சுனில் ஹதுன்நெத்தி

சுனில் ஹதுன்நெத்தி

பொருளாதாரத்தை திவாலாக்கியதைப் போல வங்கித்துறையை திவாலாக்க அரசாங்கம் முயற்சி – சுனில் ஹதுன்நெத்தி

மூன்று நாள் வங்கி விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி அவர்கள் பொருளாதாரத்தை திவாலாக்கியதைப் போல வங்கித்துறையை திவாலாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

 

நிதித்துறையில் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் இது உள்நாட்டுக் கடனைக் குறைக்கச் செல்வதை விட அதிகமான பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறை என வர்த்தமானியில் வெளியிட்டு மூன்று நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்படாத பாரம்பரியத்தை அரசு உடைத்துவிட்டது. இந்த வங்கி விடுமுறைகள் ஏன் கொடுக்கப்பட்டது என வங்கித் தலைவர்கள் கூட அறியவில்லை. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு விவகாரம் வங்கித் தலைவர்களுடன் விவாதிக்கப்படவில்லை. .பிரான்ஸ் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியவுடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை விரைவில் மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வங்கித் துறையை பணயம் வைத்து நிதி ஸ்திரமின்மையை உருவாக்குவது இன்றைய காலத்தை விட எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், தனிப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் வணிக சமூகத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.