தனிச்சிங்கள சட்டம்

தனிச்சிங்கள சட்டம்

“1956இன் தனிச்சிங்கள சட்டமே நாட்டை வீழ்த்தியது.” – மனுச நாணயக்கார

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

நமக்கு நாம் மட்டுமே என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நல்லிணக்கம் மனிதநேயத்தின் ஆரம்பம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது.

 

“அரசியல் நோக்கத்திற்காகவும் பொருளாதார நோக்கத்திற்காகவும் இனவாதமும் மதவாதமும் சமூகத்தில் பரப்பப்பட்டன.

 

இதனை அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த நாடு வீழ்ந்தபோது, அனைவரும் ஒன்றிணைந்து தான் இந்நாட்டை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பேச்சில் மட்டுமன்றி, செயற்பாட்டிலும் எமது ஐக்கியத்தை நாம் காண்பித்துள்ளோம். எதிர்க்காலம் குறித்து மட்டும் குறைகூறிக் கொண்டிருக்காமல், புதிதாக சிந்திக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.

1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்துதான், இந்நாடு பல இனவாத மோதல்களுக்கு முகம் கொடுத்தது.

 

இங்கு தான் நாம் பிரிந்தோம். இதன் பின்னர்தான் ஆயுதம் ஏந்தப்பட்டு, கொடிய யுத்தமும் நாட்டில் ஏற்பட்டது. இவை தான் நாடு முன்னேற்றமடைய தடையாக இருந்தன.

 

1956 இற்குப் பின்னர் நாட்டை விட்டு பல புத்திஜீவிகள் வெளியேறினர். 1983 இலும் 2022 இலும் இதேபோன்று புத்திஜீவிகள் உள்ளிட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

 

நாம் நம்மை உணராத காரணத்தினால்தான், அடுத்தவரின் குறைகளை பெரிதாகக் காண்கிறோம். நாம் ஏனையவரின் மத, இன, கலாசாரத்தை மதித்தால் மட்டுமே, இந்நாட்டை முன்னேற்ற முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனிச்சிங்கள சட்டத்தால் நாடு பெரும்பாதிப்பை எதிர்கொண்டது – ஏற்றுக்கொள்கிறார் பண்டாரநாயக்கவின் மகள் சுனேத்திரா !

தனது தந்தை கொண்டுவந்த தனிச்சிங்கள சட்டத்தினால் நாடு பெரும்பாதிப்பை எதிர்கொண்டது என்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பிரதமர்  எஸ்.டபியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் மகள் சுனேத்திரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கருத்துப்பரிமாறல் நிகழ்வில் கலந்துகொண்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உங்களது தந்தை தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்திருக்காவிட்டால் நாடு தற்போது மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருந்திருக்கும். இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?  என நேயர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சுனேத்திரா பண்டாரநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஆம், நான் இதற்கு பதிலளிக்க விரும்புகின்றேன். அவர் எனது தந்தை, ஆனால் இந்த நேயர் அல்லது நபர் ஒருவர் தெரிவித்ததை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் என எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்கவின் மூத்த புதல்வியான சுனேத்திரா தெரிவித்துள்ளார்.

நான் இதனை எப்போதும் தெரிவித்திருக்கின்றேன். உண்மையை சொல்லியாகவேண்டும்.

ஆம், ஏன் அவர் தனிச்சிங்கள சட்டத்தை  கொண்டுவந்தார்? அரசியல் சந்தர்ப்பவாதம் அரசியல் ரீதியில் பிரபலமாவது –  உண்மையில் எனக்கு தெரியாது.

ஆனால் இந்த நபர் தெரிவிப்பது உண்மை. அது எனக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என சுனேத்திரா தெரிவித்துள்ளார்.

இதற்கு சமூக ஊடகங்களில் பராட்டுக்கள் வெளியாகியுள்ளன.