ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

 

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடல் இன்று இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

 

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது அரசியல் பலம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான மூவரை உள்ளடக்கிய அமைச்சரவையே காணப்படுகின்றது.

 

எந்தவிதத்திலும் இது போதுமானதல்ல. தற்போதைய ஜனாதிபதிக்கும் புதிய அமைச்சரவைக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. புதிய அரசியல் கலசாரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

 

அந்த இலக்கினை அடையும் வரை நாம் பல விடயங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது.ஒரு சில தீர்மானங்களை எடுக்க நேரிடும். இது எமக்கு சவாலான விடயமாகும். நவம்பர14 நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது பலமிக்க அதிகாரத்தினை ஏற்படுத்திகொள்ள வேண்டும்.

 

நாடாளுமன்றில் பலமிக்க அதிகாரத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்ற போதிலும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதனால் மாத்திரம் பலமிக்க அதிகாரத்தினை பெறமுடியாது.

 

தகுதிவாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.ஜனநாயக உரிமைகளுக்காக நாடாளுமன்றுக்குள் எதிர்க்கட்சி ஒன்றின் தேவை காணப்படுகின்றது.

 

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதந்கு தயார் நிலையில் உள்ளன. கடந்த காலங்களில் வடக்கு அரசியல்வாதிகள் எம்முடன் கலந்துரையாடியிருந்தனர்.

 

அதாவது வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் இல்லையெனில் வடக்கு மக்கள் ஜனாதிபதியுடன் இணைவார்கள் என அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்“ இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இடையே சந்திப்பு!

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த அட்மிரல் கோஹ்லர், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பாராட்டினார்.

கடற்படைப் பிரிவின் மனிதவள பயிற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்படும் என அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் விஜயமானது வலுவான, நிலையான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கான உர மானியம்15,000 ரூபாயிலிருந்து 25 ,000 ரூபாயாக அதிகரிப்பு !

விவசாயிகளுக்கான உர மானியத்தை15,000 ரூபாயிலிருந்து 25 ,000 ரூபாயாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

அதற்கிணங்க இதுவரை ஹெக்டெயாருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் உர மானியம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதோடு, இந்த மானியம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகளுக்கு இந்த மானியத்தை செயற்திறனுடனும் திறம்படவும் கிடைக்கும் வகையில் குறித்த நிதியானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சரியான விவசாய இடுபொருள் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வழங்குவதற்கும் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயனம் மற்றும் சேதனப் பசளை உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கும் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அத்தோடு, பின்னடைவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

அதன்படி, ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படவுள்ளது.

 

இந்த மானியம் மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும்.

மீன்பிடித் தொழிலை, நிலைபேறான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், அதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யவும், தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வரும் கடல் மீன்பிடித்தொழிலை முன்னேற்றுவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் நம்பிக்கையை வென்றெடுப்பது எனது பாரிய பொறுப்பாகும் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

 

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்காக ஆற்றிய விசேட உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனநாயக ரீதியாக மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள். எமது நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்த எனது ஆட்சிக்காலத்தில் தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

 

நாம் மிகவும் சவாலானதொரு கட்டத்தில் தான் உள்ளோம். நான் மெஜிக் காரனோ மாயாஜால வித்தைக் காரனோ கிடையாது. நானும் இந்த நாட்டில் பிறந்த ஒரு சாதாரண பிரஜை.

எனக்கும் ஆற்றல்கள் இருக்கின்றன. ஆற்றாமைகளும் இருக்கின்றன. நாம் அறிந்த விடயங்களும் இருக்கின்றன. அறியாத விடயங்களும் இருக்கின்றன.

 

ஆனால் என்னுடைய முதன்மைப்பணி ஆற்றல்களை உறிஞ்சி எடுத்து அறிந்தவற்றை ஒன்று திரட்டி மிகச் சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு இந்த நாட்டை நெறிப்படுத்துவதாகும்.

அதனால் அந்த கூட்டான இடையீட்டின் பங்காளியாவதே என்னுடைய பொறுப்பாகும்.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒரு தலையாய பொறுப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.

 

இந்த சவாலை வென்றெடுப்பதற்காக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயலாற்றுவதற்காக என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை நான் முறைப்படி ஈடேற்றுவேன்.

எமது நாட்டுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும்.

 

உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும். அதற்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் நாங்கள் ஒருபோதுமே தயங்கமாட்டோம்.

 

அதைப்போலவே எமது நாட்டை கட்டியெழுப்புகையில் கைத்தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள். எனவே அவர்களை பலம்பொருந்தியவர்களாக கட்டியெழுப்ப அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுவார்களென நாங்கள் நம்புகிறோம்.

எமது நாட்டின் ஜனநாயகத்தினால் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன்.

அவ்வாறு தெரிவு செய்துகொள்வதற்காக மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

எனக்கு அளிக்கப்படாத வாக்குகளும் இருக்கின்றன. எனவே எமது வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு பற்றி எமக்கு சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது.

 

எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் எனது ஆட்சிக்காலத்தில் எனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாக அமைகின்றது. அந்த பணியை சரிவர ஈடேற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் மனவிருப்பங்களிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். – ஜனாதிபதி அனுர குமாரவுக்கான வாழ்த்து செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  அனைத்து மக்களினதும் கனவுகளை ஈடேற்றுவார் என்பதை எதிர்பார்க்கின்றோம் என ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதையடுத்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் நாட்டின் பொருளாதார நிலைமைகளையும் மனதில் நிறுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து செயலாற்றி இருந்தோம்.

ஆனாலும் எமது நம்பிக்கைகளுக்கு மாற்றாக இலங்கைத் தீவில் வாழுகின்ற மக்களில் கணிசமானவர்கள் ஆட்சி மாற்றம் ஒன்றையே தமது விருப்பமாக வெளிப்படுத்தியுள்ளனர். மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் மனவிருப்பங்களிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.

அதேவேளை சமத்துவமான தேசத்தை உருவாக்கும் கனவோடு ஆட்சி அமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி தோழர் அநுரகுமார திசாநாயக்க அனைத்து மக்களினதும் கனவுகளை ஈடேற்றுவார் என்பதையும் எதிர்பார்க்கிறோம்.

எமது வேண்டுகோளை ஏற்று எமது அரசியல் வழி நின்று வாக்களித்த மக்களுக்கும் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றும் வகையில் வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து மக்களிற்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.

இதுவரை காலமும் எமது நாடாளுமன்ற அரசியலில், தேசிய நல்லிணக்க வழிமுறை வரலாற்றில் அரசுகளுக்கு உள்ளிருந்தும் வெளியே இருந்தும் மக்கள் நலன் சார்ந்து நாம் உறுதியுடன் செயலாற்றி வருகின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே என்றும் மாறாத எமது அரசியல் இலக்கு” என்பதையும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் – பதவியேற்றார் இலங்கையின் 10ஆவது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை(23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதன் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதும் , அரச தலைவரை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல, எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன்.
சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளேன். அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம்.
நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.