சுரேஸ் பிரேமச்சந்திரன்

சுரேஸ் பிரேமச்சந்திரன்

அரசிடம் இருந்து வாங்கிய பணத்திற்காக சாணக்கியன் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர். அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிக்கையில்,

 

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவாக இருக்கின்றார்கள். சுமந்திரன், சாணக்கியன், CVK சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

 

அது மாத்திரமல்ல, அவர்கள் களத்தில் இறங்கி பணிபுரிவதற்கும் தயாராக இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியினுடைய இளைஞர் அணியைச் சேர்ந்த பலரை சந்தித்து நான் பேசியிருக்கின்றேன்.

 

இதனை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிதரனும் பொது வேட்பாளரை வாழ்த்தியிருக்கிறார். ஏற்கனவே அதற்கான கூட்டங்களும் கிளிநொச்சியில் கூடப்பட்டிருக்கிறது.

 

அதேபோல தலைவராக இருக்கின்ற சேனாதிராஜாவும் இதனை வரவேற்றிருக்கின்றார். ஆகவே தமிழரசுக் கட்சியினுடைய பெரும்பான்மையானோர் இதனை ஆதரித்து வரவேற்றிருக்கிறார்கள்.

 

ஒரு சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்க்கின்றனர். குறிப்பாக சொல்லப் போனால், இலங்கை அரசாங்கம் அங்கு அபிவிருத்திக்காக தனக்கு கொடுத்ததாக சாணக்கியன் கூறியிருக்கின்றார்.ஆகவே, வாங்கிய பணத்துக்கு பேச வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் யோசித்தால், அதற்காக அவர்கள் சில நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

 

கடைசி நேரத்தில் அவர்கள் என்ற முடிவு எடுப்பார்களோ என்று எனக்கு தெரியாது. நிச்சயமாக தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக இவர்கள் ஆதரவு முடிவு எடுப்பார்களாக இருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான முடிவாகத்தான் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

 

தமிழ்ப் பொது வேட்பாளளை ஆதரிக்கும் வகையில் தமிழ் தேசியக் கட்சிகளும், சிவில் அமைப்புக்களுமாக ஒன்றாக இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள்.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட எவரும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக எந்தவிதமான தீர்வுகளும் இல்லாத காலகட்டத்தில், ஏற்கனவே பல கட்சிகளுக்கு வாக்களித்தும் ஏமாற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில், தொடர்ந்தும் அவர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாக எதையும் சாதிக்க முடியாது என்ற அடிப்படையில் தமிழ் மக்களினுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை அவர்களுக்கு விளக்கும் வகையிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிப்பதன் ஊடாக அவர்களுக்கு தெளிவுபடுத்த முடியும்.

 

எங்களுக்கு இருக்கக் கூடிய ஜனநாயக தளம் என்பது இந்த ஜனாதிபதி தேர்தேலேயாகும். அந்த களத்தை பாவித்து ஒட்டுமொத்த வட கிழக்கு தமிழ்களும் இணைந்து இந்த செய்தியை சொல்ல விரும்புகின்றோம் என தெரிவித்தார்.

“இலங்கையின் பொருளாதார நலிவுக்கு ராஜபக்ஷக்களே காரணம்.” – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்துக்கு பின்னர் தான் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பேசிய அவர்,

நாட்டின் பொருளாதாரம் கொரோனா காரணமாக பாதாளத்தில் சென்று விட்டது என சொல்கிறார்கள். அது உண்மை இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் பின்னர் தான் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையம் முதல், ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரை திட்டமிடப்படாத நிகழ்ச்சி நிரலின் கீழ் சென்றுவிட்டது. இப்படி தான் ஆட்சியாளர்கள் செய்துவிட்டு செல்கின்றனர். அரசிடம் சரியான திட்டமிட்டல் இல்லை.

இப்போது மின்சாரம், எரிபொருள் எல்லாமே பிரச்சினையாக உள்ளது. பொருட்களின் விலையை வியாபாரிகளே நிர்ணயிக்கின்றனர். இதற்கு நிதி அமைச்சரே பதில் கூற வேண்டும். அடுத்த தேர்தல் தான் இதற்கு பதில் கூற வேண்டும். பசில் ராஜபக்ச பொருளாதார கொள்கையை மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்க வேண்டும். – என்றார்.

“யாழ்ப்பாணத்தின் தீவுகளை சீனாவுக்கு வழங்கினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சியை விட பெரும்புரட்சி வெடிக்கும்” – சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை !

இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தின் தீவுகளை சீனாவுக்கு வழங்கினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சியை விட பெரும் மக்கள் எதிர்பலை உருவாகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று(13.01.2021) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே இதை கூறியிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு போன்றவற்றை சீனா அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த தீவுகள் இந்தியாவுக்கு அருகில் உள்ளன.

குறித்த தீவுகளில் ஏற்கனவே மின்சாரம் உள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு கையளிப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல.

இதன் மூலம் சீன ஊடுறுவல் இருக்கும். இதனால் இந்தியாவுக்கு பகையை ஏற்படுத்துவதாக அமைவதுடன் வடமாகாண மக்களும் இதனை ஏற்க மாட்டார்கள்.

தமிழ் மக்களை பொறுத்தவரை இப்பொழுது தான் மீண்டு வந்துகொண்டிருக்கிறோம். அடிப்படை உரிமைகள் கூட மக்களுக்கு வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.