சாதி

சாதி

சாதியப் பாகுபாட்டிற்கு அமெரிக்காவின் சியட்டல் நகர சபை தடைவிதித்துள்ளது!

 

சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது. சியாட்டில் நகர சபை செவ்வாயன்று (February 21, 2023) நகரத்தின் பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தில் சாதியையும் சேர்த்தது.

6 : 1 என்ற விகித்ததில் நிறைவேற்றப்பட்ட இந்த அவசரச் சட்டத்தை ஆதரிப்பவர்கள், சாதி அடிப்படையிலான பாகுபாடு, தேசிய மற்றும் மத எல்லைகளை மீறுவதாகவும், அத்தகைய சட்டம் இல்லாமல், சாதிய பாகுபாட்டை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

சியாட்டில் நகர சபையில் (சிட்டி கவுன்சில்) இந்து பிரதிநிதி ஒருவரால் ஒரு முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டது, இது இந்திய வம்சாவளி மக்களிடையே விவாதத்தைத் தூண்டியது. இந்த முன்மொழிவு, சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பானது.

பிரதிநிதி ஷமா சாவந்த் கொண்டுவந்த முன்மொழிவு தொடர்பாக செவ்வாயன்று வாக்களிப்பு நடந்தது. அதன் பிறகு சாதி பாகுபாடு சட்டவிரோதமாக மாறிய அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் ஆனது.

பிரித்தானியாவிலும் இவ்வாறான ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி 2010 ஈக்குவாலிற்றி அக்ற் (Equality Act 2010) வருகின்ற போது முயற்சிக்கப்பட்டது. அச்சட்டத்தின்படி 1. வயது, 2. பால் 3. மதம், 4. இனம் 5. ஊனம், 6. திருமணபந்தமும் சேர்ந்து வாழ்தலும், 7. தாய்மையும் மகப்பேறும், 8. பாலினமாற்றம் 9. பாலினச் சேர்க்கைமுறை ஆகிய இயல்புகளின் அடிப்படையில் ஒருவரை பாரபட்சமாக நடத்துவது குற்றமாக்கப்பட்டது. இந்த ஒன்பது இயல்புகளோடு சாதிய ரீதியாக ஒருவரைப் பாரபட்சமாக நடத்துவதும் குற்றமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. ஆனால் தற்போது சியாட்டல் நகரம் முன்ணுதாரணமாக மேற்கொண்டுள்ள இம்முயற்சி, எதிர்காலத்தில் பிரித்தானியாவிலும் சாதிய பாரபட்சம் காட்டப்படுவது குற்றமாக்கப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் சியாட்டல் நகரின் முன்ணுதாரணமான நிகழ்ச்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். சியாட்டல் நகரை முன்ணுதாரணமாகக் கொண்டு ஏனைய நகரங்களும் இவ்வாறான சட்டங்களைக் கொண்டு வர முயற்சிக்கலாம் என்ற அச்சத்தினால் இந்து அமைப்புகள் இந்த சாதியபாகுபாட்டுத் தடைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக தெற்காசிய சமூகத்தினரிடையே மாறுபட்ட கருத்து காணப்படுகின்றது. இந்த சமூகம் மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் செல்வாக்கு மிக்க குழுவாக காணப்படுகிறார்கள். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை கொண்டு வருவதற்கு இது ஒரு முக்கியமான படி என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மறுபுறம் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான மக்கள் அதை எதிர்க்கின்றனர். தெற்காசிய மக்களை குறிப்பாக இந்திய அமெரிக்கர்களை குறிவைப்பதே இந்த தீர்மானத்தின் நோக்கம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஷமா சாவந்த் ஒரு ஒடுக்கும் சாதிய சமூகத்தைச் சேர்ந்தவர். தெற்காசியாவில் எங்கு பார்த்தாலும் நிலவும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு அமெரிக்காவில் பரவலாக காணப்படாவிட்டாலும், இங்கும் பாகுபாடு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சாதியை சட்டத்தின் ஒரு அங்கமாக்குவதன் மூலம், அமெரிக்காவில் ´இந்துவெறி´ சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல அமெரிக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதும் 10 இந்து கோவில்கள் மற்றும் ஐந்து சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி மற்றும் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகளும் இதில் அடங்கும். இந்த சம்பவங்களை சிலர் இந்து சமூகத்தை அச்சுறுத்தும் முயற்சியாக பார்க்கின்றனர்.

அமெரிக்காவில் குடியேறியவர்களில் இந்திய வம்சாவளி மக்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 42 லட்சம் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசிக்கின்றனர் என்று 2018 ஆம் ஆண்டின் அமெரிக்க சமூக ஆய்வின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

சியாட்டல் சிட்டி கவுன்சிலின் இந்த சட்டம், 2021 இல் சாண்டா கிளாரா மனித உரிமைகள் ஆணையத்தில் ஈக்வாலிட்டி லேப் கொண்டு வர முயற்சித்ததைப் போன்றது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் எதிர்ப்பைத்தொடர்ந்து இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது.

சியாட்டிலில் கொண்டுவரப்பட்ட முன்மொழிவில் ஈக்வாலிட்டி லேபின் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் இந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

அம்பேத்கர் ஃபுலே நெட்வொர்க் ஆஃப் அமெரிக்கன் தலித்ஸ் அண்ட் பகுஜன்ஸ் அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பாதுகாக்கப்பட்ட பிரிவில் சாதியைச் சேர்ப்பது, தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த எல்லா மக்களையும் நியாயமற்ற முறையில் ஒதுக்கி வைக்கும். இதில் தலித் மற்றும் பகுஜன் சமாஜூம் அடங்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

“இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சியாட்டில் முதலாளிகள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதைக் குறைப்பார்கள். இது தலித்துகள் மற்றும் பகுஜன்கள் உட்பட தெற்காசிய வம்சாவளியினர் அனைவருக்கும் வேலை மற்றும் பிற வாய்ப்புகளை எதிர்மறையாக பாதிக்கும்” என்று அந்த அறிக்கை கூறியது.

உரிமைகளுக்காக குரல் எழுப்பும் முக்கியமான அமைப்பான ஈக்வாலிட்டி லேப், திங்களன்று நகர சபை உறுப்பினர்களை ´ஆம்´ என்பதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வலியுறுத்தியது.

“அமெரிக்காவின் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் இனப் பாகுபாடு நிலவுகிறது என்பதை நாம் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம். இருப்பினும் அது ஒரு மறைக்கப்பட்ட பிரச்னையாகவே உள்ளது, “என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

“வெறுப்பு குழுக்களின் தவறான தரவுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படாத கூற்றுக்கள் மூலம் ஒரு சிறுபான்மை சமூகம் வெளிப்படையாக தனிமைப்படுத்தப்படுவதைப் பார்ப்பது திகைப்பூட்டுகிறது,” என்று வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணியின் புஷ்பிதா பிரசாத் கூறுகிறார்.

புஷ்பிதா பிரசாத்தின் குழு அமெரிக்கா முழுவதும் இத்தகைய திட்டங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

“முன்மொழியப்பட்ட அவசரச் சட்டம் சிறுபான்மை சமூகத்தின் (தெற்காசிய மக்கள்) சிவில் உரிமைகளை மீறும். ஏனெனில் முதலில் அது அவர்களை ஓரங்கட்டுகிறது. இரண்டாவதாக, மற்ற சமூகங்களை ஒப்பிடும்போது தெற்காசிய மக்களிடையே சாதி பாகுபாடு உள்ளது என்று இது கருதுகிறது. மூன்றாவதாக வெறுப்புக் குழுக்கள் அளிக்கும் தவறான தரவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.

அரசாணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பொதுப் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.

அதன் ஆதரவாளர்கள் அமெரிக்க செய்தித்தாள்களில் பத்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகின்றனர்.

வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டமைப்பு, நகர கவுன்சிலர்கள் மற்றும் தெற்காசிய மக்களுக்கு ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதை ´ஒரு மோசமான யோசனை´ என்று கூறவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சுமார் 100 நிறுவனங்கள் மற்றும் வணிகங்களின் குழு இந்த வாரம் சியாட்டில் நகர சபைக்கு ஒரு கடிதம் அனுப்பியது. இந்த முன்மொழிவுக்கு எதிராக “இல்லை” என்று வாக்களிக்குமாறு அது வலியுறுத்தியது.

“உத்தேச அவசரச் சட்டம் அமலுக்கு வந்தால், இந்த ஒட்டுமொத்த சமூகமும், குறிப்பாக அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், தங்களை அப்பாவிகள் என்று நிரூபிக்காதவரை சாதி அடிப்படையிலான பாகுபாடுகளின் குற்றவாளிகள் என்று கருதப்படுவார்கள். இது அமெரிக்க கலாச்சாரம் அல்ல. அது தவறு” என்று வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணியின் தலைவர் நிகுஞ்ச் திரிவேதி கூறினார்.

மறுபுறம், யோசனையை முன்வைத்த பிரதிநிதியான ஷமா சாவந்தும் வாக்களிப்பிற்கு முன் தனது பிரச்சாரத்தை விரைவுபடுத்துவதில் மும்முரமாக இருந்தார்.

இரண்டு இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ரோ கண்ணா மற்றும் பிரமீளா ஜெயபால் ஆகியோருக்கு கடிதம் எழுதி அவர் ஆதரவு கோரினார்.

இந்தியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாடு 1948 ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்டது மற்றும் 1950 இல் இந்தக் கொள்கை அரசியலமைப்பிலும் சேர்க்கப்பட்டது.

இலங்கையில் இந்தியா அளவுக்கு சாதிய ஒடுக்குமுறை மோசமானதாக இல்லாவிட்டாலும் நாளாந்த வாழ்வில் சாதியப் பாகுபாடு என்பது மிக நுண்ணியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ்ப்பாணம் சாதியத்தில் ஊறிய ஒரு பிரதேசமாக உள்ளது. 30 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் பின்னரும் சாதிய ஒடுக்குமுறையை ஒரு ஒடுக்குமுறை அம்சமாக எண்ணாத ஒரு சூழலே அங்கு காணப்படுகிறது. புரட்சிகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டிய யாழ் பல்கலைக்கழகத்தில் கூட சாதியம் ஆழமாக வேரூன்றியுள்ள. அங்கு காதல் கூட சாதிய அடிப்படையிலேயே மலர முடியும் என்ற நிலையுள்ளது. பல்கலைக்கழகத்தின் நியமனங்கள் கூட திறமையின் அடிப்படையில் அல்லாமல் பால், மதம், சாதியம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தப் பின்னணியிலேயே அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் ஆட்சியை கைப்பற்றக் கூடிய பிரதான கட்சியான எஸ்ஜேபி இன் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளராக சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைப் பெண்களை துஸ்பிரயோகம் செய்கின்ற ஜெயந்திரன் வெற்றிவேலு என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக இக்கட்சிக்கு பல்வேறு வழிகளிலும் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதும் பிரான்ஸில் உள்ள சிவன் கோவிலின் உரிமையாளரான இவரின் பண பலத்திற்காக குறித்தகட்சி அவரை பிரதான அமைப்பாளராக இன்னமும் வைத்துள்ளது. சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களை அனுபவிப்பது தங்களுடையதும் தனது தந்தையான பொன்னையா வெற்றிவேலுவினதும் பரம்பரை இயல்பு என் அவர் தன் வாயாலேயே கூறிய ஒலிப்பதிவை தேசம்நெற் சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சியாட்டலில் சட்டம் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் சட்டங்கள் இருந்தும் அவை எதுவும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவில்லை.

வட்டுக்கோட்டை என்ன சாதி வெறியர்களின் கோட்டையா? : தேசம் வித்தியா

வட்டுக்கோட்டை – தமிழர்களின் சுயநிர்ணயத் தீர்மானத்துக்கு மட்டுமல்ல சாதிய அடக்குமுறைக்கும் பெயர் போன இடமாக மாறியுள்ளது. சாதியம் என்பது தமிழர்களில் ஆழாமாக வேரூன்றிப் போயுள்ள ஒன்று. அதிலும் யாழ்ப்பாணத்தாரிடம் அதன் தாக்கம் மிக அதிகம். பொதுவாக யாழ்ப்பாணத்தவர்கள் படித்தவர்கள் என்று சொல்லப்படுவது வழமை. ஆனால் அந்த மேதைகளிடம் கூட இந்த விடயத்தில் பகுத்தறிவை காண்பது மிக அரிது. ஏனெனில் சாதியத்தை இந்த சிந்தனை யுகத்தில் கூட வளர்த்தெடுத்ததில் பெரும் பங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் உண்டு. நீண்ட காலத்திற்குப் பின்பு சாதிய அடக்குமுறை பேசபொருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம் வட்டுக் கோட்டை முதலியார் கோவில் பகுதியில் இடம்பெற்ற ஒரு வாள்வெட்டு சம்பவம்.

கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி வேலை முடித்து வீடு திரும்பிய நளவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை மது போதையிலிருந்த வெளாளம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வட்டுக்கோட்டை பேபி கடை முடக்கில் வைத்து சைக்கிளுடன் தள்ளியுள்ளனர். குறித்த இளைஞன் ஏன் என்னைத் தள்ளினீர்கள் என்று கேட்டதற்கு கள்ள குளை முறித்ததாக சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்கள். அதற்குள் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் பீதியில் அவரது தந்தைக்கு அறிவித்து, அவரை வரவழைத்தார். தந்தை குறித்த இடத்திற்கு விரைந்து தன்னிலும் வயது குறைந்தவர்கள் என்றும் பாராமல் குறித்த இளைஞர்களிடம் மன்றாடி தன் மகனை அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு இருந்தும் மதுபோதையிலிருந்த வெளாம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதலியார் கோவிலடிப் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு வாளோடு சென்று அட்டாகசம் புரிந்ததுள்ளனர். அந்த சம்பவத்தில் முதலில் தாக்குதலுக்குள்ளான இளைஞனின் தந்தைக்கு வாளால் வெட்ட முயற்சிக்க அவர் தனது கைகளால் தடுத்ததில் அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் குறித்த இளைஞர் குழு தகாத வார்த்தைகளால் அங்கிருந்த பெண்கள், சிறுவர்களைத் திட்டி அங்கிருந்த நளவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள், கடைகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு பெரும் அடாவடி புரிந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் பதிவிட்டோரில் பலர் நீண்ட காலத்திற்கு பின்பு சாதிக்கலவரம் தலை தூக்கியுள்ளது என்ற தொணியில் பதிவிட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. முதலில் அங்கு நடந்தது கலவரம் அல்ல. அது சாதிய அடக்குமுறை. அது ஒன்றும் மீண்டும் தலை தூக்கவில்லை. காலம் காலமாக அந்த மக்கள் மீது அரங்கேற்றப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் ஊடகங்களாலும் விதை குழுமம் போன்ற சமூக மட்ட அமைப்புகளாலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சாதியம் யாழ்ப்பாணத்தின் சகல இடங்களிலும் இருந்தாலும் கூட அது திரைமறைவிலேயே உள்ளது. திருமணம் போன குறித்த சில விடயங்களில் அது வெளித்தெரியும். ஆனால் வட்டுக்கோட்டை அதை அண்டிய பகுதிகள், வரணி, புத்தூர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் மிக அதிகம். எடுத்துக்காட்டாக சில வருடங்களுக்கு முன்பு புத்தூரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் கலைமதிக் கிராம குடியிருப்பு பகுதிக்கு அண்மையில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமலிருந்த மயானத்தை புனரமைத்து பயன்படுத்துவதற்கு ஒடுக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முனைந்தனர். நீண்டதொரு போராட்டத்தின் ஊடாகவே அந்த முயற்சி தடுத்துக்கப்பட்டது.

வட்டுக்கோட்டைப் பகுதியில் சமூகத்தில் தம்மை உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சமூகத்துக்கும் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகத்துக்கும் இடையில் வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறும். குறிப்பாக இந்த அடக்குமுறையாளர்கள் முட்டையில் மயிர் பிடுங்குவது போல ஏதாவது ஒரு சம்பவத்தை இழுத்து வைத்து சண்டைக்கு போவார்கள் என்கின்றார் மாவடியைச் சேர்ந்த சிறி.

குறிப்பாக அங்குள்ள அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறான சாதிய அடக்குமுறைக்கு அதிகம் உள்ளாக்கப்படுகின்றனர். உயர்சமூகம் என்று கூறிக்கொள்ளும் அடக்குமுறையாளர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி மிகத் தவறான விம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு தமிழ் சினிமா முஸ்லீம் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதோ அது போன்றே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை வன்முறைளார்களாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோராகவும் ஒரு விம்பத்தை இவர்கள் கட்டவிழ்த்துவிடுகின்றனர். இதனால் சமூகம் இவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவால் பாடசாலைகளிலும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சிக்கல் நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பிரதேசத்திலுள்ள ஓர் அரச பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில், எங்களால் பள்ளிக்கூடத்துக்கு சந்தோசமா போய் வர ஏலாது. எங்களை சாதிப் பெயர் சொல்லி வெள்ளாம் அண்ணாமார் கூப்பிடுவினர். நாங்க முறைச்சுப் பார்த்தாக் கூட அடிக்க வருவினம். ரீச்சர், சேர் மார் கூட என்ன நடந்தாலும் எங்களைத் தான் பிழை சொல்லுவினம். எங்களுக்கு படிக்கவே விருப்பம் இருக்காது. இப்பிடி செய்தா யாருக்கு தான் படிக்க மனம் வரும். எங்கட இடத்தில ஓ.எல் வரைக்கும் படிக்குறதே பெரிசு” என்றார்.

அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை தேசம்நெற்க்கு கருத்து தெரிவிக்கையில், “பிள்ளைகள் எல்லோரையும் நாங்க சமமாகத் தான் பார்க்க வேண்டும். ஆனா எல்லா ஆசிரியரும் அப்படி நடத்தினமா என்டு எனக்கு தெரியல. உயர் சமூகப் பெண் பிள்ளைகளிடம் இவங்கள் கதைச்சா அதை யாரும் கண்டா பெரும் பிரச்சினை. இந்த வயசில காதல் அது இது என்டு நிறைய நடக்கும். அதை பக்குவமா யாரும் கையாளுறேல. சாதிய சொல்லி அடிக்கப் போடுவாங்கள். பள்ளிக்கூடத்தில ஒரு விளையாட்டுப் போட்டி ஒழுங்கா நடத்தி முடிக்குறது கூட பெரும்பாடு. பள்ளிக்கூட பிள்ளைகளால பிரச்சனை வருதோ இல்லையோ பார்க்க வாற பெடியள் ஏதாவது வம்மை வளர்ப்பாங்கள். உண்மேலயே இவங்க இப்பிடி சாதிய சொல்லி சொல்லி அவங்களை அவமானப்படுத்தினா அவங்களும் ஒரு அளவுக்கு மேல என்ன செய்வாங்கள்?” என்றார் கவலையோடு.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி வளர்க்க வேண்டிய பாடசாலைகளிலேயே சாதிய ஒடுக்குமுறை இவ்வளவு மோசமாக இருந்தால் இது தவறு என்ற எண்ணம் எங்கு தான் பிள்ளைகள் மனதில் விதைக்கப்படும்? இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய என்னுமொரு விடயம் பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணிபுரிவோரில் பெரும்பான்மையானோர் யாழ்.பல்கலைக்கழக பட்டதாரிகள். அங்கு சாதியத்தை வளர்ப்பது எவ்வாறு என்று கற்று பாடசாலைகளில் கற்பிக்கின்றனர் என்றாலும் தவறிருக்காது. (முற்போக்காக சிந்திக்கின்ற விரல் விட்டு எண்ணக்கூடிய விரைவுயாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தாது.)

அண்மையில் இடம்பெற்ற சம்பவம் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் குளை பிடுங்கினான் என்ற ஒரு காரணத்தை கூறியே இடம்பெற்றது. ஆனால் குறித்த இளைஞன் நான் எந்த குளையும் பிடுங்கவில்லை என்று தெளிவாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளான். அப்படியே அவன் குளை பிடுங்கியிருந்தால் கூட அதில் என்ன தவறு இருக்கின்றது? அதற்காக வாளெடுத்து வெட்ட போகிறார்கள் எனில் சாதி என்பது எந்தளவு தூரம் இவர்களை சுயபுத்தி அற்றவர்களாக மாற்றியுள்ளது என்று ஒரு கணம் சிந்தித்தால் தமிழ் சமூகம் எந்தளவு தூரம் மோசமான சாதி என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணரமுடியும்.

இதுமட்டுமல்ல வட்டுக்கோட்டையில் இந்த சாதி வெறியர்கள் ஆடும் ஆட்டம் ஒன்று இரண்டல்ல. குறிப்பாக சங்கரத்தைப் பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவுக்கு போய் அங்கு நடத்தும் கூத்துகளைப் பார்த்தாலே தெரியும். எந்தளவு சிந்தனை வளர்ச்சி குன்றிய கூட்டங்கள் என்னும் எமது சமூகத்தில் உலாவுகின்றன.

சிங்களவரிடம் சமஉரிமை கேட்டு பிரித்தானியாவில் கிளாஸ்கோவரை போர்க்கொடு தூக்கத் தெரிந்தவர்களுக்கு தங்கள் வீட்டு கோடிக்குள் தாங்கள் செய்கின்ற ஒடுக்குமுறை தெரிவதில்லை. எமது தமிழ்த் தேசியம் பேசும் கூட்டங்களுக்கு, மனித சமூகத்தை ஏற்கத் தெரியாத இப்படியொரு மந்தைக் கூட்டம் நம்மிலேயே இருப்பது கண்ணுக்கு தெரியாதா? ஏனெனில் அவர்களும் பெரும்பாலோனோர் இந்த மந்தைகளைச் சேர்ந்தவர்களே. ஏன் இப்போது நடந்த இந்த சம்பவத்தில் கூட பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் எந்த தமிழ் எம்.பியும் அறிக்கை விடவில்லை. தமிழ்த் தேசியம் பேசும் எந்தவொரு சட்டத்தரணிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆரஜாக திராணியில்லை. ஏனெனில் வாக்கு வங்கி சரிந்துவிடும் என்ற பயம்.

ஈபிஆர்எல்எப், ஈபிடிபி, சமத்துவ கட்சி மற்றும் புதிய சனநாயக மார்க்ஸிய லெனினிய கட்சி ஆகிய அமைப்புகள் ஓரளவு இடதுசாரிக்கொள்கைகளுடன் சாதி மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்தபோதும் இக்கட்சிகள் இன்னமும் பிரதான நீரோட்டத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையிலேயே இன்றும் உள்ளனர். பிரித்தானியாவில் சட்டத்தரணியாகச் செயற்பட்ட ரங்கன் என் தேவராஜன் பாதிக்கப்பட்ட சமூகத்தை சென்று சந்தித்து சட்ட ஆலொசனைகளை வழங்கியும் உள்ளார்.

சாதிய பிரச்சனை பேசுபொருளாக மாறும் போதெல்லாம் ஒரு குழுவினம் இது தொடர்பில் கதைப்பதால் தான் பிரச்சனை கதைக்காவிட்டால் சாதிப் பிரிவினை காலப் போக்கில் இல்லாமல் போய்விடும் என்று ஒரு கதை சொல்வார்கள். அடக்குமுறைகளுக்கு எதிராக பேசுவோரையே குழப்பதாரிகளாக மாற்றி பூசி மெழுகிவிடுவார்கள்.

முதலியார் கோவிலடிப் பிரச்சினை தொடர்பில் அங்குள்ள சில படித்த தரப்பினரை தேசம்நெற் தொடர்பு கொண்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இப்பிரச்சினை தொடர்பில் பேச மறுத்துவிட்டனர். சாதிப் பிரிவினை தவறு என்று தெரிந்தாலும் அதை வெளிப்படையாகத் தெரிவித்தால் எங்கு தாமும் சமூகத்திலிருந்து புறந்தள்ளப்படுவோம் என்ற பயம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இந்த பயம் தான் சாதியம் என்னும் எமது சமூகத்தில் வேரூன்ற காரணமாக அமைகின்றது.

மேலும் வட்டுக்கோட்டையில் உயர் சமூகம் எனக் கூறிக்கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்த அரச ஊழியர் ஒருவரைத் தொடர்பு கொண்டோம். அவர் எமக்குப் பதிலளிக்கையில், உந்தப் பிரச்சனை பற்றிக் கதைச்சா எங்களையும் வெட்ட வருவாங்கள். இவங்கள் பெரிய ரவுடிகள். உள்ள கெட்ட பழக்கம் முழுக்க இருக்கு. வேலைக்கு போகாம வெளிநாட்டுக் காசில பெரிய பெரிய பைக்குகள் வாங்கி வாள்வெட்டு குரூப்போட சேர்ந்து திரிவாங்கள். இவங்களைப் பார்த்து சின்னப் பெடியங்களும் பழுதாப் போறாங்கள். இவங்களுக்கு சண்டை இழுக்க ஏதாவது வேணும். அதுக்கு தான் சாதிய சொல்லி அவனுகளோட வம்புக்கு போறாங்கள். இவனுகாளால ஊருக்க சமூகங்களுக்க பிரச்சினை. இவனுக மேல ஏகப்பட்ட பொலிஸ் கேஸ் இருக்கு. ஆனால் காசை கொடுத்து வெளில வந்துடுவாங்கள், பெரிய கேஸ் என்டா ஒழிஞ்சு திரிவானுகள். நிம்மதியா இருக்க ஏலாது. கோவில் திருவிழா கூட நிம்மதியா செய்ய ஏலாது. வேலை வெட்டியும் இல்லை. இவங்கள் கேசில பிடிபட்டாலும் சைக்கிள் வக்கீல் எடுக்க இருக்குறார். இதெல்லாம் நான் சொன்னன் என்டு தெரிஞ்சாலே என்னை வெட்ட வந்துடுவாங்கள்” என்றார் பீதியோடு.

இந்த சாதிய மனோநிலையிலிருந்து இன்னும் யாழ் சமூகம் விடுபடவில்லை என்பது துரதிஸ்டவசமானது. யாழ் பல்கலைக்கழத்தில் கூட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தகுதி இருந்த போதும் உயர்நிலைகளுக்கு வருவது மிகக் கடினமானது. பல்கலைக்கழகத்தின் முதலாண்டில் யார் எவர் என்று தெரியாமல் காதலில் சிக்குபவர்கள் கூட, இரண்டாம் ஆண்டில் யார் என்ன சாதி என்பது தெரிந்ததும் காதலை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். பேராசிரியர் கா சிவத்தம்பி ஏன் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்கப்படவில்லை? அவரைக் காட்டிலும் பேரறிஞ்ஞரான ஒரு துணைவேந்தரையா யாழ் பல்கலைக்கழகம் அன்று தெரிவு செய்தது?

அன்று யாழ்ப்பாண நகர மேயராக இருந்த செல்லன் கந்தையனை கை நீட்டி அடிக்கலாம் என்று மாநகரசபை உறுப்பினர்களை அடிக்க வைத்தது என்ன? அன்று மேயர் செல்லன் கந்தையன் மாநகரசபை உறுப்பினர்களால் பிடிக்கப்பட்ட மாட்டை அவிழ்த்துவிட்டதற்காக இரு தமிழர் விடுதலைக் கூட்டணி மாடுகளால் (உறுப்பினர்களால்) தாக்கப்பட்டார். அவர்களில் ஒருவர் தான் இப்போது சங்கரி ஐயா எப்போது போவார் கதிரை எப்போது காலியாகும் என்று பார்த்துக்கொண்டிருக்கின்றார். அன்று மேயர் செல்லன் கந்தையனை மாட்டை அவிழ்த்து விட்டதைச் சொல்லி அடித்தனர். இன்று குளை வெட்டியதாகச் சொல்லி ஒரு அப்பாவி இளைஞனை அடித்து அவனின் தந்தையின் விரலைத் துண்டித்துள்ளனர்.

அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் யாழ் பொதுநூலகத்தை திறந்துவைக்கக் கூடாது என்பதில் வாக்கு வங்கியே அற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி மிக உறுதியாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் காரணத்திற்காக யாழ் நூலகம் திறப்பதை தடுத்ததைஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் சாதி அரசியல் என்று இன்றும் சில மாற்றுக் கருத்துச் சாதியமான்கள் வாதிட்டு தங்கள் சாதிய சிந்தனைக்கு வெள்ளையடிக்கின்றனர்.

இப்போது யாழ்ப்பாணத்தின் சமூகப் பரம்பல் முற்றிலுமாக மாறியுள்ளது. முன்னர் ஒடுக்கும் சமூகம் 60 வீதமாகவும் ஒடுக்கப்படும் சமூகம் 40 வீதமாகவும் இருந்த நிலைமாறி ஒடுக்கும் சமூகம் பெரும்பாலும் புலம்பெயர்ந்து வெளிநாடு செல்ல அவர்களின் சனத்தொகை 40 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதனால் ஒடுக்கப்படும் சமூகத்தின் சனத்தொகை 60 வீததத்தை எட்டியுள்ளது. இதே நிலையை வன்னியிலும் ஒடுக்குகின்ற தமிழர்களின் எண்ணிக்கை 40 வீதமாகவும் ஒடுக்கப்படுகின்ற மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 60 வீதமாகவும் இருப்பதைக் காணலாம். ஆனால் வடமாகாண அரசியலில் இந்த சனத்தொகையை பிரதிபலிக்கும் விதத்தில் அரசியல் பிரதிநிதிகள் இல்லை. அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார விடயங்கள் அனைத்திலுமே ஒடுக்குகின்ற சமூகமே தொடர்ந்தும் கோலோச்சி வருகின்றது. வட்டுக்கோடை மட்டுமல்ல ஒட்டுமொத்த வடமாகாணமே ஒடுக்குபவர்களின் கோட்டையாகவே இன்னும் இருந்துவருகிறது.

யாழ் மேலாதிக்கம் என்பது என்ன? : எம் ஆர் ஸ்டாலின்

யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றதோ அதேபோலத்தான் இக்கருத்தியலை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது சிங்கள மக்களை குறிக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானதும் இல்லை. அதேபோலத்தான் யாழ் மேலாதிக்கம் என்பதையும் அதற்கெதிரான கருத்துப்பரிமாறல்கள் என்பதையும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானதாக கொச்சையாக புரிந்துகொள்ளக்கூடாது.

ஆனால் துரதிஸ்ட வசமாக இந்த புரிதலில் சிலருக்கு சிக்கல் இருக்கின்றது மேலும் சிலர் புரிந்து கொள்ளாதவாறு திரித்து கிழக்கில் இருந்து யாழ்-மேலாதிக்கம் குறித்து கருத்திடுவோர் மீது பிரதேசவாத துரோக முத்திரை குத்த முனைகின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது.

தமிழ் தேசியமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளில் இருந்து உருவாகிய கருத்துருவமா? அன்றில் தமிழ் சமூகத்தில் ஆதிக்க சக்திகளாக அகல கால்பதித்து நின்ற யாழ்-மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்தே அச்சிந்தனையுருவாக்கம் நிகழ்ந்ததா? இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் மேலோட்டமாக பார்ப்போம். அதனுடாகவே தமிழ் தேசியம் என்பதையும் யாழ் மேலாதிக்கம் என்பதையும் விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு சமூகமோ அல்லது ஒரு இனமோ அதன் அசைவியக்கம் சார்ந்து தனக்கான ஒரு கருத்தியலுடனேயே பயணிப்பது வழமையாகும். அந்த கருத்தியலின் உருவாக்கத்தில் அச்சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டம்சங்களே நிச்சயம் தாக்கம் செலுத்தும். எனவே அந்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரின் செல்வாக்கானது அச்சமூகத்தினது கருத்தியல் உருவாக்கத்தில் பிரதான பங்கெடுக்கும்.

அந்த வகையில் தமிழ் தேசியத்தின் வேர்களாகவும் பிதாமகர்களாகவும் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையிட்டு ஆராய்வோமானால் பொன் இராமநாதன், ஜ ஜி பொன்னம்பலம், சுந்தரலிங்கம், எஸ் ஜே வி செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரை தவிக்கமுடியாது. இவர்களெல்லாம் தனவந்தர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், ஏழைகளை சுரண்டி பிழைப்போராகவும், ஆதிக்கசாதி வெறியர்களாகவும், ஆணாதிக்க மற்றும் பிரதேசவாதிகளாகவும், ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகவும் இருந்தார்கள் என்பது நமக்கேயுரித்தான வேதனையான வரலாறு ஆகும். இந்த பின்னணியில் இருந்துதான் தமிழ் தேசியமென்பதன் சிந்தனை மற்றும் கருத்தியல் உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய வர்க்கத்தினரையும் இத்தமிழ் தேசியமென்பதன் ரிஷிமூலம் என்ன என்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும் சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர் பொன்.இராமநாதன் ஆகும்.

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது ‘வேளாளருக்கும் தனவந்தருக்கும்’ மட்டுமே வாக்குரிமை வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று சாட்சியம் சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான்.

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது
ஜி.ஜி பொன்னம்பலம் சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள்.

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து ‘சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்’ என்று அரச கரும மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைமைகளேயாகும்.

1947ல் பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான்.

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி என்றும் ‘அடங்கா தமிழன்’ என்கின்ற ‘பெருமைமிகு’ அடைமொழியாலும் போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது ‘கண்ட கண்டவர்களுக்கு’ கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது சொந்த நலன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும் அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது.

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களையும் மசோதாக்களையும் எதிர்த்தவர்கள், பிரித்தானிய-சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து கொண்டு ஏழை மக்களை ஒடுக்கி பிரபுத்துவ அரசியல் செய்தவர்கள் யாரோ அவர்களே துரதிஸ்ட வசமாக எமக்கு தேசியத்தை போதித்தனர்.

1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது ‘அங்கே ஜின்னா பாகிஸ்தானை பிரித்தார். இங்கே பொன்னா தமிழீழத்தை பிரித்து எடுப்பேன்’ என்று பேசித்திரிந்தார் பொன்னம்பலம். பாராளுமன்ற முறைமை அறிமுகமானபோது தேர்தல் அரசியலுக்கான இனவாத அணிதிரட்டல் ஒன்றை நோக்கியே அவரது இந்த பேச்சுக்கள் இருந்தன.

1956ல் அரச கருமமொழிச்சட்டம் வந்தபோது பிரித்தானியரின் அருவருடிகளாக ஆங்கிலம் கற்று அரச நிர்வாக அதிகாரிகளாக இலங்கையெங்கும் பரவியிருந்த யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டது.

1971ல் கல்வி தரப்படுத்தல் வந்தபோதும் இந்த அதிகார வர்க்கத்தின் வாரிசுகளே பாதிப்படைந்தனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவே ‘தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது ஒட்டுமொத்த தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்’ என்று ஒப்பாரிவைத்தனர் இந்த யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் அதற்கு மாறாக கல்வித்தரப்படுத்தல் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்ட மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருந்தன. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு சமனான அந்த சட்டத்தை தமிழரசு கட்சியினர் யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்து எதிர்த்தனர்.

மூதூர் பிரதிநிதியான தங்கதுரையும் மட்டக்களப்பு பிரதிநிதியான இராஜதுரையும் கல்வி தரப்படுத்தலால் பரந்து பட்ட தமிழர்களுக்கு வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்கின்ற மாற்று கருத்துக்களை தமிழரசு கட்சியில் முன்வைத்தபோது அவை புறந்தள்ளப்பட்டன. கல்வி தரப்படுத்தல் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் எதிரான இனவாத செயற்பாடு என்றே தமிழரசு கட்சி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

பிரிவினை கோரிக்கை எமது மக்களையை அழித்தொழிக்கும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டிலேயே வந்து சொன்னார்கள் கனவான் தேவநாயகமும் தொண்டமானும். ஆனால் கிழக்கினதும் மலையகத்தினதும் அதிருப்திகளை அமிர்தலிங்கம் போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.

யாழ்-மேட்டுக்குடிகள் யாழ்ப்பாணத்துக்கு உள்ளே ஒடுக்கப்பட்ட மக்களினதும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் ஏனைய பிரதேச மக்களினதும் சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சனைகளை பின்தள்ளி தாமும் தமது வாரிசுகளும் எதிர்கொண்ட உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் மட்டுமே அனைத்து தமிழருக்கும் உரியதான பிரச்சனைகளாக அரசியல் மயப்படுத்தினர். தமது நலன்களை அடிப்படையாக கொண்டே ஆயுத போராட்டத்தை முன்மொழிந்தனர். அதையே தமிழ் தேசியமென்றனர். தமிழீழ கோரிக்கையை பிறப்பித்தனர்.

இதுதான் யாழ் மையவாத சிந்தனை ஆகும். ஒரு சமூகத்தில் மேலாட்சி செலுத்துபவர்கள் தமது நலன்களில் மட்டுமே மையம்கொள்ளும் சிந்தனையின் வழியிலேயே அனைவரையும் பயணிக்க கோருவதும் அதுவே தமிழ் தேசியம் என்று முழங்குவதும் மேலாதிக்கமாகும்.

அதனால்தான் 1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற செல்வநாயகமோ ‘நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால் தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும்.

ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை.

ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி நிலம் பண்பாடு பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது. வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான (மடுவென்பது கிடங்கெனக்கொள்க) அரசியல்,பொருளாதார,பண்பாட்டு வித்தியாசங்கள் குவிந்து கிடக்கின்றன. வரலாற்று ரீதியாக ஒருபோதும் வடக்குக்கும் கிழக்குக்குமான ஒரே அரசியல் தலைமை இருந்ததுமில்லை.

அதையும் தாண்டி வடக்கில் எங்கே பொதுப்பண்பாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகம் என்பது சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அதிகார படிநிலை சமூகமாகும். சாதிக்கொரு சவக்காலையும் சாதிக்கொரு வீதியும் சாதிக்கொரு கோவிலும் வைத்துக்கொண்டு தமிழினத்துக்கான பொதுப்பண்பாட்டை எப்படி உருவாக்க முடியும்? எல்லோருக்குமான சமூகநீதியை எங்கே தேடுவது? நாமெல்லோரும் ஓரினம் என்னும் கூட்டுணர்வு எப்படி சாத்தியமாகும்? இன்றுவரை அகமண முறையை கைவிட தயாரில்லாது சாதிகளின் பொருட்காட்சி சாலையாக தோற்றமளிக்கும் யாழ்ப்பாணத்தில் வாழுவது ஓரினமா? அன்றி ஒரே மொழி பேசும் பல பழங்குடியினங்களா என்று கேட்க தோன்றுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பல கோவில்கள் தலித் மக்களுக்காக பூட்டிக்கிடக்கின்றன. ‘ஊர்கூடி தேரிழுப்பதென்பது’ முதுமொழி. ஆனால் ஊரிலுள்ள ஆதிக்க சாதிகள் புலம்பெயர்ந்து போனபின்பு தேரிழுக்க உயர்குடிகள் இல்லை என்பதால் ஜெஸிபி மெசினை கொண்டு தேரிழுக்கின்றோம் எதற்காக? தலித் மக்களை தேரில் கை வைக்க விடக்கூடாதென்பதற்காகத்தானே, தேர் தீட்டு பட்டுவிடும் என்பதற்காகத்தானே. இந்த நிலையில் தமிழருக்கான பொது பண்பாடு எங்கேஇருக்கின்றது? இருப்பதெல்லாம் வெறும் சாதிய பண்பாடு மாத்திரமேயாகும். அவற்றை கட்டிக்காப்பதுவும் யாழ்ப்பாண- மேலாதிக்கம்தான் நாம் குரல் கொடுப்பது யாழ்பாணத்து மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் ஏழைகள் மற்றும் சாதியரீதியில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காகவும்தான்.

இந்த லட்ஷணத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களில், பாராளுமன்ற உறுப்பினர்களில், மாகாண சபை உறுப்பினர்களில் யாதொருவராயினும் தாழ்த்தப்பட்ட குலத்தவர் உண்டோ என்கின்ற கேள்வியெழுப்புதல் அவசியமற்றது ஆகும். அப்படி எதுமே இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலன்சார்ந்து ஒரு சிறு துரும்பையேனும் நகர்த்திய வரலாற்றை கொண்டிராத கறுவாக்காட்டு பரம்பரைகளான சுமந்திரனும்,விக்கினேஸ்வரனும்,கஜேந்திரகுமாரும் மக்களின் தலைவர்களாக வலம் வர முடிகின்றது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன? எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்? வெறுமனே வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த தமிழ் தேசியவாத பிதற்றல்களை யாழ்ப்பாண கட்சிகள் காவித்திரிகின்றன என்பதே உண்மையாகும். அதனாற்தான் இந்த யாழ் மேட்டுக்குடிகள் பேசுகின்ற தேசியம் என்பது போலியானது. மக்களை ஏமாற்றி மேட்டுக்குடிகளின் நலன்களை மட்டுமே பூர்த்திசெய்கின்ற கபட நோக்கம் கொண்டது என்று சொல்லுகின்றோம்.

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.

தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.

‘துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே’ என்கின்றது புறநானுற்று அறம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பார் திருவள்ளுவர்.

இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.

தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.

ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது. பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.

நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும். அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.

செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியை தொடங்கி கிழக்கு மாகாணத்துக்கு வந்து தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகி அணிதிரளுங்கள் சமஷ்டியை பெற்றுத்தருகின்றேன் என்று அறைகூவல் விடுத்தார். அப்போது சமஸ்டி சாத்தியமில்லாதது,கிழக்கு மூவினங்களும் வாழும் இடம் இங்கே இனவாத அரசியல் வேண்டாம், இரத்த ஆறு ஓட வழிவகுக்க வேண்டாம் என்று செல்வநாயகத்தை எச்சரித்தார் மட்டக்களப்பின் நல்லையா மாஸ்டர் என்னும் பெருந்தகை. பதிலுக்கு கிழக்குமாகாணத்தின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார, மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு சாதனை புரிந்த அந்த மகானை அரச கைக்கூலி என்று பிரச்சாரம் செய்து தோற்கடித்தது தமிழரசு கட்சி.

மறுபுறம் செல்வநாயகத்தின் அறைகூவலின் பின்னால் ஒன்றுபடுவோம் என்று சொல்லி தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகளெல்லாம் கொண்டு சென்று வளர்த்து 1977ல் தமிழர் தலைவராக மட்டக்களப்பிலிருந்து மேலெழுந்து வந்த இராஜதுரைக்கு என்ன நடந்தது? அவரை வஞ்சித்து, ஒதுக்கி, துரோகியாக்கி வெளியேற்றியது தமிழரசுகட்சி. சொல்லப்பட்ட காரணம் என்னதெரியுமா? 1978ஆம் ஆண்டு சூறாவளியால் அழிந்து கிடந்த மட்டக்களப்பை பார்வையிட வந்த பிரதமர் ‘பிரேமதாசாவை வரவேற்கச்சென்றது குற்றம்’ என்றது அமிர்தலிங்கத்தின் குற்றப்பத்திரிகை. அத்தனைக்கு பின்னரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் செல்வநாயகத்தின் 35 வது நினைவு கூட்டமொன்றுக்காக யாழ்ப்பாணம் சென்ற ராஜதுரையை ‘மட்டக்களப்பு சக்கிலியா’ ‘துரோகி’ என்று துரத்தினார் சிவாஜிலிங்கம் என்கின்ற தமிழ் தேசிய பித்தர்.

* யாழ் மேயரான செல்லன் கந்தயன் யாழ்- நூலகத்தை திறந்துவைத்தல் கூடாது என்கின்ற மேட்டுக்குடிகளுக்கு ஒத்தாசை வழங்கி திறப்புவிழாவை தடுத்து நிறுத்தினர் தமிழீழவிடுதலைப்புலிகள்.

*தமிழ் பேசும் இஸ்லாமியரை தமிழ் தேசியத்துக்கு வெளியே துரத்தியடித்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

*2004 ல் தமிழீழத்தின் நிழல் நிர்வாக கட்டமைப்புக்கு 32 துறை செயலாளர்களை தமிழீழ விடுதலை புலிகள் நியமித்தபோது 31 செயலர்களை வடமாகாணத்துக்குள் சுருட்டிக்கொள்ளுதல் தகுமோ? என்று கேட்ட கருணாம்மானை துரோகி என்று அறிவித்து வெருகல் படுகொலைக்கு ஆணையிட்ட அன்றே அறுந்து போனது வடக்கு கிழக்கு தாயக உறவு.

பிரபாகரனது முப்பத்துவருட ஆயுதப்போராட்டம் தமிழ் பேசும் மக்களின் (சாதி,மத, பிரதேச,) பன்மைத்துவத்துவ குரல்களை அங்கீகரிக்க மறுத்து வீணாகி மண்ணோடு மண்ணாகிப்போனது..

இப்போது கிறிஸ்தவரையும் கழித்துவிட்டு இந்து கட்சிகளின் உருவாக்கத்துக்கு அத்திவாரம் இட்டுக்கொண்டிருக்கின்றது. யாழ்-மையவாத சிந்தனை முகாம். அதனை மூத்த தமிழீழவாதிகளில் ஒருவரான மறவன் புலவு சச்சுதானந்தம் கச்சிதமாகவே செய்து வருகின்றார்.

அண்மைக்காலமாக பெண்களின் குரலை உதாசீனம் செய்துவருகின்றது தமிழரசுக்கட்சி. கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மங்களேஸ்வரி சங்கருக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்கு சுமந்திரன் சொன்ன காரணம். ‘அவர் துரோகம் செய்ய கூடியவர்’ என்று முன்னரே உணர்ந்தாராம் சுமந்திரன். இப்படி அவரே முடிவெடுப்பதென்றால் கட்சியின் செயலாளர் பதவியை துரைராசசிங்கத்துக்கு கறிவேப்பிலைக்கா கொடுத்து வைத்திருக்கின்றது தமிழரசு கட்சி? இதைத்தான் யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். ஒரு கணவனை இழந்த பெண் என்னும் வகையில் சசிகலா ரவிராஜை வைத்து வாக்குசேகரிக்க முயன்றது தமிழரசு கட்சி. அதன்பின்னர் அவருக்கு நடந்த அநியாயத்துக்கு விளக்கம் தேவையில்லை.

தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற இந்த யாழ்ப்பாண மேட்டிமை சக்திகளிடத்தில் உண்மையான தமிழ் தேசிய சிந்தனை இல்லை. இருப்பதெல்லாம் ஆதிக்க சிந்தனை மட்டுமேயாகும். அதில் சிங்களவர்களிடமிருந்து அதிகாரத்தை கைமாறி புதிய எஜமானர்களாக தங்களுக்கு முடி சூட்டி கொள்ளுகின்ற கபட நோக்கம் மட்டுமே மறைந்திருக்கின்றது. அதுவே வடமாகாண சபை முதலமைச்சர் விடயத்திலும் நடந்தேறியது.

நம்மை நாமே ஆளுதல் என்கின்ற அற்புதமான சிந்தனை ஆட்சியாளர்களை அடையாளமிட்டு மலினப்படுத்தப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு பதிலாக தமிழ் எம்பிக்களும் அமைச்சர்களும் முதலமைச்சரும் வந்துவிட்டால் தமிழ் தேசியம் தழைத்தோங்கும் என்று அப்பாவித்தனமாக நம்பவைக்கப்பட்டுள்ளனர் எமது மக்கள். வெறும் இனவாத வெறியை விதைத்து ஆளுவதற்கான உரிமைக்காக மட்டுமே போராட்டம் என்கின்ற எளிமைப்படுத்தப்பட்ட கருத்துருவமே சாமானிய மக்களின் மனநிலையில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது..

இதுவரைகாலமும் தமிழ் தேசியத்தை தலைமையேற்று வழிநடத்தியவர்களில் அநேகமானோர் யாழ்- மேட்டுக்குடி நலன்களில் மையம்கொண்டுள்ள ஆதிக்க சிந்தனைக்கு மாற்றானவர்களாய் இருக்கவில்லை. அப்படியிருக்க முனைந்த ஒரு சிலரும் மைய நீரோட்ட அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். ஒதுக்கப்பட்டனர். அல்லது துரோகிகள் என்று கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய கேடுகெட்ட யாழ்-மேட்டுக்குடி தலைமைகளுடைய ஆதிக்க சிந்தனையின் அம்மணத்தை மறைக்க தேசியம் என்றும் தாயகமென்றும் விடுதலையுணர்வு என்றும் வேசம்கட்டுவதற்கு பெயர்தான் யாழ்- மேலாதிக்கம் என்பதாகும்.

அதனால்தான் சொல்கின்றோம். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழீழம் என்பது யாழ்-மேலாதிக்க தமிழீழம்தான் . இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் தேசியம் என்பது யாழ் மேலாதிக்க தமிழ் தேசியம்தான். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் நோக்கு என்பதும் யாழ் மேலாதிக்க தமிழ் நோக்குத்தான். என்றொருநாள் தமிழ் பேசும் மக்களின் தலைமையானது யாழ்-மேட்டுக்குடிகளிடமிருந்து கைமாறுகின்றதோ அன்றுதான் தமிழர்களின் நன்னாள் தொடங்கும். (Source: padakutv.lk)