ஜி.எல்.பீரிஸ்

ஜி.எல்.பீரிஸ்

“எந்த நாட்டுக்கும் நாம் அடிபணியோம்.” – ஜி.எல்.பீரிஸ்

“எந்த நாடும் எம்மை அச்சுறுத்த முடியாது. அதேபோல் எந்த நாட்டுக்கும் நாம் அடிபணியவும் மாட்டோம்.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் பல சர்வதேச நாடுகளின் தலைவர்களையும், அந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் தனித்தனியாகச் சந்தித்தோம். இதன்போது எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கையைத் தெளிவுபடுத்தியுள்ளோம். வெளிநாடுகளைப் பகைத்துக்கொண்டு செயற்படும் நோக்கம் எமது அரசுக்கு இல்லை. எதிரணியினர் கூறுவது போல் வெளிநாட்டுக் கொள்கையை நாம் இலங்கைக்கு எதிராக மாற்றியமைக்கவில்லை. அவர்கள் கூறுவதுபோல் நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்க்கும் நோக்கமும் எமக்கு இல்லை.

சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கவே இலங்கை அரசு விரும்புகின்றது. இலங்கையின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாடுகளுடன் உறவை வளர்ப்போம். எந்த நாடும் எம்மை அச்சுறுத்த முடியாது. அதேபோல் எந்த நாட்டுக்கும் நாம் அடிபணியவும் மாட்டோம்.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகள் தொடர்பில் எமது அரசின் நிலைப்பாட்டை ஜெனிவாக் கூட்ட அமர்வில் தெரிவித்துவிட்டோம். வெளியகப் பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்” என்றார்.

“இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” – ஜி.எல்.பீரிஸ்

“இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

இலங்கை மீதான மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சர்வதேச பொறிமுறைக்கமைய விசாரணை செய்வதற்கும், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இலங்கை மீதான மனித உரிமை மீறல் பிரச்சினைகளை உள்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எமது நாட்டு கலாசாரத்திற்கமைய யதார்த்த தீர்வுகளைப் பெறுவதற்கு கடமைபட்டிருக்கின்றோம். அந்தக் கடமைகள் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளுக்கு கையளிக்க நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம்.

வெளிநாட்டுப் பொறிமுறை என்பது எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதுடன், எமது நாட்டின் அரசியல் கட்டமைப்பிற்கும் எதிரானதாகும். அதேபோல ஐ.நாவின் சட்டம், சம்பிரதாயங்களுக்கமைய, சிறியதோ பெரியதோ என்ற வித்தியாசமின்றி அனைத்து நாடுகளையும் சமமாகப் பார்க்க வேண்டும்.

ஆகவே இலங்கையை விசேட இலக்காக நிர்ணயிக்கப்பட்டு எமது நாட்டிற்கு மாத்திரம் வரையறுக்கப்படுகின்ற பொறிமுறையை உருவாக்கி, சாட்சியங்களைத் திரட்டி, அடிப்படை ஒன்றை உருவாக்குவதற்கும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பாக இலங்கையை கொண்டுசெல்வதே சர்வதேச பொறிமுறையின் நோக்கம். எனினும் எமது நாட்டிற்கு எதிரான சாட்சிகள் அனைத்தும் முறையற்றே சேகரிக்கப்படுகின்றன.

இந்த சாட்சியங்களை யார் வழங்குகின்றார்கள்? அவர்களது அடையாளம் என்ன? உண்மையிலேயே தகவல்களை அளிக்கின்றார்களா? குறுக்குக் கேள்வி கேட்பதற்கும் உரிமையில்லை என்பதால் இயற்கைக்கு விரோதமான இந்த செயற்பாடுகளை ஏற்கமாட்டோம். இந்த உலகில் மிகப்பெரிய பிரச்சினைகள் இலங்கை காரணமாகவே ஏற்படுகின்றன என்பதை தெரிவிக்க முடியுமா?

கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் தடுப்பூசியை பெற பணம் இல்லாமல் திண்டாடுகின்ற நிலையில், சிறிலங்கா மீது விசாரணை நடத்த பாரிய நிதியை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒதுக்கீடு செய்வது எந்த விதத்தில் நியாயம்..? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“வெளிநாட்டு பேரவைகள் இலங்கையின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை.” – கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

“வெளிநாட்டு பேரவைகள் இலங்கையின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை.” என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு இதனை தெரிவித்துள்ள அமைச்சர் பொதுமக்கள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளங்கிக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
சட்டங்களை உருவாக்குவது அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது முப்படையினரினதும் நியமனங்களை மேற்கொள்வது போன்றவற்றை முன்னெடுப்பதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையும் ஆணையாளரும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு அனுமதிக்கவேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் நாடாளுமன்றத்தின் பங்களிப்பு என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என மனித உரிமை கருதுகின்றது,என தெரிவித்துள்ள அமைச்சர் 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து முப்படையினரையும் கைதுசெய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான திட்டம் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பயன்படுத்தி சில நாடுகள் தங்கள் நிகழ்ச்சி நிரலை பூர்த்தி செய்ய முயல்வதற்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து விட்டு அனைத்து தரப்பினரும் ஒன்றுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரஜாவுரிமை தொடர்பான சட்டங்களை ராஜபக்ஷ குடும்பம் ஒரு போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்துடனேயே  மேற்கொண்டனர் ! – ஜி.எல்.பீரிஸ்

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சட்டங்களை ராஜபக்ஷ குடும்பம் ஒரு போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்துடனேயே  மேற்கொண்டனர் என  கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (24.08.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒருவருக்கு புதிய அரசியல் திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றம் செல்ல முடியுமா?  என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், நாம் முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும். ஏன் அதனை அதாவது இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு எதிராக இதனை செய்தார்கள் என்று! நாட்டின் நலனுக்காக இதனை செய்தார்களா.?  அரசியல் கலாசாரம் சட்டம் முதலானவற்றை சிந்தித்து பார்த்து இதனை செய்யவில்லை. உண்மையில் போலியான நடவடிக்கையே இது. ராஜபக்ஷ குடும்பம் ஒரு போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்துடனேயே இதனை மேற்கொண்டனர். தூரநோக்குடன் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் அல்ல. தனிப்பட்டவரை கேந்திரமாகக் கொண்டே இது கொண்டுவரப்பட்டது என்றார்.

புதிய திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம் தேசிய பட்டியலில் ஒருவர் விலகுவதன் மூலம் அந்த பட்டியல் ஊடாக பெஸில் ராஜபக்ஷ பாராளுமன்றம் செல்வாரா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் , அது அரசியல் தீர்மானம். அது உரிய நேரத்தில் தீர்மானிக்கப்படும். நாடு குறித்து சிந்தித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.

துணை பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித உத்தியோக பேச்சுவார்த்தையும் இல்லை அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பில் காணப்படும் நெருக்கடிகளை சீர்செய்வது இதன் நோக்கமாகும். அப்போதைய இந்தத் திருத்தத்தினால் நாட்டின் பாதுகாப்பு, ஜனநாயகம், பொருளாதாரம் என்பனவும் சீர்குலைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் நோக்குடன் கலப்பு தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.