செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி !

8 ஆம் வகுப்பு முதல் முன்னோடி திட்டமாக பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஒக்டோபர் 2 இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலைகளில் AI இன் அறிமுகத்திற்கான முன்மொழிவு கல்வி முறையில் ஒரு தீவிர மாற்றமாக இருக்கும், மேலும் குழந்தைகளை எதிர்காலத்தில் விடுவிக்க உதவும்.

AI தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழுவின் பரிந்துரைகளின்படி முன்மொழியப்பட்ட படிப்புகளை அறிமுகப்படுத்துவது பொருத்தமானது.

மூலோபாய திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுக் கல்வியில் AI படிப்புகளை அறிமுகப்படுத்த ஒரு பைலட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மைக்ரோசாப்டின் ஆதரவுடன் மேற்படி முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொழில்நுட்பம் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் சர்வதேச பாடத்திட்டத்தை திருத்தியமைத்து, தேவையான அடிப்படை மனித வளங்கள் உள்ள பாடசாலைகளில் 8 ஆம் வகுப்பிலிருந்து முன்மொழியப்பட்ட முன்னோடித் திட்டங்களைத் தொடங்கவுள்ளது. .

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளின் கீழ் முன்னோடி திட்டத்திற்கு பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தெரிவு செய்யப்பட்டால், 100 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர்களை பயிற்றுவிப்பாளர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கற்கைநெறிகள் விரைவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

2019 ஆம் ஆண்டில் இந்த கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நடுவதற்கு பிரதமராக வந்திருந்தேன். இன்று கட்டிடத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதியாக வந்துள்ளேன். கொரோனா தொற்று பரவலால் இந்த கட்டிட நிர்மாண பணிகள் தாமதமாகியிருந்தன.

 

கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான கற்கை நெறிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.

 

தொழில்நுட்ப யுகம் ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நிற்காது. வரலாற்றில் இருந்த அணுகுமுறைகள் இன்று வேறுவிதமாக வளர்ச்சியடைந்துள்ளன.

 

தொழில்நுட்ப யுகத்தின் தேவைக்கேற்ப இலங்கையில் கல்வி முறையை வலுப்படுத்துவோம்.

 

அறிவு மற்றும் பண்புமிக்க சமூகத்தின் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவால் பிரித்தானியாவின் தேர்தலுக்கு அச்சுறுத்தல் !

உலகெங்கிலும் நடைபெறும் தேர்தல்களை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் ஜனநாயகத்திற்கு தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்தாக கருதும் இந்த விடயத்தை சமாளிக்க இன்னும் அதிகளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நீதித்துறை செயலாளர்  Robert Buckland வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவில் உருவாக்கிய தவறான தகவல்களால் ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் எதிர்காலத்தைப் பற்றிய கவலையை ஏற்படுத்தும் என முன்னாள் நீதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2025 ஜனவரிக்குள் நடக்க வேண்டிய அடுத்த பொதுத் தேர்தல், 2017ல் காணப்பட்ட இடையூறுகளை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணிக்குழு மூலம், வெளிநாட்டு தலையீட்டிலிருந்து தேர்தலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.