டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்

குடியரசு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் !

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

துணை ஜனாதிபதி வேட்பாளராக 38 வயதான ஒஹியோ செனட் உறுப்பினர் ஜேடி வென்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

மில்வொக்கியில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் அதிகூடிய வாக்குகளை பெற்றதை அடுத்து இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த முறை தேர்தலில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடனிடம் தோல்வியடைந்த நிலையில் இவ்வருடம் மீண்டும் அவரை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

 

இதேவேளை, இரகசிய ஆவணங்களை மறைத்து வைத்திருந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

புளோரிடா நீதிமன்றத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

 

இந்தத் தீர்ப்பானது துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தேசிய பாதுகாப்பு ஆவணங்கள் உள்ளிட்ட இரகசிய ஆவணங்களை மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ட்ரம்ப் நிரபராதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2021 ஆம் ஆண்டில் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர் புளோரிடாவிலுள்ள அவரது தங்குமிடத்தின் களஞ்சிய அறையிலிருந்து பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக 40 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப் 400,000 அமெ­ரிக்க டொலர்­களை வழக்குச்  செலவுத் தொகை­யாக வழங்க வேண்டும் – நீதி­மன்­ற­ம் உத்தரவு !

நியூயோர்க் ரைம்ஸ் பத்­தி­ரி­கைக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சில­ருக்கும் அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சுமார் 400,000 அமெ­ரிக்க டொலர்­களை வழக்குச்  செலவுத் தொகை­யாக வழங்க வேண்டும் என அந்­நாட்டு நீதி­மன்­ற­மொன்று உத்­த­ர­விட்­டுள்­ளது.

டொனால்ட் ட்ரம்பின் சொத்து விப­ரங்கள், வரி ஏய்ப்பு முயற்­சிகள் தொடர்­பாக, 2018 ஆம் ஆண்டு நியூ­யோர்க் ரைம்ஸில் வெளி­யி­டப்­பட்ட புல­னாய்வுக் கட்­டு­ரைக்கு புலிட்ஸர் விருது வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அக்­கட்­டு­ரைக்­காக தனது வரி விப­ரங்கள் அடங்­கிய ஆவ­ணங்­களை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் பெற்­றுக்­கொண்­ட­தாக மேற்­படி பத்­தி­ரிகை மீதும், 3 ஊட­வி­ய­லா­ளர்கள் மீதும் குற்றம் சுமத்­திய டொனால்ட் ட்ரம்ப் 100 மில்­லியன் டொலர் இழப்­பீடு கோரி 2021 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தார்.

ட்ரம்பின் உற­வி­ன­ராக மேரி ட்ரம்ப்பும்,  டொனால்ட் ட்ரம்­பினால் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்­களில் ஒருவர்.

இவ்­வ­ழக்கை நியூயோர்க் மாநில உயர் நீதி­மன்றம் கடந்த மே மாதம் தள்­ளு­படி செய்­தி­ருந்­தது.

இந்­நி­லையில், மேற்­படி வழக்­குக்­கான செலவுத் தொகை­­யாக நியூயோர்க் ரைம்ஸ் பத்­தி­ரிகை மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மூவ­ருக்கு 392, 638 அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 12.5 கோடி இலங்கை ரூபா) டொனால்ட் ட்ரம்ப் வழங்க வேண்டும் என நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (12)  உத்தரவிட்டுள்ளது.

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தடை !

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ(Colorado) உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

அரசியலமைப்பின் கிளர்ச்சி என்ற வாக்கியத்தை குறிப்பிட்டுக்காட்டி, ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் அல்லவென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

எவ்வாறாயினும் இந்த தீர்ப்பு மீதான மேன்முறையீடு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் இந்த தீர்ப்பு கொலராடோ மாநிலத்திற்கு வௌியே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

 

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் எடுத்த mugshot புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருக்கிறார் – ஜோ பைடன்

போலீஸார் எடுத்த மக்-ஷாட் (பொலிஸ் பதிவு படம்.) புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் போலீஸார் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை எதிர்கொள்கிறார். இதே தேர்தல் மோசடியில் 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

தனது கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இது அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை போலீஸார் எடுத்த ‘மக்-ஷாட்’ புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாக பரவியது.

 

இந்த நிலையில், ட்ரம்ப்பின் புகைப்படம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ட்ரம்ப் மிகவும் அழகான நபர் என்று பதிலளித்துவிட்டு சென்றார்.

“நான் எந்த வன்முறையையும் விரும்பவில்லை” – டொனால்ட் ட்ரம்ப் !

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ம் திகதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமனறத்தின் உள்ளே வரை சென்று நடத்தப்பட்ட இந்த கலவரத்தில் ஒரு கேபிடல் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் கேபிடல் அலுவலகங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பதவி நீக்க கோரிக்கை வலுத்தது. ஆனால் தன்மீது  குற்றம்சாட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கடும் கோபம் இருப்பதாகவும், ஆனால் அவர் வன்முறையை விரும்பவில்லை என்றும் கூறினார்.
டெக்சாஸின் அலமோவில் உள்ள எல்லைச் சுவருக்கு  பயணம்  மேற்கொண்ட டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நான் எந்த வன்முறையையும் விரும்பவில்லை. என் மீதான இந்த குற்றச்சாட்டுகள் எனக்கு  மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அவர்கள் தொடர்ந்து என்மீது குற்றம்சாட்டுகின்றனர். அது உண்மையில் அவர்கள் செய்யும் ஒரு பயங்கரமான விஷயம். கேபிடல் தாக்குதல் தொடர்பாக போராட்டத்தை தூண்டியது என்ற தொடர்ச்சியான குற்றஞ்சாட்டும் நடவடிக்கை, தனக்கு எதிரான சூழ்ச்சியின்  தொடர்ச்சியாகும் என தெரிவித்தார்.
ஆனால் கலவரத்தைத் தூண்டுவதற்கு எந்தப் பொறுப்பையும் அவர் ஏற்கவில்லை.

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக முடக்கப்பட்டது ஜனாதிபதியின் ட்விட்டர் கணக்கு – ட்ரம்பின் செயலே காரணம் என ட்விட்டர் தளம் விளக்கம் !

அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து விடுபடவிருக்கும் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அமெரிக்க ஜனாதிபதியாக அவருக்கு வரும் 20-ம் திகதி முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. இதனையொட்டி, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்க வழிவகை செய்ய அவரது வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது.

அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால், ஏற்பட்ட கலவரம், மோதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்பட்டது. இதனால், அவரின் தனிப்பட்ட ட்விட்டர் (@realDonaldTrump)கணக்கு முடக்கப்பட்டது. உடனே, @POTUS என்ற அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ கணக்கிலிருந்து ட்ரம்ப் ட்வீட் செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் அப்பதிவுகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று (08.01இ2021) அமெரிக்க ஜனாதிபதிக்கான @POTUSஎன்ற ட்விட்டர் கணக்கும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துப் பதிவிடலாம் என்பதால் அந்தக் கணக்கை நீக்குவதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தக் கணக்கில் பதிவிடப்பட்ட அத்தனை ட்வீட்களும் நீக்கப்பட்டன. ஏற்கெனவே, ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கை காலவரையறையின்றி முடக்குவதாக கடந்த வியாழக்கிழமையன்று அந்நிறுவனம் அறிவித்தது. ட்விட்ச், ஸ்னாப் சாட் உள்ளிட்ட மற்ற சமூக ஊடகங்களும் ட்ரம்ப்பின் கணக்குகளை நீக்கியிருந்தன.

அமெரிக்க ஜனாதிபதியின் ட்விட்டர் கணக்கு உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு, ஜனாதிபதியின் கணக்கு என அனைத்தையும் முடக்கிய ட்விட்டர் நிறுவனத்தை ட்ரம்ப் வெகுவாகச் சாடியுள்ளார். ட்விட்டர் நிறுவனம் பேச்சு சுதந்திரத்தைத் தடை செய்வதாகவும், தன்னைப் பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வதற்காக தனது கணக்கை நீக்கியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ட்விட்டர் ஊழியர்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தீவிர இடதுசாரிகளுடன் கைகோத்து அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் வெகுண்டெழுந்துள்ளார்.

எதிர்காலத்தில் தனது சொந்தக் கருத்துகளைச் சுதந்திரமாகப் பதிவு செய்யும் வகையில், சொந்த சமூக வலைதளத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். ட்ரம்ப்பின் இந்த ட்வீட்களும் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

“அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வடகொரியா மீதான வெறுப்புப் பார்வை மாறப்போவதில்லை” – வடகொரிய ஜனாதிபதி

அமெரிக்கா தான் தங்களது மிகப்பெரிய எதிரி எனக் கூறிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் “அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வடகொரியா மீதான வெறுப்புப் பார்வை மாறப்போவதில்லை” என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான பூசல் பலகாலமாக அனைவரும் அறிந்ததே.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ம் திகதி ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம்மின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

வடகொரியா மீது வாஷிங்டன்னின் பார்வையில், கொள்கையில் ஒருநாளும் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. ஆகையால் எதிரிகளை சமாளிக்கும் வகையில், அணுஆயுதங்கள், ஸ்பை செயற்கைகோள்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என அனைத்தையும் அதிகளவில் தயாரித்து இருப்பில் வைக்க வேண்டும்.

நமது அரசியல் கொள்கை நம்முடைய புரட்சிகரமான வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

இவ்வாறு கிம் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2019ல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும், புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுகிறார்” – ஜோ பைடன் காட்டம் !

“டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும், புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுகிறார்” என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார்.

எந்தவித ஆதாரங்களையும் வழங்காமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வருகிறார்.‌ இதற்கிடையில் ஜோர்ஜியா மாகாணத்தில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை தயார் செய்ய மாகாண உள்துறை மந்திரியை டிரம்ப் மிரட்டும் காணொளி பதிவு வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில் ஜோர்ஜியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு போட்டியிடும் 2 ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜோ பைடன் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் ஜனாதிபதி டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும், புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுவதாக காட்டமாக கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், டிரம்ப் ஏன் இன்னும் ஜனாதிபதி பதவியை விரும்புகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் வேலை செய்ய விரும்பவில்லை. ஏதாவது ஒரு பிரச்சினை குறித்து புலம்புவதிலும், புகார் கூறுவதிலும் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார் என்றார்.

இதற்கிடையில் ஜனாதிபதி பதவியை தக்கவைக்க நரகத்தை போல போராடுவேன் என கூறியுள்ள டிரம்ப், ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்வில் சபை உறுப்பினர்களின் வாக்கெடுப்பை உறுதிப்படுத்த இந்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது, குடியரசு கட்சி எம்.பி.க்கள் அதனை நிராகரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றில் முதல்முறையாக நிராகரிக்கப்பட்டது ட்ரம்பின் வீட்டோ அதிகாரம் !

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற 20-ந்தேதி பதவி ஏற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார். மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இதனிடையே டொனால்ட் டரம்ப் இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ள நிலையில் அமெரிக்க அரசு துறைகள் தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான சில முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றி வருகிறது.

அமெரிக்க நாடாளுமன்றம்: நிதி மசோதா நிறைவேற்றம்!அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான, 740 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ பட்ஜெட்டை உறுதி செய்யும் “தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் 2021” என்கிற பாதுகாப்பு கொள்கை மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேறியது.

இதனை தொடர்ந்து அந்த மசோதா ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, ட்ரம்ப் தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார்.

இந்த மசோதாவின் 230-ம் பிரிவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது என்றும் ராணுவ மையங்களின் பெயர்களை மாற்றுவது, அவசரகால முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லாதது என பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் மசோதாவில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்த தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த மசோதாவிலிருந்து கிடைக்கும் நிதி மூலமே பாதுகாப்புப் படையினருக்கு ஊதியம் அளிப்பது முதல் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது வரை அனைத்தும் மேற்கொள்ள முடியும். எனவே இந்த மசோதாவுக்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்ததற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

அமெரிக்க அரசியலமைப்பை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்க முடியும். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

அங்கு 322 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 87 பேர் எதிராகவும் வாக்களித்தனர். டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த, 109 உறுப்பினர்கள், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் மூலம் அந்த தீர்மானம் பெருவாரியான வித்தியாசத்தில் நிறைவேறியது. இது, ஜனாதிபதி டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதேசமயம் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறாது என டிரம்ப் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் 81 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இதன் மூலம் செனட் சபையிலும் இந்த மசோதா எளிமையாக நிறைவேறியது. டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அவரது வீட்டோ அதிகாரம் நிராகரிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதுவும் டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் சில தினங்களுக்கு முன்பாக இது நடந்துள்ளது.

ஜோ பைடனின் வெற்றி செல்லுபடியற்றது – மீண்டும் ட்ரம்ப் தரப்பு நீதிமன்றில் மனுத்தாக்கல் !

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாததோடு தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பல்வேறு மாகாண கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கக் கோரி டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதற்கிடையில் அமெரிக்க தேர்தல் சபை ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்தது. ஆனாலும் டிரம்ப் தரப்பு தேர்தல் முடிவை மாற்றி அமைப்பதற்கான தங்களது சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் முடிவை மாற்றியமைக்க கோரி டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், பென்சில்வேனியா மாகாணத்தின் தேர்தல் சபை உறுப்பினர்களை மாகாண சட்டமன்றம் தேர்வு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி எண்ணப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் டிரம்ப் தரப்பு கோரியுள்ளது.