சிவசக்தி ஆனந்தன்

சிவசக்தி ஆனந்தன்

“தமிழின விடுதலைக்கான போராட்டத்தில்  தமிழர்களுக்கு தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.” – சிவசக்தி ஆனந்தன்

“தமிழின விடுதலைக்கான போராட்டத்தில்  தமிழர்களுக்கு தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.” என  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதன் படி,

“இலங்கை அரசாங்கமானது தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. அதேநேரம், ஆட்சியாளர்களின் பங்காளிகளுடனும் அரசியல் ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. சிங்கள, பௌத்த கோட்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 69இலட்சம் தென்னிலங்கை மக்களே ஆட்சியாளர்களை திட்டித்தீர்க்கின்ற அளவிற்கு வெறுப்பை காறி உமிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆட்சியாளர்கள் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று தமக்காக திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ள அனைத்துக் கதவுகளையும் தட்ட ஆரம்பித்துள்ளார்கள்.ஆனால் இலங்கையை மையப்படுத்தி ஏற்பட்டிருக்கும் பூகோளப்போட்டியின் பங்குதாரர்களான இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியன தன்னலன்களை மையப்படுத்தி காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன.

இதில் அமெரிக்கா, இந்தியாவை முன்னிலைப்படுத்திய நகர்வினை இலங்கை விடயத்தில் கையாள்கின்றது. அதேபோன்றே ஏனைய மேற்குலக நாடுகளும் அவ்விதமான நகர்வினையே பின்பற்றுகின்றது. இந்நிலையில் இந்தியாவிடமிருந்து இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான கடன்களை பெறுவதற்கு தயாராகியுள்ளது.

மறுபக்கத்தில் சீனாவிடத்திலும் கடன்களை, நன்கொடைகளை பெறுவதற்கு தயாராகி வருகின்றது. இந்தப் பின்னணியில், எதிர்வரும் எட்டாம், ஒன்பதாம் திகதிகளில் சீன வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் வாங் யி இலங்கைக்கு வருகின்றார். அவர் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 65ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதையே பிரதான விடயமாக கொண்டிருக்கின்றார்.

அதேநேரம், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஒன்பதாம் திகதி இந்தியாவுக்குச் செல்வதற்கு தயாராக வருகின்றார். குஜராத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பது காரணமாக கூறப்பட்டாலும், பிரதமர் மோடியைச் சந்திப்பது, இந்தியாவிடமிருந்து பெறக்கூடிய டொலர்களை விரைவுபடுத்துவது என்பன அந்தப் பயணத்தின் பின்னணிகளாக உள்ளன.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளும், ஏனைய முஸ்லிம், மலையக கட்சிகளும் இணைந்து தமிழ் பேசும் கட்சிகளாக பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தினை விரைவுபடுத்த வேண்டியுள்ளது.

குறித்த ஆவணத்தினை அனுப்புவதன் ஊடாக, இந்தியா இலங்கை மீதான தனது பிடியை உறுதிப்படுத்தும் அதேநேரம், அதன் பயனாக ஆகக்குறைந்தது இந்திய இலங்கை ஒப்பந்தத்தினையாவது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும். அதிகாரப் பகிர்வுக்கான முதற்படியாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை பாதுகாப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமானதாக இருக்கும்.

தற்போது ஏற்பட்டுள்ள பூகோள, பிராந்திய அரசியல், இராஜதந்திர மூலோபாயச் சூழலை உணர்ந்து கொள்ளாது வாய்ப்பினை நழுவ விட்டால் தமிழினத்தின் எதிர்காலம் மேலும் மோசடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன.

தமிழின விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ள போதும் அவை நழுவவிட்டமைதான் கடந்தக்கால வரலாறாக உள்ள நிலையில், தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ள நிலையில் அதனை நழுவ விட்டுவிடக்கூடாது.

எனவே குறிப்பறிந்து, தீர்க்கமான தீர்மானத்தினை எடுக்கும் அதேநேரம், தொடர் தாமதங்களை தவிர்த்து மிகமிக விரைவாக கூட்டு ஆவணத்தினை ஏகோபித்து பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென” குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் மூன்று சிங்கள கிராமங்களை இணைக்க திட்டம்.” – சிவசக்தி ஆனந்தன்

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் பிரதேச செயலகத்துடன் அனுராதபுரத்திலுள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு அரசாங்க அதிபர் முன்மொழிவை ஒன்றினை எல்லை நிர்ணயக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை . முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

சிங்கள குடியேற்றங்களிற்கெதிராக வவுனியா வடக்கில் இன்று (15) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் இந்த மாவட்டத்தின் எல்லையின் ஒரு இஞ்சியைக் கூட்டுவதாக இருந்தாலும் சரி, குறைப்பதாக இருந்தாலும் சரி இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் கருத்துக்கள் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள் எதையும் அறியாமல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக எல்லை நிர்ணயக்குழுவிற்கு அனுராதபுரத்திலுள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான ஒரு முன்மொழிவு அரசாங்க அதிபரினால் எல்லை நிர்ணயக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

ஆகவே இந்த திட்டமிடப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும்படி இந்தப்பிரதேசத்தில் இருக்ககூடிய அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்பதை அரசாங்கம் தனது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது” – சிவசக்தி ஆனந்தன்

“தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்பதை அரசாங்கம் தனது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது” தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று(02.12.2020) சேமமடு, செட்டிகுளம், ஒதியமலை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூர்ந்து ஊடகங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“1984ம் ஆண்டு இலங்கை இராணுவம் சேமமடு, செட்டிகுளம், ஒதியமலை ஆகிய மூன்று கிராமங்களிற்குள் அதிகாலையில் புகுந்து அப்பாவி தமிழ் பொது மக்களை கைது செய்தது மட்டுமன்றி சுட்டும் ,வெட்டியும் கொலை வெறித்தாக்குதலை நடாத்தியிருந்தனர்.

சேமமடு பகுதியில் 52பேரும், ஒதியமலை பகுதியில் 32பேரும், செட்டிகுளம் பகுதியில் 22பேரும், மொத்தமாக 106 பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களும் வறிய விவசாய குடும்பங்களை சேர்ந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் இளைஞர்களுமாவர்.

இப்படுகொலை நினைவு நாள் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்பட்டு உயிர் நீத்த ஆன்மாக்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் உறவினர்களும், அப்பிரதேச வாசிகளும் ஈடுபட்டே வந்தனர். இந்நிலையில் இத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் நாள் இன்றாகும் (02-12-2020) வழமைபோன்று உயிர் நீத்த உறவுகளின் நினைவாக வருடாந்த நினைவேந்தலை செய்வதற்கான ஏற்பாடுகள் அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. எனினும் செட்டிகுளம் பகுதியில் காவல்துறையினர் திடீரென பிரசன்னமாகி நினைவேந்தலுக்கு தடை விதித்ததோடு, உயிர்நீத்த உறவுகளை நினைவேந்த அனுமதிக்க முடியாது என்று எச்சரித்து சென்றிருக்கின்றார்கள்.

கடந்தவாரம் உயிர் நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலே நீதி மன்றத்தினுடாக காவல்துறையினர் தடைத்தரவு பெற்றிருந்தனர். இதே போல் இக்கிராம மக்களும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு தங்களின் சமய காலாச்சார முறைப்படி செய்ய வேண்டிய கடமைகளை கூட செய்யமுடியாத துர்பார்க்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நாட்டிலே உண்மையான சமாதானம் நல்லிணக்கம் வரவேண்டுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைவாக உயிர் நீத்தவர்களுக்கான கடமைகளை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து இவற்றை செய்யாத வரை எந்த காலத்திலும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்ற செய்தியை தான் இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப தமது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது ”எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“யுத்தத்தால் அழிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்காக விசேடமான நிதி ஒதுக்கீட்டை நல்லாட்சி அரசாங்கம் உட்பட எந்த அரசாங்கமும் செய்யவில்லை” – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு !

“யுத்தத்தால் அழிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்காக விசேடமான நிதி ஒதுக்கீட்டை நல்லாட்சி அரசாங்கம் உட்பட எந்த அரசாங்கமும் செய்யவில்லை” என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டடுள்ளார்.

வவுனியாவில் நேற்று (19.11.2020) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலங்கை-இந்திய ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வாக இல்லாவிட்டாலும், ஒரு ஆரம்பப் புள்ளியாக வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டது. இதன்படி, எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறுபட்ட நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் நோக்குடனேயே அதனை தோழர் பத்மநாபாவும் ஏற்றுக்கொண்டார்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33 வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையிலே தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கமானது இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக மீறுகின்ற வகையிலேயே நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள், சொத்து அழிவுகளில் இருந்து தமிழ் மக்கள் காப்பற்றப்பட்டிருப்பார்கள்.

இதேவேளை, தற்சமயம் சிங்களப் பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளுடன் ஆட்சியில் உள்ள அரசாங்கமானது அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பூகோள அரசியல் போட்டிகளுக்குள் சிக்குண்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அரசாங்கம் மிகக் காத்திரமான ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையே ஒரு பரந்துபட்ட பலமான ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப வேண்டும். இவ்வாறு கட்டியெழுப்பப்படும் போதே, இந்தியாவோடும் ஏனைய சர்வதேச நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியாக அணுகி எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் இருப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.