தமிழரசு கட்சி தேர்தல் 2024

தமிழரசு கட்சி தேர்தல் 2024

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

சிறிதரனா ? சுமந்திரனா ? : நாளைய செய்தித் தலைப்பு: சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

 

நாளை ஜனவரி 21 தமிழரசக் கட்சியின் தலைவராக யார் தெரிவு செய்யப்படப் போகின்றார் என்பது பெரும்பாலும் தெரியவரும். இதற்கான தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களின் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நாளை திருகோணமலையில் இடம்பெற இருக்கின்றது. அதற்கு கட்சியின் அங்கந்தவர்கள் 325 பேர்வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து கிழக்கில் உள்ள திருகோணமலைக்குச் செல்கின்றனர். வாக்கெடுப்பு எண்ணிக்கை நிறைவில் வெற்றி தோல்வி அறிவிக்கப்படும் போது அசம்பாவிதங்களும் ஏற்படும் அளவுக்கு நிலைமை பதட்டமானதாக இருப்பதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைமைத்துவத்துக்கு போட்டியிடும் இருவருமே தேர்தல் முடிவுகளை ஏற்று மற்றையவருடன் கட்சியின் நன்மைகருதி இணைந்து பயணிப்போம் எனத் தெரிவித்து இருந்த போதும் தமிழரசுக் கட்சியின் நாளைய தேர்தல் தமிழரசுக்கட்சிக்குள் ஒரு பாரிய பிளவை ஏற்படுத்தும் என்று தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது.

இலங்கையில் உள்ள எந்தவொரு கட்சிக்காவது ஜனநாயகப் பாரம்பரியம் இருக்கின்றதா என்றால் எடுத்த எடுப்பிலேயே இல்லை என்று சொல்லி விடலாம். கட்சிக்குத் தலைவரானால் சாகும்வரை அவரே தலைவராக இருந்துவிடுவார். இதற்கு தமிழ் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் விதிவிலக்கல்ல. தமிழரசுக்கட்சி வரலாற்றில் தேர்தல் மூலம் ஒருவரைத் தெரிவது இதுவே முதற்தடவை. ஏகமனதாக, ஏகோபித்த முடிவு, ஏக பிரதிநிதித்துவம் என்று இன்னொரு பக்கம் இருக்கின்றதை ஏற்றுக்கொள்ளாத சமூகமும் கட்சிகளுமாக நாம் எங்களை பன்மைத்துவத்தின் விரோதிகளாக பழக்கிக் கொண்டுவிட்டோம். அப்படிப் பார்க்கின்ற போது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்தல் ஜனநாயகத்தின் பார்வையில் மிகப்பெரும் பாச்சல் என்றே சொல்லலாம். ஆனால் என்ன இந்தத் தேர்தலினால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றதா என்பதே தற்போதுள்ள கேள்வி.

 

இலங்கைத் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழரசுக் கட்சி அது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை ஒரு இம்மியளவு முன்னேற்றத்தை நோக்கியும் நகரவில்லை. எழுபதுக்களில் தங்களுடைய வீழ்ந்துபோன வாக்கு வங்கியைத் தக்க வைக்க வே பிரபாகரன் போன்ற இளைஞர்களை உசுப்பேத்தி தமிழீழக் கோரிகையை வைத்து, அந்த இளைஞர்களாலேயே மரணத்தையும் தழுவினர். அந்த இளைஞர்களும் ஆளுக்கு ஆள் சகோதரப்படுகொலை செய்து தங்களைத் தாங்களே அழித்தனர். அன்று தப்பித்த இரா சம்பந்தன் ஒருவாறு இறுதியில் வே பிரபாகரனை பொறியில் வீழ்த்தி மீண்டும் தமிழ் தேசியத்தின் ஒற்றைத் தலைவரானார். அன்று மரணத்தில் இருந்து தப்பிய இன்னும் சிலரும் குட்டிக் குட்டித் தலைவர்களாகினர். இப்போது ஒரு காலத்தில் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதியான தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு ஒரு போட்டி வந்துவிட்டது.

 

இத்தேர்தல் முடிவுகளில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றதோ இல்லையோ புலம்பெயர் தமிழ் – புலித் தேசியவாதிகளின் அரசியல் நலன்கள் பேணப்பட வேண்டும், இலங்கை அரசியலில் தங்களுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதில் புலம்பெயர் சக்திகள் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றனர். புலம்பெயர் புலித் தேசியவாதிகளைப் பொறுத்தவரை ஏ சுமந்திரன் தீண்டத்தகாத ஒரு மனிதர். அதற்கு சுமந்திரனுடைய அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல சுமந்திரனுடைய அறிவும் ஆளுமையும் அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை கொடுக்கின்றது. தமிழரசுக் கட்சிக்கு சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசிய அரசியலில் புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளின் குரல்களுக்கு இடமிருக்காது. மிகத் தீவிர புலித்தேசியத்தின் குரல்களுக்கு தமிழரசுக் கட்சியில் இடமிருக்காது.

 

அதனால் என்ன விதப்பட்டும் எஸ் சிறீதரனை வெல்ல வைப்பதில் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சிக்கு தலைவரானால் புலத்தில் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அவருக்கு அரசியல் வகுப்பும் ஆங்கில வகுப்பும் எடுப்பார்கள். தன்னுடைய வங்கிக் கணக்கை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் கிளிப்பிள்ளை மாதிரி எஸ் சிறிதரன் கேட்பார் என்ற நம்பிக்கை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் நிறையவே உள்ளது. அவ்வாறு லண்டனுக்கு மகனையும் அனுப்பி வைத்துள்ளார் எஸ் சிறிதரன்.

 

ஏ சுமந்திரனும் எஸ் சிறிதரனும் 2010இல் ஒரே காலகட்டத்தில் அரசியலுக்குச் சென்றவர்கள். இன்றுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, கேள்வி ஞானம், அரசியல் அறிவு, உள்ளுர் சர்வதேச தொடர்புகள் என்று பார்க்கின்ற போது ஏ சுமந்திரன் பலமானவராக உள்ளார். மக்கள் மட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் எஸ் சிறிதரன் பலமாக உள்ளார். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரை இவர்களில் யாரும் இதுவரை அவர்களுக்காக எதனையும் குறிப்பாக சாதித்துவிடவில்லை. ஏ சுமந்திரன் சில அரசியல் கைதிகளை தனது தொழில் ரீதியில் விடுதலைபெறக் காரணமாக இருந்ததைத் தவிர.

 

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு எஸ் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டால் அந்தக் கட்சியில் தொடர்ந்து செயற்பட ஏ சுமந்திரன் அனுமதிக்கப்பட மாட்டார். அதனை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகள் அனுமதிக்காது. மேலும் ஆளுமையுள்ள சுமந்திரன் தொடர்ந்தும் கட்சியில் இருப்பது எஸ் சிறிதரனின் தலைமைத்துவத்தை எப்போதும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். அடுத்த ஆண்டு நாடு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற போது விரும்பு வாக்குகளுக்காக இருவரும் கடுமையாக மோத வேண்டிவரும். அது ஏ சுமந்திரனுக்கு மிக நெருக்கடியாக அமையும். அதனால் ஏ சுமந்திரன் தமிழரசுக்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தால் பிரிந்துசெல்வதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

 

மாறாக, எஸ் சிறிதரன் தோற்கடிக்கப்பட்டால் அவர் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியில் இருப்பாரா அல்லது பிரிந்து செல்வாரா அல்லது கட்சி தாவுவாரா என்பது அவருக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையிலும் புலம்பெயர் புலித் தேசியவாதிகளின் நிலைப்பாட்டிலும் தங்கியுள்ளது. சிறிதரன் தேர்தலில் தோற்றுப் போனாலும் தமிழரசுக்கட்சியில் தொடர்ந்தும் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. கிளிநொச்சியில் உள்ள பலமான அந்த வாக்கு வங்கியை அவர் இழப்பதற்கு துணிய வாய்புகள் குறைவு. ஏற்கனவே எம் சந்திரகுமாருடைய சமத்துவக் கட்சி அவருடைய வாக்கு வங்கியை உடைத்து வளர்ந்து வருகின்ற நிலையில் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியை உடைத்து வெளியேறினால் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அவருடைய வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்துவது கடினமானதாக அமையும்.

 

தேசம்நெற்க்கு கிடைக்கின்ற தகவல்களின்படி புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் தங்களை உயர்சாதியினராகக் கருதுபவர்கள் மத்தியில்; எஸ் சிறிதரனுக்கு செல்வாக்கு உள்ள போதிலும் ஒடுக்கப்பட்ட வன்னியில் வாழும் மலையக மக்கள் மத்தியில் அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை. அதைவிடவும் சாணக்கியன் உட்பட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 325 வரையான கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகின்றது. எஸ் சிறிதரன் செல்வாக்கு ஆனையிறவுக்கும் கிளிநொச்சிக்கும் அப்பால் உள்ளதா என்பதும் கேள்விக்குறியே.

 

இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரும்.

நாளைய செய்தித் தலைப்பு:

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !”

சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”