சாணக்கியன்

சாணக்கியன்

”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” – இரா.சாணக்கியன்

”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” வடமாகாணத்தில் கிளிநொச்சி என்னும் இடத்திற்குள்ளேயே செல்லமுடியாத அமைச்சர் ஒருவரின் ஆதரவினை கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என நினைத்தால் அது ஒரு சவாலான விடயம் தான்.

 

ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திசாநாயக்காவினை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடப் போகின்றார்? கூட்டமைப்பினை எவ்வாறு அமைக்கப்போகின்றார்? என்பதே தற்போது எழுந்துள்ள பிரச்சினை.

 

இன்று மொட்டுக்கட்சியும் பிரிந்த நிலையில் உள்ளது.மொட்டுக்கட்சி உருவாக்கப்பட்டது ராஜபக்ஸக்களின் எதிர்காலத்திற்காகும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து பொறுப்புகளும் மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்தநேரத்தில் அதனை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிவிட்டு மொட்டுக்கட்சியை ஆரம்பித்தனர். இன்று அந்த கட்சி குழப்பநிலையில் உள்ளது.

 

இன்று நாமல் ராஜபக்ஸ தனது தந்தையினைப் போன்று கும்பிடு போட்டுக்கொண்டு விகாரைகள் எல்லாம் சுற்றித்திரிகின்றார். இவர்கள் விகாரைகளை சுற்றித் திரிவதே நாட்டுக்கு ஒரு ஆபத்தான நிலைமையாகப் பார்க்கப்படுகின்றது.

 

அதேநேரம் மொட்டுக்கட்சின் பிரதான உறுப்பினரும் பசில் ராஜபக்ஸவின் வலதுகையுமான பிரசன்ன ரணதுங்க நாமல் ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் மொட்டு பிளவுபடும் என்று சொல்கின்றார்.

 

இன்று அவர்களுக்குள்ளே குழப்பம் இருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் தேர்தல் ஒன்று நடந்தால் அந்த சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஐந்து வருடத்திற்கு ஓரு முறை வரும் சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்தாமல் விட்டால் அடுத்த ஐந்து வருடத்திற்கு எமது எதிர்காலம் மிக மோசமான எதிர்காலமாகவே இருக்கும்” இவ்வாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவோ பூர்த்தி செய்யும் எந்த ஒரு நடவடிக்கை தொடர்பான கொள்கையோ திட்டமிடலோ அரசிடம் இல்லை. – சாணக்கியன் சாடல் !

இந்த நாட்டைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய சில சட்ட மூலங்களை பாராளுமன்றத்தில் கொண்டு வந்ததுடன் சிலவற்றை மாற்றுவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது அரசு என இன்று (20) பாராளுமன்றத்தில் சாணக்கியன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பை, முகம் கொடுக்கும் பிரச்சனைகளை தீர்க்கவோ பூர்த்தி செய்யும் எந்த ஒரு நடவடிக்கை தொடர்பான கொள்கையோ திட்டமிடலோ அரசிடம் இல்லை. ஓர் கண்துடைப்பாகவே இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு TRC – Truth, Unity and Reconciliation Commission உண்மைக்கும் ஒற்றுமைக்குமான நல்லிணக்க ஆணைக்குழு இனை அரசு சர்வதேசத்தை மகிழ்விக்க கொண்டுவரும் ஓர் திட்டமே. எம் மக்கள், வட கிழக்கு காணமல் அக்கப்பட்டோர் சங்கம் மற்றும் சிவில் சங்கம் இதனை நிராகரித்துள்ளார்கள்.

தாம் தமிழ் மக்கள் சார்பாக பல திட்டங்களை முன்னெடுக்கின்றோம் என்பதனை காட்டும் ஓர் கண்துடைப்பே இதுவாகும். எமக்கான அதிகார பரவலாக்கல் பற்றியோ அரசியல் அதிகாரம் பற்றியோ எமக்கான தீர்வு பற்றியோ எவ்வித முன்னேற்றமோ நடவடிக்கையும் இல்லை.

இவ் TRC மூலம் கொல்லப்பட்ட மற்றும் காணமல் ஆக்கப்பட்ட எம் மக்களுக்கான நீதி கிடைப்பதற்க்கான எவ்வித வாய்ப்பும் இல்லை.

நேற்றைய தினம் நான் ஜனாதிபதியின் ஓர் உரையை பார்த்தேன் அதில் அவர் வரும் ஜனாதிபதி தேர்தலை குறி வைத்ததாக தமிழ் மக்களை சமரசம் செய்யும் முயற்சி போல் இருந்தது. தேர்தலுக்கு முன் எம் மக்களின் பிரச்னையை தீர்ப்பது போல் கூறியிருந்தார்.

நேற்றைய தினம் நடந்த ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூட்டத்தில் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் கட்டப்படும் விகாரைகள் மிகவும் முக்கிய தேவையான விகாரைகள் என்று பேசப்பட்டுள்ளது. எமது வட, கிழக்கு பிரச்சனைகளை விட இவ் நான்கு விகரைகளின் முக்கியத்துவம் தான் ஜனாதிபதி செயலகத்தில் பேசப்படுகின்றது. இவரா எம் பிரச்சனைகளை தீர்க்கப்போகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் தொல் பொருள் பிரச்சனைகளில் முக்கியமாக குடும்பிமலைக்கு அருகாமையில் புதிய விகாரை அமைக்கும் திட்டம் இடம்பெறுகின்றது அதற்கான 800 மீட்டர் நீளமான பாதையும் அமைக்கப்படுகின்றது அவ் இடத்தில் எவ் வித குடியேற்றமும் இல்லை. ஆனால் எமக்கான முக்கிய வீதிகளை மற்றும் திட்டங்களை அமுல் படுத்த வினவும் போது நிதியில்லை என்பார்கள். எம் மக்களின் வரிப்பணம் இவ்வாறாக வீணடிக்கப்படுகின்றது. எமது வரிப் பணத்தை பெற்று எமக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

ஜனாதிபதி உடனான சந்திப்பில் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறுகின்றார் ஆனால் இங்கு வந்தால் எமது மாவட்ட இராஜங்க அமைச்சர் அதற்கு மாறாக அதற்கான இணக்கமில்லை என்று சொல்கின்றார். குருக்கள் மடம் மற்றும் முறக்கொட்டான்சேனை போன்ற இராணுவ முகாம்கள் இவ்வாறு விடுவிக்க முடியாமல் உள்ளது.

ஆக்குறைந்தது எமது முக்கிய வாழ்வாதாரங்களில் ஒன்றான விவசாயம் போன்ற வற்றுக்கான திட்டமிடலில் கூட அரசாங்கம் தவறி இருக்கிறது. பெரும் போகத்தில் நெல் கொள்வனவில் பாரிய பிரச்சனைகள் காணப்படுகின்றது. அரசு நிலக்கடலைகளை இறக்குமதி செய்வதால் உள்ளூர் நிலக்கடலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் அவர்களால் தங்கள் உற்பத்தியை விற்க முடியாமல் உள்ளது. யானை வேலி அமைப்பதில் கூட பிரச்சனைகள் காணப்படுகின்றது. நாம் நேரடியாக சென்று தலையிட்டு தீர்க்க வேண்டியுள்ளது.

ஆனால் ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்ற முயற்சி எடுக்கின்றார். ஆனால் இவர் எமக்கான தீர்வுகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்காது விடின் இவரது இவ்வாறான செயல்பாடுகள் மூலம் மக்கள் இவருக்கான சரியான படிப்பினையை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்.

“மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருவாராக இருந்தால், அங்கே அவருக்கு தகுந்த வரவேற்பு கிடைக்கும்.” – நாடாளுமன்றில் சாணக்கியன் !

பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்காமல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருவாராக இருந்தால், அங்கே அவருக்கு தகுந்த வரவேற்பு கிடைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனாதிபதி மட்டக்களப்பு வரவுள்ளார். இந்நிலையில் மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக 22 நாட்களாக போராடி வருகின்றனர். தங்களுடைய மேய்ச்சல் தரை பிரதேசங்களை அபகரித்து, ஏனைய மாவட்டங்களில் இருந்து அமைச்சர்கள் சிலரின் வழிகாட்டல்களில் புதிதாக விவசாயம் செய்ய வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வேண்டுமென்றால் அவர்கள் வேறு எங்காவது அதனை செய்யலாம். இதற்காக தங்களின் மேய்ச்சல் தரைகளை பயன்படுத்த முடியாது. அங்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து விவசாயம் செய்தால் அங்குள்ள பண்ணையாளர்கள் தமது மாடுகளை எங்கு கொண்டு செல்வது.

அத்துடன் பண்ணையாளர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வதாக ஜனாதிபதி வாய்மூலம் வாக்குறுதி வழங்கியுள்ள போதும், மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் போராட்டம் தொடரும். இல்லாவிட்டால் இதன் விளைவுகளை மட்டக்களப்பு வரும் போது ஜனாதிபதி பார்க்கக்கூடியதாக இருக்கும். ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வர முதல் இதனை தீர்க்காவிட்டால் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய கெளரவத்தை நாங்கள் வழங்குவோம் என்றார்.

பிள்ளையான் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டவர்களை 4ம் மாடிக்கு அழைத்து விசாரணை – சாணக்கியன்

இராஜாங்க அமைச்சர் சி சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக ”ஒரு கொலைகாரன்” என முகநூலில் பதிவுகளையிட்ட சிலர் நான்காம் மாடிக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாணக்கியனையும் பிள்ளையானையும் காணவில்லை!! - Transnational Government of Tamil Eelam

“மக்களை அடக்குவதற்கும் மக்களை கட்டுப்படுத்துவதற்குமாகவே அரசாங்கம் தற்போது புதிய சட்டமூலங்களை கொண்டு வர முயல்கின்றது. தற்போது கொண்டு வர உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலமாக நாட்டின் ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் இல்லாதொழிக்கும் செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்.

சனல் 4இன் காணொளியில் இலங்கையில் இடம்பெற்ற கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி. சந்திரகாந்தனுக்கு தொடர்பு இருக்கின்றது என்பதை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சனல் 4இன் கருத்தை தங்களது முகநூல்களில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு 4ஆம் மாடியில்  விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

சனல் 4இல் வெளிவந்த காணொளியை போட்டவர்களுக்கே நான்காம் மாடி விசாரணை என்றால் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் கொண்டு வரப்போகின்ற புதிய சட்டமூலங்கள் மக்களது பிரச்சினைகளை ஆதங்கங்களை வெளிப்படுத்த முயல்கின்றபோது அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

தற்போது ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமானது இந்த சட்டங்களை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையோ போராடுபவர்களையோ அடக்க முயல்கின்றார்கள் என்றுதான் நான் நினைக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாபம் போட்ட சாணக்கியன் !

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப். உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் பிறிதொரு மோசடியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (1) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி முதலாவது மோசடி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் நாடு வங்குரோத்து நிலையை அடையும் என அறிந்தும் வெளிநாட்டு கடன் டொலரில் செலுத்தப்பட்டது.

தற்போது கடன் மறுசீரமைப்பு ஊடாக மற்றுமொரு மோசடி இடம்பெறவுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப். உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் பிறிதொரு மோசடியாகும் என்றார்.

“மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும்.” – சாணக்கியன்

“மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) ஒழுங்குப் பிரச்சினை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பேசிய போது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலக பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் சுபீகரிக்கப்பட போவதாக 05 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

இதன்போது எழுந்து உரையாற்றிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தகுதியான தரப்பினரை தெரிவு செய்யுமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு பணிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் விவசாயத்துறையை மேம்படுத்தாவிட்டால் உணவு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரம் ஏக்கர் காணியில் அனுமதியில்லாத வகையில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறையான வழிமுறையில் அனுமதி வழங்காத காரணத்தால் தான் ஒரு தரப்பினர் அனுமதியில்லாமல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பில் உரிய மாவட்ட மக்கள் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் விவசாயத்திற்காக காணிகள் வழங்கப்படும். அது சிறந்ததாக அமையும் என்றார்.

இதன்போது எழுந்த உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என மகாவலி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார். சட்டத்தின் பிரகாரம் விகிதாசார அடிப்படையில் காணிகள் பிரிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுப்போம் என்றார்.

அரசாங்க குழுவிலிருந்து சாணக்கியன் விலகல் – சிவஞானம் சிறிதரன் இணைவு !

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விலகியுள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமானதும் இந்த விடயம் தொடர்பாக சபாநாயகரின் அறிவித்தலை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்தார்.

இதனையடுத்து, அவரது வெற்றிடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷ டி சில்வா அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அந்த வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“பாராளுமன்றம் மொட்டுக்கட்சிக்கு மாத்திரம் உரியது அல்ல.”- நாடாளுமன்றில் சாணக்கியன்

பாராளுமன்றம் மொட்டுக்கட்சிக்கு மாத்திரம் உரியது அல்ல. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் சபைத்தலைவர் தினேஸ் குணவர்த்தனவிற்கு இடையில் கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்றன.

இன்றைய நாடாளுமன்ற அமர்விற்கு தலைமை தாங்கிய சபாநாயகர், ஒத்திவைப்பு விவாதம் ஒன்றின்போது, தமக்கு அடுத்ததாக நாடாளுமன்றத்துக்கு தலைமை தாங்குவதற்காக தன்னை அழைத்த போதும், அவைத் தலைவர் தினேஸ் குணவர்த்தன, அதனை தடுத்தார் என இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

சபைக்கு தலைமை தாங்குமாறு படைக்கள சேவிதர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய இரா.சாணக்கியன் தயாராக இருந்தபோதும், தினேஸ் குணவர்த்தன, சபாநாயகருக்கு அனுப்பிய சில தகவல்களின் அடிப்படையில் இரா.சாணக்கியனுக்கு பதிலாக மற்றும் ஒருவர் சபைக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் இது நாடாளுமன்ற உறுப்பினரான தனது சிறப்புரிமையை மீறும் செயலாகும் என இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

இதன்போது இரா.சாணக்கியனும், M.A. சுமந்திரனும் தினேஸ் குணவர்த்தனவுடன் கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தனர்.

“நாம் கதிரைகளுக்காக நாடாளுமன்றம் வரவில்லை மக்களுக்காகவே வந்தோம். ஆனால் இவ்விடயமானது ஜனநாயகத்தை மீறும் ஒரு செயல்பாடாகும். பாராளுமன்றம் மொட்டுக்கட்சிக்கு மாத்திரம் உரியது அல்ல.

ரணில் விக்கிரமசிங்கவின் (டீல்) வர்த்தகம் தொடர்பான விவாதத்தின்போது, நான் சபைக்கு தலைமை தாங்குவதை தினேஸ் குணவர்த்தன விரும்பவில்லை.“ என இரா.சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.

“அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காதீர்கள்.” – இரா.சாணக்கியன்

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காமல் வெளியேறிதன் பின்னர் விமர்சியுங்கள் என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்திலிருந்து கொண்டு ஆளும் கட்சியினர் அரசாங்கத்தினை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்திலிருந்து கொண்டு எதிர்கட்சிக்கான வேலையினை செய்ய முடியாது. அரசாங்கத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் எங்களுடன் இணைந்து அந்த வேலையினை செய்யுங்கள்.

அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் அரசாங்கத்தினை விமர்சிப்பதாகவே நாங்கள் நினைப்போம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.