தனுஷ்க குணதிலக்க

தனுஷ்க குணதிலக்க

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை – இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிவிப்பு !

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் தனுஸ்க குணதிலக மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை நவம்பர் 2022 இல் தனுஷ்காவுக்கு எதிராக கிரிக்கெட் தடையை விதித்தது.

எவ்வாறாயினும் குறித்த வழக்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடந்த விசாரணைகளுக்கு பின்னர் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தனுஸ்க குணதிலக்க நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் மீது விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிகெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் நியமித்த சுயாதீன விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை – அவுஸ்ரேலிய சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் விடுதலையளித்து தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

32 வயதான அவர், டி20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியா சென்றிருந்தபோது, இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கும் காணொளி கடந்த வாரம் நீதிமன்றில் காட்டப்பட்டது.

 

இதனை தொடர்ந்து அவரது நேர்காணலில் உண்மை வெளிப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண் எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு தனுஷ்க குணதிலகாவை குற்றமற்றவர் என்று அறிவித்தார்.

இதேவேளை சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த தனுஷ்க குணதிலக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

 

“நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக. இன்று எனது சட்டத்தரணி முருகன் தங்கராஜ் இங்கு இல்லாவிட்டாலும் அவருக்கும் மற்ற வழக்கறிஞர்களுக்கும் மிக்க நன்றி. எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது. அதனால் இறுதியில் நீதிபதி சரியான முடிவை எடுத்தார். நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது. “எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடும் வரை என்னால் காத்திருக்க முடியாது.”

இதேவேளை தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஆன்மீக உரையாடலில் ஈடுபட்டேன்.” – பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலக !

தனுஸ்க குணதிலக மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பெண் அவருடன் உறவில் இருந்தவேளை அவரின் போன ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்ததால் தான் அச்சமடைந்ததாக தனுஸ்ககுணதிலக தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தனுஸ்க தெரிவித்துள்ள விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட பெண்ணை அவரது வீட்டில் முத்தமிட்டது அவருடன் பாலியல் உறவு கொண்டது போன்ற விடயங்களை தனுஸ்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அந்த பெண்ணுடன் இடம்பெற்ற ஆன்மீக உரையாடல் குறித்து தனுஸ்க தெரிவித்துள்ளார், இந்த உரையாடலின் போது எனது முன்னைய ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

அந்த உரையாடல் சுவராஸ்யமாக இருந்தது என நான் நினைத்தேன் அந்த பெண்ணிற்கு இலங்கை கலாச்சாரம் பௌத்தம் குறித்து நன்கு தெரிந்திருக்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் தனுஸ்க குணதிலக பின்னர் அழுவதையும் தனது முகத்தை துடைப்பதையும் காணமுடிகின்றது.

நான் சிரித்துக்கொண்டே நான் முன்னைய ஜென்மத்தில் நான் யார் என தெரிவிக்க முடியுமா என கேட்டேன் நானும் அவரின் அயலவர்களும் தாய்லாந்தில் பிறந்தோம் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் எனது போன ஜென்மத்தைபார்க்க முடிவதாக அவர் குறிப்பிட்டார் நான் அச்சமடைந்தேன் எனவும் தனுஸ்க தெரிவித்துள்ளார்.

ஏன் என தெரியவில்லை எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது அந்த பெண் சற்றுவித்தியசாமானவராக காணப்படுகின்றார் என நினைத்தேன் அந்த பெண் எனக்கு டக்சியை ஏற்பாடு செய்து தந்தார் நான் ஆடையணிந்துகொண்டு முத்தமிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குற்றஞ்சாட்டிய  பெண் முன்னைய ஜென்மங்கள் குறித்த பேச்சுக்களை தான் முதலில் ஆரம்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

தனுஷ்க குணதிலக்க கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் தொழில்ரீதியாக பங்கேற்க தடை – சட்டமா அதிபர் ஆலோசனை

இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்க குணதிலக்கவின் நடத்தை தொடர்பாக விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில், இவரின் நடத்தை குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் அவர், கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் தொழில்ரீதியாக பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் அவருக்கு தடை விதிக்குமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன தலைமையிலான குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர் சட்டமா அதிபர், தமது பரிந்துரைகள் அடங்கிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கிணங்க, இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குணதிலக்க தொடர்பாக அவுஸ்ரேலிய சட்ட அமைப்பு என்ன நடவடிக்கை எடுத்தாலும், இலங்கையின் சட்டத்தின்படி அவருக்கு எதிராக பொலிஸார் தனியாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தனுஷ்க குணதிலகவில் எந்தத் தவறும் காணவில்லை.” – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

“ஆண்கள் ஆண்களாக இருப்பார்கள் என்பதால் முழுப் பழியையும் எங்கள் வீரர்கள் மீது சுமத்த முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் .

ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றாலும், வீரர்களின் சுதந்திரம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குணதிலக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அவர்களுக்கு வழக்கத்தை விட அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டதாக நான் உணர்கிறேன், அவுஸ்திரேலியாவில் சிலர் விபசாரத்தில் ஈடுபடுவது ஒரு தொழிலாக இருப்பதையும், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் மிகவும் பொதுவானவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும், எனவே எங்கள் வீரர் மீது அனைத்து பழிகளையும் நாம் போட வேண்டியதில்லை.

வீரர்களின் ஆட்டத்தை பாதிக்காத வகையில் எல்லைக்குள் இருக்கும் வரை அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எப்போதாவது ஒரு கிளப்புக்குச் செல்வதில் நான் எந்தத் தவறும் காணவில்லை, ஆனால் இது மீண்டும் மீண்டும் நடந்தால், அவர் பயிற்சிகளைத் தவறவிட்டு, விளையாட்டின் மீதான தனது கவனத்தையும் அர்ப்பணிப்பையும் இழக்க நேரிடும். ஆனால் இந்த விஷயங்களை ஒருமுறை அல்லது இரண்டு முறை அனுபவிக்க அனுமதிப்பது தவறல்ல. நான் பார்த்தவற்றின் படியும், வழக்கறிஞர்களின் கூற்றுப்படியும், தனுஷ்க விடுவிக்கப்பட வேண்டும். அவர் விடுதலையானதும் அவரை தொடர்ந்து அணிக்காக விளையாட அனுமதிக்க வேண்டும்,” என்றார்.

“தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல.”- இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர்

தனுஷ்க குணதிலக்க சந்தேக நபர் மாத்திரமே, குற்றவாளி அல்ல என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் தனுஷ்க குணதிலக்கவுக்கு சட்ட உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பான செய்திகளை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சிட்னி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதனிடையே, தனுஷ்க சார்பில் புதிய பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கலாநிதி சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.