சுரேன் ராகவன்

சுரேன் ராகவன்

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ” – எம்.கே. சிவாஜிலிங்கம்

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ”  என தமிழ்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் சுரேன் இராகவன் போன்றோரின் அண்மைக்கால கருத்துகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரத் வீரசேகர கடற்படை அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.  இன்று நேற்று அல்ல தொடர்சியாக ஜெனிவா கூட்டத் தொடர்வரை வந்து இனவாதத்தை கக்குவது மட்டுமன்றி  தமிழ்மக்களின் போராட்டத்தைப் பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர். அதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல சோடிக்கப்பட்ட  பொய்களை ஜெனிவாகூட்டத் தொடரில் முன்வைக்கின்ற  வேலைகளை செய்தது மாத்திரமல்ல, ஜெனிவா கூட்டத்தொடரில் எங்களுடன் மோதுகின்ற வேலைகள் மற்றும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்டவர். அதுமட்டிமன்றி தமிழ் நாட்டில் இருந்து வந்த வைக்கோ போன்ற தலைவர்களுடனும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்ட நபராவார்.

தற்போது இவர் அமைச்சரில்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு கடந்த காலங்களில் குறிப்பாக  காலகாலமாக இனவாத கருத்துக்களை கூறிவருபவர்கள் போல்  முன்பிருந்தவர்களை விட மிக மோசமாக இனவாத கருத்துக்களை கக்கிவருகிற செயற்பாட்டில் சரத்வீரசேகர ஈடுபட்டு வருகிறார்.

இவர் சிங்கள பெளத்த இனவாத மக்களின் உண்மையான முகத்தை காட்டி வருகிறார். ஏனையவர்கள் மெழுகு புசியவர்கள் போல் எங்களை ஏமாற்றப்பார்கிறார்கள். இவ்வாறானவர்களை வைத்துக் கொண்டு நாங்கள் ஒரு நாட்டுக்குள் வாழவேண்டும் என்று எங்களுடைய கட்சிகள் அல்லது  தலைவர்கள் நினைப்பது எவ்வாறு?

இனப்படுகொலைகள்  படுமோசமாக இடம் பெற்ற பின்னரும் கூட அதற்கான நீதி கிடைக்குமாயின் அதற்காக  பொதுசன வாக்கேடுப்பு நடாத்தி அதற்காக செல்லமுடியும் என்பது அவர்களுக்கு தெரியும். இதனை விடுத்து அவர்களிடமிருந்து மயிலே மயிலே இறகுபோடு என்று கேட்டுக் கொண்டிருந்தால் பிரயோசனம் எதுவும்  இல்லை.

இதனைபோல்தான் தற்போது சுரேன் இராகவன் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக . மலையகத்தைச் சேர்ந்தவர். அவரும் வெளிநாடுகளில் வாழ்ந்து இன்று ஒன்றுமில்லாமல்  தேசியப்பட்டியல் எம்.பியாக வந்துவிட்டு  அவர் பேசும் பேச்சுக்கள், வீராப்புகளை ஏற்கமுடியாதுள்ளது. அதிலும் சமஷ்டி பெறலாம் என கனவுகாண வேண்டாம் என்றால் நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இதனை தவிர இதற்குவேறு வார்த்தைக்ள் எம்மிடம் இல்லை. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு அவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு உதவி செய்யவில்லை.  தமிழனாக இருந்து கொண்டு பெளத்தத்தில் ஆராட்சி கெளரவ பட்டத்தை பெற்றுவிட்டு அதில் பிழையில்லை ஆனால் எமது மக்களின் அல்லது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வீழ்ச்சியைப் பற்றி கதைக்காது சிங்கள பெளத்த பேரினவாத்தத்திற்கு ஓத்துதுகின்றவராக  சுரேன் இராகவனும் இணைந்துள்ளார். அதுமட்டுமன்றி சரத்வீரசேகரவின் அணியில் இணைந்து கொள்ளட்டும். இவற்றையேல்லாம் கண்டு ஈழத்தமிழர்கள் அச்சப்பட போவதில்லை. பயப்படபோவதில்லை  இவர்களுடைய இனவாத கருத்துகள் எங்களுடயை இறுதி இலட்சியத்தை அடைவதற்கு உரமூட்டும் என்பதை நம்புகின்றோம் என்றார்.

“பயங்கரவாத சட்டத்தின் மூலம் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது.” – முன்னாள் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் !

பயங்கரவாத சட்டத்தின் மூலம் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னித் தொகுதி தலைவருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில்  நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருந்த கஸ்டமான ஒரு நிலையில் பயங்கரவாத சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் பயங்கரவாதத்திற்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாயின் அந்த சட்டத்தை நாங்கள் முற்றாக நீக்க வேண்டும். எனினும், 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கியது. உதிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. ஆகவே பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் சட்டங்கள் இருப்பது பிரச்சனையல்ல.

ஆனால் அந்த சட்டங்கள் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஆகையினால் அந்த சட்டத்தை சீர்திருத்தி நாட்டின் இறைமையை சரியான விதத்தில் பாதுகாத்துக் கொண்டு, இலங்கையில் மத ரீதியான, இன ரீதியான பயங்கரவாதம் இருக்குமாயின் அதற்கு எதிராக அதனை பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு சமாந்தரமாக இருக்கின்ற சர்வதேச சட்டங்களை பரிசீலித்து இலங்கையின் பாதுகாப்புக்கும், மக்களின் பாதுகப்புக்கும் ஏற்ற வகையில் பயங்கரவாத சட்டத்தை அமைக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தாகவுள்ளது” எனத் தெரிவித்தார்.

“இந்தியாவுடனான உறவை முறிவடைய விடக்கூடாது என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்.” – சுரேன் ராகவன்

“இந்தியாவுடனான உறவை முறிவடைய விடக்கூடாது என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன். எனவும் சீன தூதுவர் வடக்கில் தெரிவித்த கருத்தில் கரிசனை கொண்டுள்ளதாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

ஓமந்தை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் சீன தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்,

“இலங்கை சுயாதீனமான சுதந்திரமான நாடு என்ற ரீதியிலும் எங்களுடைய எதிர்காலத்திற்காகவும் வெளிவிவகார உறவினை எங்களுடைய நாட்டின் பெருமைக்காகவும் தனித்தன்மைக்காகவும் பாவிக்க வேண்டியதாக உள்ளது. இலங்கை ஒரு நாட்டின் பகடைக்காயாக மாறக்கூடாது. அண்மையில் இடம்பெற்ற சீனத் தூதுவரின் விஜயம் கேள்விக்குறியாக இருக்கிறது என்பதைவிட அவர் அங்கே கூறிய கருத்துக்கள் எமக்கு கரிசனையாக இருக்கின்றது.

அவை இந்தியாவையும் இலங்கையையும் பகை செய்யும் விடயங்களாக சிலர் ஊடகங்களில் கூறியிருக்கிறார்கள். இந்தியா எங்களுடைய தொப்புள்கொடி உறவு, எங்களுடைய உண்மையான தாய்நாடு, அங்கிருந்து வந்த மதம், மொழி எல்லாமே எங்களுக்கு சொந்தமாகியிருக்கிறது.

எனவே இந்தியாவுடனான உறவை முறிவடைய விடக்கூடாது என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன். எனவே வருகின்ற நாட்களில் இந்த அரசியல் விடயம் குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“நான் எடுத்த முயற்சி காரணமாகவே 16 கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.” – சுரேன் ராகவன்

“எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நாட்டினுடைய பொருளாதாரத்தை பஷில்ராஜபக்ஷ மீட்டெடுப்பார் என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்திலுள்ள நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னிமாவட்டத்தில் பொருளாதார, அரசியல் சமூகபிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றை கட்சி ரீதியான பிரிவினைகளை பார்த்து, செய்தால் மக்களுக்கு நன்மை செய்யமுடியாமல் போகும். தேர்தல் காலத்தி்ல் அரசியல் செய்வது வழக்கமானவிடயம். ஆனால் தேர்தலுக்கு அப்பாற்பட்டு ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

வன்னிமாவட்ட மக்கள் கொரோனா நோய்த்தாக்கத்தில் குறைந்தளவில் பாதிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. மக்களினுடைய பொறுப்புணர்ச்சியினாலேயே அது நடந்துள்ளதென நம்புகிறேன். அடுத்தவாரம் இந்த மக்களிற்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இடம்பெறும். குறிப்பாக வன்னியில் உள்ள குளங்களை திருத்தவேண்டும். கமத்தினூடாக எமது பொருளாதாரம், மற்றும் சமூகம், வளர்ச்சியடைய இலகுவான வழி அதுவே.

அத்துடன் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் கேந்திரமாக இலங்கை மாறியிருப்பதாக ஐக்கியநாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எமது மக்கள் நோயின்றி நலமாக வாழவேண்டும் என்று எடுத்த முயற்சியில் சில தடைகள் ஏற்ப்பட்டது உண்மையே. சில பொருளாதார திட்டங்களை ஏற்ப்படுத்தும் போது தடைகள் ஏற்படும்.

இதேவேளை கைதிகள் தொடர்பில் நான் எடுத்த முயற்சி காரணமாக 16 கைதிகளை அண்மையில் விடுதலைசெய்திருக்கிறோம். இதன் பணி மேலும் தொடரும். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி கைதிகளை விடுதலை செய்வதற்கு தாயாராக இருக்கிறோம். அவர்கள் விடுதலைபெற வேண்டும். “நான் எடுத்த முயற்சி காரணமாக 16 கைதிகளை அண்மையில் விடுதலைசெய்திருக்கிறோம்.

அவர்கள் பிழைசெய்திருக்கலாம். அவர்கள் கொண்ட நோக்கத்துடன் அவர்கள் செய்தது அரசுக்கோ அல்லது நீதிக்கோ பிழையாக இருக்கலாம். ஆனால் போர் முடிந்து 11 வருடங்களிற்கு பின்னர் பொது மன்னிப்புகொடுத்து அவர்கள் வாழவழிவிடப்பட வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவன் நான். அத்துடன் காணாமல் போனோர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் புதிய சீர்சிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

காணாமல் போனோருக்கான நிலையம் முழுமையாக இயங்கும் வகையில் தடைகளை நீக்கியிருக்கின்றோம். உடைந்த உறவினை வளர்த்தெடுத்து சமாதானத்தின் பாதையில் செல்லவேண்டும். நியாயமான விடயத்திற்காக இந்த நாட்டை வளர்த்தெடுக்கவேண்டும். இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் இருப்பது என்பதனை மறுக்ககூடாது. அதனை மறைப்பதில் ஒரு பலனும் இல்லை. எனவே பசில் மீது இருக்கும் நம்பிக்கை மூலமாக பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவரக்கூடிய திட்டங்களை எடுப்பதற்கான முழுமையான பொறுப்பினை கொடுக்கவேண்டும் என்று அரசாங்கம் முன்வந்துள்ளது.

எதிர்வரும் ஆறு மாதங்களிற்குள் அவரது வருகையின் நன்மையினை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அவர் செய்வார் என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இந்தியாவில் நரேந்திரமோடி 45 புதிய அமைச்சர்களை நியமித்துள்ளார். எனவே புதிய அமைச்சுக்களை உருவாக்குவதோ அல்லது புதியவருக்கு அமைச்சினை வழங்குவதோ அரசியலில் புதியவிடயமல்ல.எனவும் தெரிவித்துள்ளார்.

“இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது?சொல்லுங்கள். பார்ப்போம்…!” – சுரேன்ராகவனிடம் மனோ கேள்வி !

“இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது?”என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனிடம் கேள்வி  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(05.01.2021) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கனடாவின் ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஒரு சட்ட மசோதா, இலங்கையில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கின்றது என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இந்தச் சபையில் சொன்னார்.

ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இங்கே நான் முதலில் சுரேன் ராகவனிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் இன்று எங்கே ஐயா தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? ஒன்டாரியோ நாடாளுமன்றத்தில்  சட்டம் கொண்டு வந்து அழித்து  முடிக்க முதலில்  இங்கே எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? சொல்லுங்கள். பார்ப்போம்…!

கடந்த அரசில் தேசிய நல்லிணக்கத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்துவிட்டதே. இந்தநிலையில், இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என உங்கள் அரசு சொல்கின்றது. ஆனால், சிறைத்தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கின்றது.  எனினும்,20, 25 ஆண்டுகள் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளுக்கு அது கிடைப்பதில்லை.

இந்த நாட்டில் சிங்களவருடன் சேர்ந்து வாழவே தமிழரும், முஸ்லிம்களும் விரும்புகின்றோம். ஆனால், உங்கள் சட்டம் சிங்களவருக்கு ஒன்று, தமிழருக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு என்றல்லவா இருக்கின்றது?

இதுவா தேசிய நல்லிணக்கம், சுரேன் ராகவன்? இந்த நாட்டில் இன்று தேசிய நல்லிணக்கம் இல்லை. தேசிய ஒருமைப்பாடு அமைச்சே இல்லை. மக்களைப் பிழையாக வழிநடத்த வேண்டாம். சும்மா, இந்த அரசில் இல்லாத ஒன்றுக்காக மாரடிக்க வேண்டாம்” – என்றார்.