வந்தது. அது தளத்துக்கு வந்தது. தளத்துக்கு வந்தவுடனே எங்களுக்கு பெரிய சிக்கலாக இருந்தது. மாக்சிசம் கதைக்கிறம், முற்போக்கு கதைக்கிறம் கண்ணதாசன் சிறப்பிதழ் சஞ்சிகையை எப்படி வினியோகிப்பது என்று. அப்ப டெசோ கமிட்டி கூடி முடிவெடுத்தது, நான் மட்டும் முடிவெடுக்கவில்லை. குருபரன் , தீபநேசன், தனஞ்சயன், ஜப்பார் சிவகுமார், அர்ச்சுனா, மகிழ்ச்சி, தமிழ், தம்பா, சுகந்தன் விமலேஸ்வரன் என்று மிகத்தீவிரமாக இயங்குகின்ற மாணவர் அமைப்பு அது. அரசியல் தத்துவார்த்த ரீதியிலும் அவங்கள் பெரிய வளர்ச்சி. தளத்தில் மாணவர் அமைப்பினை வளர்த்து கட்டி அமைப்பதில் இவர்களின் பங்களிப்புதான் அதிகம். அவங்கள் கூடி முடிவு எடுத்துட்டு சொன்னார்கள் இதை விநியோகிக்க இயலாது என்று சொல்லி. சரி என்று சொல்லி விநியோகம் செய்கிறது இல்லை என்று முடிவெடுத்து அதை முடக்கியாச்சு.

நான் பின்தளம் போனபிறகு சந்ததியார் அதைப் பற்றி விசாரித்தவர். அதை எப்படி நீங்கள் முடக்க முடியும் என்று சொல்லி. கண்ணதாசன் பற்றிய சிறப்பிதழ் என்று என்று சொல்லி அரசியல் சார்ந்து என் உரையாடல் இருக்க, அதை தடுத்து, இல்லை இல்லை நீங்கள் முடிவு பண்ண முடியாது என்று சொல்லி என்னோடு முரண்பாடு.

அதிகாரம் கிடைத்தால் சந்ததியாரும், முகுந்தனும் ஒன்றுதான். அதிகாரம், அதன் கவர்ச்சி மிகமிக ஆபத்தானது. எனக்கும் அதிகாரம் கிடைத்திருந்தால் அந்த நிலைக்கு தான் போய் இருப்பேனோ தெரியாது. ஏனென்றால் அதிகாரம் என்பது ஒரு கொடுமையான போதை. அரசியல் கல்வி சார்ந்து கோட்பாடு சார்ந்து நீங்கள் வளர்க்கப்படாது விட்டால் அதிகாரம் எல்லாரையும் அப்படித்தான் கொண்டு செல்லும்.

தேசம்: நீங்கள் ஒரு தடவை போகேக்க உங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுது என்று சொன்னது அது இந்த மத்திய குழுவுக்கா அல்லது …

அசோக்: அது அதற்குப் பிற்பாடு. அது பாதுகாப்பல்ல. பாதுகாப்பு என்ற பெயரில் எங்களை கண்காணிக்க செய்யப்பட்ட ஏற்பாடு அது.

தேசம்: நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 84 டிசம்பர் வரைக்கும் பெரிய பெயர் குறிப்பிட்டு சொல்வது மாதிரியான படுகொலைகள் ஒன்றும் கதைக்கப்படேல.

அசோக்: படுகொலைகள் நடந்திருக்கு..

தேசம்: தெரிய வரேல்ல.

தேசம்: நான் நினைக்கிறேன் 84 இல் தான் மனோ மாஸ்டர் விடுதலைப்புலிகளால் கொல்லப்படுகிறார் என்று நினைக்கிறேன்.

அசோக்: ஓம்

தேசம்: இவ்வாறான குழப்பமான காலகட்டத்தில் 84 காலப்பகுதி முடியுது.