சேரன்

சேரன்

ஜெயன் தேவா: முரண்களோடு வாழ்ந்த ஒரு மனித நேயனின் மறைவு

சமூக ஆர்வலர், செயற்பாட்டாளர், கலை – இலக்கிய விமர்சகர், ஜெயன் தேவா என அறியப்பட்ட ஜெயகுமரன் மகாதேவன் டிசம்பர் 21 இங்கிலாந்தில் காலமான செய்தி எட்டுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே அவர் இறுதித் தருணத்திற்கு வந்துவிட்டார் என்ற மற்றொரு செய்தியும் என்னை எட்டியது. எங்களுடைய நண்பர் ஜேர்மனியில் வாழும் அனஸ்லி, ஜெயன் தேவா சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அண்மைய நாட்களில் அவருடைன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார். இறுதியில் அவர் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டு தற்போது மரண விசாரணை முடிவடைந்துள்ளதாக அறியக் கிடைத்தது.

1961இல் பிறந்த ஜெயன் தேவா யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆனாலும் யாழ் நகரப்பகுதியிலேயே வாழ்ந்தவர். யாழ் கரவெட்டி மண்வாசனை இடதுசாரிக் கொள்கை கலந்தது எனும் அளவுக்கு அங்கு அறியப்பட்ட பல இடதுசாரிச் சிந்தனையாளர்கள் செயற்பாட்டாளர்கள் இருந்துள்ளனர். இடதுசாரிச் சிந்தனையாளர் சண்முகதாசன் பேராசிரியர் க சிவத்தம்பி இடதுசாரி செயற்பாட்டாளர் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை தோழர் எஸ் பாலச்சந்திரன், மனோ மாஸ்ரர் போன்றவர்கள் கரவெட்டியைச் சேர்ந்தவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அறியப்பட்ட பல புள்ளிகள் கரவெட்டி மண்ணைச் சேர்ந்தவர்கள். இடதுசாரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட கிராமங்களில் கரவெட்டியும் குறிப்பிடத்தக்கது. சாதியத்துக்கு எதிராகப் போராடி பௌத்த விகாரையை நிறுவி கன்னொல்ல என்று பெயரிட்ட கிராமமும் சாதியத்துக்கு பலியானவர்களுக்கு தூபி எழுப்பிய கிராமமும் கரவெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மண்ணின் பின்னணியுடைய ஜெயன் தேவா யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பட்டதாரி, இவரும் இடதுசாரி கருத்தியலால் ஈர்க்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. இளவயது முதலே சமூக அக்கறையோடு செயற்பட்டவர். எழுத்தாளர், விமர்சகர் என பன்முக ஆளுமையுடையவர். அன்றைய காலகட்டம் இணையங்கள் முகநூல்கள் ஏன் கைத்தொலைபேசிகள் என்றல்ல தொலைபேசித் தொடர்புகளே இல்லாத காலகட்டம். அன்றைய சமூக வலைத்தளம் பேனா நட்புகள். அந்த பேனா நட்பினூடாக ஐரோப்பியர் ஒருவர் ஜெயன் தேவாவுடன் நட்புக்கொண்டு ஐரோப்பாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை வந்திருந்தார். சமூக எல்லைகளைக் கடந்து சாதி, மத, இன எல்லைகளைக் கடந்து அனைவருடனும் நட்புக்கொள்ளக் கூடிய ஒருவராக ஜெயன் தோவா இருந்தார்.

அவருடைய தந்தையார் மகாதேவன் காட்டிக்கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலைப் போராளிகளால் கொல்லப்பட்ட பல நூறு பேர்களில் ஒருவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது தமிழீழ இராணுவத்தினால் இவர் படுகொலை செய்யப்பட்டவர். எவ்வித விசாரணைகளும் இன்றி அல்லது வாந்திகளின் அடிப்படையில் தனிப்பட்ட குரோதங்கள், முரண்பாடுகள், குடும்பச் சண்டைகளுக்காக காட்டிக் கொடுத்தோர் என்றும் துரோகிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டு உயிர்கள் மதிப்பிழந்த வரலாற்றின் சாட்சியங்கள் ஜெயன் தேவாவின் தலைமுறை. துரோகிககள், மாற்று இயக்கம், மாற்றுக் கருத்து எல்லாவற்றுக்கும் மரண தண்டனை விதித்த ஒரு போராட்டத்தின் சாட்சியங்கள்.

அவருடைய முதல் மண உறவினூடு அவருக்கு ஒரு பிள்ளையும் உண்டு. இலங்கையின் அரசியல் சூழல் காரணமாக இந்தியவுக்கு புலம்பெயர்ந்த இவர் வெளிநாட்டு ஆட்களை அனுப்பும் முகவராகவும் செயற்பட்டு இறுதியில் தொண்ணூறுக்களில் அவர் மட்டும் லண்டன் வந்தடைந்தார். இவருடைய மணஉறவு நிலைக்கவில்லை. மணமுறிவைத் தொடர்ந்து ஏற்பட்ட உறவுகள் அவருக்கு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன் பின் மிக நீண்ட இடைவெளியின் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் பிரிவு மற்றும் அதன் அரசியல் பிரிவின் தலைவியாக இருந்த தமிழினியை மணந்தார்.

ஜெயன் தேவா தமிழர் தகவல் நடுவத்துடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர். தமிழர் தகவல் நடுவத்தின் வரதரின் நம்பிக்கையையும் பெற்றிருந்தவர். அவரது திருமணம் பற்றி அவர் என்னோடு உரையாடிய போது தமிழர் தகவல் நடுவம் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர்களது நலன்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. அதன் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர்பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி வரதரின் வலையத்துக்குள் வருகின்றார். அவரை விடுவித்து லண்டன் கொண்டுவர நினைத்த வரதர் தனது நம்பிக்கைக்குரிய ஜெயன் தேவாவை அணுகுகின்றார். அரசியலில் இரு துரவங்களாக இருந்தாலும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் வரதருக்கும் இடையே எப்போதும் ஒரு புரிந்துணர்வு இருந்தது. இவ்வாறு தான் தமிழனிக்கும் ஜெயன் தேவாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அது உறவாக மலர்ந்த வேளையில் தமிழினி புற்றுநோய்க்கு உள்ளானார். அவரது இறுதிநாட்கள் எண்ணப்பட அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்ல தாங்கள் தீர்மானித்ததாக ஜெயன் தேவா தெரிவித்தார். அதன் பின் அவருடைய அடையாளமே தமிழினியின் கணவர் என்ற நிலைக்குச் சென்றது. இது பற்றி அவரிடம் நேரடியாகவே கேட்டிருந்தேன் அதற்கு அவர் தன்னுடைய அடையாளம் என்பது என்றும் தான் சார்ந்தது என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு இருந்தார். (இந்நேர்காணல் இதுவரை கானொலியாக வெளியிடப்படவில்லை. நாளை வெளிவரும்.) தமிழினி தனது கடைசிக்காலங்களில் இருந்த போது தமிழினிக்கு இருந்திருக்கக் கூடிய ஒரே ஆறுதலும் மன நிறைவும் தன்னுடை காதலன் கணவன் என்ற வகையில் ஜெயன் தேவாவின் அந்த உறவு.

தமிழினியின் ‘கூர்வாளின் நிழலில்’ பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் ஒரு கொலை இயந்திரமாகச் செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தமிழினி. அப்புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்தவர் ஜெயன் தேவா. ‘கூர்வாளின் நிழலி;ல்” நூல் புலிகளை கடுமையாக விமர்சிப்பதாக ஒரு தரப்பு, அந்நூல் புலிகளை விமர்சிக்கவே இல்லை என மறுதரப்பு, அந்நூல் தமிழினியுடையது அல்ல என ஒரு தரப்பு, தமிழினி எழுதியதை மாற்றிவிட்டார்கள் என இன்னொரு தரப்பு, மூலப் பிரதியை கொண்டு வாருங்கள் என இன்னும் சில குரல்கள்… ஜெயன் தேவா – தமிழினி உயிருடன் இருக்கும்போது எழுப்பப்பட்ட இக்கேள்விகள் அவர்களது சுடுகட்டிலும் எழுப்பப்பட்டுக்கொண்டு தான் இருக்கும்.

ஜெயன் தேவாவிற்கும் எனக்குமான பழக்கமும் நட்பும் மிக நீண்டது. 1997 இல் லண்டனில் தேசம் சஞ்சிகை வர ஆரம்பித்த காலங்களில் அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடனான தொடர்புகள் ஏற்பட்டத் தொடங்கியது. அன்றும் சரி இன்றும் சரி விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே அரசியல் சமூக செயற்பாடுகளில் பங்கேற்றனர். அவ்வாறு பங்கேற்றுக் கொண்டவர்களில் ஜெயன் தேவாவும் குறிப்பிடத்தக்கவர். குறிப்பாக தேசம் சஞ்சிகையால் நடத்தப்படும் அரசியல் சமூக கலந்துரையாடல்களில் ஜெயன் தேவா பெரும்பாலும் கலந்துகொள்வார். கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார். குறிப்பாக சினாமா தொடர்பான ஒன்றுகூடல்கள் ஜெயன் தேவா இல்லாமல் நடந்ததில்லை. சினிமா இயக்குநரும் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவருமான தேவதாசனுக்கும் ஜெயன் தேவாவுக்கும் எண்பதுக்கள் முதல் நடப்பு இருந்தது. ஜெயன் தேவா கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேசம்நெற் குறைந்தது ஒரு கலந்துரையாடலையாவது ஏற்பாடு செய்திருந்தது. பிற்காலத்தில் தேவதாசனை விடுவிக்க ஜெயன் தேவா சில முயற்சிகளையும் எடுத்திருந்தார். அது பலனளிக்கவில்லை.

தேசம் சஞ்சிகையிலும் தேசம் இணையத் தளமாக வந்த போது தேசம்நெற் இலும் ஜெயன்தேவா கட்டுரைகளை எழுதி உள்ளார். நான் லண்டன் உதயன் லண்டன் குரல் பத்திரிகைகளை வெளிக்கொணர்ந்த போது தகவல்களை வழங்குபவர்களில் தகவல்களைச் சரி பார்ப்பதில் ஜெயன் தேவாவும் ஒருவர். பிற்காலத்தில் அவர் தாமிரம் என்கிற புளொக் சைற்றை உருவாக்கி சில பதிவுகளை இட்டுள்ளார். முகநூலூடாக அரசியல் கருத்துநிலையை தொடர்ந்தும் மரணத் தருவாயிலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். இவருடைய ஆக்கங்கள் பதிவு, காலச்சுவடு மற்றும் இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளது.

2016 இல் இலங்கையில் என்னுடைய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாயக்கால் வரை’ என்ற 2009 யுத்தம் பற்றிய நூல் வெளியிட்ட போது ஜெயன் தேவா நூல் பற்றிய அறிமுகவுரையை மேற்கொண்டிருந்தார். அப்பொழுது எழுத்தாளர் கருணாகரன் வீட்டில் தமிழக எழுத்தாளர் ஒருவரும் சந்தித்து உரையாடியது தான் கடைசியாக நாங்கள் நேரில் சந்தித்துக் கொண்டது.

அதன் பின்னும் ஜெயன் தேவாவின் நட்பு தொடர்ந்தது. முல்லைத்தீவில் முன்னாள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் தாய் தந்தையற்ற போராளிகளின் குழந்தைகளைப் பராமரிக்கின்றார் என்றும் அவருக்கு உதவும் படியும் கோரி இணைப்பை ஏற்படுத்தித் தந்தார். இன்று வரை கற்சிலைமடுவின் குழந்தைகளை லிற்றில் எய்ட் ஊடாக பலருடைய உதவிகளையும் பெற்று முடிந்தவரை உதவிகளை வழங்கி அவர்களை கல்விநிலையில் முன்னேற்றி வருகின்றோம். இவ்வாறு ஜெயன் தேவா புகைப்படக் கலைஞர் சுகுன சபேசன் ஊடாக சில உதவிகளை வழங்கி இருந்தார். ஜேர்மனியில் அனஸ்லி ஊடாக சில உதவி நடவடிக்கைகளைச் செய்வித்தார்.

தற்போது உதவி என்பது நாங்கள் எங்கள் பணத்தைக்கொண்டு தான் செய்ய வேண்டும் என்பதல்ல. உதவி தேவப்படுபவரையும் அதனைப் பூர்த்தி செய்யக்கூடியவரையும் இணைத்துவிடுகின்ற ஜெயன் தேவா போன்ற பாலங்களின் தேவை இப்போதும் உள்ளது. மக்களை இணைத்துவிடுவதும் மிகப்பெரும் சேவையே.

ஜெயரூபன் மைக் பிலிப் என்பவர் டிசம்பர் 22இல் எழுதிய இரங்கல் குறிப்புக்கு எழுத்தாளர் விரிவுரையாளர் பேராசிரியர் சேரன் ருத்திரமூர்த்தி எழுதிய குறிப்பு என்னை மிகவும் சினங்கொள்ள வைத்தது. ஜெயன் தேவ காலமாகி சில மணி நேரங்களுக்குள் இப்பதிவு இடப்பட்டிருந்தது. ஜெயன் தேவா ஒன்றும் தேவனுமல்ல தேவ துதனுமல்ல. எங்கள் எல்லோரையும் போல சாதாரணன். நாங்கள் ஒன்றும் கருத்தியல் பிசகாது, ஒழுக்கநெறி பிறழாது வாழும் உத்தமர்கள் கிடையாது. எம் எல்லோர் வாழ்விலும் களங்கங்கள், வடுக்கள் உள்ளது. அதற்காக எங்கள் மரணங்கள் எங்களை தவறுகளில் இருந்து விடுவிப்பதில்லை. மரணத்தின் பின்னும் காத்திரமான விமர்சனங்களில் தவறில்லை. மரணங்கள் மனிதர்களை புனிதப்படுத்துவதில்லை என நம்புபவன் நான். ஆனால் அந்த விமர்சனங்களை மொட்டைப் பதிவுகளாக்கி அதற்கு லைக் போடும் மனநிலை மிக மோசமானது.

ஒரு மனிதனை அவன் மறைவுக்குப் பின் மதிப்பிடுவதானால் அவனை அரசியல் ரீதியாக மதிப்பீடு செய்யுங்கள். ஒற்றை வார்த்தையில் ‘தோழரல்ல, பொய்மான், போலிகள்’ என்ற அடைமொழிகள் உங்கள் ‘துரோகி’ அரசியல் கலாச்சாரத்தின் வெளிப்பாடே. சேரன் ருத்திரமூர்த்தியின் பதிவு படத்தில். “முன்னொரு காலத்தில் கொஞ்சம் விடுதலை வேட்கை இருந்தமையால் துயரில் பங்கெடுக்கிறேன்” என விடுதலை வேட்கையை மொத்த குத்தகைக்கு எடுத்த சேரன் ருத்திரமூரத்தி தனது அனுதாபத்தை சில்லறையாக விட்டெறிகிறாரம். ‘தோழரல்ல. போலி. பொய்மான்’ என்று கதையளக்கும் சேரனின் மரணம் நிகழும்போது அந்த நினைவுக் குறிப்பில் “கதிரைக்கு சட்டை போட்டுவிட்டாலும் புனரும் தோழா!” என்ற குறிப்பை பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா? ஆனால் அதற்கும் லைக் போட மார்க் சுக்கம்பேர்க் ஆட்களை உருவாக்கி இருக்கிறார். முகநூலினதும் சமூகவலைத்தளங்களினதும் வெற்றி அதுதான். நீங்கள் யாராக இருந்தாலும் கடைநிலைப் பொறுக்கியாக இருந்தாலென்ன பேராசிரியராக இருந்தாலென்ன உங்கள் உணர்வுகளைத் தூண்டி அதனை கிலுகிலுப்பூட்டி சமூக வலைத்தளத்தில் வாந்தியெடுக்க வைப்பது. நீங்கள் அதற்கு லைக் போடுகிறீர்களோ தம்ஸ் டவுன் போடுகிறீர்களோ மார்க் சுக்கம்பேக்கின் பாங்க் எக்கவுன்ட் மட்டும் எப்போதும் அப்பீற்றில் இருக்கும்.

ஜெயன் மகாதேவா தன்னுடைய உயிர் போகப்போகின்றது என்று தெரிந்த நிலையில் டிசம்பர் எழில் தனது முகநூலில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் “I am too afraid to be ill because most of the doctors and nurses are too demoralised..” என்று தெரிவித்திருந்தார். பிரித்தானிய சுகாதார சேவைகளின் நிலையையும் அதற்கு பிரித்தானிய அரசு கவனம் கொள்ளாத நிலையையும் ஒற்றை வசனத்திற்குள் அடக்கிய மிகப்பெரும் அரசியல் கட்டுரை இது. பிரித்தானியாவில் றோயல் கொலிஜ் ஒப் நேர்சிங் இன் 160 வருட வரலாற்றில் முதற்தடவையாக அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் சுகாதார சேவைகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை 133,400 வெற்றிடங்கள். அரசு பணியாளர்கள் சங்கத்தோடு பேச்சுவாரத்தைக்கு வர மறுக்கின்றது. இங்கிலாந்தின் சுகாதார சேவைகள் ஈடாடி உடைந்துவிடும் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெயன் தேவா மட்டுமல்ல இவ்வாறான நூற்றுக்கணக்கான தடுக்கக் கூடிய தாமதப் படுத்தக்கூடிய மரணங்கள் விரைந்து துரிதகெதியில் நிகழும் வாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஜெயன் தேவாவின் இந்த அரசியல் குறிப்புக்கும் பேராசிரியர் சேரன் ருத்திரமூர்த்தியின் மொட்டைக் குதர்க்கத்திற்கு உள்ள இடைவெளி தான் இன்று சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் உணர்வுநிலைப்பட்ட இடைவெளி.

பலவேறு முரண்பாடுகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால் ஜெயன் தேவா நல்லதொரு நண்பர். மனித நேயன். சிறந்த எழுத்தாளர். விமர்சகர். அவருடைய இழப்பு எங்கள் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அவருடைய உறவுகள் நட்புகள் அனைவருடனும் என் துயரைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

பாகம் 30: செல்வியை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வெளிநாட்டுப் பயணம்! நான் ஒன்றும் தூய்மைவாதி கிடையாது!! பேசுகின்ற எழுதுகின்ற கோட்பாட்டுக்கும் வார்த்தைகளுக்கும் குறைந்தது 50 வீதமாவது வாழ வேண்டும்!!!

(ஞானம் – எம் ஆர் ஸ்டாலின்

ஆலோசகர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்)

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 30 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: தோழர், செல்வி கடத்தப்பட்டது பற்றி அந்த காலத்தில் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய விபரம் உங்களுக்கு தெரியாது. நீங்கள் ஒரு வாழ்க்கையை செல்வியோடு சேர்ந்து அமைப்பதற்கு திட்டமிட்டு இருந்தீர்கள். அதேநேரம் உங்களுக்கு பொருளாதார வளம் தேட வேண்டுமென்ற ஆர்வம் எதுவுமே அந்த நேரம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியான சூழலில் நீங்கள் எப்படி வெளிநாட்டுக்கு பயணமாவது என்ற முடிவுக்கு அல்லது தெரிவுக்கு வந்தீர்கள்? பொதுவாக வெளிநாட்டுக்கு வாற எல்லோருக்கும் பொருள் தேட வேண்டும் என்பதுதான் பிரதான காரணமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். செல்வி கடத்தப்பட்டிருக்கிற அந்த சூழலில் வெளிநாட்டுக்கு வாறது என்று எப்படி முடிவு செய்தீர்கள்.

அசோக்: உண்மையில் வெளிநாட்டிக்குவரும் எண்ணம் எப்போதும் என்னிடம் இருந்ததில்ல. அந்த நேரம் இந்தியா எனக்கு பாதுகாப்பான இடமாக இருந்தது. நிறைய தோழர்கள் இருந்தபடியால் எனக்கு ஆரோக்கியமாக என்னுடைய மனநிலைக்கு ஏற்ற உரையாடலுக்கான நட்புக்கான இடமாக இருந்தது. வெளிநாட்டுக்கு வாற ஐடியாவே இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது என்று கேட்டால், நான் இந்தியாவிலிருந்து கொண்டு தங்களுக்கு எதிராக வேலை செய்கின்றேன் என்ற சந்தேகம் புலிகளுக்கு இருப்பதாகவும் நான் இந்தியாவை விட்டு வேறு நாட்டிக்கு சென்றால் செல்வியை விடுவிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் புலிகள் பக்கத்திலிருந்து சந்தேகம் வந்ததாக எனக்கு செல்வியின் வீட்டில் இருந்தும், சில நண்பர்களும் சொன்னார்கள். நான் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு போனால் செல்வியை புலிகள் விடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னார்கள்.

இந்த நேரத்தில் தீம்தரிகிட ஞாநி அவங்க செல்வியின் கைது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்திருந்தார். இந்த செய்தியை கேட்டதற்குப் பிறகு நானும் தோழர் திருநாவுக்கரசும் ஞாநி அவங்களிடம் சென்று நிலமையை சொல்லி அந்தக் கட்டுரை வேண்டாம் என்று சொன்னோம். நாங்கள் பார்த்தோம், அந்த கட்டுரை வெளி வந்தால், கட்டுரை புலிகள் பக்கத்தில் கோபத்தை உண்டு பண்ணும் என்று. ஆனால் நான் வெளிநாட்டுக்கு போற ஐடியாவை யோசிக்கவில்லை. ஏனென்றால் அப்படி கொஞ்சமாவது எண்ணம் எனக்கு இருந்திருந்தால் யோசித்திருக்கலாம். அப்படி ஒரு எண்ணமே என்னிடம் இருக்கவில்லை. அப்போ திரும்பத் திரும்ப அழுத்தம் வந்துச்சு போனால் விடுவார்கள் என்று. அப்போ உருத்திரனுக்கும் இந்த செய்தி தெரியும். திடீரென்று உருத்திரன் சொல்லிட்டு ஒரு வாரத்துக்குள்ள கிளம்பு போகலாம் என்று. எங்க என்று கேட்க பிரான்சுக்கு போ என்று சொல்லி.

தேசம்: அந்த நேரம் நீங்கள் திருச்சியில் இருக்கிறீர்கள்?

அசோக்: திருச்சியில் தோட்டம் போட்டு கொண்டு இருக்கிறோம். உருத்திரன் சொல்லிட்டுது உடனே மெட்ராஸ் வா என்று. நான் என் நிலைமையை சொன்னேன். இல்லை இல்லை நீ மெட்ராஸ் வா கதைக்கலாம் என்று. நான் மெட்ராஸ் வந்த உடனே…. அதுக்கு முதல் ஒரு சம்பவம் நடந்தது கனடாவிருந்த தோழர் தீபநேசன் வெளிநாட்டிக்கு என்னை வரும்படிகூறி எனக்கு பணம் அனுப்பி இருந்தார். நான் வரமுடியாது என்று சொல்லி ஈஸ்வரனை அந்தப் பணத்தை கொடுத்து உருத்திரன் ஊடாக சுவிஸ் அனுப்பி வைத்துவிட்டேன்.. வெளிநாடு வரும் நோக்கமே இருக்கவில்லை எனக்கு. அப்போ உருத்திரன் சொல்லிச்சு ஈஸ்வரன் அங்கிருந்து சொல்லிக்கொண்டு இருக்கு உன்னை அனுப்பி வைக்க சொல்லி. நீ போனால் சிலநேரம் செல்வியை விட்டுவிடுவதற்கான சாத்தியங்கள் இருக்கு. ஒரு வாரத்துக்குள்ள போக வேண்டும் ஆயத்தமாகு என்றுசொல்லி. அந்த மனநிலையே எனக்கு இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.

மெட்ராஸ் வந்து ஒரு வாரத்திக்குள்ளே டெல்லி வந்து ஜேர்மன் வந்துட்டேன். ஜேர்மனிக்கு வந்த பிறகுதான் நான் தோழர்களுக்கு அறிவித்தேன் ஜேர்மனிக்கு வந்து விட்டேன் என்று. அவங்களுக்கு நான் முதலில் சொல்லல. அப்போ தோழர் எஸ்.வி. இராஜதுரை அவங்களோடு நெருங்கிய அரசியல் உறவு இருந்தது. எங்களுக்கு நிறைய உதவி செய்து கொண்டிருந்தவர். அவர் ஈழத் தமிழர்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு அவருடைய புத்தகங்கள் எழுத்துக்கள் மிக உதவியாக இருந்தது. அவரும் நானும் அசோக் நகரில் மூவேந்தர் கொலனி என்று ஒன்று இருந்தது. அங்க ஒரே அபார்ட்மெண்ட்ல இருந்தனாங்கள். நான் கீழ் வீட்டில் இருந்தன். அவர் மேல் வீட்டில் இருந்தவர். அப்ப நாங்க அடிக்கடி கதைத்துக்கொள்ளுவோம். அவரிட்ட தான் டெலிபோன் இருந்தது. நான் இங்கே வெளிநாட்டுக்கு வந்துட்டு அவருக்குத்தான் முதலில் சொன்னேன்.

அங்கிள் நான் ஜேர்மனிக்கு வந்து விட்டேன் என்று. அவருக்கு ஆச்சரியம். ஒரு வாரத்திற்கு முதல் அவரும் நானும் சந்தித்து கதைக்கிறம். பிறகு அவரிடம் சொல்லித்தான் இரா பத்மநாதன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ரேடியோ சிலோனில் தயாரிப்பாளராக இருந்தவர்.

தேசம்: ரேடியோ மாமா என்று சொல்லுவது…

அசோக்: ஓம். அவருக்கு நீண்ட வரலாறு ஒன்று இருக்கு. மட்டக்களப்பின் ஆரம்ப கால அரசியல் இலக்கிய ஆளுமைகள். அந்த நேரம் கேள்விப்பட்டிருப்பீர்கள் வீரகேசரி செட்டியார் என்று. அந்தக் காலத்தில் அவரோடு உலகப் பயணம் போய் வீரகேசரியில் பயணக்கட்டுரை எழுதினவர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் டி சிவநாயகம் ஆசிரியராக இருக்கும் போது, இவர் துணை ஆசிரியராக இருந்தவர். அவர் ரேடியோ சிலோனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது இனக்கலவரத்தால பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் மெட்ராஸ்சில் தங்கி இருந்தாங்க. என் கிராமத்தை பற்றி முன்னர் கதைத்த போது இவங்களைப் பற்றி கதைத்திருக்கிறன். அவர் மகன் காண்டிபனோடு அங்க தங்கி இருந்தார். காண்டீபன் படித்துக் கொண்டிருந்தவர். அவங்களோட நான் விடுமுறை நாட்களில் வந்து நிற்பேன். இயக்கத்தை விட்டதற்குப் பிறகு அங்கேயும் தங்கியிருந்தன். தமிழ்நாட்டில் வாழ்ந்த எங்களைப் போன்ற கஷ்டப்பட்ட பல தோழர்களுக்கு அவரும் மகன் காண்டீபனும் நிறைய உதவி செய்திருக்காங்க. அந்த நேரத்தில் அவங்களுக்கும் கஷ்டம். இருந்தாலும் நிறைய உதவி செய்தாங்க. மறக்க முடியாது.

தேசம்: அவர் உங்களுடைய உறவினரும் கூட என?

அசோக்: அத்தான். பெரியம்மாட மகளை திருமணம் முடித்தவர். நாங்கள் திருச்சிக்கு வரும்வரைக்கும் அங்க தான் இருந்தது. எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம் அதிர்ச்சி எப்படி திடீரென்று போனது என்று. வந்ததற்கு பிறகு செல்வியை விடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு விடுவார்கள் நாளைக்கு விடுவார்கள் என்று அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இப்ப முப்பது வருஷமா போயிட்டுது நீங்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் கனவாகி போய் விட்டது.

தேசம்: பிறகு ஜெர்மனியில் இருந்து எப்படி பிரான்சுக்கு வந்தனீங்க?

அசோக்: ஜெர்மனியில் நான் முகாமில் தான் இருந்தன். அங்கயே நான் இருந்திருக்கலாம். எனக்கு ஜெர்மனியை விட பிரான்ஸ் பிடித்திருந்தது. பிரான்சினுடைய புரட்சி, அரசியல் களம் எனக்கு உவப்பானதாக இருந்தது. அப்போ பிரான்சுக்கு வந்த எனக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைத்தேன்.

தேசம்: ஆரோக்கியமாக இருந்ததா…

அசோக்: நான் குறிப்பிட்ட காலம் தானே இருக்கப் போறேன். செல்வி விடுவிக்கப்பட்டதும் திரும்பத்தானே எண்ணி இருந்தன். அப்போ பிரான்ஸில் இருந்துட்டு போகலாம் என்றுதான் வந்தேன். இங்கே வந்ததற்கு பிற்பாடு இங்கே என் வாழ்க்கை திசை மாறிவிட்டது. இப்படி இங்கேயே இருப்பன் என்று நினைத்திருக்கவே இல்லை. நான் போற ஐடியாவிலதான் இருந்தன். கேஸ் போடுற ஐடியாவில இருக்கவில்லை. தோழர்கள் சொன்னார்கள் அகதி தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும்படி. கிடைச்சா பிறகு இந்தியாவுக்கு போய் வாறது லேசாக இருக்கும் தானே என்று.

இந்த அகதி தஞ்சம் கோரும் வழக்கு தொடர்பாக முறைமைகள் தெரியாது எனக்கு. அப்பதான் சபாலிங்கம் தோழரை தொடர்பு கொள்கிறேன். அப்போ நான் பிரான்சுக்கு வந்ததும் யாருடைய தொடர்பும் இல்லை. என் கிராமத்து புளொட் தோழர்கள் இங்க இருந்தவர்கள் அவங்களோடு தான் நான் இருந்தேன். ஞானம் எம். ஆர். ஸ்டாலின், தயா, நல்லிஸ் என்று சொல்லி தோழர்கள் எல்லாம் இங்கே இருந்தவர்கள். ஞானம் எல்லாம் நிறைய உதவி செய்தாங்க. காலப்போக்கில் அரசியல் முரண்பாடுகள் வந்துவிட்டது என்பது வேறு விசியம். தனிப்பட்ட வகையில் ஞானத்தின் உதவிகளை மறக்கக் கூடாது. அவங்க தான் எல்லா உதவியும் செய்தார்கள். சாப்பாடு எல்லாம். ஒரு மாதத்துக்கு எதுவுமே செய்ய இயலாது. அப்போ எல்லா உதவியும் அவங்கதான் செய்தார்கள்.

அப்போ சேரன் கனடாவிலிருந்து எனக்கு சொன்னார். தன்ர ஃப்ரெண்ட் சபாலிங்கம் என்று, அவர் அகதி வழக்கு போன்ற விடயங்களில் அக்கறையாக இருக்கிறவர். அவரை போய் சந்தி என்று சொல்லி. அப்பதான் சபாலிங்கத்தோட உறவு வருது. சபாலிங்கத்தோடு பேசிட்டு இருக்கும்போது எனக்கு தெரிஞ்சது சபாலிங்கம் எழுதுவதைவிட நான் என் அகதிக் கோரிக்கையை எழுதினால் நல்லாயிருக்கும் என்று சொல்லி நானே எழுதினேன். பிறகு அந்த வழக்கு அகதிகள் காரியாலயத்திற்கு போய் பிறகு என்னுடைய அகதி கோரிக்கை ஏற்கப்பட்டது.

அப்ப செல்வியிட விடுதலைக்காக இங்கே வந்ததற்குப் பிறகு புலிகளுடைய அமைப்போடு தொடர்பில் இருந்த புளொட் தோழர் ஒருவர். இங்க ராஜ் என்று இருந்தவர். அவர் போய் திலகரோட எல்லாம் கதைத்து திலகர் என்னை ஆபிசுக்கு கூப்பிட்டவங்க. நான் ஆபிஸ் போகவில்லை. பிறகு தொடர்பாளர் என்று சொல்லி ஒரு ஆளை அனுப்பினார்கள். அவரிட்ட நான் இந்த பிரச்சினை எல்லாம் கதைத்தேன் அவர் தங்களுக்கு தெரியாது என்று சொல்லி தாங்கள் கட்டாயம் தலைமையோடு வன்னிக்கு கதைக்கிறம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிறகு எனக்கு விளங்கிவிட்டது. அவங்க சும்மாதான் என்னோட கதைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று. பிறகு எதுவும் நடக்கல.

தேசம்: இப்ப இதுல இந்தியாவில் இருந்த போது அரசியல் செயற்பாடுகளில் நிறைய ஈடுபட்டு இருக்கிறீர்கள். இந்த அரசியல் இலக்கிய உரையாடல்கள் அறிமுகம் நட்பு இதுவெல்லாம் எப்பவுமே இரண்டு பக்கத்துக்கு உரியது விவாதமும் … அதுகளைப் பற்றி சொல்லுங்கள் உங்களுக்கு அ.மாக்ஸோடையும் தொடர்பு இருந்தது என்று நினைக்கிறேன்.

அசோக்: அ. மாக்ஸோடையும் புளொட்டில் இருக்கும் போது தொடர்பு வந்தது. அது நெருக்கமான உறவு இல்லை. அக்காலங்களில் அவரின் அரசியல்கருத்துக்களில் நிறைய உடன்பாடுகள் எனக்கு இருந்தது. காலப்போக்கில் அவரின் அரசியல் நிறைய மாற்றம் அடைய தொடங்கியது. மார்ச்சியத்தை விமர்சனத்தோடு பார்க்காமல் அதை நிராகரிக்கின்ற நிலைக்கு அவர் வந்திட்டார். பின் நவினத்துவம் என்ற கருத்தாக்கத்தை தமிழ்நாட்டில் பிழையாக விளங்கிக் கொண்டவர்களில் அ.மாக்சும் ஒருவர். அதை பெருங்கதையாடல் என்று சொல்லி எல்லாம் நிறப்பிரிகை என்ற சஞ்சிகையில் எழுதினார். இப்படி நிறைய கட்டுரைகள். காலப்போக்கில் அது ஆரோக்கியமான முரண்பாடாக தொடங்கி ஒரு காலகட்டத்துல அவருக்கும் எனக்குமான உறவு கொஞ்சம் விரிசல் கண்டுவிட்டது. ஆனால் அவருடைய புத்தகங்கள் எங்களை பக்குவப்படுத்தி இருக்கு. ஆரம்ப காலத்தில்.

தேசம்: வரலாறு என்பது அப்படித்தானே தத்துவ மேதைகள் எடுத்துக்கொண்டாலும் தத்துவ மேதைகளின் மாணவர்கள் அவர்களுக்கு முரணாக போவது ஒரு இயல்பான வளர்ச்சி தானே.

அசோக்: அவருக்கு ஐரோப்பாவில் கிடைத்த புதிய நண்பர்கள் மிக மோசமான நபர்களாக எனக்குத் தெரிந்தார்கள். அவர்கள் கொள்கையிலும் கோட்பாட்டிலும் எவ்வித அக்கறையுமற்று தனிமனித நடத்தையிலும் மிக மோசமான நபர்களாக இருந்தபடியால் மாக்ஸோடு எனக்கு இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டேன்.

எஸ் வி ராஜதுரை தோழருடன் நிறைய தொடர்பிருந்தது. இங்க வந்து சந்திச்சவர். காலப்போக்கில் அவருடன் சினேக முரண்பாடு இருந்ததேயொழிய அவரோடு உறவு இருந்தது. இந்திய இராணுவத்தை புலிகள் எதிர்த்ததால புலிகள் தொடர்பாக அவரிடம் ஆதரவு நிலைப்பாடு இருந்தது.

தேசம்: உங்களைப் பற்றின விமர்சனங்களில் ஒன்று நீங்கள் கடுமையான தூய்மைவாதம் பேசுவது என்று. என்னிடமும் அந்த விமர்சனம் இருக்கு நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்…

அசோக்: பல்வேறு நண்பர்கள் மத்தியில் இந்த விமர்சனம் குற்றச்சாட்டு இருக்கு. எனக்குதெரியும்.

தேசம்: மற்றது நீங்க சமூக இயக்கங்களில் வேலை செய்யும்போது பல்வேறுபட்ட நபர்களை சந்திப்பீர்கள். எல்லாரும் நூறு வீதம் சரியாக இருப்பார்கள் என்று இல்லைதானே. நானும் நூறுவீதம் சரி என்று இல்லை நீங்களும் நூறுவீதம் சரி என்று இல்லை.

அசோக்: நானும் அப்படி இல்லை. நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்றால் நாங்கள் பேசுகின்ற எழுதுகின்ற கோட்பாட்டுக்கும் வார்த்தைகளுக்கும் குறைந்தது 50 வீதமாவது வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். யார்தான் வாழ்க்கையில் தவறுவிடாதவர்கள். என் வாழ்வே எனக்கு விமர்சனத்திற்கு உரியது. ஆனா கடந்த காலங்களில் விட்ட அதே தவறுகளையும் பிழைகளையும் தொடர்ந்து செய்ய முடியாதுதானே.

என் வாழ்க்கை வேறு, கோட்பாடு வேறு, எழுத்து வேறு என்றால் நான் ஊரிலேயே சந்தோஷமாக இருந்து இருக்க முடியும். அரசியல், ச மூகம், போராட்டம் என்று வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே.
நான் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டால் குறைந்தபட்சம் நாங்க பேசுகின்ற வார்த்தைகளுக்கு, எழுதுகின்ற வார்த்தைகளுக்கு, நம்புகின்ற கோட்பாடுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று. அப்ப நண்பர்களும் தோழர்களும் தவறிழைக்கும்போது அந்த முரண்பாடுகள் வரும். நண்பர்கள் தோழர்களோடு நான் கொள்ளும் அரசியல் முரண்பாடுகளை பகை முரண்படாக்க நான் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் சிலர் பகை முரண்பாடாக கையாண்டு எனக்கெதிரான மிகமோசமான செயல்களையெல்லாம் செய்திருக்காங்க. நான் அவங்களையெல்லாம் எதிரிகளாக நினைத்துப்பார்த்தது கூட கிடையாது.

நான் இவர்களைப்போல் வாழ நினைத்திருந்தால் இவர்களைப் போல் நிறைய சமரசம், பிழையாக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சின்னச்சின்ன சமரசம், செய்தாலே போதும். இதை நண்பர்கள் செய்யும் போது விமர்சனம் எனக்கு வருகின்றது. இதை தூய்மைவாதம் என்று சொல்ல முடியாது. ஆனால் நண்பர்கள் கடும் விமர்சனங்களை எனக்கு வைத்திருக்கிறார்கள். அதை ஆரோக்கியமாகத்தான் எடுத்து இருக்கிறேன். நிறைய திருந்தி இருக்கிறேன். நான் ஆரம்ப காலத்தில் நிறைய நண்பர்களுடன் நான் முரண்படுவேன். இப்ப ஓரளவு குறைவு. முரண்படுவதில் இருந்து ஒதுங்கி விடுவேன். உண்மையிலேயே எனக்கு கோபம் வாரது ஏனென்றால் அரசியல் தவறுகளை மன்னிக்கலாம். அரசியல் தவறுகள் எமது அரசியல் தெளிவற்ற தன்மை, புரிதல் அற்ற நிலைகளில் ஏற்படக்கூடியது. ஆனா சொந்த வாழ்க்கையில் தனிப்பட்ட நலன்களுக்காக பிழைப்புக்காக அயோக்கித்தனங்களை செய்து கொண்டு மறுபுறம் அரசியல் செய்யும் நபர்களை காணும் போது கோபம் வராமல் என்ன செய்யும்.

தேசம்: முரண்படுவது பிரச்சினை இல்லை பகையாக மாறாமல் இருந்தால் சரி…

அசோக்: நான் எந்த பகைவரோடும் உரையாட தயாராக இருப்பேன். மிக மோசமான புலிகளோடும் உரையாடல் இருந்திருக்கு. உரையாடலுக்கு நான் எப்போதும் தடை விதித்தது இல்லை. அனால் உரையாடலில் நிகழும் தருணத்தில் அந்த உரையாடலுக்கு நேர்மையோடும் உண்மையோடும் நாம் இருக்க வேண்டும்.