இலங்கை பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் பீஜீங்கில் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
சீனாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி, பீஜிங் நகரிலுள்ள ஹூவாவி நிறுவனத்தின் ஆய்வு, அபிவிருத்திக்கான மத்திய நிலையத்திற்கு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டபோதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது ஹூவாவி நிறுவனத்தின் பிரதி தலைவர் Simon Lin-ஐ ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
இலங்கையில் மென்பொருள், வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாரென ஹூவாவி நிறுவனத்தின் பிரதி தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் கலந்தாலோசிக்கவே இம்முறை வருகை தந்திருப்பதாகவும், டிஜிட்டல் கல்வி முறைமை, பசுமை வலு சக்தி உற்பத்தி தொடர்பில் சீன அரசாங்கம், ஹூவாவி நிறுவனத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்பிற்கான மூன்றாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்பிற்கான மூன்றாவது மாநாடு சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படுவதுடன், அரச தலைவர்களுக்கு இரவு நேர விருந்துபசாரம் நேற்று வழங்கப்பட்டது.