சுசில் பிரேமஜயந்த

சுசில் பிரேமஜயந்த

பெண் ஆசிரியர்களுக்கு முகநூல் ஊடாக தெரிவிக்கப்படும் ஆபாசமான கருத்துக்கள் – கல்வி அமைச்சர் அதிர்ச்சி !

பெண் ஆசிரியர்களுக்கு முகநூல் ஊடாக தெரிவிக்கப்படும் ஆபாசமான கருத்துக்கள் குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிலர் தேவையில்லாத பிரச்சினையை எழுப்பியதாலேயே இவ்வாறான விடயங்கள் இங்கு வந்ததாக தெரிவித்த அவர், குறித்த விடயம் தொடர்பில் முடியுமானால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு செல்லவுள்ளோம். பெண் ஆசிரியைகளுக்கு குறிப்பிட்ட நடத்தை விதிகள் உள்ளன.அதில் ஆடை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் சேலை அணிவது அவசியம் என்று கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் !

கடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களில் மூவர் 14 வயதிற்கு உட்பட்டவர்களாவர். அதேவேளை 78 பேர் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களாவர்.

ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருட்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானவை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில் பிரேமஜயந்த தான்.” – மனோ கணேசன்

“நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில் பிரேமஜயந்த தான் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்பில், மனோ கணேசன் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். அவர்  மேலும் கூறியதாவது,

அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு பெஜட் வீதி இல்லத்தில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில், “நுவரெலியா மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது, பிரதமர் ரணில், “நுவரேலியாவில் புதிய சபைகள் இப்போது வேண்டாம். அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு அமைக்கப்படும் போது, இதையும் அப்போது அமைப்போம். ஆகவே இப்போது இதை ஒத்தி வைப்போம்” என கூறிய போது, எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில் பிரேமஜயந்த தான்.

நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற மிகப்பெரிய அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபைகளை பிரித்து புதிய பிரதேச சபைகளை அமைக்க வேண்டும் என நான் கோரிய போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “அம்பாறை மாவட்டத்திலும் புதிய பிரதேச சபைகளை அமைப்பதாக நான் தேர்தல் பிரசாரத்தின் போது, அமைச்சர் ரவுப் ஹக்கீமின் மேடையில் இருந்து அந்த மக்களுக்கு உறுதி அளித்துள்ளேன். அந்த சபைகள் இன்னமும் அமைக்கப்படவில்லை. ஆகவே, அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு அமைக்கப்படும் போது, இதையும் அப்போது அமைப்போம். இப்போது இதை ஒத்தி வைப்போம். இப்போது இதை அமைத்தால், ஏன் நுவரெலியாவில் மட்டும் அமைக்கிறீர்கள்? ஏன் அம்பாறையில் அமைக்கவில்லை? என்ற குற்றச்சாட்டு எழும்” என்றார்.

“அம்பாறை மக்களுக்கு நீங்கள் வாக்குறுதி அளித்து இருந்தீர்கள் என்றால் அதை நிறைவேற்றுங்கள். அது உங்களுக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கும் இடைப்பட்ட பிரச்க்சினை. ஆனால், நுவரெலியா வேறு. அம்பாறை வேறு. தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாங்களும் எங்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். நாட்டில் ஏனைய பிரதேசங்களில் 25,000 பேருக்குகூட ஒரு பிரதேச சபை இருக்கும் போது, தலா இரண்டரை இலட்சம் ஜனத்தொகை கொண்டதாக அம்பகமுவ, நுவரெலிய பிரதேச சபைகள் 30 வருடங்களாக செயற்படுகின்றன. இது மிகப்பெரும் அநீதி. பாரபட்சம். எமக்கு கட்டாயம் புதிய பிரதேச சபைகள் அமைத்தே வேண்டும்” என சிங்களத்தில் கடுமையாக சத்தம் போட்டேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெஜட் வீதி இல்லத்தில் நடைபெற்ற அந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில், இதை சொல்லி விட்டு, நான் அமர்ந்து இருந்து நாற்காலியை உதைத்து விட்டு, கூட்டத்திலிருந்து, வெளியேற கோபத்துடன் நான் எழுந்த போது, எனக்கு ஆதரவாக “மனோ எமதிதுமாகே இல்லீம இதாம சாதாரணய்” (அமைச்சர் மனோவின் கோரிக்கை மிகவும் நியாயமானது) என சொன்ன நண்பர்தான், அன்றைய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

அதன் பிறகு தான் இன்று நுவரெலியாவில் செயற்படும், நோர்வுட், மஸ்ககெலியா, அம்பகமுவா, அக்கரபத்தனை, தலாவக்கலை, நுவரெலிய ஆகிய ஆறு புதிய பிரதேச சபைகளை அமைக்கும் வர்த்தமானியை வெளியிட அன்றைய அரசு இணங்கியது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகி முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிய சுசில் பிரேமஜயந்த !

ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சில் இருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான அவரது சமீபத்திய விமர்சனக் கருத்துகளுக்குப் பின்னர் சுசில் பிரேமஜயந்த உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று கல்வி அமைச்சிற்கு சென்றிருந்த அவர், ஆவணங்களை எடுத்துக்கொண்டு அமைச்சில் இருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேறினார். இதன்போது இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட வாகனத்தையும் ஒப்படைத்திருந்த காரணத்தினால் அவர் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முடிவு குறித்து கட்சிக்குள் முன்னர் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானமோ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், நெருங்கிய நண்பன் என்ற வகையில் இந்தச் செய்தியை அறிந்ததும் வருத்தமடைந்ததாக கூறினார்.

அரசியலமைப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அண்மையில் சுசில் பிரேமஜயந்த முன்வைத்த விமர்சனம் காரணமாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.