சிங்கள – பௌத்தமயமாக்கல்

சிங்கள – பௌத்தமயமாக்கல்

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு – முல்லைத்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்!

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கொக்குதொடுவாய், கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று (08) வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே, மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து என்ற பதாகைகள் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட புத்தர் சிலை – நாளை போராட்டத்திற்கு அழைப்பு!

சுழிபுரம் – சவுக்கடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை (08) இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

 

அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கை ஊடாக அழைப்பு விடுத்துள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

சுழிபுரத்தில் கடற்படையினரால் சவுக்கடிப் பிள்ளையார் கோயிலடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றக்கோரி, நாளை வெள்ளிக்கிழமை (08.03.2024) மு.ப 10.30 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் சவுக்கடிப் பிள்ளையார் கோயில் முன்பாக நடைபெறவுள்ளது.

 

எனவே அனைவரும் திரண்டு பேராதரவு தருமாறு அன்புரிமையோடு வேண்டுகின்றோம் – என்றுள்ளது.

“யாழ்ப்பாணத்தில் புத்தர் சிலை வைக்குமாறு புத்தர் கனவில் சொன்னார்.” – பொலிசாரிடம் இராணுவம் வாக்குமூலம்!

கனவில் புத்தபெருமான் தோன்றி தனக்குச் சிலை வைத்து வணங்குமாறு கூறினார். அதனால்தான் சிலையை வைத்தோம் என்று நிலாவரை கிணற்றுக்கு அருகில் கடமையில் ஈடுபடும் இராணுவத்தினர் அச்சுவேலி பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

நிலாவரை கிணற்றுக்கு அருகிலுள்ள அரசமரத்துக்கு கீழே திடீரென இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டமையால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விசாரணைகளை முன்னெடுத்த போதே மேற்கண்டவாறு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து சிலை இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டது.

நிலாவரை பகுதியை தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில், நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வருவதால் குறித்த சிலை வைத்திருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.