நிதியியல் மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை உருவாக்கவும், நடைமுறையில் உள்ள சட்டங்களை மேலும் வலுப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக மூவரடங்கிய குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் நிதியியல் மோசடிகள் குறித்து பல்வேறு பரிந்துரைகளை ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியிருந்த ஐ நா நிதியியல் நடவடிக்கை செயலணி இவ்வாரத்தில் மீளாய்வு நடவடிக்கைகளுக்காக இலங்கை வரவுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் இந்த குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். உயர் நீதிமன்ற நீதியரசர் புவனக அலுவிஹாரே, பிரதி சொலிஸ்டர் ஜெனரல் அயேசா ஜீனசேன மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஷிரந்த ஹேராத் ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
நிதியியல் குற்றங்களை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை தடுத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நிதியியல் நடவடிக்கை செயலணி உருவாக்கப்பட்டிருந்தது.
இதன் கிளை இலங்கை மத்திய வங்கியில் நிதியியல் புலனாய்வு பிரிவாக செயல்படுகின்றது. நான்கு வருடத்திற்கு ஒருமுறை நிதியியல் நடவடிக்கை செயலணி குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று மதிப்பாய்வு நடவடிக்கைகளில் ஈடுப்படும். இதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் நிதி துறையில் பாரிய மாற்றங்கள் முன்னெடுக்க வேண்டியிருந்ததை நிதியியல் நடவடிக்கை செயலணி சுட்டிக்காட்டியது.
தற்போது நாட்டில் உள்ள பிரமிட் மற்றும் கிரிப்டோகரன்சி மோசடிகளின் போது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தாமத நிலை மற்றும் இவ்வகையான நவீன நிதியியல் குற்றங்களுக்கு எதிராக வலுவான சட்டங்கள் இன்மை போன்ற காரணிகளினால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் நிதியியல் நடவடிக்கை செயலணி இவ்வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு மீளாய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளமையினாலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய சட்டங்களை உருவாக்குவதற்காக மேற்படி விசேட குழுவை நியமித்துள்ளார்.
எவ்வாறாயினும் நிதியியல் மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் போன்ற விடயங்கள் குறித்து ஐ.நா செயலணி கேள்வியெழுப்பினால் அது உள்ள வங்கி கட்டமைப்பில் பாரியளவில் தாக்கம் செலுத்தலாம் என்று நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.