ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

வடக்கு மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்க இந்தியாவுடன் வலுசக்தித் துறை தொடர்பில் விசேட கவனம்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் 20 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற 31ஆவது அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் 2024 (AIPM 2024) இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க :

‘’இலங்கையில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவையும் இலங்கை மீதான உங்கள் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

கடினமான கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் இந்தியா வழங்கிய 3.5 பில்லியன் டொலர் கடன் உதவி, எமக்கு பலமாக அமைந்தது. அந்தப் பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மேலும், பங்களாதேஷ் எங்களுக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை நாங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள்  குழுவுடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்களின் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு, அடுத்த வாரம் கூடவுள்ளது. எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஆகிய தரப்பினரை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், சீனா மற்றும் சீனா எக்சிம் வங்கியுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.

அதன் பிறகு, எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும், சீனாவின் எக்சிம் வங்கியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளோம். அதன்படி, வரும் புதன் கிழமை உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவை (OCC) சந்திப்போம். அடுத்த வாரம் அல்லது அதற்குள், ஒரு நாடாக நாம் வங்குரோத்துநி லையிலிருந்து விடுபட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால் இத்துடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது. நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார சரிவைத் தவிர்க்க வேண்டுமாயின், புதிய பொருளாதார பொறிமுறைக்கு நாம் துரிதமாக மாற வேண்டும். அது ஒரு போட்டிமிக்க, டிஜிட்டல் ஏற்றுமதி சார்ந்த பசுமைப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். அது நமக்குள்ள இரண்டாவது பொறுப்பு. எனவே, இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை சட்டப்பூர்வமாக்க புதிய அணுகுமுறைக்குச் செல்ல முடிவு செய்தோம்.

மேலும், வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி வருமானம் மற்றும் பல பரிமாண வறுமையைக் குறைப்பதற்கான அளவுகோல்கள் அமைக்கப்பட வேண்டும். இப்பிராந்தியத்தில் அவ்வாறு செய்யும் முதல் நாடு இலங்கை என்று நான் நம்புகிறேன்.

ஒரு அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தவுடன், அடுத்து வரும் அரசாங்கம் நிச்சயமாக அந்தக் கொள்கையை மாற்றியமைக்கின்றது. அப்போது நாம் ஒரு நாடாக முன்னேற முடியாது. நாங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பொருளாதார மாற்ற சட்ட மூலம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

நாங்கள் தயாரித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மேலதிகமாக, முதலீட்டு சபையின் செயல்பாடுகளுடன் முழுமையான முதலீட்டு செயல்முறையையும் நிர்வகிக்கும் பொருளாதார ஆணைக்குழு போன்ற புதிய நிறுவனங்களும் இந்த சட்டத்தின் மூலம் நிறுவ எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டு வலயங்களை முகாமைத்துவம் செய்ய ஒரு தனியான முகவர் நிறுவனம், நமது சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்த சர்வதேச வர்த்தக அலுவலகம், உற்பத்தித் திறன் மேம்பாட்டை உறுதி செய்ய தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு மற்றும் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான நிறுவனம் ஆகியவை இதில் அடங்கும்.

இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் இது தொடர்பாக மேலும் கலந்துரையாட இலங்கைக்கு வருகை தந்தார்.

எதிர்கால அபிவிருத்தி இலக்கை அடைய, இலங்கை இந்தியாவுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்க்கிறது. அதன்போது பல விசேட அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் முதலாவது  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின்சார விநியோக வலையமைப்புகளை ஒன்றோடொன்று இணைப்பதாகும். அப்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நிலைபேறான வலுசக்தியைக் கடத்தும் திறன் உருவாகும். அதன் மூலம் புதிய வருமானத்தைப் பெற முடியும். மேலும், இந்த ஜூலை மாதம் சாம்பூரில் சூரிய சக்தி திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.

இந்தத் திட்டம் எங்கள் வலுசக்திக் கூட்டாண்மைக்கு அடிப்படையாக அமைவதோடு, மேலும் காற்றாலை மற்றும் சூரிய சக்திக்கான பாக்கு நீரிணையை அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்பார்க்கின்றோம். இரு நாடுகளும் ஒன்றிணைந்து சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான பாரிய அளவிலான மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்கு மேலதிகமாக, யாழ் குடாநாட்டின் பிரதான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடலில் முன்னுரிமை வழங்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் பலாலி விமான நிலையம் மற்றும் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை, இந்தியாவின் அமுல் பால் நிறுவனத்துடன் இணைந்து, இந்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைமார்க்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் நாம்  விரிவாகக் கலந்துரையாடினோம்.

திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தில் கைத்தொழில்களுக்கான முதலீட்டு வலயங்களும் உள்ளடங்கும். அதேபோன்று சுற்றுலாப் வலயத்தையும் கொண்டுள்ளது. மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான இறுதி கண்காணிப்பு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

மேலும், திருகோணமலையை எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக மாற்ற எதிர்பார்ப்பதுடன், துறைமுகங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை நிர்மாணிப்பதன் மூலம் திருகோணமலை துறைமுகம் வங்காள விரிகுடாவில் ஒரு பிரதான துறைமுகமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, முழு கிழக்கு கடற்கரையும் சுற்றுலாத்துறைக்காக திறக்கப்பட்டுள்ளது. காலி மற்றும் தெற்கு பிரதேசங்களில் ஹோட்டல்களுக்கு மேலதிக காணிகள் வழங்கப்படுகின்றன. நாட்டில் புதிய முதலீட்டு வலயங்கள் திறக்கப்படும். எமது தொழிற் பயிற்சித் திட்டமும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே, இந்தத் திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் – லக்ஷ்மன் கிரியெல்ல

”நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில் உள்ளதாகவே தெரிகின்றது” என எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில் உள்ளதாகவே தெரிகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருபுறம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றார். மறுபுறம் முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.

நாம் இது தொடர்பாக சிந்தித்தே பல விடயங்களை வினவுகின்றோம். தனியார் மயமாக்கல் மறுசீரமைப்பு போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதனை புதிய அரசாங்கம் இடைநிறுத்த வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கோரியிருந்தார். அந்த பணிகள் புதிய அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மின்சார சபை மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் அவை கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது” இவ்வாறு லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி செய்ய ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புத்தரின் போதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை இவ்வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்தபோதிலும், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படாததால், அடுத்த வருடம் வரை அந்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய சட்டங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்தகட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மொரட்டுவை பௌத்த மன்ற மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்ற மொரட்டுவை இலங்கை பௌத்த சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

1924ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி ஆர்தர் வி.தியெஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மொரட்டுவை இலங்கை பௌத்த சங்கத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மொரட்டுவை பௌத்த மண்டபத்துக்கு 1925ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டது.

இந்தக் கட்டடம் 1929 ஜூன் 24ஆம் திகதி மொரட்டுவை பௌத்தர்களின் பௌத்த தலைமையகமாக, அதை அப்போதைய இலங்கை ஆளுநர் ஹெர்பர்ட் ஜே. ஸ்டென்லி திறந்துவைத்தார். மொரட்டுவை மகா வித்தியாலயத்துக்கான அடிக்கல்லும் அன்றைய தினம் நடப்பட்டது.

நூறு வருடங்களைப் பூர்த்தி செய்யும் மொரட்டுவை பௌத்த மண்டபத்தின் திருத்தப் பணிகள் அரசாங்க செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் மொரட்டுவை பௌத்த விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். மொரட்டுவை பௌத்த சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வளாகத்தில் சந்தன மரக்கன்றை நடும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

மொரட்டுவை பௌத்த சங்கத்தின் உப தலைவர் தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நூற்றாண்டு நினைவுப் பதிப்பை வழங்கிவைத்தார்.

மொரட்டுவை பௌத்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் ரஞ்சித் கமநாயக்க, உப தலைவர்களான பிரதீப் ஸ்ரீயந்த பெர்னாண்டோ, தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, காமினி பெரேரா, பிரதேச செயலாளர் கீர்த்தி பெரேரா ஆகியோர் ஜனாதிபதிக்கு நினைவுப்பரிசை வழங்கினர்.

அதன் பின்னர் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் மொரட்டுவை முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

மொரட்டுவை மகா வித்தியாலயத்தின் டபிள்யூ.ஏ. இமாஷ சாவிந்திர ஆஷிங்ஷன என்ற மாணவனால் வரையப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படத்துடன் கூடிய மொரட்டுவை பௌத்த மண்டபத்தின் படமும் இங்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:

”இன்று முழு உலகமும் காலநிலை மாற்றத்தால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. இந்நாட்களில் நாம் எதிர்கொள்ளும் கடுமையான சூரிய வெப்பம் நாம் இதுவரை சந்திக்காத ஒரு சூழ்நிலை. இந்தக் காலநிலை வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டிய கடினமான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இத்துடன், கடும் நீர் பிரச்சினையையும் சந்திக்க வேண்டியுள்ளது. பௌத்த தர்மத்தின்படி இந்த சிக்கலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் முக்கிய பிரச்சினையாக காலநிலை மாற்றத்தால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மாறும். புத்தரின் போதனைகளின்படி பார்த்தால், நாகரிகத்தின் மீதான பேராசையின் காரணமாகவே நாம் இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேகமாக முன்னேற விரும்பினர். வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதன்படி மனித சமுதாயம் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்துள்ளது. எனவே, காலநிலை மாற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதில் நாம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் உலகம் இன்று விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. குறிப்பாக 1945இல் அணுகுண்டு வெடித்தபோது, இனி தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பாடசாலையில் படிக்கும்போது கணினி, கையடக்கத் தொலைபேசி எதுவும் இருக்கவில்லை. ஆனால் தற்போது, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று செயற்கை நுண்ணறிவு வரை சென்றுள்ளோம்.

இப்போது இருப்பது செயற்கை நுண்ணறிவின் ஆரம்பமாகும். அடுத்த இரண்டு தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவு எங்கே செல்லும் என்ற கேள்வியை நாம் எதிர்கொள்கிறோம். செயற்கை நுண்ணறிவுக்கும் புத்த மதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நம் மனதால் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே புத்தரின் போதனைகள் சுட்டிக்காட்டுகிறது. மனதைக் கட்டுப்படுத்தினால் முன்னேறலாம். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. மனதைக் கட்டுப்படுத்துவது மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் புத்தரின் போதனைகள் மனித குலத்திற்காக செய்யப்பட்டது. மனதைக் கட்டுப்படுத்தினால் பேராசையை ஒழிக்க முடியும். இந்த மனித மனதிற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு தற்போது வந்துவிட்டது. செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு தகவல்களை இணைக்க முடியும். செயற்கை நுண்ணறிவு அதற்கேற்ப செயல்படுகிறது. அப்படியானால், புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு வேறு மதத்தைப் போதிக்குமானால் அது பௌத்தத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே, நாம் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர காலத்தில் பௌத்தம் இலங்கைக்கு வந்ததுடன், அதன் பின்னர் பௌத்தம் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்தது. இந்து மதம், மஹாயான தர்மம் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் அதில் தாக்கம் செலுத்தியுள்ளன. இக்காலத்தில் செயற்கை நுண்ணறிவும் அதில் இணைகிறது.

அப்படியானால் செயற்கை நுண்ணறிவு வேறு ஒரு தர்மத்தைப் போதிக்குமா என்று சிந்திக்க வேண்டும். மக்கள் தங்கள் கையில் இருக்கும் கைபேசியுடன் தர்மத்தை இணைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும். இது பௌத்தம் மட்டுமன்றி ஏனைய மதத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக மாறியுள்ளது.

எனவே, செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்தவும் புதிய சட்டவிதிகளை நாம் கொண்டு வருகிறோம். தொழில்நுட்ப மேம்பாட்டு சட்ட வரைவை தொழில்நுட்ப அமைச்சு தயாரித்துள்ளதுடன், அதன் கீழ் செயற்கை நுண்ணறிவு மையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. நாமும் அதையே செய்ய வேண்டும்.

மேலும், புத்தரின் போதனைக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சியைத் தொடங்க அடுத்த ஆண்டு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதை இந்த ஆண்டு நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டாலும், செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இன்னும் நிறைவேற்றப்படாததால், அடுத்த ஆண்டுக்கு அது ஒத்திவைக்கப்பட்டது. அதற்கேற்ப புதிய சட்டங்களை முன்வைத்து அந்த செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மொரட்டுவெல்ல தம்ம நிகேதன சர்வதேச பௌத்த நிலையத்தின் தலைவர் அமரபுர கல்யாணிவங்சிக ஸ்ரீ சத்தம்ம யுக்திக நிகாயவின் மகாநாயக்க வண. மாகால்லே நாகித தேரர், பாணந்துறை சங்க சபையின் நீதித்துறை சங்க நாயக்க கொரலவெல்ல வாழுகாராம மகா விஹாராதிபதி வண. நெகின்னே ஆரியஞான தேரர், மொரட்டுவ ஒழுக்காற்று அதிகார சபையின் தலைவர், மொரட்டுவ, இந்திபெத்த ஸ்ரீ சுதர்ம ரத்னாராம விகாராதிபதி வண. கம்பளை சுகுணதஜ தேரர், மொரட்டுவ ஹொரேதுடுவ புரான சங்கிகாரமயவின் விகாராதிபதி, அங்குலானே ஞானவிமல பௌத்த நிலையத்தின் தலைவர் வண. உடுகம விமலகித்தி தேரர் உட்பட மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத்தலைவர்கள், மொரட்டுவ இலங்கை பௌத்த சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாட்டினை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வெலிமடை அம்பகஸ்தோவ பொது விளையாட்டரங்கில் இன்று (21) இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி நிவாரணம் வழங்கும் 2024 தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், முழு நாட்டையும் உள்ளடக்கிய குறைந்த வருமானம் பெறும் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் பத்து கிலோ அரிசி வழங்கப்படும்.

பதுளை மாவட்டத்தின் பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 191,548 பயனாளி குடும்பங்கள் அரிசி மானியம் பெறத் தகுதி பெற்றுள்ளன. ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வின் அடையாளமாக இன்று 25 பயனாளிகளுக்கு ஜனாதிபதியின் கைகளால் அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“இன்று இந்நாட்டு மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் புத்தாண்டை கொண்டாடுவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழ்நிலையில் நாடு இருந்தது. கடந்த காலங்களில் தேவையான எரிபொருள், எரிவாயு, உரம் போன்றவற்றை வழங்க முடியாமல் மிகவும் கடினமான சூழலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

நான் 2022 தமிழ், சிங்கள புத்தாண்டை கம்புருகமுவ பிரதேசத்தில் கழித்தேன். அங்குள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக மக்கள் இரவு வரை காத்திருப்பதைக் கண்டேன். ஆட்சியாளர்களை மக்கள் கடுமையாக குற்றம் சாட்டினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து இன்று நாடு அடைந்திருக்கும் முன்னேற்றத்தை சிலருக்கு நினைத்துக்கூட பார்ப்பது கடினமாக உள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அந்த முடிவுகள் மக்கள் விரும்பாத முடிவுகள் என்றே சொல்ல வேண்டும்.

முன்னர் இந்த நாட்டின் அரசாங்கங்கள் ஒரு கட்சிக்கு உரிதானதாகவே இருந்தன. இது தவிர இரண்டு அல்லது மூன்று கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும். ஆனால் இந்த அரசு அப்படியானதல்ல. ஐக்கிய தேசியக் கட்சியில் நான் மட்டுமே இருந்தேன். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி என அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்தனர். அந்த அரசாங்கம் நாட்டின் தேவைக்காகவே உருவாக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சிலர் கூறினர்.

எப்படியிருந்தாலும், நாட்டு நலனுக்கான நோக்கங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினோம். அதற்காக பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆளுநர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பெரும் சேவை செய்துள்ளனர். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டதால்தான் இன்று இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று, சுற்றுலா வணிகம் எதிர்பாராத வகையில் வளர்ச்சியடைந்து வருகிறது. அதன் மூலம் மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. மேலும், கிராமப்புற பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். அந்த பணம் இன்று அரச மற்றும் தனியார் துறைகளில் சம்பள உயர்வு மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி நாம் அனைவரும் கடினமான காலங்களில் கஷ்டப்பட்டோம். இன்று நாடு அபிவிருத்தியடைந்து வருகின்ற போதிலும் ஒரு பிரிவினர் இன்னமும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி , தொழிற்துறை வீழ்ச்சி, வேலை இழப்பு போன்ற காரணங்களால் இன்னும் பலர் சிரமத்தில் உள்ளனர்.

நாட்டின் வளர்ச்சியின் பயனை அனைவரும் பெற வேண்டும். எனவே, அஸ்வெசும திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பலனை மூன்று மடங்காக உயர்த்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அத்துடன் தமிழ், சிங்கள, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தலா 10 கிலோ அரிசியை இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த அரிசியை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து வாங்கவில்லை. சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து. இவற்றை வாங்கும் போது சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். அப்போது அந்த சிறு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் கட்டியெழுப்புவதில் யாரையும் கடந்து செல்வதற்கோ அல்லது விட்டு விடவோ நாம் தயாரில்லை. எனவே, நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று, சுற்றுலாத்துறை மூலம் கிராமங்களுக்கு பணம் கிடைக்கிறது. மேலும், விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. வலுவான ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று சொல்ல வேண்டும்.

மேலும், பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 இலட்சம் பேருக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பில் உள்ள 50,000 குடியிருப்புகளின் உரிமையை அந்த மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேளையில் நாம் அரசியல் ரீதியாக பிளவுபடக்கூடாது. நாம் பிரிந்திருந்தால் இன்று நாட்டில் இந்த முன்னேற்றத்தை காண முடியாது. கட்சி அரசியலை மறந்து முன்னேற வேண்டும். அத்துடன், இந்த ஊவா பிரதேசத்தின் அபிவிருத்திக்காக சில பாரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இன்று வழங்கப்படும் இருபது கிலோ அரிசியின் பலன் இந்த மக்களுக்கு மிகவும் பெறுமதியானது. ஆனால் இந்த பலன்களை நீண்ட கால அடிப்படையில் மக்களுக்கு வழங்கக்கூடாது. ஜனாதிபதியின் பொருளாதாரத் திட்டத்தின்படி, மக்கள் மீண்டும் எழுந்து நிற்பதற்கு அதிக காலம் எடுக்காது.

மக்களின் கைகளுக்கு அதிக வருமானத்தை கொண்டு வரும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி தற்போது செயற்பட்டு வருகின்றார். அதனை உலகில் யதார்த்தமாக்கி வருகிறார்.

இதன் விளைவாக, இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வங்குரோத்தடைந்த நாட்டை மீட்டெடுக்க முடிந்தது. மேலும், மக்களின் சிரமமான வாழ்க்கைச் சூழலிலிருந்து காப்பாற்ற 15,000 ரூபாய் “அஸ்வெசும” மூலம் வழங்கப்பட்டது. மேலும், மக்களுக்குத் தேவையான காணிகள் “உறுமய” திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இவை வாய்ப்பேச்சிற்கு வழங்கிய வாக்குறுதிகள் அல்ல. கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி விதைத்த யதார்த்தம் இதுதான்.” என்று தெரிவித்தார்.

நாட்டை விரைவான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு இளைஞர்கள் கோரும் மாற்றத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டை விரைவான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு இளைஞர்கள் கோரும் மாற்றத்தை வழங்கி நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

புதிய பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பான அடிப்படை சட்டங்கள் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஜூன் மாதம் நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற “என்னில் இருந்து ஆரம்பிப்போம்” கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

 

“நாட்டை விரைவான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாவிட்டால், நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைப்பதா, முன்னோக்கி கொண்டு செல்வதா அல்லது வீழ்ச்சியடைய வைப்பதா என்பதை இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

 

இன்றைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் நிராகரிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். அனைவருக்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நிதி திறன் இல்லை. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும்.

 

நாட்டின் தற்போதைய பொருளாதார வேலைத் திட்டம் குறித்து இளைஞர்கள் திருப்தி அடையவில்லை. மாற்றத்தை கோருகிறார்கள். அந்த மாற்றத்தை வழங்குவதற்காக நாட்டில் புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அதற்குத் தேவையான அடிப்படை சட்டங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் மாதம் நிறைவேற்றப்படும். பொருளாதாரத்தை மாற்ற, நாட்டின் சட்ட முறைமையும் மாற வேண்டும்.

 

நாட்டை விரைவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதற்கு அனைத்து அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் ஒத்துழைப்பும் தேவை. அவ்வாறு செய்ய முடியாவிட்டால், நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்ற வேண்டும்.

மேலும், கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது. ஒவ்வொரு வளர்ந்த நாடும் கிராமப்புற விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. எனவேதான் நவீன விவசாயத்தை கிராமத்துக்கு கொண்டு செல்ல விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். அப்படியானால், இளைஞர்களாகிய நீங்கள் மாற்றத்துடன் முன்னேறுவதா அல்லது ஒரே இடத்தில் தேக்க நிலையில் இருப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

 

1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பொறுப்பேற்றபோது, இளைஞர்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தெரிவித்தார். “நீங்கள் செய்யத் தயாராக இருந்தால், தேவையான வழிகாட்டுதலைத் தருகிறேன்” என்றார்.

 

 

 

அதன்படி இளைஞர்களான நாம் தேர்தலில் போட்டியிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றோம். அதன் பின்னர் அவர் மகாவலி வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். 30 வருடங்கள் என்று கூறப்பட்ட மகாவலி வேலைத்திட்டம் 10 வருடங்களில் நிறைவு பெற்றது.

 

மேலும் நாட்டுக்குத் தேவையான மின்சாரம் வழங்கப்பட்டது. ஜே.ஆர் ஜயவர்தனவின் காலத்தில் இரண்டு வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற ஜனாதிபதி ஆர். பிரேமதாச நாடு முழுவதும் 200 ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்து கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தினார்.

 

 

 

நாம் அன்று இளைஞர்களாக இந்தத் திட்டங்களைக் கோரினோம். இளைஞர்களாகிய நீங்கள் இன்று அதற்குத் தயாரானால் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்வோம். புதிய பொருளாதாரத்தை உருவாக்கத் தேவையான சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 

பொருளாதார மறுசீரமைப்புச் சட்ட மூலத்தைக் கொண்டு வந்து அந்தத் திட்டத்தைத் தொடங்குவோம். மேலும், அரசாங்கத்தின் நிதியை நிர்வாகம் செய்ய புதிய நிதி சட்டமூலத்தை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

 

இன்று நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பெண்களாக இருந்தாலும், தொழில் செய்யும் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. எனவே, பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இரண்டு புதிய சட்ட மூலங்களைக் கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

 

அதன் மூலம் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம். அந்த மாற்றத்திற்காக எங்களுடன் இணைய உங்களை அழைக்கிறேன்.

 

பொய் சொல்லி உங்களை ஏமாற்ற எந்த தரப்பினருக்கும் நான் இடமளிக்க மாட்டேன். உங்கள் பிரச்சினைகள் எனக்குப் புரிகிறது. அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவே இந்தப் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இளைஞர்கள் எழுப்பிய சில கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி அளித்த பதில்களும் பின்வருமாறு:

 

 

 

 

கேள்வி: ஜனாதிபதி அவர்களே, நாட்டில் பல்வேறு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. மேலும், அண்மையில் நிறுவப்பட்ட ஜனசபை ஒரு நல்ல திட்டமாகும். இப்போது ஜனசபை அமைப்பது மெதுவாகவே நடைபெறுகிறது.

 

பதில்:ஜனசபா ஒரு நல்ல திட்டம். இதுவரை, ஒரு சில சபைகள் பரீட்சார்த்த அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன. ஜனசபைகளை சட்டப்பூர்வமாக்குவதில் எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும். உறுப்பினர்கள் தெரிவு போன்ற பல சிக்கல்கள் உள்ளன. உள்ளூராட்சி மன்றங்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளைத் தீர்த்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்த வருடம் முடியாவிட்டால் அடுத்த வருடம் மீண்டும் ஜனசபையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.

 

 

கேள்வி:அஸ்வெசும நிவாரணங்களை வழங்குவதில் குறைபாடுகள் உள்ளன. அனைத்து ஏழை குடும்பங்களும் இதன்பயன் கிடைக்கவேண்டும்.

 

பதில்:அந்த குறைபாடுகளை போக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக இந்த நன்மையை வழங்குவதற்கு சில தகுதிகள் அவசியம். இந்த திட்டம் 2025இல் டிஜிட்டல்மயப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 இலட்சம் போருக்கு இந்த பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அனைத்து ஏழை மக்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக அஸ்வெசும திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

 

கேள்வி:இந்நாட்டில் வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்போது நல்ல நிலையில் உள்ளது. சுற்றுலாத்துறையின் பலன்களை சிறுதொழில் முயற்சியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான திட்டம் உள்ளதா?

 

பதில்:நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் மோசமான பொருளாதார நிலை காரணமாக, எமது சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்தது. ஆனால் தற்போது மீண்டும் நம் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

 

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த புதிய புத்துணர்ச்சி மூலம், சிறுதொழில் முனைவோருக்கு சலுகைகளை வழங்க திட்டமிட்டு வருகிறோம். மேலும், இந்த நாட்டில் சுற்றுலாத் துறையை விரைவான வளர்ச்சிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன்படி, ஒவ்வொரு மாகாணத்திலும் சுற்றுலாவை மேம்படுத்த ஒரு குழுவை நியமிக்க எதிர்பார்த்துள்ளோம்.

 

 

கேள்வி:தொழில் பயிற்சி நிறைவு செய்த இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. தொழிற்பயிற்சியை நிறைவு செய்யும் பயிற்சியாளர்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய விரும்புகிறேன்.

 

பதில்:பொருளாதார நெருக்கடியால் சிலர் வேலை இழந்துள்ளனர். தற்போது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வருகிறது. குறிப்பாக நாட்டில் முதலீட்டு வாய்ப்புகள் விரிவடைவதால், பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

அமைச்சர் மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, அனுராத ஜயரத்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச, ஐக்கிய லக்வனித முன்னணியின் தலைவி சாந்தினி கொங்கஹகே உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

கல்வியின் புதிய ஆயுதமாக நவீன தொழில்நுட்ப அறிவும் மாற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த 75 ஆண்டுகளில் நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

 

“கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையாமல் தடுக்க முடிந்துள்ளது. ஆனால் இது போதுமான நடவடிக்கை அல்ல.

 

இன்றும் 10 ஆண்டுகளுக்கு இந்த பயணத்தை நாம் தொடர வேண்டியுள்ளது. நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

 

 

நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் வேகமாக வளரும் சமுதாயத்தில் இணைந்து கொள்ளவேண்டும். அதற்காக உங்களை தயார்ப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

 

இன்றைய பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினிகள் மூலம் நவீன உலகத்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

இது கல்வியின் புதிய ஆயுதம். அதற்கு அறிவும் தொழில்நுட்பமும் தேவை. வேகமாக மாறிவரும் இந்த உலகில் அறிவை வளர்ப்பது மிகவும் அவசியம்.

 

உங்கள் அறிவைப் புதுப்பிக்காமல் உலகத்துடன் முன்னேற முடியாது. எனவே, அறிவைப் புதுப்பித்தல் கல்வியின் முக்கியப் பணியாகிறது.

 

 

இந்த நோக்கத்திற்காக, அரசாங்கம் இந்த நாட்டில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

நாட்டின் கல்வி முறையில் புதிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே அடுத்த 75 ஆண்டுகளில் இந்த நாடு முன்னேறும். அதைச் செய்யாமல் நீங்கள் முன்னேற முடியாது.

 

எவ்வளவுதான் பொருளாதாரத்தை பலப்படுத்தினாலும், உலகத்துடன் முன்னேறாவிடில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

“நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற சட்ட சீர்திருத்தம் தொடர்பாக  ‘வட்ஸ் நிவ்’ இளம் சட்டத்தரணிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஜே.ஆர். ஜெயவர்தன 1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியதைப் போன்று  நாட்டின் விரைவான பொருளாதார மாற்றத்திற்காக பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை மாற்றியமைத்து, அனைத்து அரச கூட்டுத்தாபனங்களையும்   நிறுவனங்களாக மாற்றி, அந்த அனைத்து நிறுவனங்களையும்  பிரதான கம்பனிகளுக்கு ஒப்படைப்பதற்கு  நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

பொது நிதி முகாமைத்துவச் சட்டம், பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டம், விவசாயச் நவீனமயமாக்கல் சட்டம் என்பவற்றைப் போன்றே இந்த அனைத்து இலக்குகளை அடையக்கூடிய பொருளாதார மாற்றச் சட்டம் கொண்டு வரப்படும். தற்போதுள்ள முதலீட்டுச் சபைக்குப் பதிலாக  முதலீட்டு ஆணைக்குழுவொன்று  உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதலீட்டுச் சபைக்குக் கீழுள்ள வர்த்தக வலயங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட வர்த்தக வலயங்கள் என்பன அதன் கீழ்  நிர்வகிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், தேசிய உற்பத்தி ஆணைக்குழு நிறுவப்படும். அத்தோடு சுற்றுலா தொடர்பான புதிய சட்டம், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், புதிய சுற்றுச்சூழல் சட்டம், சிங்கராஜா, சிவனொளிபாத மலை, ஹோட்டன் சமவெளி, வஸ்கமுவ வனப் பூங்கா என்பவற்றின் பாதுகாப்புக்காக புதிய சட்டங்கள் கொண்டுவர எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வர்த்தகத் திணைக்களம் நீக்கப்பட்டு, புதிய சர்வதேச வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டு, வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பணிகள் செயல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

1944ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டங்களே கல்வித்துறையிலும் அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கல்வித் துறையிலும் பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த புதிய சட்டங்கள் கொண்டு வருவதை சிலர் தடுக்க முயன்றாலும் பாராளுமன்றம் நிறைவேற்றிய பின்னர் அந்த சட்டங்களை யாராலும் ரத்து செய்யவோ அல்லது மறைமுகமாக செயல்படுத்தாதிருக்கவோ முடியாது. வியாக்கியானம் வழங்கும் போர்வையில் நாட்டின் சட்டங்களை மட்டுப்படுத்தி பாராளுமன்ற அதிகாரங்களை மட்டுப்படுத்த சிலர் முயன்றாலும் அவ்வாறு  எதுவும் செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் அதிகாரம்  பாராளுமன்றத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இல்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, ஜனாதிபதி என்ற வகையில் தமக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் பாராளுமன்றத்தால் அதனை நீக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் பாராளுமன்றத்தினால் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை நீக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாரேனும் இந்த சட்டங்களை மட்டுப்படுத்த விரும்பினால், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, சட்ட மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு முன்பாக பரிசீலிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆனால், இந்த சட்டங்களை நிறுத்தி, மக்களை இனியும் துன்புறுத்துவதற்கு இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இவற்றை மனித உரிமை மீறல்களாக காண்பிக்க சிலர் முயல்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, முதலாவது மனித உரிமை என்பது நாட்டு மக்களின் வாழ்வுரிமை என்றும், இரண்டாவது இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க:

”2021-2022இல் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த காரணிகளை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அதற்குக் காரணம், நாம் நீண்ட காலமாக கடனில் வாழ்ந்து வருவது தான். கடனை முகாமைத்துவம் செய்ய முடியாமல்,  நாடென்ற ரீதியில் வீழ்ச்சியடைந்தோம். வருமானம் இல்லாததால் கடனைச் செலுத்த முடியவில்லை. இந்த அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் வெளிப்பட்டது. ஆனால் அதற்கு முன்பிருந்தே  கடன் வாங்கத் தொடங்கியிருந்தோம். ஏனைய நாடுகளைப் போல் அல்லாமல், வர்த்தகம் செய்ய முடியாத பொருட்களுக்கு கடன் வாங்கினோம். ஏனெனில் நெடுஞ்சாலைகளுக்கு  மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட நிர்மாணத் துறையால் நாம் பயனடைய முடியாது. மகாவலித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது எங்களுக்கும் மின்சாரம் கிடைத்தது. அத்தோடு விவசாயத்துறையும் முன்னேறியது.

நாடு எதிர்கொள்ள நேரிட்ட இந்த நிலைக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த நிலைமையில் இருந்து, முன்நோக்கிச் செல்ல வேண்டும். இன்று கடனை அடைக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே கடனைத் திருப்பிச் செலுத்த 2026-2027 வரை கால அவகாசம் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதனுடன் இன்னும் பல விடயங்கள் உள்ளன.

2022 அரசாங்க வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3% ஆகும். 2023ல் அதை 10.9% ஆக உயர்த்தினோம். அதனால் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தி  அதிகரிக்கவில்லை. மறை 2% வீதத்தில் இருந்து இந்த ஆண்டு 13.1% ஆக  அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். அப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். 2028இற்குள், இது 15.2% ஆக உயரும். 8.3% இலிருந்து 15.2% ஆக அதிகரிப்பதென்பது சுமார் 175% அதிகரிப்பைக் குறிக்கிறது.

முதன்முறையாக, 2023இல் நமது முதன்மை பட்ஜெட் 6.7% உபரியைக் காண்பித்தது. நாம் அதை 2.3% ஆகக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் பட்ஜெட் பற்றாக்குறை 2022 இல் 10.2% ஆகும். 2028இற்குள் அதை 3.9% ஆக மாற்ற வேண்டும். இவை எளிதான பணிகள் அல்ல. இவைதான் எங்களுக்கு இருக்கும் சவால். எங்கள் கடன் 2022 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128% ஆகும். 2032இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95% ஆக  குறைக்க வேண்டும். 2022 இற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% கடன் வாங்கினோம். அதை 13 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

இந்த நிலைமையுடன் நாம் எவ்வாறு தொடர்ந்து முன்நோக்கி செல்ல முடியும்?   நாட்டின் பொருளாதாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் பொருளாதாரத்திலிருந்து ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டும்.  இறக்குமதி செய்ய நம்மிடம் அந்நியச் செலாவணி இல்லை. போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும். அதே நேரத்தில், டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

இந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதில், புதிய சட்டங்கள் அவசியம். ஐரோப்பிய வர்த்தக அமைப்பு  ஒல்லாந்து ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. ரோமன்-ஒல்லாந்து முறைமை  இன்றும் நமது சட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 1835 இல் வெள்ளையர்கள் பொருளாதாரத்தை திறந்து விட்டார்கள். பின்னர் அவர்கள் சட்டம் கொண்டு வந்தனர். 1970 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் சோசலிச கட்டுப்பாட்டு பொருளாதாரத்தை உருவாக்கியது. அதற்கும் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

1977 ஜே.ஆர். ஜெயவர்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினார். அதன்போதும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த புதிய பொருளாதார திட்டத்திற்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, கடந்த 14 மாதங்களில் 42 சட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவொரு சாதனையாகும்.   எஞ்சிய 62 சட்டங்களை எவ்வாறு முன்வைப்பது என்பதுதான் சட்டமா அதிபருக்கு இருக்கும் சவாலாகும். அதற்காக பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. இம்முறை நிறைவேற்ற முடியாததை அடுத்த பாராளுமன்றத்தில் முன்வைக்க நேரிடும். இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டால், அடுத்த சில ஆண்டுகளில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் புதிய சட்டக் கட்டமைப்பு உருவாகும்.

துறைமுக நகர சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும். கடல்சார் பொருளாதாரத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். ஒற்றைக் கரையோரப் பொருளாதாரம் உருவாக்கப்படும்போது இலங்கையின் சட்டத்தால் அந்தச் செயற்பாடுகளைச் செய்ய முடியாது. ஒற்றைப் பொருளாதார கட்டுப்பாட்டு எல்லையில் பிரித்தானிய  வணிகச் சட்டங்கள்  செயற்படுத்தப்படுகிறன.

இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த புதிய சட்டத்தரணிகள் குழுவொன்று இருக்க வேண்டும். உலகம் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். ஏனென்றால் உலகத்திற்கு நமது சட்டங்கள் தெரியாது. நாட்டை அபிவிருத்தி செய்ய, நாம் அந்த வழியைப் பின்பற்ற வேண்டும்.

மேலும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு நிறுவனங்களின் கட்டமைப்பை மாற்றி வருகிறோம். அனைத்து அரசுகூட்டுத்தாபனங்களும்  கம்பனிகளாக மாற்றப்படுகின்றன. அந்த நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் ஒரு பிரதான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

புதிய பொது நிதி மேலாண்மை சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும், பொதுக்கடன் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்படுகிறது. மேலும், விவசாய நவீனமயமாக்கல் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த இலக்குகளை அடைய பொருளாதார மாற்றம் சட்டம் கொண்டு வரப்படுகிறது. தற்போதைய முதலீட்டுச் சபைக்குப் பதிலாக பொருளாதாரக் குழுவை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. கம்பனிச் சட்டத்தில் பணிப்பாளர்களுக்கு உள்ள அதிகாரம் இவர்களுக்கும் கிடைக்கும். மேலும் அரச -தனியார் கூட்டுமுயற்சி தொடர்பிலும் சட்டம் கொண்டுவரப்படும்.

மேலும், முதலீட்டு சபையின் கீழ் உள்ள வர்த்தக வலயங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் வர்த்தக வலயங்கள் இதன் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

மேலும் தேசிய  உற்பத்தி ஆணைக்குழுவொன்று  உருவாக்கப்படும். நமது தயாரிப்புகளை அதிகரிக்காவிட்டால், உலகத்துடன் போட்டியிட முடியாது. மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனம் நிறுவப்பட்டது. இவை தனித்தனி வரைவுகளாக அளிக்கப்பட்டால், உயர் நீதிமன்றம் அவ்வப்போது தாக்கல் செய்ய வேண்டும். இதை உடனடியாக உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சுற்றுலாத் துறையில் புதிய சட்டம் கொண்டு வருவதோடு, அரசு சொத்துக்களையும் ஒப்படைத்தல், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், புதிய சுற்றுச்சூழல் சட்டம், சிங்கராஜா, சிவனொளிபாத மலை, ஹோர்டன் சமவெளி, வஸ்கமுவ வனப் பூங்காக்களின் பாதுகாப்பிற்காக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். மேலும், வர்த்தகத் திணைக்களம் நீக்கப்பட்டு, புதிய சர்வதேச வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டு, வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பணிகள் செயல்படுத்தப்படும்.

மேலும், கல்வித்துறையில் சில புதிய சட்டங்களைக் கொண்டுவர உள்ளோம். தொழிற்கல்வியை ஒரு அதிகார சபையின் கீழ் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சுகாதாரத் துறையில் சீர்திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எங்களிடம் 1944 இல் கொண்டுவரப்பட்ட கல்விச் சட்டமே உள்ளது. அந்த நேரத்தில் நாங்கள் யாரும் பிறக்கவில்லை. எனவே, இந்த முறையை புதிய சட்டங்கள் மூலம் மாற்ற வேண்டும். நாம் ஒரு புதிய சமூகத்திற்கு, புதிய பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும். மீண்டும் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படாத, சிறந்த நாடாக இலங்கை மாற்றப்பட வேண்டும்.

எமது இந்தச் செயற்பாடுகளுக்கு ஏற்ப தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. சரிந்த நாட்டை ஓரிரு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள் உயர்த்த முடிந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள், நம் நாட்டின் வங்குரோத்து நிலை சட்டப்பூர்வமாக முடிவுக்கு வரும். ஆனால் வாங்கிய கடனை மீளச் செலுத்த வேண்டும். அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த வேண்டும்.

இதற்கான சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம். அந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பிறகு, உயர் நீதிமன்றத்துக்குச் சென்று,  அவற்றை ஆராய்ந்த பின்னர் நிறைவேற்ற வேண்டும்.இந்த சட்டத்தை சிலர் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். ஒரு சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அதை மீண்டும் ரத்து செய்ய முடியாது. அது தொடர்பில் செயல்படாமல் இருக்க முடியாது. சில சட்டத்தரணிகள் வியாக்கியானம் என்ற போர்வையில் நாட்டின் சட்டத்தை கட்டுப்படுத்தவும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். அவ்வாறு செய்ய முடியாது.

இந்த நாட்டின் பாராளுமன்றத்தின் அதிகாரம் 1972 இல் நிறுவப்பட்ட அரசியலமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதற்கு முன் பிரித்தானிய அரசியலமைப்பு இருந்தது. ரணசிங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல்   ஆணையாளர், லியனகேவுக்கு எதிரான ராணி போன்ற வழக்குகளின் பிரகாரம் அவற்றை மாற்ற முடியாது. அதன்படி, 1970இல்,  அரசியலமைப்புச் சபையொன்றை அறிமுகம் செய்து புதிய அரசியல் சாசனத்தைத் தயாரிப்பதற்கான ஆணையை அன்றைய அரசு பெற்றது. அந்தச் சட்டத்தின் ஊடாக மக்கள் இறைமையுள்ள தேசிய ராஜ்ய சபையினால்  பாராளுமன்றத்தை செயற்படுத்த கொல்வின் ஆர் டி சில்வா ஒப்புக்கொண்டார்.

அதன்படி, பாராளுமன்றத்திற்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தது. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்பாக இருந்தது. சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. அதன் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை 1977 இல் கொல்வின் ஆர். டி சில்வா அறிமுகப்படுத்தினார்.  ஆங்கிலேய சட்டத்தின் பிரகாரம் நாங்கள் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

1977 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியபோது அது மாறியது. அதன்படி, மக்களின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற விடயங்கள் மாற்றப்படவில்லை. மேலும், சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் பாராளுமன்றம் என்பன முன்னிலையில் இருந்தன. மேலும் அதில் அடிப்படை உரிமைகளும் இடம் பெற்றிருந்தன. இந்தப் பணியை பாராளுமன்றம் செய்ய வேண்டும்.

ஜனாதிபதி அமைச்சரவையை நியமிக்கும் போது, அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். அது மாறவில்லை. அதன்படி, இப்போது அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது.  அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் தான் பிரதான அதிகாரமும் சர்வஜன வாக்குரிமையும் தான் முதன்மையானவை. மற்ற அனைத்தும் இரண்டாம் நிலையில் உள்ளன. மேலும், ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு இன்று நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளன. பாராளுமன்றத்தினால் அதை ரத்து செய்யலாம். ஆனால் பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பாராளுமன்றத்தால் நீக்க முடியாது.

அன்று கொல்வின் ஆர். டி சில்வா பாராளுமன்றத்தில் சோசலிசத்தை கொண்டு வந்தார். ஜே.ஆர். ஜெயவர்தன திறந்த பொருளாதாரத்தை கொண்டு வந்தது போல் நாமும் இந்த பாதையில் முன்னேற முயற்சிக்கிறோம். கொல்வின் ஆர் டி சில்வா மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தனவும் ரோயல் கல்லூரியில் ஒரே வகுப்பில் கற்றவர்கள். அவர்கள் ஒரே மாதிரியாக சிந்தித்தார்கள். எனவே, பாராளுமன்றத்தின் இறையாண்மை எப்போதும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனவே இப்போது நாம் இங்கிலாந்து நீதிமன்றத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும். இவற்றை யாரேனும் கட்டுப்படுத்த முயன்றால், அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் நீதித்துறை அதிகாரங்களின் முன் இது குறித்து விசாரணை செய்யலாம். இவற்றை நிறுத்த முடியாது. மக்கள் மேலும் துன்பப்பட இடமளிக்க முடியாது.

இவற்றை மனித உரிமைகள் என்று யாராவது கூறினால், மக்களின் வாழ்வுரிமை தான்  முதல் மனித உரிமை. இரண்டாவது மனித உரிமை, பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதாகும். ஏனைய விடயங்கள் அதன் பின்னரே வருகின்றன. நீங்கள் விரும்பும் அரசியலை செய்யுங்கள். ஆனால் இந்த மாற்றம் நிகழ வேண்டும். இல்லையெனில் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. அதனால்தான் உங்கள் பங்களிப்பை நான் கேட்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், முன்னாள் சட்டமா அதிபர் திலக் மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி எராஜ் டி சில்வா, சட்டக்கல்லூரி அதிபர் கலாநிதி அதுல பத்திநாயக்க, ஜனாதிபதியின் இளைஞர் விவகாரம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பானபணிப்பாளர் ரந்துல அபேவீர ஆகியோரும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

“பணத்தை தங்கள் பாக்கெட்டுகளில் போடுவதற்காக வரி விலக்கு அளிக்கும் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.” -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பணம் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“பணத்தை தங்கள் பாக்கெட்டுகளில் போடுவதற்காக வரி விலக்கு அளிக்கும் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரத்தினக்கல் தொழிற்துறையை பாரியளவில் முன்னேற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம்.

 

ஏனைய நாடுகளிடம் எப்போதும் உதவி கேட்க முடியாது. நமக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். அதற்கு நாட்டின் பொருளாதாரம் தயார் படுத்தப்பட வேண்டும்.வாக்குறுதிகளை அளித்து இவற்றைச் செய்ய முடியாது.

 

அந்நியச் செலாவணியை ஈட்டும் புதிய பொருளாதாரம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். அது ஏற்றுமதி பொருளாதாரமாக இருக்க வேண்டும். மேலும், சுற்றுலாத்துறை மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது.

நாம் ஒரு நாடாக முன்னேறுவதாக இருந்தால், நமது முயற்சியின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும்.

யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும். ஆனால் பெறுபேறுகள் கிடைக்க வேண்டும்.

நாம் அனைவரும் நாட்டின் உண்மையான நிலைமையை புரிந்து கொண்டு முன்னேறினால் 02 வருடங்களின் பின்னர் இந்நிலையிலிருந்து விடுபட முடியும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“நாம் அனைவரும் ஒன்றுபடுவதே சேர்.பொன். அருணாச்சலத்திற்கு வழங்கும் உயரிய கௌரவமாகும்.” –

சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் இலங்கையர் எனும் எண்ணக்கருவை இலங்கையர்களின் தேவைகள் என்ற வகையில் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற சேர்.பொன். அருணாச்சலத்தின் நினைவுதின நூற்றாண்டு நிகழ்விலேயே அவர் இதனைக் தெவித்தார்.

இந்த நிகழ்வின்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

சேர்.பொன்.அருணாச்சலம் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று அல்லாமல் இலங்கையர் என்ற எண்ணக்கரு தொடர்பாக அதிக நம்பிக்கை கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தார். அந்த கொள்கையை பின்பற்றிய டீ.எஸ்.சேனநாயக்க அனைத்து இனத்தவரையும்,  மதத்தவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையர்களின் தேவைகள் என்ற வேலைத்திட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் யுத்தம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் 2025 இற்குள் தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் சரிவடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பயணத்தை ஆரம்பித்திருக்கும் தேசம் என்ற வகையில், அனைவரும் ஒன்றுபடுவதே சேர்.பொன். அருணாச்சலத்திற்கு வழங்கும் உயரிய கௌரவமாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் எனவும் அதன் கீழ் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நேற்று (06) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தொடர்பில் இளைஞர் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறை, கல்வித்துறை சார்ந்த இளைஞர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 300 பேர் இதில் கலந்துகொண்டதுடன், அவர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில்களை வழங்கினார்.

மேலும், இதன்போது வட மாகாணத்தை தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரச அதிகாரிகள் மற்றும் இளைஞர்களும் தங்களின் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் காணப்படும்  குறைபாடுகள், பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவது தொடர்பிலான பரிந்துரையொன்றும் இதன்போது யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ். மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் உள்ளிட்டவர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா, முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் மற்றும் கல்விசார் ஊழியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர், யாழ்ப்பாணம் ரியோ ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஐஸ்கிரீம் சுவைக்கவும் மறக்கவில்லை.

‘meet and greet’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம், திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் திறமை செலுத்தியோர்  கலந்துகொண்டதோடு அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.