அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது தாக்குதலை தொடங்கியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து சின்னாபின்னமாகிவிட்டன.
இந்த சண்டையில் சுமார் 2 லட்சம் வீரர்களும், 42 ஆயிரம் பொதுமக்களும் உயிர் இழந்துவிட்டனர். 57 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். பலம் வாய்ந்த ரஷியாவிடம் உக்ரைன் சில நாட்களில் வீழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் அதி நவீன ஆயுத உதவிகள் செய்ததால் ரஷியாவை எதிர்த்து உக்ரைன் ஆக்ரோஷத்துடன் போரிட்டு வருகிறது.
இதனால் இந்த போர் மாதக்கணக்காக நீடித்து இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. போர் தொடங்கி இன்று 366-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் அமைதி நிலைக்க ரஷியா போரை நிறுத்துவது தொடர்பாக 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.சபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் உக்ரைன் மீதான போரை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உக்ரைனை விட்டு ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
ரஷியாவுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்து 141 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன. ஆனால் இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகள் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. 141 நாடுகள் ஆதரவு கொடுத்ததால் ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நடந்த விவாதத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷியாவை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ரஷிய பாதுகாப்பு துறை மந்திரி கெர்கய் குற்றம் சாட்டினார்.