ஜோசப் ஸ்டாலின்

ஜோசப் ஸ்டாலின்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளது – ஜோசப் ஸ்டாலின் விசனம் !

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக, வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.
இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கிறது.
அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது அதிபராக நியமித்திருக்கின்றனர். அங்குள்ள அரசியல்வாதியான பிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும்.
எனவே, பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

பாடசாலைகளில் மாணவர்களுடன் செயற்பாட்டுடன் ஈடுபடுவதற்கு ஏற்ற ஆடைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் !

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குள் ஆகக் கூடுதலான விலைகளை கொடுத்து சாரியை கொள்வனவு செய்யமுடியாது. ஆகையால், சாரியை கட்டுவதிலும் ஒசரியை கட்டுவதிலும் ஆசிரியைகள் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளது.

ஆகையால் அரச அதிகாரிகள், அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், மாற்று ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளுக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்லும் ஆசிரியைகள், சாரி மற்றும் ஒசரி அணிவதிலும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்களுடன் செயற்பாட்டுடன் ஈடுபடுவதற்கு ஏற்ற ஆடைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பின்லாந்து உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளில் முன்னுதாரணமாகக் கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளா

சம்பளம் போதாது – மீண்டும் போராட போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை !

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் முன்னேடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிட்ட அரசியல்வாதிகள் தற்போது மக்களின் வரிப்பணதில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டு மக்களின் வாழும் உரிமையை பறித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மக்களின் போராட்டங்களை அடக்கி ஆட்சியாளர்கள் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது என்பதோடு போராட்டம் ஒரு நாள் இந்த அரசாங்கத்தை அழித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவேகமற்ற தீர்மானங்களால் இலவசக்கல்வியையும் அழிக்க முயற்சிக்கிறது ராஜபக்ஷ அரசு – ஆசிரியர் சங்கம் கவலை !

அரசாங்கம் காலத்திற்கு காலம் எடுக்கும் தீர்மானங்களினால் நாட்டின் பல துறைகளிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரச பல்கலைக்கழகங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கள் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமானது கல்வியை தனியார் மயமாக்கும் சட்டமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வியை அந்நிய செலாவணி ஈட்டும் முறையாக மாற்றுவது தொடர்பான ஜனாதிபதியின் உணர்வுகளை மேற்கோள்காட்டி, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவேகமற்ற கொள்கைத் தீர்மானங்களினால் நாட்டின் விவசாயத்தை அழித்ததைப் போன்று நாட்டின் கல்வியையும் ஜனாதிபதி அழிக்கப் போகின்றாரா..?  என்ற நியாயமான சந்தேகம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று அமைச்சர்கள் இருந்த போதிலும் கல்வி முறைமை பிரச்சினைகளால் நிரம்பி வழிகிறது. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் கல்வியை புறக்கணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளரான மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

“ஆசிரியர்கள் மீது சரத் வீரசேகர அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.” – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு !

“சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்குவழியில் அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.” என இலங்கை  ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கொழும்பில் போராட்டம் நடத்திய பலரை பொலிஸார் நாளை மறுதினம் விசாரணைக்கு அழைத்திருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கை  ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ( Joseph Stalin )தெரிவித்தார்.

“அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி கொழும்பில் பாரிய வாகனத் தொடரணி ஒன்றை முன்னெடுத்திருந்தோம். அதன்போது பொலிஸாரினால் 44 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த பேரணியில் தங்களது சொந்த வாகனங்களையே ஆசிரியர்களும் அதிபர்களும் பயன்படுத்தியிருக்கின்ற நிலையில், வாகனங்களின் உரிமையாளர்களுக்கு பொலிஸார் கொழும்பு கோட்டையிலுள்ள நிலையத்தினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகவிரோத செயற்பாடாகும்.

ஆர்ப்பாட்டம் செய்ய முழு சுதந்திரமும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. மறுபக்கத்தில் இலங்கை  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்குவழியில் அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.

இந்த செயற்பாட்டிற்கு எதிராக எழும்படி மனித உரிமை அமைப்புக்கள் என பலரிடமும் கேட்கின்றோம். அதேபோல அடுத்தமாதம் 15ஆம் திகதி தென்மாகாண பாடசாலைகளை திறப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபரிகளின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை அறிவிக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும்.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆருடம் !

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணிவரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது  ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியை தனியார் மயப்படுத்தல், தனிமைப்படுத்தல் சட்டத்தை அடக்கு முறைகளுக்கு பாவிக்காதே, கல்வியில் இராணுவமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் அரசின் சர்வாதிகார போக்குக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு, தங்களது எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “அடக்குமுறை என்பது தங்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்பதை உணராத பட்சத்தில், சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும் என  தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,

73 வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்து வந்த அடக்குமுறைகளும், அநீதிகளும் தற்போது கட்சி பேதமின்றி அனைவர் மீதும் பிரயோகிக்கப்படுகிறது. அத்துடன், இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தற்போது செயல்படும் தென்னிலங்கை சிவில் அமைப்புகள், கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பியதில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அரசாங்கம் கொவிட் சூழலை பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதியான இன்பம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.