ஜுலி சங்

ஜுலி சங்

இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் அமெரிக்க தூதுவர் – சரத்வீரசேகர விசனம் !

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன். என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

 

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது என்றும் கூறினார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.குழுவின் அனுமதியுடனேயே 3 முக்கிய பரிந்துரைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்தேன்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக பதவி வகிக்கிறார்.ஆனால் அவர் குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுகிறார்.குழுவில் முன்னிலையாகும் அரச அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறார்.

 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

 

அமெரிக்க தூதுவருக்கு சார்பாக செயற்படும் சந்திம வீரக்கொடி போன்றவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது.தேசிய பாதுகாப்பு தொடர்பில் அடிப்படை அறிவில்லாத சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக உள்ளதால் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே குழு உறுப்பினர் பதவியில் இருந்து அவரை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானிக்கிறது – ஜுலி சங்

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”குருந்தூர் மலை விவகாரத்தில், சட்ட பிரச்சனை, காணிப்பிரச்சனை, அரசியல் பிரச்சனை என மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

 

இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகின்றது என்பதனை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கிறோம்.

 

இச் சிக்கலுக்கு இலங்கை அரசாங்கம் மிக விரைவில் அமைதியான தீர்வை வழங்க வேண்டும். இல்லாவிடின் இது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும். அத்துடன் இப்பிரச்சனையை விரைந்து தீர்ப்பதற்கு, அமெரிக்காவும் அழுத்தங்களை பிரயோகிக்கும்” என ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச தரத்திற்கு முரணாக உள்ளது – அமெரிக்கா

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான விரிவான, பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்ததாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தரத்திற்கு, புறம்பாக முன்மொழியப்பட்ட, சட்டமூலத்தின் சில விடயதானங்கள் தொடர்பில், கவலை வெளியிட்டதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, பொது மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டிலும் விரிவான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற தங்களது ‘வலுவான விருப்பத்தை’ பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் சட்டம் இயற்றுபவர்கள் உட்பட அனைவரது கருத்துச் சுதந்திரம் அல்லது ஒன்றுகூடலை கட்டுப்படுத்தாமல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த கருவியாக, குறித்த சட்டமூலம் செயல்படுவதை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும் எனவும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழருக்கு தனியான அரசாங்கம் ஒன்றை பெற்றுக்கொடுக்க அமெரிக்கா முயற்சி – கோட்டபாய விரட்டப்பட்டதன் பின்னணி தொடர்பில் வாசுதேவ !

வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி இராஜ்ஜியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே அமெரிக்காவின் நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கே ஈடுபட்டுள்ளார். அத்துடன் காலிமுகத்திடல் போராட்டத்திற்கும் இவரே ஒத்துழைப்பு வழங்கினார். அத்துடன் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவை ஜுலி சங்கே பதவியிலிருந்து விரட்டினார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஜூலி சங் தலையிடுகின்றார். அவ்வாறு தலையிடுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதி முக்கியமானது அல்ல. சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை முன்வைக்கும். அந்த நிபந்தனைகளே இன்று நடைமுறைப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய கடனை மறுசீரமைக்கும் வியடத்திற்குள்ளும் நிபந்தனை விதிக்கும் பல காரணங்கள் உள்ளன. அந்த நிபந்தனைகள் மிகவும் மோசமானது என கூறப்படுகின்றது.

வேதனை அளிக்கும் எனவும் கூறப்படுகின்றது. அதேபோன்று அந்த நிபந்தனைகள் மக்களின் எதிர்ப்பிற்கு உள்ளாகும் எனவும் கூறப்படுகின்றது. அவ்வாறெனின் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு வேதனை அளிக்கும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால், பாரிய மக்கள் எதிர்ப்பை மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டும்.

 

அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இருக்கின்றார். இன்று அவர் கோர்பச்சோப் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கோர்பச்சோப் சிறந்த ஒருவர். அவர் கமியூனிஸ்ட் சித்தார்ந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ரஷ்யாவை உடைத்தார். தாராளவாதத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கும் கோர்பச்சோப் போன்ற ஒருவர் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஜுலி சங், சிறிலங்கா நிர்வாகம் குறித்து ஏன் அவர் தலையீடு செய்கின்றார்.

வடக்கு கிழக்கு பகுதிக்கு தனியான அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் இலங்கையில் கோர்பச்சோப் போன்ற ஒருவர் தேவை என கூறுகின்றார்.

வடக்கு கிழக்கிற்கு தனியான அரசாங்கம் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அவரின் பிரதான நோக்கமாக மாறியுள்ளது. இலங்கையின் உள்ளக ஆட்சி குறித்து அவருக்கு உரிமை உள்ளதா? இல்லை. இது அமெரிக்காவின் பலவந்தமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.” – ஜுலி சங்

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாக இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் நேற்று இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும்,

“இலங்கை அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் பொது மக்கள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டணி ப்ளின்கென்னை  சந்தித்திருந்தேன்.

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் நான் பெருமை கொள்வதாக, இராஜாங்க செயலாளரிடம் கூறியிருந்தேன். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், இரு தரப்புகளுக்கிடையே பகிரப்பட்ட மதிப்புகளை ஆராயவும், உறவுகளை பலப்படுத்தவும் ஆவலாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.