டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தா

யாழ். மயிலிட்டி  துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி  பணிகள் ஆரம்பம் !

யாழ்ப்பாணம் – மயிலிட்டி  துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி  பணிகள் நேற்று (திங்கட்கிழமை)  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் பகுதிகளை   ஆழ, அகலம் ஆக்குதல் படகுகளை கட்டிவைக்க ஏற்றவாறு ஆழமாக்கி குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டமிடல், மற்றும் தொழில் செய்யும் மீனவர்கள் தங்குவதற்கான வசதி சிற்றுண்டிச்சாலை படகுகள் கட்டுவதற்கும் திரும்பிச் செல்வதற்கான பாதைகளை அமைத்தல் துறைமுகத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கும் என டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார். குறித்த விடயம் தொடர்பான மாதிரி படம் காட்டப்பட்டு திட்ட முகாமையாளரால் அது தொடர்பிலேயே அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ அமைச்சின் செயலாளர்கள் நீரியல் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் – அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தாவுடன் வாக்குவாதம் !

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம்(வியாழக்கிழமை) மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று மீனவர்களுடன் பேச்சுக்களை நடத்த முயற்சித்தபோது, மீனவர்கள் சமரசத்திற்கு சம்மதிக்காத நிலையில், அமைச்சர் திரும்பி சென்றுள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிவரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என மீனவர்களால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும், தான் வாய் மூலமாகவே உத்தரவாதத்தையே தர முடியும் என கூறியதை மீனவர்கள் ஏற்க மறுத்தனர்.

அதனால் போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியேறிய நிலையிலும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்தியாவில் அகதிகளாகவுள்ள தமிழர்களை இலங்கையில் குடியமர்த்த முழு ஒத்துழைப்பையும் தருவேன் – டக்ளஸ் தேவானந்தா

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் தொடர்பில், சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று (26) இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் தங்கியிருக்கின்றவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக பிரதி உயர்ஸ்தானிகரினால் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்களுக்கு பயண ஏற்பாடுகளை இலவசமாக வழங்குவதற்கும் பொருட்களை எற்றிவருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த பிரதி உயர் ஸ்தானிகர், அழைத்து வரப்படுகின்றவர்களின் செலவுகளுக்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் முதல் கட்டமாக தலா 30,000 ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், அடுத்த வருடம் சுமார் 7000 குடும்பங்களை அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், அழைத்து வரப்படுகின்றவர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் சர்வதேச தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த முயற்சிகளை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு விரும்புகின்ற இலங்கையர்கள், தங்களுடைய பூர்வீக இடங்களில் மீள்குடியேறி இயல்பு வாழ்கையை தொடர்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததுடன் குறித்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பூரணமான ஒத்துழைப்பு தனக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் சிறப்பு முகாம்ங்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கபட்டிருக்கின்றவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த மாதம் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டபோது சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினரின் உறவினர்கள் தன்னை சந்தித்தமையை சுட்டிக்காட்டியதுடன், அதுதொடர்பாக ஏற்கனவே இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், சட்டவிரோத தொழில் முறையினால் ஏற்பட்டு வருகின்ற பாதிப்புக்கள் தொடர்பாகவும் மாற்றுத் தொழில்முறைகளை தெரிவு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான வேலைத் திட்டம் ஒன்றினை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயுமாறும் பிரதி உயர் ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரனிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபாகரன் போதைப்பொருள் கடத்தினார் என கூறிய அமைச்சர் டக்ளசுக்கு சிறீதரன் கொடுத்த பதில் !

நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாள் அல்ல. பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களைக் கழுவி பிழைக்கவும் வரவில்லை. எனவே, தயவுசெய்து என்னைப் பேவிடுங்கள்.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலளித்துள்ளார்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

பாராளுமன்றத்தில் இன்று சிறிதரன்  உரையாற்றும்போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் சிறிதரன் பேசிக்கொண்டிருந்த உரையை குறுக்கீடுஅமைச்சர் செய்த டக்ளஸ்தேவானந்தா, ”மஹிந்த ராஜபக்ச காலத்தில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். அதற்கு முன்னரும் நாம் செய்திருப்போம். ஆனால், நீங்கள் செய்யவிடவில்லை. பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் மறைக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே பதவிகளுக்காகக் கால் கழுவிப் பிழைப்பதற்காகத் தான் அரசியல் நடத்தவில்லை என சிறிதரன் அவ்வாறு குறிப்பிட்டார்.

“கடற்றொழில் கற்கைகளுக்கான பீடத்தை முல்லைத்தீவில் உருவாக்க முயற்சிக்கின்றேன்” – அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா !

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழகமானது அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் சந்ததியை உருவாக்கும் அறிவுக்கூடமாக மிளிர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் கடல்தொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவனியா பல்கலைக்கழகம் தொடர்பில் கருத்தக் கூறும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

1997 ஆம் ஆண்டிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து சில பீடங்கள் வவுனியா வளாகத்திற்கு மாற்றப்பட்டு அது வவுனியா வளாகமாக இயங்கிவந்தது. இந்நிலையில் அந்த வளாகம் இந்த மாதம் முதல் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிலைக்கு உயர்த்த அல்லது பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்

இதேநேரம் வன்னியுடன் யாழ்ப்பாணத்திற்கான தொடர்புகள் இல்லாத காலங்களில் இந்த வவுனியா வளாகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்பட்டதுதான் இந்த வளர்ச்சிக்கான சாத்தியமாகி இருக்கிறது.

வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றம் பெறுவதற்கு நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, பிரதமரர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் ஆகியோருக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேபோன்று கடல்தொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். அந்த முயற்சியும் விரைவில் சாத்தியமாகும் என்று நான் நம்புகின்றேன்.

இதேவேளை இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது எனது அரசியல் அணுகுமுறை எந்தளவுக்கு நடைமுறை சாத்தியமானது என்பதை இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு இடத்திலிருந்து ஆரம்பித்து எமது எதிர்பார்ப்புகளை நோக்கி படிப்படியாக நகரமுடியும் முடியும் என்ற அணுகுமுறையே சாத்தியமானது என்பதை நான் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கூறிவருகின்றேன்’ என்றும் அவர் கூட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுவான நினைவு தூபி வேண்டும்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“ யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுவான நினைவு தூபி வேண்டும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்று (08.01.2021) இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதா? யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும்  வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும் என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பிரதிநிதிகளின்  போதிய ஒத்துழைப்பு இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை என்று தெரிவித்ததுடன், எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும். அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை “ – டக்ளஸ் தேவானந்தா

“அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும். அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை “ என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயத்தை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த ஊடகத்திற்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மாகாண சபைகளின் ஊடான அதிகாரப் பகிர்வை முழுமையாக அமுல்ப்படுத்துவதனை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை நோக்கி நகர முடியும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நான் சொல்வது, சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்வதுடன் உருவாகியிருக்கும் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதெல்லாம் கடந்த நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும் அவர்களுக்கு முட்டுக் கொண்டுத்துக் கொண்டிருந்தவர்களும் செய்திருக்க வேண்டிய வேலை. மாகாண சபைகள் செயலிழந்து போக தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம்.

அதிகாரங்கள் தேவை என்று கூப்பாடு போடுகின்றவர்கள், கடந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டுடிருந்தபோது நினைத்திருந்தால், பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் ஒன்றை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றி விட்டு பழைய விகிதாரசார தேர்தல் முறையூடாக நடத்தியிருக்க முடியும். ஆனால் அக்கறையின்மையினால் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

எனினும், இந்த அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும். அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை எனவும் தெரிவித்தார் அமைச்சர்.

எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது என அரசாங்கம் உறுதியளித்துள்ளது ! – டக்ளஸ் தேவானந்தா

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இருவரும் உறுதியளித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி உறுதி மொழி வழங்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் வறிய குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் அரசாங்க வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டம் வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் ஏனைய பிரதேச மக்களைப் போன்று வடக்கு கிழக்கு மக்களும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் பலாபலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், ஒரே நாடு ஒரே சட்டம் என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்ற அடிப்படையில், எந்த வகையான பிரதேச – இன – மத ரீதியான பாகுபாடுகள் தலை தூக்க இடமளிக்கப்படாது என்பதை வலியுறுத்தியதுடன் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு நியமனங்கள் சில காரணங்களுக்காக தற்போது வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிறுத்தப்பட்ட போதிலும் விரைவில் வழங்கி வைக்கப்படும் எனவும், குறித்த பிரதேச மக்கள் தேவையற்ற வகையில் குழப்பமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதால் எமது மக்கள் பட்டபாடுகள் அனைத்தும் போதும்! – கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தா.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகள் பல்வேறு திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை விடுவித்து அடுத்த போகத்திற்கான பயிர்செய்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும்  துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதால் எமது மக்கள் கடந்த காலங்களில் பட்டபாடுகள் அனைத்தும் போதும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாற்று வழியை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாய்வு கூட்டம் நேற்று (24.08.2020)  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற குறித்த முன்னாய்வு கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் குரங்குத் தொல்லைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது, சிறிய ரகத் துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம், பயிர்செய்கைகளுக்கு நாசம் விளைவிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்று சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்ட போதே மேற்குறித்த கருத்தினை தெரிவித்த அமைச்சர், மாற்று வழிகள் தொடர்பாக ஆராயுமாறு தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என்பவற்றின் அடிப்படையில், பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயத்தில் தன்னிறைவு எட்டுவதே நோக்கமாக இருககின்ற நிலையில் வன வளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளை பயிர் செய்கைக்கு பயன்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதி தொடர்பில் பேசக்கூடியவராக நான் இருக்கின்றேன் ! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிய நான், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதி தொடர்பில் பேசக்கூடியவராக இருப்பதோடு, அதனூடாக வடக்கின் அபிவிருத்தி திட்டங்களை முடிந்த வகையில் செயல்படுத்துவேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் நான் மிகுந்த கரிசனையாக உள்ளதோடு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எனது பலத்தைப் பிரயோகித்து மக்களின் பிரச்சினைகளை இலகுபடுத்துவேன். வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்கு பயன் அடையக்கூடிய திட்டங்களாக செயல்படுத்துவதோடு குறித்த திட்டங்களை நான் செயற்படுத்துவதை யாரும் தடுக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்கு பயன் அடையக்கூடிய திட்டங்களாக செயல்படுத்துவதோடு குறித்த திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்கவும் முடியாது.

கடந்த காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் சுயலாப அரசியல் கூட்டுக்களால் தடுக்கப்பட்டதோடு மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகள் உரிய மக்களுக்கு சென்றடையவில்லை. இம்முறை தேர்தலில் வடமாகாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இரண்டு ஆசனங்களை மக்கள் வழங்கியுள்ளனர்.

இதன் மூலம் இருப்பதை பாதுகாத்து முன்னோக்கிச் செல்வதே எமது நிலைப்பாடாகும். தற்போது நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் சட்டியிலிருந்ததை அடுப்பில் விழ வைத்து விட்டார்கள்.

ஏனெனில் சில தமிழ் அரசியல் கட்சிகள் மக்களுக்குத் தேவையானது எது என சிந்திக்காமல் விதண்டாவாத பேச்சுக்களால் தமிழ் மக்களுக்கு இருக்கின்றவற்றை கூட இழக்கக் கூடிய நிலைக்கு இட்டுச் செல்கிறார்கள்.

இந் நிலையில் இவ் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் விளிப்படையாமல் விட்டால் அதன் விளைவுகளை மக்களே ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி விடும் 19 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

இத் திருத்தத்தின் மூலம் அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கு தடையாக இருந்த விடயங்கள் நீக்கப்பட்டு புதிய விடயங்கள் உட்சேர்க்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.