வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
எத்தனை கல்விச் சீர்திருத்தங்களைச் தயார் செய்தாலும், அதற்கேற்ப மனித வளங்களை முகாமைத்துவம் செய்யாவிட்டால், கல்விச் சீர்திருத்தங்கள் பலனளிக்காது எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
மாத்தறை கொடபொல இலுக்பிடிய கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் திங்கட்கிழமை (25) கலந்துகொண்டபோது, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 1981 குழுவின் முழுமையான நிதி உதவியுடனும் 12ஆவது இராணுவப் பொறியியலாளர் சேவைப் படைப்பிரிவின் பங்களிப்புடனும் இந்தப் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்குச் சென்ற சாகல ரத்நாயக்கவுக்கு மாணவர்களால் அமோக வரவேற்பளிக்கட்டது.
மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் பல கலைநிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தில் மேலும் உரையாற்றும் சாகல ரத்நாயக்க மேலும் கூறியதாவது,
”இரண்டு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு ஆறு மாத காலமே சென்றது. இப்பாடசாலையின் பௌதீக வளங்கள் மட்டுமன்றி மாணவர்களின் கல்வியிலும் தற்போது முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளில் அதிபரின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. இக்கட்டடத்தை நிர்மாணிப்பதில் இராணுவம் பாரிய பங்களிப்பு வழங்கியது.
வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாடு வெற்றி பெறாது. கல்வித் திட்டங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் அந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மனித வளத்தை நிர்வகிக்க வேண்டும். கடந்த காலங்களில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு வரிசைகள் ஏற்பட்டன. அந்த நிலையில் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்நாட்டின் பொருளாதார நிலைமையை குறிப்பிடத்தக்க நிலைக்குக் கொண்டு வர பாடுபட்டார்.
அதற்கு அப்பால் இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புதிய வேலைத் திட்டம் அவசியம். அதற்காக ஜனாதிபதி தற்போது பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். இலங்கை மத்திய வங்கி சுயாதீனமான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய வங்கி விவகாரங்களில் இனி அரசியல்வாதிகள் தலையிட முடியாது என்பதே இதன் பொருள். மத்திய வங்கி நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். மேலும், ஒவ்வொரு நிறுவனமும் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். அதற்குத் தேவையான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செயற்படாத நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
அத்துடன், நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார வேலைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்துவமான முறைகளின் மூலம் அந்தப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில் தெனியாயவுக்கும் விசேட இடம் உண்டு. சுற்றுலாத் துறையிலும் தேயிலைத் தோட்டத் தொழிலிலும் தெனியாயவுக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது. அதற்கேற்ப இப்பகுதி மக்களுக்கும் செலவுக்கு ஏற்ற வருமானம் பெறும் பின்னணியை தயார் செய்து வருகிறோம்” என சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 1981 குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான அமநடா வீரசிங்க உள்ளிட்ட உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் ஏ.ஜி.என்.சி. லக்மால் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.