டலஸ் அழகப்பெரும

டலஸ் அழகப்பெரும

“OL பரீட்சை இல்லாமல் அனைத்து மாணவர்களும் உயர்தரத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.” – பாராளுமன்றத்தில் கோரிக்கை!

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையை இந்த வருடம் நடத்தாமல், அனைத்து மாணவர்களும் உயர்தரப் பரீட்சையைத் தொடர்வதற்குத் தகுதியானவர்கள் என்று அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதில் தற்போது ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சாதாரணதரத்துக்குத் தோற்றவுள்ள 6 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயர்தரத்துக்கு முன்னேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வருடம் பரீட்சையை நடத்துவது தொடர்பில் பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன்.

இந்த வருடம் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையை நடத்தாமல் அனைத்து மாணவர்களையும் உயர்தரத்தைத் தொடர்வதற்குத் தகுதியுடையவர்கள் என்று அறிவித்தால் அது நல்லதொரு திட்டமாக அமையும்.

கொவிட் காலத்தில் பிரிட்டனில் இவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. மாறாக மாணவர்களுக்குச் சலுகைகளே கிடைத்தன – என்றார்.

“நாமல் ராஜபக்ஷ அரசியல் அறிவு இல்லாத பிராய்லர் கோழி” – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத பிராய்லர் கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விபரித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய வீரவன்ச, மக்கள் அவதிப்படும் வேளையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் கிரிக்கெட் விளையாடுவதாக தெரிவித்தார்.

“அவர் ரணிலைப் போன்றவர், அவர் இன்னும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, மக்கள் கோபப்படுவது நியாயமானது, அவர் ஒருபோதும் கற்றுக் கொள்ள மாட்டார், அவர் வளர்ச்சியடையாத பிராய்லர் கோழி”

நாட்டினதும் ராஜபக்ச குடும்பத்தினதும் வீழ்ச்சிக்கு இந்த வாரிசு அரசியலே காரணம். கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித ராஜபக்சவை களமிறக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். டலஸ் அழகப்பெருமதான் அதனை நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார் என்றும் விமல் தெரிவித்துள்ளார்.

“13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.” – டலஸ் அழகப்பெரும

“அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.” என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் , உள்ளூராட்சி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தற்போதைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பொறுப்புக் கூற வேண்டும்.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் செயற்படுவது பாரிய குறைப்பாடாக கருதப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு அரச நிர்வாக கட்டமைப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் விடயதானத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

உள்ளூராட்சி மன்றங்களின் சேவையாளர்கள் தற்போது சேவை கட்டமைப்பில் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளின் ஒருசில விடயங்கள் அரச சேவையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணப்படுகிறது. 2017ஆம் ஆண்டு மாகாண சபைகள் திருத்த பிரேணை கொண்டு வரப்பட்ட போது தெரிவு குழுவின் போது 31 திருத்தங்கள் உள்வாங்கப்பட்டன.மாகாண சபை தேர்தல் காலரையறையில்லாமல் பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் என்ற சொல் கூட தற்போது வழக்கில் இல்லை.இது ஒரு பாரியதொரு ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும். உள்ளூராட்சிமன்ற தேர்தலை விற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய அண்மையில் தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2018 ஆம் ஆண்ட விசேட தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திலும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் முறைமை தொடர்பான தெரிவு குழு நியமிக்கப்பட்டது,கலப்பு தேர்தல் முறைமைக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.இவ்வாறான பின்னணியில் மீண்டும் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய தெரிவு குழுவை ஸ்தாபிப்பது எத்தன்மையானது.

ஆகவே மாகாண சபைகளுக்கு செய்ததை,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் செய்ய வேண்டாம் என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.தேர்தல் மீதான அச்சத்தில் முறையற்ற வகையில் செயற்பட வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளூராட்சிமன்ற சபை முறைமை தொடர்பில் எவ்வித கொள்கையுட் நடைமுறையில் இல்லை,2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பான கொள்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது,ஆனால் இதுவரை அந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் தேர்தலை உரிய காலத்தில் நடத்தி நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் இந்த  சபையில் உள்ளார்கள்.தேர்தல் புறக்கணிக்கப்படும் போது அது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் காணப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குறைந்தளவில் உள்ளார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என குறிப்பிடப்பட முடியாத நிலையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலும் பிற்போடப்பட்டால் தமிழ்களின் நிலை குறித்து உலகம் என்ன குறிப்பிடும் என்பது தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

“அரசியல்வாதிகளைப் பற்றி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் முறை ஒழிக்கப்பட வேண்டும்.” – அமைச்சர் டலஸ் அழகப்பெரும

நாட்டின் கல்வி முறை வீழ்ச்சியடைய இடமளிக்கக்கூடாது என அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கம்புருபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும் கல்வித்துறை வீழ்ச்சியடைந்தால் நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படித்த, அரசியல்வாதிகளைப் பின்பற்றி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் முறை நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியல்வாதிகளை நாடி தகுதியுள்ளவர்கள் வேலை தேடும் கலாசாரம் வேறு எந்த நாட்டிலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், கனடா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகள் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தகைய நாடுகளில் தகுதியுடையவர்கள் நல்ல ஊதியம் பெறும் வேலைகளைப் பெறுவதற்கான அமைப்புகள் நடைமுறையில் இருப்பதால், அவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்வதில்லை. எனவே நாட்டின் கல்வித் துறை வீழ்ச்சியடைவதை குடிமக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.