தமிழரசு கட்சி

தமிழரசு கட்சி

தமிழரசு கட்சி தொடர்பில் நான் பேச விரும்பவில்லை -கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்

தமிழரசு கட்சியின் தலைமைத்துவம் என்பது அவர்களின் தனிப்பட்ட விடயம் எனவும் அது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் கூறவிரும்பவில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 

அத்தோடு, இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் எமது செய்தியாளர் கேட்டபோது தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது எனவும் பதிலளித்துள்ளார்.

 

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் எமது ஊடகப்பிரிவுக்கு வழங்கிய செய்தியிலேயே இதனை கூறினார்.

 

மேலும், வடக்கு மாகாணத்தின் கடற்றொழிலாளர்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் விரைவில் மக்களை சென்றடையும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், வட மாகாணத்தில் கடற்றொழில்துறை அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

 

மேலும், கடல் தொழில் அபிவிருத்திக்காக வட மாகாணத்திற்கு 500 மில்லியன் நிதியை அமைச்சு ஊடாக அதிபர் வழங்கியுள்ளார் எனவும், அந்த நிதி கடல் தொழில் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக சி.சிறீதரன் !

இலங்கத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

திருகோணமலையில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்.

புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.

“2015 ல் மைத்திரிபால சிறீசேன நமது தலைவர். 2023ல் நமது தலைவர் பிரபாகரன்.” – சாணக்கியத்தனமாக மக்களை ஏமாற்றும் இரா.சாணக்கியன்

“தமிழரசு கட்சி தலைவர் காட்டிய கட்சி” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் – 2023 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள் அறிமுகத்துடனுன் தேர்தல் பரப்புரை மக்கள் கூட்டம் நேற்று (19) இடம்பெற்றது.

இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வீதியின் இரண்டு பக்கங்களிலும் மக்களை காணமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. நாம் பார்க்க வேண்டும் என்றால் இராணுவ முகாம்களைத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்கள் என்றால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தான்.

எமது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான இணைந்த வட, கிழக்கென்பது சாத்தியமாகுமாக இருந்தால், அது நிச்சயமாக சாத்தியமாகும். அப்படி சாத்தியமாக வேண்டுமாக இருந்தால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நடைபெறவுள்ள இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொரு தேர்தல்.

நாங்கள் வீதி வீதியாக இறங்கி இராணுவமே வெளியேறு என கோசங்களை எழுப்புகின்றோம். அதேபோன்று இதனை பாராளுமன்றத்திலும் சொல்லும் ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆசனங்களிலிருந்து 10 ஆசனங்களுக்கு வாக்கு சரிவு வந்திருக்கின்ற காரணத்தினால், வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் இராணுவமே வெளியேறு என வீதியிலே சொன்னாலும் கூட, இது தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரைக்காக சொல்லுகின்ற கோசமே தவிர இது மக்களுடைய அபிலாசை இல்லை என்ற சந்தேகம் சில வேளைகளில் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

எங்களுக்கான வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் சர்வதேசத்துடன் பேசும் போது எங்களுடைய பலம் குறைந்துள்ளதாகவே காணக்கூடியதாக இருகின்றது.

இதன் காரணமாகவே நாம் சொல்கின்றோம் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த சின்னம் தலைவர் காட்டிய சின்னம், உலக நாடுகளுக்கு நன்கு தெரிந்த சின்னம். ஆகவே, மக்கள் இந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.“ என தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிந்த போதும் சரி அதற்கு  பிற்பட்டபகுதியிலும் சரி இரா.சாணக்கியன் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர விசுவாசியாக உலா வந்தவர். திடீரென ஒரு மேடையில் இரா.சம்பந்தனுக்கு பொன்னாடை போர்த்தி தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்ட இரா.சாணக்கியன் இன்று முல்லைத்தீவில் நின்று கொண்டு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தேர்ந்தெடுத்த கட்சி தங்களுடையது என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்.

சாணக்கியன் போல உசுப்பேற்றி வாக்கு சம்பாதிக்கும் அரசியல் தலைவர்களாலேயே வடக்கு இலங்கையும் – தென் இலங்கையும் இன்னமும் முரண்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

தலைவர் காட்டிய கட்சி என்ற  கருத்தை இரா.சாணக்கியன் கிழக்கில் பேசமாட்டார். அங்கு முஸ்லிம்கள் இருப்பதால் பாராளுமன்ற தேர்தலில் அவர்களின் ஓட்டுக்கள் பெரும்பாலும் கிடைக்காது விட்டுவிடும் என்ற அச்சம் தான்.

உள்ளூராட்சி தேர்தலுக்கும் இவர்கள் பேசும் தமிழ்தேசியத்துக்கும் பெரிதாக தொடர்பு இல்லை என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். பிரதேச சபைத் தேர்தல் முழுமையாக அபிவிருத்தியே முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது. இந்த தமிழ் தேசியவாதிகளின் சந்தர்ப்பவாத அரசியலால் உந்தப்பட்டு தமிழ் மக்கள் தமிழரசுக்கட்சி உருவான காலம் முதல் அதற்கும் அதன் கூட்டணிக்கும் தான் வாக்களித்து வந்திருக்கிறார்கள். விளைவு இன்னமும் நமது பகுதிகள் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளன. வறுமை இன்னமும் அதிகமாகவுள்ளது. குன்றும் குழியுமான பாதைகள், அடிப்படை வசதிகளற்ற கிராமங்கள், சுய  தொழில் உற்பத்திகள் விருத்தி செய்யப்படாத நிலை என இந்த தமிழ்தேசியவாதிகளை நம்பியதால் நமது மக்கள் இழந்தது அதிகம்.

இரா.சாணக்கியன் போன்ற சந்தர்ப்பவாத அரசியல் செய்வோரை ஒதுக்கிவிட்டு தமிழ் மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சரி மக்கள் பற்றி பேசும் – கற்ற – புதிய மாற்றத்தை பேசும் இளைஞர்களை தெரிவு செய்ய முன்வர வேண்டும்.

“நான் ஒரு போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிக் கொடுக்கவில்லை.” – எம்.ஏ. சுமந்திரன்

இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது. அரசு கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள். தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செய்யப்படவில்லை, அந்த நேரத்திலேயே வீதி வீதியாக சந்தி சந்தியாக நின்று காட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்.

அரசு கூலிப்படையாக செயல்பட்டவர்கள் பதிவு செய்த அரசியல் கட்சிக்கு பேர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. அவ்வாறானனவர்கள் இன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை தாங்கள் பாதுகாக்கின்றோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு போட்டியாக அரசு கைக்கூலியாக கட்சியை வைத்திருக்கின்ற அவர்கள் இன்றைக்கு அந்த கட்சியிலே போட்டியிட்டுக் கொண்டு அதற்குப் பெயர் கூட்டமைப்பு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஜனநாயகம் என்பது மறைந்து விட்டது என்பதை இப்போது ஏற்றுக் கொண்டவர்களாக அதை இல்லாத ஆக்கிவிட்டு சிறிய டீ ஒன்றை முன்னுக்கு வைத்துக் கொண்டு குறுகிப் போன ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு கட்சி நடத்துவதாக இன்றைக்கு தம்பட்டம் அடிக்கின்றார்கள்.

மக்களுக்கு இந்த தேர்தலிலே யார் எவர் என்பது நன்றாக தெரிந்திருக்கும். 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சூசை தாசன் போட்டியிட்டு இருந்தார். சூசை தாசன் என்பவர் 77 ஆம் ஆண்டு போட்டியிட்டு பெரு வெற்றியீட்டியவர்.

அப்படிப்பட்ட ஒருவர் 2010 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் தோல்வி அடைந்திருந்தார்.அந்த தோல்விக்கான காரணத்தை 2012 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்ற போது அவரே சொல்லியிருந்தார்.

அவர் பேசுகின்ற போது சொன்னார் நான் தோற்றமைக்கு காரணம் கேட்கின்றார்கள். நான் தோற்றதற்கு காரணம் நான் தூள் கடத்துவதில்லை, நான் ஆள் கடத்துவதில்லை, நான் கொலை செய்வதில்லை அதனால் தான் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றேன் என்று சொன்னார்.

ஆனால் இன்றைக்கு தமிழரசு கட்சி மக்கள் முன்பாக ஒரு தூய்மையானதாக வந்து நிற்கின்றது. தூள் கடத்துபவர்கள் எங்கள் மத்தியில் இல்லை நீங்கள் தாராளமாக தமிழரசு கட்சிக்கு வாக்களிக்கலாம்.

இந்த தேர்தலில் எங்களுடைய கட்சி போட்டியாளர்களுக்கு நான் சொல்லுகின்ற விண்ணப்பம் எந்தவித போதை வஸ்துக்களையும் மக்களுக்கு விநியோகிக்க வேண்டாம், சாராயம் விநியோகிக்க வேண்டாம் அப்படி செய்கின்ற பலர் இருக்கின்றார்கள் அவர்கள் எல்லாம் இப்போது எங்களுடைய கட்சி இல்லை.

இப்போது வேட்பாளர்களாக இருக்கின்றவர்கள் மக்களுக்கு சாராயம் விநியோகிக்க வேண்டாம் தூய்மையான சாத்வீக வழியிலான ஒரு போராட்டத்தை தமிழரசுக் கட்சி முன்னெடுக்கினறது.

நெடுங்காலமாக இலங்கை தமிழரசு கட்சி சொல்லி வந்த கொள்கையை முன்வைத்து உங்களுடைய பிரதேசத்து மக்களுக்காக நீங்கள் போட்டியிடுங்கள் என்று அனைத்து வேட்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சம்பந்தரையும் என்னையும் குறை சொல்லுவது பலருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது அதைத்தான் இவர்களும் இப்போது கையில் எடுத்திருக்கின்றார்கள்.

சம்பந்தன் யார் ..?நான் யார்..? என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஒரு காலமும் எங்களுக்காக போராடியவர்களை காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல, சந்தி சந்தியாக நின்று முகத்தில் சாக்கை போற்றி வைத்துக் கொண்டு தலையாட்டி காட்டி கொடுத்தவர்கள் அல்ல. அவர்களில் ஒரு தலைவருக்கு பழக்க தோஷமாக போய்விட்டது. இப்போது கூட்டத்திலும் தலை ஆடிக்கொண்டே இருக்கின்றது அது தலையாட்டிய பழக்கம்.

1980 ஆம் ஆண்டு இதனைச் சாதித்தோம், 1985இல் இதனைச் சாதித்தோம் 1987இல், 1989இல், 1994இல் 2001இல் 2004இல் இதனைச் தாதித்தோம் என வரலாற்றுப் பட்டியலிடுகின்றார். அதே பட்டியலில் எத்தனையாம் ஆண்டுகளில் யாரைப் போட்டுத் தள்ளினோம், எத்தனையாம் ஆண்டு அரச கூலிப்படையாக சேர்ந்து இயங்கினோம் என்பதனைக் கூற மறந்துவிட்டார்.

எங்கள் இருவருடைய சரித்திரத்தையும் நன்றாக துலாவி பார்க்கலாம் எந்த தருணத்திலையும் யாரையும் நாங்கள் காட்டிக் கொடுத்தோமா? அரசு கூலிப்படையாக செய்யப்பட்டோமா? என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என தெரிவித்தார்.