ரஷ்யா – உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருக்கிறார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து புடின் கூறும்போது,
“சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. உக்ரைனுடனான எங்கள் மோதலில் சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது ஆனால் போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை. ரஷ்யாவின் முக்கிய வர்த்தக நாடாக சீனா உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் மரியுபோல் பகுதிக்கு புடின் திடீரென பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தில் மரியபோலில் மறுசீரமைப்பு செய்வது குறித்து ஆலோசனையை அவர் நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.