சுசாந்தி கோபாலகிறிஸ்ணன்

சுசாந்தி கோபாலகிறிஸ்ணன்

நிறைவுக்கு வந்தது கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு !

இன்று வியாழக்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட  நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் (ஓ.எம்.பி ) சார்பில் அந்த அலுவலகத்தின்  சட்டத்தரணிகளும் , சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும்  ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ரட்ணவேல் மற்றும் நிரஞ்சன் ஆகியோரும்   காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் மன்றில் ஆஜராகி இருந்தார்கள்.

ஏற்கனவே நீதிமன்றால் இந்த புதைகுழி அகழ்வு தொடர்பில் அறிக்கைகள் சமர்ப்பிக்க கோரியிருந்தமை தொடர்பில் கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரால் இன்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை ஒரு மாத காலப்பகுதிக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட இருபத்தைந்து வகையான எலும்புக்கூட்டு தொகுதிகள் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ பீட கட்டடத்தில் உள்ள சட்ட மருத்துவ பிரிவுக்கு இடமாற்றப்பட்டு கடந்த இரண்டாம் திகதி தொடக்கம்  அது சம்பந்தமான பகுப்பாய்வு பணிகள் இரு நாட்களாக இடம்பெற்றன. இப்பாகுப்பாய்வு பணிகளானது எதிர்வரும் வாரங்களில் தொடர்ந்தும்  நடைபெறவுள்ளது  என இந்த புதைகுழி அகழ்வில் தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.

அத்தோடு காணாமல் போனோர் அலுவலகம் புதைகுழி அகழ்வு இடம்பெற்ற இடத்தை பூரணமாக பொதுமக்களிடம் கையளிப்பது  சம்பந்தமாக அடுத்த வழக்கு தவணையில் முடிவுக்கு வருவதாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள்.

அத்தோடு  காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் சில விண்ணப்பங்களை அவர்களது சார்பில் ஆஜரான சட்டதரணிகள் மன்றில் முன்வைத்திருந்தார்கள்.

அதாவது தடயவியல் பொலிஸாரினால் எடுக்கப்பட்ட குறிப்புகள் நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகள் மற்றும் சான்றுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அத்தோடு இந்த அகழ்வில் பொழுது பல இலக்கத்தகடுகள், இலக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை துலாம்பரமாக பத்திரிகைகளில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதிவாளரினால் பிரசுரிக்கப்படவேண்டும் என்றும் அந்த இலக்கங்கள் அதனோடு இணைந்த போராளிகளுக்கும் உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் தெரியும் என்ற அடிப்படையில் அவர்கள் அந்த தகவல்களை நீதிமன்றுக்கு தெரிவிப்பதன் மூலம் ஆய்வுப்பணிகளையும் அந்த புதைகுழி தொடர்பான காலப்பகுதியையும் கண்டுபிடிப்பதற்கு இலக்கு என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டதரணிகளால் தெரிவித்ததன் அடிப்படையில் அது சம்பந்தமாகவும் கட்டளை ஆக்கப்படுள்ளது. இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி தவணையிடப்படுள்ளது.

இந்த வழக்கு விசாரணை சம்பந்தமான விடயங்களை கண்காணிக்க இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி சுசாந்தி கோபாலகிறிஸ்ணன்  நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தார்.