சிறுவர்கள்

சிறுவர்கள்

பாடசாலைகளுக்கு செல்லாமல் வீதிகளில் யாசகம் எடுக்கும் இலங்கையின் 30000 சிறுவர்கள்!

இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இந்நிலைமை எதிர்காலத்தையும் பாதிக்கலாம்.

இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் வீதியில் யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து போதைப்பொருள் விற்பனை, திருட்டு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

 

இந்த சிறுவர்களில் சிலர் தங்களது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களினால் யாசகம் பெறுவதற்கும் பணம் சம்பாதிக்கும் பிற நடவடிக்கைகளுக்கும் தள்ளப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.

 

4 முதல் 15 வயதுக்கு உட்பபட்ட பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாமல் வீதிகளிலும் புனிதத் தலங்களிலும் சன நெரிசல்மிக்க இடங்களிலும் யாசகம் பெறுகின்றனர்.

 

சில பெற்றோர்கள் இந்த சிறுவர்களை கூலி வேலைகளுக்காகவும் வீதியோர வியாபாரங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்த சிறுவர்களில் சிலர் போதைப்பொருள் பாவனைக்கும் பல்வேறு குற்றச்செயல்களுக்கும் அடிமையாகி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பருத்தித்துறையில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் !

பருத்தித்துறை நகர் பகுதியில் நேற்று அதிகாலை மீட்கப்பட்ட சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்ட நிலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் அவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸாரினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இதனையடுத்து இரண்டு சந்தேகநபர்களையும் எதிர் வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.