ஜோ பைடன்

ஜோ பைடன்

“நான் பதவியை விட நாட்டை நேசிக்கிறேன்.” – ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியது குறித்து முதன்மையாக பைடன் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

போட்டியிலிருந்து விலகிய பின்னர் நாட்டு மக்களுக்கு முதல்முறையாக   உரையாற்றியபோது பைடன்,

“இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான நேரம் இது, அவர்களுக்கு வழிவிடுவதே சிறந்தது என்று நான் முடிவு செய்தேன்.

நமது தேசத்தை ஒன்றிணைக்க அதுவே சரியான வழியாகும் என்பதற்காக விலகினேன். தற்போது நாட்டின் ஜனநாயகத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ஜனநாயகத்தை காப்பதற்காகவே அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளேன். பதவியை நான் மதித்தாலும், அதைவிட நாட்டை நேசிக்கிறேன்.

ஜனாதிபதியாக அமெரிக்க மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன், ஆனால், ஜனநாயகத்தை பாதுகாப்பது பதவியைவிட முக்கியமானது. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும்.நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடம் உள்ளது.

கமலா ஹாரிஸ்(kamala harris) மிகவும் அனுபவம் கொண்டவர், திறமையானவர். துணை ஜனாதிபதியாக அவரது செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. தற்போது அமெரிக்காவை வழிநடத்த அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தாண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த பல ஆண்டுகள் அமெரிக்கா மற்றும் உலகின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய தேர்தல். நேர்மை, கண்ணியம், நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியற்றை அமெரிக்க மக்கள் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் – ஜோ பைடன் வாழ்த்து!

உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது.

அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இன்று ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது.

3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் – ஜோ பைடன்

காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இதுவெனவும் ஹமாஸ் இந்த போர் நிறுத்தம் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரானது, பல மாதங்களாக நீடித்து வருகிறது, கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து பயங்கர தாக்குதல்களை நடத்தியதுடன் பலரை பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.

அதன் பின்னர் அந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இன்றுவரை காசாவில் தாக்குல்களை நடத்திய வருகிறது.

அத்துடன், இந்த போர் காரணமான எண்ணற்ற மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் ஆயிரகணக்கிலான பெண்கள் குழந்தைகள் உட்பட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும், காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான போர் மற்றும் ஆக்கிரமிப்பை நிறுத்தினால் முழுமையான உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளது.

காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் – ஜோ பைடன்

மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார்.

 

அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை (07) நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார்.

 

இத்தற்காலிக துறைமுகமானது, பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

காஸாவுக்கு மேலும் அதிகளவு விநியோங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பைடன் கூறினார்.

 

அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார்.

 

கஸாவிலுள்ள மக்களில் கால்வாசிப் பேர் பஞ்சத்தை எதிர்கொள்வதாக ஐநா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ஜோபைடன் வேண்டாம்“ – கருத்துக்கணிப்பில் வெளியான அமெரிக்கர்களின் அதிர்ச்சியான முடிவு !

அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் சுமார் 44 சதவீதம் பேர் ஜோ பைடன் ஆட்சியில் தங்களது பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறி உள்ளனர். மேலும் சுமார் 37 சதவீதம் பேர் மட்டுமே ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 56 சதவீதம் பேர் இவரது செயல்பாட்டை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தை சுமார் 48 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது 2021-ல் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தபோது இருந்ததை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். 74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என 62 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதன் மூலம் அங்கு தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இதேவேளை அண்மையில்  அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் செயல்படும் விமானப் படைக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது, அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஜோபைடனின் வயது தொடர்பில் அதிக கேள்வி எழுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் எடுத்த mugshot புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருக்கிறார் – ஜோ பைடன்

போலீஸார் எடுத்த மக்-ஷாட் (பொலிஸ் பதிவு படம்.) புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் போலீஸார் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை எதிர்கொள்கிறார். இதே தேர்தல் மோசடியில் 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

தனது கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இது அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை போலீஸார் எடுத்த ‘மக்-ஷாட்’ புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாக பரவியது.

 

இந்த நிலையில், ட்ரம்ப்பின் புகைப்படம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ட்ரம்ப் மிகவும் அழகான நபர் என்று பதிலளித்துவிட்டு சென்றார்.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் – சர்வதேச மன்னிப்பு சபை வேண்டுகோள்!

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மனித உரிமையின் அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் உரிமைகள் மிக முக்கியமானவை என பைடன் நிர்வாகம் கருதினால் இந்த சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்படவேண்டும் அல்லது முற்றாக கைவிடப்படவேண்டும் என்ற செய்தியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு தசாப்தகாலமாக சிறுபான்மையினத்தவர்களையும் தன்னை விமர்சிப்பவர்களையும் தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பைடன் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரசும் அமைதியாகயிருந்தால் அது மாற்றுநிலைப்பாடுடையவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள நாஸ் பல தசாப்தகாலங்களாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துவந்துள்ள இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே உத்தேச சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் அதிகாரிகள் உத்தேச சட்டத்தை கொண்டுவரவில்லை மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைத்து அவர்களை மௌனமாக்கும் நோக்கத்துடனேயே இந்த உத்தேச சட்டம் கொண்டுவரப்படுகின்றது எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவு – ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய ஜனாதிபதி புடின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன.

இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

புடினின் கைது  உத்தரவுக்கு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், புடினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது தான் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பைடன் கூறுகையில், ” உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதற்காக போர்க்குற்றம் செய்ததாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நியாயமானது. இந்த நடவடிக்கை மிகவும் வலுவான கருத்தை உருவாக்குகிறது” என்று குறிப்பிட்டார்.

ரகசிய ஆவணங்களை பதுக்கிய அமெரிக்க ஜனாதிபதி – 13 மணி நேர தேடுதல் வேட்டையில் F.B.I !

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதியாக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நான் மீண்டும் வருவேன் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இருந்தவர் டொனால்டு டிரம்ப். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் டிரம்ப். இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள்  டொனால்டு டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது: நான் 2 முறை தேர்தலில் போட்டியிட்டேன். 2 முறையும் வெற்றி பெற்றேன். 2016-ம் ஆண்டு பெற்றதை விட 2020-ம் ஆண்டு தேர்தலில் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றேன். அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருந்த ஜனாதிபதி அதிக வாக்குகள் பெற்றது அதுவே முதல்முறை. நமது நாட்டை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாக நடத்த நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன். விரைவில் போட்டியிடுவேன். தயாராக இருங்கள் என தெரிவித்தார்.