டொக்டர் நடராஜா ஜெயகுமரன்

டொக்டர் நடராஜா ஜெயகுமரன்

மௌனம் சம்மதமல்ல: “எனது வீட்டை அடித்து நொருக்கி எரித்து என்னை யாழில் இருந்து விரட்டியது டொக்கடர் சத்தியமூர்த்தி அல்ல, மெடிகல் மாபியா” டொக்டர் ஜெயகுமரன்

யாழில் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன் வீட்டை அடித்து நொருக்கி கழிவு எண்ணை ஊற்றி தன்னை விரட்டியது டொக்டர் த சத்தியமூர்த்தி அல்ல என்று டொக்டர் நடராஜா ஜெயகுமரன் இன்று யூலை 19 இணையத்தளப் பதிவில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சமூகவலைத் தளங்களில் பரவியுள்ள இந்தத் தவறான செய்தியால் தன்னுடைய நன்மதிப்பு பாதிக்கப்பட்டதுடன் தனக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளதாக டொக்டர் சத்தியமூர்த்தி தேசம்நெற்றுக்கு அனுப்பிய குறும் செய்தியில் இன்று யூலை 19 குறிப்பிட்டுள்ளார்.

நேற்று யூலை 18 மாலை கப்பிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்வுக்கு நேரடியாக வந்து நேர்காணல் வழங்கிய மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயகுமரன், நேர்கண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் சியா உல் ஹஸ்ஸன் 2012இல் வீட்டை அடித்து நொருக்கி எரித்தமை தொடர்பாக அழுத்திக் கேட்டதுடன் டொக்டர் சத்தியமூர்த்தியுடைய பெயரையும் அழுத்தமாகக் குறிப்பிட்டார். அப்போது டொக்டர் நடராஜா ஜெயகுமரன் மௌனமாகவே இருந்தார். அந்த ஒளிப்பதிவு டொக்டர் சத்தியமூர்த்தியே டொக்டர் ஜெயகுமரனை வெளியேற்றியத்தின் பின்னணியில் இருந்தார் என்பதை உருவகப்படுத்தியது.

டொக்கடர் அர்ச்சுனாவின் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகின்ற நிலையில், அர்ச்சுனாவும் டொக்டர் சத்தியமூர்த்திக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை வைத்துள்ள நிலையில், டொக்டர் சத்தியமூர்த்தி மிகத் தவறாக குற்றம்சாட்டப்பட்டார். நேர்காணலை மேற்கொண்ட சியா உல் ஹஸ்ஸனோ அல்லது புற்றுநோய் நிபுணரோ இரு மணிநேரம் வரை நீடித்த நேர்காணலில் இதனைத் தெளிவுபடுத்தத் தவறியிருந்தனர்.

இந்நிகழ்ச்சி டொக்டர் சத்தியமூர்த்தி புற்றுநோய் நிபுணர் நடராஜா ஜெயகுமரன் அவர்கள் தொழில்முறைக்கு மாறாக தான் சிகிச்சை அளித்த நோயாளிகளை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புகின்றார் என்று இவ்வாண்டு மே மாதம் குற்றம்சாட்டி எழுதப்பட்ட கடிதம் தொடர்பாகவே அமைந்தது. அச்சமயத்தில் டொக்டர் அர்ச்சுனாவின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழல்கள் அம்பலப்படுத்தியதையும் சுட்டிக்காட்டி, தானும் யாழில் இருந்து வலிந்து துரத்தப்பட்டதை புற்றுநோய் நிபுணர் நடராஜா ஜெயக்குமரன் அந்நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உரையாடல்களுக்கு மத்தியில் தனது வீடு அடித்து, நொருக்கி, எரிக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், அதனால் யாழில் இருந்து வெளியேறியதாகவும் புற்றுநோய் நிபுணர் ஜெயகுமரன் குறிப்பிட்டார். இந்தப் பின்னணியில் அந்த வீடு உடைக்கப்பட்ட பிரச்சினைக்கும் டொக்டர் சத்தியமூர்த்தியுடைய கடிதமும் தொடர்புபடுத்தப்பட்டதுடன் டொக்டர் சத்தியமூர்த்தி வீடுடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபடுவதாக அந்த நேர்காணல் நகர்ந்தது. இது தொடர்பில் புற்றுநோய் நிபுணர் ஜெயகுமரன் மௌனமாகவே இருந்தார். இதுவே டொக்டர் சத்தியமூர்த்தி மீது இந்த வீண்பழி விழக் காரணமானது.

ஆனால் அதனைத் தற்போது தெளிவுபடுத்தியுள்ள டொக்டர் ஜெயகுமரன், என்னை விரட்டியடித்ததும் எனக்கு தவறான முறையில் கடிதம் அனுப்பியதும் இரு முற்றிலும் வேறுபட்ட சம்பவங்கள் என்றும் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

அந்நேர்காணலில் யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் நிபுணராகக் கடமையாற்றிய தன்னை, ஊழல்களை வெளிப்படுத்தியதற்காக, உயிர் அச்சுறுத்தல் கொடுத்து வீட்டை அடித்து நொருக்கி எரித்து யாழில் இருந்து விரட்டி அடித்தனர் யாழ் மருத்துவ அதிகாரிகள் எனக் குற்றம்சாடினார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன். 2004 முதல் 2012 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய இவர் அங்கு நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்ததால் தனக்கு எதிராக கடுமையாகவும் மோசமாகவும் நடந்து கொண்டதாக கபிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்வில் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவரின் பெயரைச் சொல்வதற்கே அருவருப்படைந்த டொக்டர் ஜெயகுமரன், பதவியைக் குறிப்பிட்டே இந்த விமர்சனத்தை வைத்தார். நேர்கண்ட சியா உல் ஹஸ்ஸன் டொக்டர் சத்தியமுமூர்த்தியின் பெயரைக் குறிப்பிட்டு இக்குற்றச்சாட்டை வைத்த போது டொக்டர் ஜெயக்குமரன் மௌனமாக இருந்தார். மௌனம் சம்மதமாக பார்வையாளர்களால் விளங்கிக்கொள்ளப்பட்டது.

தனது குடும்பத்தையும் இவர்கள் வன்முறையால் அச்சுறுத்தியதால் தன்னால் மேற்கொண்டு அங்கு பணிபுரிய முடியவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனை – அபேஸ்கா வில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அவர் கடமையாற்றி வருவதாகவும் டொக்டர் ஜெயகுமரன் அதில் தெரிவித்தார்.

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் டொக்டர் அர்சுனாவால் அம்பலத்துக்கு வந்ததையடுத்து யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தனது சகோதரன் இராசரத்தினம் பிரகாஸ் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் முதலுதவிச் சிகிச்சை கூட வழங்கபடாமல் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாமல் எட்டு மணி நேரத்துக்குப் பின் இரத்தப்போக்கால் உயிரிழந்த செய்தி யூலை 14 தேசம்நெற் இல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர் டொக்டர் கிருசாந்தி தங்களது தந்தையர்களுடைய புற்றுநோய்யை குணமாக்குவதிலோ நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதிலோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை என கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்மகன்கள் நேரடிச்சாட்சியமளித்தனர். இவர்கள் மகரகமையில் டொக்டர் நடராஜா ஜெயகுமரனின் சிகிச்சையால் தங்கள் தந்தையர் குணமமைந்ததாகவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை நம்பியிருந்திருந்தால் தங்கள் தந்தையர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என்றும் மகன்மார் தெரிவித்தனர்.

புற்றுநோய்க்குள்ளான நோயாளியின் கணவர் தன்னுடைய மனைவிக்கு நடந்த கொடுமையை விபரிக்கையில் “ஆறாவது தடவை மருந்து ஏற்றும் காலம் தவறிவிட்டது” என்று டொக்டர் கிருசாந்தி தெரிவித்து இருக்கிறார். “அப்ப என்ன செய்யலாம் டொக்டர்?” என்று கணவர் கேட்க, “வீட்டை கூட்டிக்கொண்டு போய் நாளைக் எண்ணிக்கொண்டிருங்கோ” என்று அலட்சியமாக அதிகாரத்தோரணையில் தெரிவித்ததாக அக்கணவர் கண்கலங்கியவாறு தெரிவித்தார். அதன் பின் இந்தியா அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற போது “எங்கேயோ எல்லாம் போய் நீங்கள் ரீட்மன்ட் எடுத்திட்டு வாறத பார்க்கவோ நான் இங்க இருக்கிறன்” என்று டொக்டர் கிரிசாந்தி தெரிவித்ததாக அக்கணவர் தெரிவித்தார். மேலும் சிகிச்சைக்கு வந்து உதவும்படி கேட்ட போதும் டொக்டர் கிருசாந்தி மறுத்துள்ளார். எல்லாம் கையறுந்த நிலையில் மகரகம புற்றுநோய் மருத்துவ நிலையத்துக்குச் சென்றபோது காலம் கடந்துவிட்டது. அங்கும் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை கூடுதாலக இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண் சிஅங்கு மரணத்தை தழுவினார்.

டொக்டர் ஜெயக்குமரனின் நன்மதிப்பை அறிந்து பலர் யாழில் இருந்து மகரகம சென்று சிகிச்சை எடுக்கின்றனர். முக்கிய சிகிச்சைகள் முடிவடைந்து குணமானவர்கள் ஊர் திரும்பியபின் வழமையான பரிசோதணைகளை யாழ் தெல்லிப்பளையில் செய்யும்படி மகரமக வைத்தியசாலை கடிதம் கொடுத்து விட்டால், யாழ் தெல்லிப்பளையில் இந்த நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் அவர்களை அலைச்சலுக்கு உள்ளாக்குவதாக டொக்டர் நடராஜா ஜெயக்குமரன் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் டொக்டர் சத்தியமூர்ந்தி உட்பட ஐவர் கையெழுத்திட்டு டொக்டர் நடராஜா ஜெயகுமரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அவர் தேவையற்ற விதத்தில் தன்னுடைய நோயாளிகளை தங்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒவ்வொரு நோயாளிக்கும், தனக்கு பொருத்தமான வசதியான இடத்தில் சிகிச்சையைப் பெறுவதற்கு முழு உரிமையும் உண்டு. அரசாங்கம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கே மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்குகிறது. ஆனால் டொக்டர் சத்தியமூர்த்தி சிகிச்சை முடிவின்பின் மேலதிக சிகிச்சைகளை யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாழில் வழங்குவதற்கு ஏன் மறுப்புத் தெரிவிப்பது நோயாளர்களுக்கு மிகுந்த கஸ்டத்தையும் செலவீனத்தையும் ஏற்படுத்துகின்றது. இவர்கள் மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக அங்குள்ள கண்ணியமான கறைபடியாத மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலும் யாழ் நோக்கி வரும் சிறந்த மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலுமே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுவடைந்து வருகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் என்ன நடந்ததோ அதுவே தனக்கு 2012 இல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நிகழ்ந்தது என்கிறார் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன். தான் தொடர்ச்சியாகவே இந்த டொக்டர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஐவர் கையொப்பமிட்ட கடிதம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார். டொக்டர் அர்ச்சுனாவை மிரட்டுகின்ற மருத்துவ மாபியாக்களே டொக்டர் ஜெயகுமரனை யாழில் இருந்து வெளியேற்றுவதிலும் ஈடுபட்டிருந்தது. 2012இல் சமூகவலைத்தளங்கள் ஆதிக்கம் பெற்றிருந்தால் தானும் டொக்டர் அர்ச்சுனா போன்றே செயற்பட்டிருப்பேன் என்றார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன்.
கபிடல் தொலைக்காட்சியின் தவறான திசைதிருப்பும் நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்டவர்கள் தற்போது செய்தியின் உண்மைத் தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியம். மகரகம புற்றுநோய் மருத்துவநிபுணர் நடராஜா ஜெயகுமரனின் வீடு அடித்து நொருக்கப்பட்டு கழிவு எண்ணையும் ஊற்றப்பட்டது என்பது முற்றிலும் உண்மை. அது அவர் அங்கு நடைபெற்ற ஊழலை வெளிக்கொணர்ந்ததால் அதற்கான பழிவாங்கலாக மருத்துவ மாபியாக்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் டொக்டர் ஜெயக்குமரனின் வீடு தாக்கப்பட்டு அவர் யாழில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் டொக்டர் சத்தியமூரத்திக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்ற உண்மை பதிவுசெய்யப்பட வேண்டும்.