“நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு செல்வந்தர் முதல் வறியவர் வரை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்
“ மனித மூலதனத்தை போன்றே டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வதும் சவாலாகியுள்ளது. அதேபோல் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குறைந்தளவான வளங்களுடனேயே நாம் டிஜிட்டல் வசதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
அதனால் தனியார் துறையினரின் தனிப்பட்ட முதலீடுகள் வாயிலாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதற்கமைய டிஜிட்டல் வசதிகள் தொடர்பிலான எமது கொள்கை மேற்படி விடயத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படும்.
அதேபோல் மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.
அதன் பின்னர் அதிக சனத்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் நகரங்களை நோக்கி நகர வேண்டும். அதேபோல் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை விநியோகிப்பவர்களும் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளனர்.
அதேபோல் முதலீடுகளை முன்னோக்கி கொண்டுச் செல்லும் இயலுமை அரசாங்கத்திடம் உள்ளது.அதனால் தற்போதுள்ளதை விடவும் மாறுபட்ட நிதித்துறை ஒன்று எமக்கு அவசியப்படுகிறது. செல்வந்தர்கள் மற்றும் வறியவர்களுக்கு இடையில் டிஜிட்டல் தொடர்பாடல் ஒன்று இருக்க முடியாது.
அதனை நாம் நனவாக்கி கொள்வது எவ்வாறு என்பதை சிந்திக்க வேண்டும். அந்த வகையில் நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்குள்பிரவேசிக்கும் இயலுமை சகலருக்கும் கிட்ட வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.