யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவத் தவறுகளால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி உதயசிறி, தன் மீது “பெண் பிணத்துடன் புணர்ந்தேன்;” என மருத்துவ மாபியாக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என ஓகஸ்ட் முதலாம் திகதி தெரிவித்துள்ளார். மருத்துவ மாபியாக்கள் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் தொடர்ந்தும் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதற்கிடையே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் நீதி மன்றத்துக்கு முன் யூலை 31 அன்று சென்றுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகராக கடமையாற்றிய ராமநாதன் அர்ச்சுனா தங்களது கடமையைச் செய்யவிடவில்லை, அச்சுறுத்தல்களை விடுத்தார், மிரட்டினார், விடுதியைத் தொடர்ந்தும் மீள ஒப்படைக்க மறுக்கின்றார் போன்ற குற்றச்சாட்டுக்களை வைத்தியர்கள் ராஜீவ், பிரணவன், கமலா, மதிவாணன், மயூரன் ஆகியோர் முன்வைத்திருந்தனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் வைத்தியர்களாக இருப்பதால், அவர்களுடைய பெறுமதியான நேரத்தையும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் ராமநாதன் அர்ச்சுனாவினதும் நீதிமன்றத்தினதும் பெறுமதியான நேரத்தையும் கருத்தில் எடுத்து இவ்வழக்கை இணக்க சபையூடாக தீர்க்குமாறு பிரதிவாதி ராமநாதன் அர்ச்சுனாவைப் பிரதிநிதித்துவம் செய்த சட்டத்தரணி செலஸ்ரியன் நீதிமன்றைக் கேட்டுக்கொண்டார். அதனை வாதிகளான மருத்துவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குமாரவடிவேல் திருக்குமரன் மறுத்துவிட்டார். ராமநாதன் அர்ச்சுனாவை வழக்கிலிருந்து தப்பிக்கொள்ள அனுமதிக்க முடியாது என திருக்குமரன் வாதிட்டார். அர்ச்சுனாவுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் திருக்குமரன் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த ராமநாதன் அர்ச்சுனாவின் சட்டத்தரணி செலஸ்ரியன், அப்படியானால் “வேலை நேரத்தில் பணியில் இல்லாது, தனியார் வைத்தியசாலைக்குச் சென்று பணிபுரியும் இம்மருத்துவர்கள் ஒவ்வொருவர் மீதும் பப்ளிக் சேர்விஸ் கொமிஸன் விதிகளை மீறியதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடும்போம்” எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் நீதிமன்றில் தனது வாதத்தை வைத்த போது இந்த வைத்தியர்கள் பணிநேரத்தில் பணியில் ஈடுபடாமல் வைத்தியசாலையில் ஒவர்ரைமையும் பதிந்துபெற்றுவிட்டு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி உள்ளனர். மக்களின் வரிப்பணத்தை இந்த வைத்தியர்கள் சுரண்டி உள்ளனர் என்றும் சட்டத்தரணி செலஸ்ரியன் சாவகச்சேரி நீதிமன்றில் தெரிவித்தார்.
வழக்கை விசாரணை செய்த நிதிவான் அ யூட்சன் ‘இதுவொரு மிரட்டல் எனத் தெரிவித்தார்’. ‘அவர்கள் தான் பிரதிநிதித்துவப் படுத்துபவர் மீது மேலதிக நடவடிக்கை எடுப்போம் என மிரட்டியாதால் தான், தான் அவ்வாறு கூறவேண்டியேற்பட்டதை சட்டத்தரணி செலஸ்ரியன் சுட்டிக்காட்டினார். வைத்தியர் பிரவணனுடைய பிரபல்யமான மேற்கோளாக மாறிய ‘கோள் மீ ஆஸ் சேர்’ என்பது பற்றி குறிப்பிடுகையில் ‘கோள் மீ அண்ணா’ என்பது எப்படி மிரட்டலாகும் எனக் கேட்டார் சட்டத்தரணி செலஸ்ரியன். ‘எதிர்தரப்பு சட்டத்தரணி சயந்தனை எனக்குத் தெரியும். அவருடன் சட்டவிடயங்கள் பற்றி பேச இருந்தது. அதற்காக நான் அவருக்கு போன் பண்ணிணேன். மசேஜ் விட்டேன். அதற்கு என் மீது மிரட்டல் வழக்குப் பதிவு செய்ய முடியுமா’ எனக் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணி செலஸ்ரியன். மேலும் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு வழங்கப்பட்ட விடுதியில் அர்ச்சுனாவிற்கு தேவையான ஆதாரங்கள் பல உள்ளது. அதனை விட்டால் ஆதாரங்கள் காணாமல் போய்விடும் என்றும் சட்டத்தரணி செலஸ்ரியன் அங்கு சுட்டிக்காட்டினார்.
காலை ஒன்பது மணியளவில் நீதிமன்றம் வந்த வாதிகளான மருத்துவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தின் இடதுபுறம் சுவரோடு ஒட்டியவாறு இருந்த வாங்கில் அமர்ந்து கொண்டனர். பல்வேறு வழக்குகளுக்காக வந்திருந்தவர்கள் மத்தியில் இந்த வைத்தியர்களும் அங்கு வந்து காத்திருந்தனர். பிரதிவாதியான ராமநாதன் அர்ச்சுனா பார்வையாளர்களின் இருக்கையில் நடுவே போடப்பட்ட இருக்கையில் இருந்தார். இந்த வழக்கு மேலதிக தகவல்கள், விசாரணைகளுக்காக செப்ரம்பர் 11க்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதே போல் வைத்தியர்களுக்கு எதிராக அர்ச்சுனாவால் கொண்டுவரப்பட்ட, தன்னைத் தாக்கியது, தனது மொபைல் போனை பணத்தைப் பறித்தது சம்பந்தப்பட்ட வழக்கில் மேலதிக சாட்சியங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் இவ்வழக்கும் செப்ரம்பர் 11 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சாவகச்சேரி நீதி மன்றில் வைத்தியர்களால் தொடரப்பட்ட இந்த வழக்கு வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா தங்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்திவிட்டார் அதற்கான ஆதாரங்களையோ மான நஸ்டத்தையோ கோரும் வழக்குகளாக இருக்கவில்லை. வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மிரட்டுகிறார், பயப்படுத்துகின்றார், கடமையைச் செய்யவிடவில்லை, விடுதியை வைத்திருக்கின்றார் போன்றவற்றுக்காகவே வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. தற்போது இணக்கசபையூடாக தீர்ப்பதற்கு வைத்தியர்கள் மறுத்துள்ளதால் இவ்வழக்கு எதிர்காலத்தில் தீவிரமடையும் என்றும் மேலதிக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டி வரலாம் என்றும் சட்டத்தரணி செலஸ்ரியன் தெரிவித்தார்.
அடுத்து, யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ அசட்டையீனம் காரணமாக நிகழ்ந்த பல உயிரிழப்புகளை அம்பலப்படுத்தியதற்கு பழிவாங்கும் வகையில் 2018இல் தன்னுடைய பதவியை பறித்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி உதயசிறி குற்றம்சாட்டியுள்ளார். 15 வரையான குழந்தைகளின் உயிரிழப்புக்கு மருத்துவ அசட்டையீனமே காரணம் எனத் தெரிவித்த உதயசிறி, இக்குழந்தைகள் வாட் அருகில் சுவாசத் தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவு இருந்துள்ளது. அதிலிருந்து வந்த வைரஸ் கிருமிகளே குழந்தைகளில் தொற்றை ஏற்படுத்தி மரணத்தைச் சம்பவித்ததாக அவர் தெரிவித்தார். இதனை ஆரம்பத்திலேயே ஆபத்து கணிப்பீடு செய்து தடுத்திருக்க முடியும் என்றும் அதிகாரி உதயசிறி தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் துர்க்கா இல்லத்தில் வளர்ந்து மணம் முடித்த பெண் தனது மூன்றாவது குழந்தைப் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு 28 நாட்கள் இருந்த நிலையில் திடீரென நடுநிசியில் சிசேரியன் ஒப்பிரேசன் செய்யப்பட்டதில் தாயும் சேயும் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இவ்வாறான தவிர்க்கக் கூடிய மரணங்களைச் சுட்டிக்காட்டி அவற்றை வெளிக்கொண்டு வந்ததற்காக தனது பதவி பறிக்கப்பட்டதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரியாக இருந்த உதயசிறி தெரிவிக்கின்றார்.
தன்னுடைய பதவி பறிக்கப்பட்டதற்கான காரணத்தை தனது தேடலினூடாகக் கண்டுபிடித்ததாகக் கூறும் உதயசிறி, யாழ் போதனா வைத்தியசாலை வழங்கிய குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடிப்படையிலேயே 2018இல் தனது பதவி பறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் அடிப்படையில் தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக சுகாதார அமைச்சு அவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அண்மையில் உதயசிறி அமைச்சில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரூடாக தன்மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றிய ஆவணத்தை பார்த்தபோது அதிர்ச்சியான குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டு இருந்தது.
இறந்த பெண்ணின் உடலோடு உதயசிறி உறவு கொண்டதாகவும் பாலியல் லஞ்சம் பெற்றார் என்றும் இது போன்ற 37 வரையான குற்றச்சாட்டுக்கள் திடீர் மரண விசாரணை அதிகாரியாக இருந்த உதயசிறி மீது சுமத்தப்பட்டு இருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவுமே உதயசிறிக்கு தெரிவிக்கப்படவும் இல்லை. அவை தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் தண்டணை வழங்கப்பட்டு விட்டது. அவருடைய பதவி பறிக்கப்பட்டு விட்டது. மீண்டும் தன்னுடைய பதவியை மீளப் பெறுவதற்கான போராட்டம் தொடர்கின்றது.
வைத்தியர் ஜெயக்குமரன், வைத்தியர் நாகநாதன், வைத்தியர் கெங்காதரன், உதயசிறி என யாழ் போதனா வைத்தியசாலையில் பலர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இவரின் கரங்களில் புலம்பெயர் தேசங்களின் நிதிப்பங்களிப்பு வலைப்பின்னல் இருப்பதாகவும், மத்திய அரசின் கீழ் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்து கொண்டே மாகாண சுகாதாரப் பணிப்பாளராகவும் இருக்கும் அளவுக்கு மாகாணத்திலும் மத்தியிலும் அரசியல் அதிகாரங்களோடு நெருக்கமாக இருக்கின்றார் என்றும் ஜிஎம்ஓஏ உடன் செயற்படுவதாகவும் ஜிஎம்ஓஏ இன் மருத்துவ மாபியாவின் பங்காளிகளில் இவரும் ஒருவர் என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது.
தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்காக அவர்களைப் பாதுகாப்பதற்காக தனியார் மருத்துவமனைகளில் நிகழும் மருத்துவத் தவறுகளை மூடிமறைப்பதிலும் யாழ் போதனா வைத்தியசாலை பயன்படுத்தப்படுவதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரியாகச் செயற்பட்ட உதயசிறி தெரிவிக்கின்றார். மருத்துவத் தவறுகள் மற்றும் சிக்கலான காரணங்களால் உயிரிழந்தவர்கள் கூட அவசர சிகிச்சைக்கு அனுப்பப்படுவது என்ற பெயரில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு உயிருடன் இருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் எவ்வித மருத்துவக் குறிப்புகளும் இல்லாமல் அனுப்பி வைக்கப்படுவதாக உதயசிறி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் வைத்தியர் அர்ச்சுனாவைக் காட்டிலும் தீவிரமாக மோசடிகளை வெளிக்கொண்டுவந்த டொக்டர் சிவரூபன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தற்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரியாக இருந்து போலியான காரணங்களால் விசாரணையின்றிப் பணி நீக்கம் செய்யப்பட்ட உதயசிறி, கபிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்ச்சியில் யூலை 1 இல் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சமூக வலைத் தளங்களில் மருத்துவர்கள் த சத்தியமூர்த்தி, பிரணவன் ஆகியோரை கடுமையாக விமர்சித்து வந்த தன்னை, முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மனித உரிமைக்காப்பாளர் த கிருஷ்ணா தேசம்நெற்க்கு இன்று யூலை 2இல் அனுப்பி வைத்த ஒலி வடிவமான குறும்செய்தியில் தெரிவித்துள்ளார். மருத்துவமனை தனக்கு உயிராபத்தான இடமாக மாறி இருப்பதாக அவர் குற்றம்சாட்டுகின்றார். த கிருஷ்ணா தேசம்நெற்க்கும் சில நேர்காணலைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவ மாபியாக்கள் பற்றி ராமநாதன் அர்ச்சுனா கொழுத்திப் போட்ட தீ இன்று அர்ச்சனாவை மீறியும் சுவாலை விட்டு எரிந்துகொண்டு உள்ளது. இத்தீயைப் பரப்பி இந்த மருத்துவ மாபியாக்களையும் ஏனைய துறைகளில் உள்ள மாபியாக்களையும் சுட்டெரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும் என்ற கோசங்கள் பரவலாக எழுந்துள்ளது.