இலங்கையில் யாரும் கடமையைச் சரிவரச் செய்தால் கைது செய்யப்படலாம், விரட்டப்படலாம் என்ற நிலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் மூலம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 15 வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்த மோசடி, ஊழல் என்பவற்றை வெளிக்கொண்டுவந்த டொக்டர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது இலங்கை அரசு. அவரை உடனடியாக இடமாற்றி விரட்டி அடிக்குமாறு ஐக்கிய தேசிய மக்கள் முன்னணித் தலைவர்களில் ஒருவரான செல்வராஜா கஜேந்திரன் ஆளுநரைக் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை அரசும் தமிழ் தேசியமும் யாழ் மெடிக்கல் மாபியாக்களும் கூட்டாக இணைந்து மக்களுக்காகச் சேவையாற்றிய டொக்டர் அர்ச்சுனாவை கைது செய்ய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை நோக்கிப் படையெடுக்க தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு வைத்தியசாலையை முற்றுகையிட்டு, டொக்டர் அர்ச்சுனா கைது செய்யவிடமாட்டோம் என்று போராடி வருகின்றனர்.
‘We want Dr Archuna’ என்று சிங்களப் பொலிஸாருக்கும் தமிழ் தேசிய முன்னணி சட்டத்தரணிக்கும் விளங்கும் வகையில் உரத்துக் கோசம் எழும்பினார்கள் எழுச்சிகொண்ட தென்மராட்சி மக்கள். மேலும் ஆங்கிலத்தில் பொலிஸாருக்கு நிலைமையைச் சொல்லிய ஒருவர், “நீங்கள் ஏன் மக்களுக்கு சேவை செய்யும் ஒருவரை கைது செய்யப்பட்டாளமாக வந்திருக்கிறீர்கள். நீங்கள் கைது செய்ய வேண்டியது மக்களுக்குச் சேரவேண்டிய பொதுச் சொத்துக்களை சேவைகளை கொள்ளையடிக்கும் மருத்துவ மாபியாக்களைத் தான். அவர்களைப் போய் கைது செய்யுங்கள்’’ என்று தெரிவித்தார். அப்போராட்டத்திற்கு வந்திருந்த இன்னுமொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் “எங்கள் பணத்தில் படித்து டொக்டரானவர்கள் எங்களையே கொள்ளையடிக்கின்றனர்” என்று குறிப்பிட்டதோடு “இவ்வாறான கொள்ளையர்கள் நாடுபூராவும் இருக்கின்றனர். மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். டொக்டர் அர்ச்சுனா உண்மையிலேயே ஒரு மக்கள் போராளி. அவரைக் கைது செய்ய அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார். இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது இலங்கை நேரம் அதிகாலை இரண்டு மணி அப்போது வைத்தியசாலையில் 1000 பேருக்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடி டொக்டர் அர்ச்சுனாவை கைது செய்ய முடியாதவாறு தடுத்து நின்றனர்.
விடிந்தால் தென்மராட்சி பொது மக்கள், வர்த்தக சங்கம் உட்பட்ட 30 வரையான பொது அமைப்புகள் டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் யாழ் மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராகவும் கண்டனக் கடையடைப்புப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் போராட்டம் திட்டமிடப்பட்டதற்கு மாறாக முதல்நாள் யூலை 7 இரவே ஆரம்பமாகிவிட்டது. விடிவதற்குள் டொக்டர் அர்ச்சுனாவைக் கைது செய்து அவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றத் திட்டமிட்டனர். தனியார் மருத்துவமனைகளை நடத்துகின்ற அதில் பணியாற்றுகின்ற மருத்துவ மாபியாக்கள் அரச படைகளோடு கூட்டாக இணைந்து இரவோடு இரவாக டொக்டர் அர்ச்சுனாவைக் கைது செய்து விரட்டியடிக்க எடுத்த முயற்சியை தென்மாராட்சி மக்கள் வெற்றிகரமாகத் தடுத்துள்ளனர். ஆனால் அவர்களால் இந்த மாபியாக்களின் அதிகாரப் பலம் பொலிஸ்பலம் என்பவற்றுக்கு முன்னால் தொடர்ந்து போராட முடியுமா என்பது கேள்விக்குறியே.
காலிமுகத்திடலில் எழுந்த மேல்தட்டு மக்களின் போராட்டத்துக்கு மாறாக சாவகச்சேரி தென்மராட்சியில் அரச அதிகாரம், பொலிஸ், மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியோடு இரவோடு இரவாக வீறுகொண்டெழுந்துள்ளனர். காலையில் தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைப் போராட்டத்தில் பங்கெடுப்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையின் கடமை எனப் போராட்டகார்கள் சமூக வலைத்தளங்களினூடாக அழைப்பு விட்டு வருகின்றனர்.
இந்த மெடிக்கல் மாபியாக்களுக்கும் கைது செய்ய வந்திருக்கும் பொலிஸாருக்கும் ஆதரவாக தமிழ் தேசிய முன்னணியின் முன்னணித் தலைவர் செல்வராஜா கஜேந்திரன் கருத்து வெளியிட்டது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் அங்கு வந்திருந்த தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் சுபாசை சொற்கற்களால் தாக்கினர். ‘எங்கள் போராட்டத்தை குழப்புவதற்காக இங்கு வந்தீர்கள், உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று அவரை வார்த்தைகளால் நையப்புடைத்து திருப்பி அனுப்பினர்.
தென்மராட்சி மக்களின் இந்தத் தன்னெழுச்சி தமிழ், சிங்கள அதிகாரத் தலைமையையும் அரசியல் கட்சிகளையும் உலுப்பியுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்த மெடிக்கல் மாபியாக்கள் செய்த மோசடி ஊழல் மற்றும் மௌ;ளமாரித் தனங்களால் பல நோயாளர்கள் அநீயாயமாக இறந்துள்ளனர். அல்ல கொல்லப்பட்டுள்ளனர். இதன் உண்மைப் புள்ளிவிபரங்கள் வெளிவந்தால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சீராக இயங்காததால் பல பத்து நோயாளர்கள் இறந்திருக்கலாம் என்ற உண்மை வெளிவரும் என்றும் மேலும் இவர்கள் யாழ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு பல கோடிகளைத் தாண்டும் எனவும் தன்னுடைய பெயரைக் குறிப்பிட விரும்பாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்த நேற்று யூலை 7 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் சென்றிருந்த போது உறுதியான எந்தக் கருத்துக்களையும் தெரிவித்திருக்கவில்லை.
ஏனைய வடக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கள்ள மௌனம் சாதித்து வருகின்றனர். தமிழ் தேசியம் பேசியவர்கள் பெரும்பாலும் மெடிக்கல் மாபியாக்களின் பக்கம் நிற்கின்றனர். கள்ள மௌனம் காக்கின்றனர். தமிழ் தேசிய முன்னணி செல்வராஜா கஜேந்திரன் மட்டும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராகவும் தென்மாராட்சி மக்களுக்கு எதிராகவும் வெளிப்படையாகப் பேசி தன் விசுவாசத்தை மெடிக்கல் மாபியாக்களுக்கும் பொலிஸாருக்கும் வழங்கி இருந்தார். அங்கஜன் ராமநாதன் சில சமயம் இளைஞர் என்றளவில் டொக்டர் அர்ச்சுனாவுக்கு சாதகமாக ஊழல்கள் மோசடிகள் இடம்பெறுதைச் சுட்டிக்காட்டி இருந்தார்.
டொக்டர் என்றும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மதிப்பளித்த மக்களுக்கு யாழ் மெடிக்கல் மாபியாக்கள் செய்த அநியாயங்கள், மோசடிகள் பலருடைய மரணத்துக்கு காரணமாக இருந்ததுள்ளது. அவ்வாறு மரணித்தவர்களின் உடலையும் வைத்து பிழைப்பு நடத்திய மக்கள் பணத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்களின் ஈனத்தனம் தற்போது டொக்டர் அர்ச்சுனா என்ற ஒரு மக்கள் போராளியால் வெளிவந்துள்ளது. தங்களை டொக்டர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் அநாகரிகமான உரையாடல்கள், சண்டித்தனம், அவர்கள் முழப் புசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மூட எடுக்கும் முயற்சிகள் இந்த தொழிற்துறையினர் மீதிருந்த நன்மதிப்பை அவர்களே அம்மணமாவதை வெளிப்படுத்தி நிற்கின்றது. ஆனால் டொக்டர் அர்ச்சுனா போன்று இலைமறை காயாக, மக்கள் சேவையை மகேசன் சேவையாக செய்பவர்களும் உள்ளனர். இந்த மெடிக்கல் மபியாக்கள் எமது சமூகத்தின் புற்றுநோய். இவர்களைப் போன்ற மாபியாக்கள் அனைத்துத் துறைகளிலும் உள்ளனர். இவர்கள் வேரறுக்கப்பட வேண்டும். இல்லாவிடடில் இவர்கள் சமூகத்தைச் சீரழித்துவிடுவார்கள்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடயம் தொடர்பில் பெரும்பாலான மருத்துவர்கள் மௌனம் காக்கின்றனர். பேசுபவர்கள் பெரும்பாலும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிரான பொது மக்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கின்றனர். இது கிட்டத்தட்ட இறுதியுத்தத்தில் இராணுவம் யுத்தக் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று இலங்கை இராணுவமும் அரசும் ஒற்றைக்காலில் நிற்பது போன்ற செயலே. மருத்துவத்தை மக்கள் சேவையாக எண்ணுபவர்கள் டொக்டர் அர்ச்சுனாவின் பக்கம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.
யாரும் தனியார் மருத்துவத்துறையில் பணியாற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பெறும் சம்பளத்துக்கான கடமையை உங்கள் கடமை நேரத்தில் சரியானபடி செய்யுங்கள் என்று தான் கேட்கின்றார்கள் மக்கள். ஆனால் அரச மருத்துவத்தைச் சீரழித்து உங்கள் பிரைவேட் கிளினிக்குக்கு பலாத்காரமாகச் செல்ல வைப்பதையே மக்கள் எதிர்க்கின்றனர். வயிற்றுக் குத்து என்று வருபவர்களிடமே எல்லா ஸ்கானையும் எடுக்கச் சொல்கிறீர்கள் எல்லா ரிப்போட்டும் எடுக்கச் சொல்லி லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்க வேண்டாம் என்று தான் மக்கள் கேட்கிறார்கள். பிணத்தை வைத்துக் கொண்டு சொந்த மக்களிடமே பணம் பறிக்கும் ஈனத்தனம் மிக அருவருப்பானது. மருத்துவர்களே நீங்கள் எந்தப் பக்கள் நிற்கப் போகின்றீர்கள்? மக்களின் மக்கமா மாபியாக்களின் பக்கமா?
மக்களை வழிநடத்த வேண்டியவர்கள் அரசியல் கட்சிகள். ஆனால் வடக்கில் எந்தவொரு அரசியல் கட்சியும் மக்கள் நலன்சார்;ந்து இயங்கவில்லை என்பதை தென்மராட்சி மக்கள் நிரூபித்துள்ளனர். தற்போது மக்கள் புரட்சிகரப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர், ஆனால் அவர்களுக்கு தலைமை தாங்கும் தகுதியுள்ள ஒரு கட்சி தமிழ் பிரதேசத்தில் இல்லை. வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளிலும் பார்க்க தெளிவான அரசியலை மக்கள் முன்னெடுக்கின்றனர். தென்மாராட்சி மக்களை முன்னுதாரணமாகக் கொண்டு சகலதுறைகளிலும் உள்ள மோசடிகள், ஊழல்களைக் களைந்து புதிய அரசியல் மாற்றத்திற்காக மக்கள் இவ்வாறான தன்னெழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தத்தம் பிரதேசங்களில் உள்ள அரசியல் வாதிகளுக்கும் தங்கள் பலத்தைக் காட்டவேண்டும். தமிழ் தேசியம் பேசிக் கொண்டு மக்கள் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அரச இயந்திரத்தை யார் மக்களுக்கு எதிராகத் திருப்பினாலும் மக்கள் போராடத் தயாராக வேண்டும். வெல் டன் தென்மாராட்சி !