சித்தார்த்தன்.

சித்தார்த்தன்.

“பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. அவை விசயம் தெரியாம (தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு) பெரிசாக்கி கதைக்கினம்” புளொட் தலைவர் த சித்தார்த்தன்

 

வடக்கின் சுகாதார நிலைகள் பற்றிக் கேட்டறிய நேற்று யூலை 18 சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண யாழ் விஜயம் மேற்கொண்டிருந்தார் அங்கு அவரைச் சந்தித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி சார்பில் எஸ் சிறிதரன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ராமநாதன் அங்கஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் இவர்கள் வடக்கில் மக்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகளோ, பாதிப்போ இருப்பதாக எதுவும் குறிப்பிடவில்லை.

 

மாறாக புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்ற போது ரமேஸ் பத்திரணவின் தந்தைக்கு புகழாரம் சூட்டியதோடு தங்களுடைய பிரதேசத்துக்கு வந்ததற்கும் நன்றியும் தெரிவித்தார். தென்மராட்சி மக்களும் மற்றவர்களும் ஏதோ விசயம் தெரியாமல் கொஞ்சம் எல்லாத்தையும் பெருப்பித்துப் போட்டினம். பிரச்சினை இருக்குத் தான். ஆனா பிரச்சினை இல்லை” என்று மிகத் தெளிவாக மிக உறுதியாக சிரித்து சில்லெடுத்தார். இலங்கையில் உள்ள முதகெலும்பற்ற பிரயோசனமற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று பெயரெடுத்த சித்தார்த்தனுக்கு ஊன்றுகொலாக பா உ சிறிதரனும் அங்கு வந்திருந்தார். பக்கத்தில் உள்ள தென்மராட்சி மக்களின் குரலுக்கு செவிமடுக்காத எஸ் சிறிதரன், லண்டனில் தனது மகனை படிப்பிக்கும் கோயில்காரரின் தேருக்கு லண்டனுக்கு காவடி எடுக்கின்றார். பா உ எஸ் சிறிதரன் லண்டன் வந்தால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் ஒன்றை நடத்த லண்டனில் வாழும் தென்மராட்சி மக்களும் அவர்களின் நண்பர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் தென்மராட்சி மக்களதும் தமிழ் மக்களதும் முதகில் குத்திவிட்டதாக கிளிநொச்சியில் வாழும் மனிதஉரிமைப் பாதுகாவலர், செயற்பாட்டாளர் த கிருஷ்ணன் தேசம்நெற்க்கு யூலை 18 வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். பா உ க்கள் எஸ் சிறிதரன், எம் சுமந்திரன், த சித்தார்த்தன், ராமநாதன் அங்கஜன், செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் அவர்களது கட்சிகளும் தாங்களுக்கு தமிழ் மக்களது அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறையில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டிவிட்டார்கள் என த கிருஷ்ணன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண வைத்தியசாலை ஐரோப்பிய வைத்தியசாலைகளின் தரத்தில் இருப்பதாக ரமேஸ் பத்திரண தெரிவித்ததை வேடிக்கையாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ இனிமேல் வயிற்றுவலி வந்தால், பாம்பு கடித்தால், பல்லுக் கொதித்தால், நெஞ்சு நொந்தால், பிள்ளைப்பேறு என்றால் அருகில் உள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும். அந்த டொக்டர் கையெழுத்துப் போட்டுவிட்டு ப்ரைவேட்டுக்கு போயிருந்தால், அவர் வரும்வரை இவர்கள் காத்திருக்க வேண்டும். அப்படி வந்து பார்த்து சரிவராது என்று சொன்னால் நீங்கள் யாழ்ப்பாணம் போதனா வைதியசாலைக்கு கொண்டு போய் உயிர் தப்பி வந்து சொல்லுங்கோ. “பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு அவை விசயம் தெரியாம கதைக்கினம்” என்று புளொட் சித்தார்த்தனும் சிறிதரனும் அங்கஜனும் சொல்றதை நாங்களும் ஏற்றுக்கொள்வோம்.

முதல்ல பென்ஸ்காரை குவிச்சு வைத்துக்கொண்டு சைக்கிள் சின்னத்தில தமிழ் தேசியம் பேசிய பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை ஐரோப்பிய தரத்தில் இருக்கிற யாழ் தேசிய மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளியுங்கள். இனிமேல் வடக்கில இருக்கின்ற ஒரு பாரளுமன்ற உறுப்பினரும் அரசாங்க வைத்தியசாலையைத் தவிர வேறு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லக்கூடாது. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதற்கு உரிமை இருக்கிறதோ அதுதான் உங்களுக்கும்.

இலங்கையை சொர்க்கபுரியாக்க செய்ய வேண்டியது என்ன..? – ஜனாதிபதிக்கு சித்தார்த்தன் கடிதம் !

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வைக் கண்டறிவது நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றும் என்பதையும் நான் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விளைகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே,

நாட்டின் நிலைமையைப் பற்றி ஆழமான பொருளாதாரப் பகுப்பாய்வைச் செய்தால், நாட்டின் தற்போதைய பொருளாதார அவலத்திற்கு கோவிட் பெருந்தொற்று மாத்திரம் காரணம் அல்ல என்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம். பல தசாப்தங்களாக நாட்டில் நிலவும் இன நெருக்கடியை, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் கொள்கை, அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாகக் கையாளுகையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான காரணமாகும்.
சுயாட்சி அதிகாரத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைக் கோரிக்கைக்கு முன்னதாகவே எமது நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியும்.
எவ்வாறாயினும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் சித்தாந்தத்தால் உந்தப்பட்ட அரசாங்கங்கள் அரசியல் பிரச்சினைக்கு இராணுவ தீர்வையே தேர்ந்தெடுத்தன. உண்மையில், அதுவே இன்றைய பேரழிவுகரமான கடன் நெருக்கடிக்குள் நம் நாட்டைத் தள்ளிவிட்டுள்ளது.
நீங்கள் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால், பல தசாப்தங்களாக சிங்கள பௌத்த பெரும்பான்மை சித்தாந்தத்துடன் நடாத்தப்பட்ட யுத்தமானது இன்று எமது நாட்டின் அனைத்து சமூக மக்களினதும் தோள்களில் ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையையும் சுமத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னருங்கூட, தமிழ் மக்களின் மனதை வெல்வதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து வந்த எமது நாட்டு அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை. மாறாக நீங்கள் பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட அப்போதைய அரசாங்கம், தமிழ் மக்களை யுத்தத்தில் வெற்றிகொண்டுவிட்டோம் என்கின்ற மனப்பான்மையுடன் தொடர்ந்தும் எமது நாட்டை ஆட்சி செய்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தியது. அதுவே, அந்நேரத்தில் பெரும் ஆற்றலையும் விருப்பத்தையும் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதை தடுத்திருத்தது.
2009 இல் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் எவ்வளவோ விடயங்களைச் செய்திருக்கலாம். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் தீர்வொன்றை நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவகையில் காணப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் உட்பட பல்வேறு சர்வதேச தலைவர்களுக்கும் உறுதியளித்திருந்தார். அவர் அதனைச் செய்திருந்தால், புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்த்திருப்பார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் மிக சக்திவாய்ந்த மனிதராக இருந்தபொழுது, அரசியல் தீர்வுக்கான சாத்தியமான யோசனையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவினால் முன்மொழியப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்கின்ற ஓர் அரசியல் தீர்வு இருந்தது. அதனை இந்த நாட்டு மக்களின் பேராதரவினைப் பெற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ இலகுவாக அமுல்படுத்தியிருக்கலாம்.
அவர் வாக்குறுதியளித்தபடி 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண விரும்பாவிட்டாலும், குறைந்தபட்சம் 13வது திருத்த வரைபை, அதன் ஆரம்ப அசல் வடிவிலேயே முழுமையாக நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதற்கான துணிவு அவருக்கு இருக்கவில்லை. நாட்டில் முதலீடு செய்வதற்கு பெரும் ஆற்றலுடன் இருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மக்களுக்கு உரிய இடத்தினை வழங்க அரசாங்கம் முன்வராததால் விலகி நிற்க முனைந்தனர்.
இதற்கிடையில், எமது நாட்டில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் வந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கடுமையான விதிமுறைகளைக் கடந்து அரசாங்கத்தின் சிங்கள அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மேம்படுத்தப்பட்ட இந்த அதிகாரிகளின் சிங்கள பௌத்த பெரும்பான்மை மனோநிலை, அந்த முதலீட்டாளர்களின் பெரும் உற்சாகத்தை பாரிய அளவில் சிதைத்துவிட்டது. முதலீட்டாளர்கள் மீது சுமத்தப்பட்ட தாங்க முடியாத மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சுமைகள் அவர்கள் தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் வசிக்கும் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது என்பதை நான் உங்களுக்குச் கூறமுடியும். சில முதலீட்டாளர்கள் நாட்டின் தென்பகுதியிலேயே முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தனிப்பட்ட முறையில், இதுபோன்ற சில சம்பவங்களை நான் அறிவேன். மேலும் இதுபோன்ற பல சம்பவங்கள்பற்றி; எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய ஆட்சிமுறை என்கின்ற நீண்ட கால அபிலாசையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிரந்தர தீர்வை எட்டும்வரை, ஒரே நாட்டிற்குள் அரசியல் தீர்வு காண்பதற்கான பரிந்துரையாக குறைந்தபட்சம் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அதன் ஆரம்ப வடிவிலேயே, முழுவதுமாக செயல்படுத்துமாறு எமது கட்சியின் சார்பில் பரிந்துரைக்க விரும்புகிறேன். இத்தகைய நடவடிக்கை ஒன்று மாத்திரமே தற்போதைய பொருளாதார அவலநிலையில் இருந்து நமது நாட்டை மீட்பதற்கான ஒரே வழியென நான் திடமாக நம்புகின்றேன்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வைக் கண்டறிவது நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றும் என்பதையும் நான் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விளைகிறேன் என குறிப்பிட்டு இன்றைய சர்வகட்சி மாநாட்டில் புளொட் தலைவர் சித்தார்த்தனால் சர்வகட்சி மாநாட்டில் வாசிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் பலவீனமான ஒரு உறுப்பினரை தலைமை ஏற்க கோரும் மாவை.சேனாதிராஜா !

இலங்கை நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இன பாராளுமன்ற அங்கத்தவர்கள் தொகை மிகக்குறைவு. அதிலும் தெரிவாகியுள்ள தமிழ்தலைமைகள் ஆளுக்கொரு கட்சி கொள்கைக்கொரு கட்சி என பிரிந்து போயுள்ளனர். மக்களுக்கான அரசியலை முன்னெடுக்காது அவர்கள் தங்களுக்கான அரசியலையே முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுள் தனியாக தெரிபவர் சித்தார்த்தன். அவர் தொடர்பில் பாராளுமன்ற அமர்வுகளுக்கு ஏன் செல்கிறார்..? மக்கள் பிரச்சினைகளில் எதனை இவர் பேசுகிறார்..? எப்போது பேசியுள்ளார்..? என பல வினாக்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பாராளுமன்றத்தில் உள்ள பலவீனமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் சித்தார்த்தனும் இடம்பெற்றிருக்கின்றரார்.

 

இவையெல்லாம் ஒருபுறமிருக்க “தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு  சித்தார்த்தனே தலைமை தாங்கி, அதனை முன்கொண்டு செல்ல வேண்டும் என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழீழ மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் சதானந்தனின் நினைவுதின நிகழ்வில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக சரியான ஒரு கோட்டில், நாங்கள் பயணிக்கவில்லை என்பதை பெரும்பாலானோரின் கருத்துக்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகின்றன. ஆகவே, அதற்கான பொறுப்புகளை தானும் ஏற்க வேண்டி இருப்பதுடன், நாங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்கிற விடயம் நீண்ட காலமாக பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விடயம் இன்னும் கைகூடவில்லையெனவும் அவர் கவலை வெளியிட்டிருந்தார். இருப்பினும், அதற்காக நாங்கள் இதை கைவிட்டுவிட முடியாது இதை கைகூட வைக்கின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபட்டே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாக கருதுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்டது பலவீனமான பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் – இரா.சம்பந்தன் , சித்தார்த்தன் ஆகியோரும் முன்னிலையில் !

இலங்கை நாடாளுமன்ற செயற்பாடுகளில் பலவீனமான உறுப்பினர்களின் பெயர்களில் தமிழ் உறுப்பினர்கள் சிலரும் இடம்பிடித்திருக்கின்றனர். அதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அலி சப்ரி உள்ளிட்டவர்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை – ஓகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட கணிப்பில் இந்த விபரம் வெளியாகியிருக்கின்றது. அந்த பெயர் பட்டியல் வருமாறு,

டிரான் அலஸ் – பொதுஜன முன்னணி (கொழும்பு) அலி சப்ரி ரஹீம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (புத்தளம்) மர்ஜான் பலீல் – பொதுஜன முன்னணி (களுத்துறை) நிப்புண ரணவக்க – பொதுஜன முன்னணி (மாத்தறை) ஆர். சம்பந்தன் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு (திருகோணமலை) குலசிங்கம் திலீபன் – ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (மன்னார்) சாரதி துஸ்மந்த – பொதுஜன முன்னணி (கேகாலை) உதயகாந்த குணதிலக்க – பொதுஜன முன்னணி (கேகாலை) எம்.எஸ். தௌபிக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (திருகோணமலை) அப்துல் ஹலீம் – ஐக்கிய மக்கள் சக்தி (கண்டி) ஆகியோர் உள்ளனர்.

இதேவேளை சபை அமர்வுகளில் குறைந்த நாட்களே கலந்துகொண்ட எம்.பிக்களின்பட்டியலிலும் தமிழ் உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர். அவர்களில் இரா.சம்பந்தன், பிள்ளையான், ஜீவன் தொண்டமான், வினோ நோகராதலிங்கம், திகாம்பரம், சித்தார்த்தன், ஹலீம் மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ, டிரான் அலஸ், விமல் வீரவன்ச, மஹிந்த சமரசிங்க, திலும் அமுனுகம ஆகியோர் அடங்குகின்றனர்.

மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள்! – சித்தார்த்தன்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்தேர்தல் முடிவுகளினுடைய அடிப்படையில் பாராளுமன்றில் தமிழர்தாயகம் என்ற கொள்கையோடு பயணிக்ககூடிய தமிழ்தலைமைகளுடைய எண்ணிக்கை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையானது  தமிழ் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் எம்முடன் ஒன்றாக இணையாது விட்டாலும் பரவாயில்லை தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயற்பட நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கஜேந்திரகுமார் ,  விக்னேஸ்வரன் ஆகியோருக்கு  அழைப்பு விடுத்துள்ளார் புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று  மாலை இடம்பெற்ற ஊடகவியலளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒன்றிணையாது விட்டாலும் பரவாயில்லை ஒற்றுமையாக மனப்பூர்வமாக செயற்பட வேண்டும்.வார்த்தைகளால் மட்டும் அல்லாது மனபூர்வமாக ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

நான் எமது கட்சியுடன் இணையுங்கள் என்று கூறவில்லை.மாறாக மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள் என்றே அழைப்பு விடுக்கின்றேன்.

இது நடைபெற வேண்டும். வெறுமனே மக்களுக்கு நான் ஒற்றுமையாக செயற்பட தயாராக இருக்கின்றேன் என ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ளாமல் உண்மையிலேயே ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்றார்.