ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெட்கம், சூடு, சொறனை இருக்கும் ஒரு ஜனாதிபதியாக இருந்தால்…..; – சாணக்கியன் காட்டம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெட்கம், சூடு, சொறனை இருக்கும் ஒரு ஜனாதிபதியாக இருந்தால் மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருக்கமுடியாது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு “முகத்தூர் முழக்கம்”மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டில் அட்டைகள் எவ்வாறு இரத்தத்தினை உறிஞ்சி எடுக்குமோ அதேபோன்று இந்த நாட்டு மக்களின் நிதியை களவெடுத்து, நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை விற்பனை செய்து, இந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான அந்நிய செலாவாணியை கொண்டு நாடுகளின் கடனை செலுத்துவதாக கூறி தனது குடும்பத்தின் கடன்களை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நாட்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரும்போது கையிருப்பாக இந்த நாட்டில் 06 பில்லியன் அமெரிக்க டொலர் இருந்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி வரப்போகின்றது, பொருட்களுக்கான தட்டுப்பாடு வரப்போகின்றது என்று தெரிந்தும் இந்த அந்நிய செலவாணியை பயன்படுத்தி அந்த கடனை அடைப்பதற்கான காரணம் அவரின் குடும்பத்தின் வேண்டப்பட்டவருக்கே அந்த நிதியை வழங்கியதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர், இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் கிடைத்துள்ளார்கள். நிதியே இல்லாத நாட்டுக்கு ஒரு அமைச்சர். சிங்கள அமைச்சர்களே இன்று அமைச்சு வேண்டாம் என்று கூறுமளவிற்கு அரசிடம் நிதியில்லாத நிலை காணப்படுகின்றது.

இந்த மிகவும் மோசமாக விமர்சிக்கப்படும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருக்கின்றார். வெட்கம், சூடு, சொறனை இருக்கும் ஒரு ஜனாதிபதி மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருக்கமுடியாது.

சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டவர்களே அமைச்சு பதவிகள் வேண்டாம் என கூறும்போது, எம்மவர்கள் எதற்காக அமைச்சு பதவிகளை எடுக்கவேண்டும்.

நான் நாடாளுமன்றத்தில் 5000 ரூபா பணத்தாளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன் காட்டி பேசியபோது நான் சுயாதீனமாக மக்களுக்காக செயற்படப்போவதாக கூறியவர் இருவாரங்கள் கழிவதற்குள் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

அப்போது நான் 5000 ரூபாய் வழங்கியது சரிதான். அமைச்சுப்பதவியும் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கியதாக கூறப்படுகின்றது.

இந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையில் உள்ள மக்களை தங்களது தவறான வழிநடத்தல்களினால், தவறான தீர்மானங்களினால் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை அழித்து அடுத்தவேளைக்கு உணவில்லாத நிலையினை இந்த நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.

“இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் ஒருவர் நாடாளுமன்றுக்கு வந்தமையே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்.” – ஜனாதிபதி மீது கடும் அதிருப்தியில் வாசுதேவ !

“அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்லப்போவதில்லை எனவும் அமைச்சருக்கான சம்பளம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விமல் வீரவன்ஸவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கியமை தவறானது என்று இன்று ஒட்டுமொத்த நாடும் கூறிவருகிறது.

இது மக்கள் ஆணைக்கும் எதிரான செயற்பாடாகும். இந்த நிலையில், நானும் இனிமேல் அமைச்சு பணிகளில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

நான் இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்ல மாட்டேன். எனக்கு இனிமேல் அமைச்சருக்கான எந்தவொரு வரப்பிரசாதங்களும் தேவையில்லை.

அமைச்சருக்கான சம்பளம் கூட எனக்குத் தேவையில்லை. அடுத்த 3 வருடங்களுக்கு நான் இவ்வாறுதான் செயற்படுவேன் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம், நாம் எதிரணியில் இணையவும் மாட்டோம். எமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்கவே நாம் செயற்படுகிறோம்.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நாம் பல தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த முற்பட்டும், அந்த முயற்சிகள் கைக்கூடவில்லை.

ஜனாதிபதியும் எதுவும் செய்ய முடியாத நிலைமையிலேயே இன்று உள்ளார். நாட்டு மக்கள் இன்று அதிருப்தியில் உள்ளார்கள். இதனை சுட்டிக்காட்டியே நாம் கருத்துக்களை வெளியிடுகிறோம்.

ஆனால், எமது ஆலோசனைகளை கேட்காமல் தன்னிச்சையாக செயற்படுவதாலேயே இந்த விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்கும்போதே நாம் ஜனாதிபதியுடன் ஒப்பந்தமொன்றை செய்துக் கொண்டிருந்தோம்.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் ஒருவர் நாடாளுமன்றுக்கு வரக்கூடாது என்று வலியுறுத்தினோம். எனினும், எமது ஒப்பந்தம் மீறப்பட்டது.

இதுவும் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது. அரசாங்கம் செய்தமை தவறு என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்த கூட்டத்துக்கும் அறிவேயில்லை.” – இரா.சாணக்கியன்

“இன்று இந்த நாட்டிலே ஜனாதிபதிக்கும் அறிவில்லை, நிதியமைச்சருக்கும் அறிவில்லை, அவர்களின் பிரதிநிதிகளாக எமது மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிவில்லை என்ற நிலைமையே இருக்கின்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இந்த நாட்டிலே ஜனாதிபதிக்கும் அறிவில்லை, நிதியமைச்சருக்கும் அறிவில்லை, அவர்களின் பிரதிநிதிகளாக எமது மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிவில்லை என்ற நிலைமையே இருக்கின்றது இன்று மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்று சொல்லி ஒரு கூட்டம் இங்கு இடம்பெற்றது. மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் எதுவும் இக்கூட்டத்தில் ஆராயப்படவில்லை. அதற்குக் காரணமாக நிதி இல்லை என்று சொல்லப்படுகின்றது.

அண்மையில் கௌரவ நீதியமைச்சர் வடக்கிற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இதில் காணாமல் போனவர்களின் விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. உண்மையில் இந்த உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. காணாமல் போனவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஒரு லட்சம் ரூபாய்க்காக தாய்மார் இன்று வரை வீதியில் போராடவில்லை என்பதையும் அவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன் நேற்றைய செய்தியில் பார்த்திருந்தேன் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தாங்கள் வடகொறியாவில் இருந்து கறுப்பு டொலர்களைப் பயன்படுத்தி யுத்தத்திற்கு ஆயுதங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் நிதி அமைச்சர் அவர்கள் எவ்வாறு இவ்வாறானதொரு கருத்தைச் சொல்ல முடியும்.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒருநாட்டில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கி இந்த யுத்தத்தை நடாத்தியதாகச் சொல்லுகின்றார்கள். இனிவரும் காலங்களில் இன்னும் இன்னும் எத்தனை உண்மைகளை நாங்கள் அறியக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.

நீதி அமைச்சர் சொல்லுகின்றார் காணாமல் போனாருக்கு நட்டஈடு கொடுப்பதாக, அதே நேரத்தில் நிதி அமைச்சர் வடகொறியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் இதனைக் கவனிக்க வேண்டும்.

தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற விடயங்களை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். எமது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சொன்னார் பொங்கலுக்குப் பிறகு எமது மாவட்டத்தில் பல மில்லியனர்கள் உருவாகுவார்கள் என்று. ஆனால் இன்று மாவட்டத்தில் உருவான ஒரு மில்லினர் கூட இல்லை. இன்று மாவட்ட விவசாயிகள் எல்லாம் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று இந்தக் கூட்டத்தில் கூட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதைக் கூட நாங்களே முன்வைக்க வேண்டி இருக்கின்றது.

அதே நேரத்தில் இன்று ஒமிக்கறோன் மட்டக்களப்பில் அதிகமாக இருக்கும் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு நேரத்தில் அவசரமாக இந்தக் கூட்டம் எதற்காக? இன்று முக்கியமானவர்கள் பலரை இந்தக் கூட்டத்திற்கு அழைக்கவும் இல்லை.

வழமையாகப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று அதில் தீர்மானிக்கும் விடயங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கொண்டு வருவதுதான் வழமை. ஆனால் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடந்திருக்கின்றது. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நாளையும் இனிவரும் காலங்களிலும் நடக்க இருக்கின்றன. இவ்வாறானதொரு குழப்ப நிலை இந்த மாவட்டத்தில் இருக்கின்றது.

கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் கதைக்க வேண்டும் என்றால் கையை உயர்த்திக் கதைக்க வேண்டுமாம். இது சந்திரகாந்தன் அவர்களின் பிறந்தநாள் விழா அல்ல நாங்கள் கையை உயர்த்திவிட்டுக் கதைப்பதற்கு.

இன்று இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பல விடயங்களுக்குத் தீர்வுகளைத் தருவதாகச் சொல்லியிருந்தார். விசேடமாக ஐ புரொஜக்ட் நிதியினை வைத்திருக்கும் நபரிடமிருந்து அந்த நிதியை மீள எடுத்து அந்தத் திட்டத்திற்கு வழங்குவதற்கான அனுமதியை அவர் வழங்கியிருந்தார். அதேவேளை கெவிலியாமடுவில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாங்கள் விலியுறுத்தயிருந்தோம். அம்பிட்டிய சுமணரத்தின தேரர் எமது பண்ணையாளர்களின் மாடுகளை வலுக்கட்டாயமாகப் பறித்தமை தொடர்பிலும் நாங்கள் தெரியப்படுத்தியிருந்தோம். ” எனத்தெரிவித்தார்.

கணக்கு பார்க்க தெரியாத ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ !

ஜனாதிபதிக்கு கணக்கு பார்ப்பதற்கு தெரியாது போல் விளக்குகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கருப்பு பொங்கள் நிகழ்வில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஜனாதிபதி அவருடைய விசேட உரையில் ஆவேசமாக பல கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். தனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து 95 ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக தெரிவித்திருக்கின்றார்.

நான் நினைக்கின்றேன் ஜனாதிபதிக்கு கணக்கு பார்க்க தெரியாது போல் விளங்குகின்றது. விவசாயிகளின் ஒரு கிலோ நெல்லுக்கு 95 ரூபாய் கூட கொடுத்தால் அவர்களுடைய முதலீடு கூட பெற முடியாது என்பது ஜனாதிபதிக்கு விளங்கவில்லை. கணக்கு வழக்கு தெரியாத ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் இந்த நிலை தான் வரும் .

அதுபோன்று அவருடைய அல்லக்கைகள் இந்த மாவட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு கணக்கும் தெரியாமல் போயுள்ளது என தெரிவித்துள்ளார்.

“சாக்கு போக்கு சொல்லுவதை ஜனாதிபதி நிறுத்த வேண்டும்.” – ஐக்கிய மக்கள் சக்தி அறிவுரை !

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு 20% ஆல் குறைக்கப்பட்டுள்ளதாகவும்  2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 3% ஆல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் இது தொடர்பில் பேசிய அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது இது தொடர்பில் தெளிவான புரிதலை பெற்றுக்கொள்ள முடியும்.  வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் சித்தரிப்பதாக அமைந்துள்ளது.  உண்மையில் ஒதுக்கீடு கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் கோபமடைந்துள்ளனர். ஒரு கிளர்ச்சி ஏற்படும் போது, ​​எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதற்கு பதிலாக அரசாங்கம் தனது கொள்கைகளை திருத்திக்கொள்ள வேண்டும். பல்வேறு சாக்குப்போக்குகளைப் பயன்படுத்துவதைத் ஜனாதிபதி தவிர்க்க வேண்டும்..

அதற்கு பதிலாக மக்கள் செவிசாய்க்கவும், ஏனையவர்களின் குறைகளைக் காணக்கூடாது என்பதற்காக தனது கொள்கைகளை திருத்தவும் அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

 

“ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை.” – விஜயதாச ராஜபக்ச

“ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை.” நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(16.04.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார். ஜனாதிபதி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை.

இதன்போது ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன். தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன்.“ எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரட்டியதாக அவர் கூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மேலதிக பாதுகாப்பை கோரியுள்ளார்.

இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச  பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பான  கடிதத்தை கையளித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் உட்பட அரசாங்கத்தின் சில திட்டங்கள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்ததால் தான் ஜனாதிபதி மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது, இது போர்ட் சிட்டிக்குள் ஒரு தனி சீன காலனி அமைக்க வழிவகுக்கும் எனவும்  அரசாங்க தரப்பு உறுப்பினராக இதுபோன்ற ஊழல்களையோ அல்லது நாட்டின் சில பகுதிகளோ விற்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ள ஜனாதிபதி !

யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் “சுகாதாரத் தொண்டர்களை ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கலாம் எனும் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அங்கஜனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது போராட்டத்தைப் பல்வேறு இன்னல்கள், அசௌகரியங்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிரந்தர நியமனம் அற்ற சுகாதாரத் தொண்டர்கள் தொடர்பில் பல்வேறு உயர்தரப்பினருடன் கலந்துரையாடி வந்த யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் நேற்றைய தினம் (01.04.2021) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் கலந்துரையாடலில் ஜனாதிபதிக்கு, சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுபவர்களுடன் நிரந்தர நியமனம் தொடர்பில் எடுத்துரைத்து இந்தத் தொண்டர்களுக்கான தீர்வை தருமாறு கேட்டிருந்தார்.

இந்த விடயத்தை பற்றி கேட்டறிந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, புதிய அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வரும் “சுபீட்சத்தின் நோக்கு” செயற்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்க்கு அமைய சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதாக உறுதியளித்து ஜனாதிபதியின் செயலாளர் , கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவுக்கு இந்தப் பணிப்பை வழங்கினார்.

அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயையும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதனையும் சுகாதார தொண்டர்களின் சுகாதார உதவியாளர் நிரந்தர நியமனம் தொடர்பில் கூறினார்கள்.

இச்சமயம் இது தொடர்பில் தாம் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்து சுகாதார தொண்டர்களின் பிரதிநிதிகள் சிலரை கொழும்பில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்திப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்வதாக அமைச்சர் மற்றும் அங்கஜன் ஆகியோர் உறுதியளித்திருந்தனர்.

அதற்கிணங்க அந்தச் சந்திப்பு நடைபெற்று தற்போது ஜனதிபதியுடன் கலந்துரையாடி இந்த பிரச்சனைக்கான தீர்வும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.