தனியார் மருத்துவக்கல்லூரி

தனியார் மருத்துவக்கல்லூரி

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம் !

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் நேற்று மாலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கே.டி.யு.மூலம் மருத்துவ பட்டத்தினை விற்கும் அமைச்சரவை தீர்மானத்தை முறியடிப்போம் என்னும் தொனிப்பொருளில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தில்லிருந்து ஊர்வலமாக வந்த மாணவர்கள் மட்டக்களப்பு நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தினை தனியார் மயப்படுத்தி அரச பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது கே.டி.யு.மூலம் கல்வியை இராணுவ மயமாக்குவதை நிறுத்து,தேசிய கல்விக்கொள்கை கட்டமைப்பினை உடனடியாக வாபஸ்வாங்கு,கொத்தலாவல மருத்துவ கறுப்புச்சந்தையினை உடனடியாக நிறுத்துங்கள்,அரச பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கு போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக வந்த மாணவர்கள் அங்கு தீப்பந்தங்களை ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இலவச கல்வியை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவோம் உட்பட பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.
மாணவர்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.