களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 08 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 08
தேசம்: 1983 யூலைக்கு முதல் நடந்த விடயங்களை திருப்பி பார்ப்போம். 70க்கு பிற்பட்ட காலங்களில் தமிழர் எழுச்சியை தமிழரசுக்கட்சி தலைமை தாங்குகிறது. தொடர்ந்து 1980களுக்குப்பின் ஆயுதக்குழுக்களின் கைக்கு மாறுகின்றது. இந்த காலகட்டங்களில் தமிழரசுக் கட்சி – தமிழர் விடுதலைக் கூட்டணி – பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி – விடுதலை இயக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு எப்படி இருந்தது அதனை உங்களால் எப்படி உணர முடிந்தது…? முன்னைய பேட்டிகளில் உங்களுக்கு தமிழரசுக்கட்சி மீது பல விமர்சனங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் பொதுவாக நிலை அப்பிடி இல்ல. அந்த நிலை எப்படி ஆனதாக காணப்பட்டது…?
அசோக்: தமிழரசு கட்சியின், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடத்தை தொடர்பாக தான் பிரச்சினை இருந்ததே தவிர தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி பேசிய அரசியல் தொடர்பாக எங்களுக்கு சிக்கல் இருக்கவில்லை. இக் கட்சிகள் பேசிய அரசியல் யதார்த்தமான அரசியல். பேரினவாத ஒடுக்குமுறை, குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான பிரச்சனை, தமிழர்களுக்கான சம உரிமை இன்மை, சிறுபான்மை இனங்கள் நசுக்கப்படுகிறது என்று கூறிய கோரிக்கைகள் உண்மையானவை. அந்த எதிர்பார்ப்புகள் அவர்களுடைய உரிமை தொடர்பான விடயங்கள் உண்மையானவை. எனக்கு இக் கட்சிகளின் நடத்தை தொடர்பாக விமர்சனங்கள் இருந்தது. செயற்பாடு தொடர்பாக அதனுடைய அதிகாரம் தொடர்பான பிரச்சனைகள் நிறைய இருந்தது.
தேசம்: குறிப்பாக
அசோக்: தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வடிவாக கையாண்டு இருக்க முடியும் என நினைக்கிறேன். அவர்களினுடைய அரசியல் முக்கியமாக பாராளுமன்ற கதிரைகளுக்கான அரசியலாக, பேரம் பேசுவதற்கான அரசியலாகபோய்விட்டது. தமிழ் மக்களுக்கான அரசியலாகவன்றி அது தங்களுடைய கட்சி உறுப்பினர்களுக்கான அரசியலாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் செல்வநாயகம் இருக்கும்போதும் அந்த அரசியல் வேறு மாதிரித்தான் இருந்தது. செல்வநாயகம் இருக்கும் வரை ஓரளவுக்கு தமிழரசுக்கட்சி தமிழர்களின் உரிமைக்கான ஒரு குரலாக இருந்தது. ஏனென்றால் முஸ்லிம்களுக்கான தனியலகு பற்றி கூட செல்வநாயகம் பேசி இருக்கிறார். அவர் இனங்களுக்கிடையிலான சமத்துவம், ஒற்றுமை பற்றி எல்லாம் பேசி இருக்கிறார். இந்த உணர்வுகள் பின்பு தமிழரசுக் கட்சியிடம் இருந்ததில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிடமும் இருக்கவில்லை. முஸ்லிம் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கட்சிகளை விட்டு வெளியேறியதற்கு காரணமும் இந்த கட்சிகளின் சந்தர்ப்பவாதம்தான்.
தேசம்: நீங்கள் கூறுகின்ற இந்த அரசியல் விளக்கம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே எப்படி பிரதிபலித்திருந்தது …? அல்லது தமிழரசு கட்சியோ அதன் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியோ தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லை என்பதை அவர்கள் எப்படி உணர்ந்தனர்…?
அசோக்: வெகுஜன பரப்பில் தமிழரசுக்கட்சி பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி உன்னதமான ஒரு அமைப்பாகவே உணரப்பட்டது. விமர்சனங்கள் இருந்தது. உதாரணமாக எங்களுடைய குடும்பத்தை எடுத்துப் பார்த்தால் கூட எனக்கு விமர்சனம் இருந்த அளவிற்கு, என்னுடைய குடும்பத்தினரிடம் விமர்சனங்கள் எதுவும் இருக்கவில்லை. எங்களுடைய கிராமத்தில் கூட விமர்சனங்கள் இருக்கவில்லை. அது யாரிடம் வந்தது அரசியல் சமூக அறிவு பெற்ற – இடதுசாரித் தோழர்கள் மத்தியில் தான் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றிய முரண்பாடுகள் வருது. நீங்கள் கேட்டது போல ஏன் ஆயுதக் குழு இயக்கங்கள் தோன்றின என்பதற்கு இன்னொரு விதமான அரசியல் இருந்தது. என்னவென்றால், தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னை ஒரு தமிழர்களின் பாதுகாப்புக்கான பாராளுமன்ற கட்சியாக தன்னை நினைத்திருந்தால் குறைந்தபட்சமாவது தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்து இருக்கலாம். ஒரு உரையாடல் முக்கியம். முரண்பாடு தோன்றிய சமூகத்துடனான உரையாடல் உங்களுக்கு அவசியம். அந்த உரையாடல் எப்பொழுதும் நிகழ்ந்ததில்லை. சிங்கள மக்கள் மத்தியில் தமிழரசுக்கட்சியினர், தமிழர் விடுதலைக்கூட்டணி யாருமே தமிழர்களின் பிரச்சினையை கொண்டு செல்லவில்லை. இயக்கங்களும் கொண்டு செல்லவில்லை.
புளொட் அதற்கான முயற்சியை ஓரளவு மேற்கொண்டது. JVP யில் இருந்து பிரிந்த தோழர்களோடு ஒரு உறவை வளர்த்தது. அதற்கான ‘ தமிழிழம்- சிறிலங்கா நட்புறவுக் கழகம்’ என்ற பெயரில ஒரு அமைப்பை உருவாக்கி இருந்தம். இவ்அமைப்பில் குமரன், முரளி, ஈஸ்வரன், கௌரிகாந்தன் , நானும், சிங்கள தோழர்களும் இணைந்து தென்னிலங்கையில் பல வேலைத்திட்டங்களை தொடங்கினோம். ஆனா புளொட் தலைமை ஒத்துழைப்பு கொடுக்கல்ல. தொடங்கின கையோட முடிஞ்சி போய்ச்சி. சிங்களத் தோழர்களுக்கு எங்களில சரியான ஏமாற்றம். என்டாலும் பறவாயில்ல புளொட் ரேடியோவில சிங்கள சேவிச நடத்திச்சு. அது சிங்கள மக்கள மத்தியில் தாக்கத்தை கொடுத்ததென்றுதான் சொல்லவேண்டும்.
தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி நினைத்திருந்தால் அவர்கள் நிறைய செய்திருக்கமுடியும். அதற்கான வளங்கள் இருந்தன. அதில் அங்கத்துவம் வகித்தவர்கள் எல்லோரும் சட்டத்தரணிகள். அவர்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்திருக்காது. நன்றாக ஆங்கிலம் கற்று இருந்தார்கள் பல்வேறு தரப்பினரை சந்தித்து தமிழர்களின் பிரச்சினையை எடுத்துரைத்திருந்திருக்கலாம். எமது நியாயங்களை சிங்கள மக்கள் புரிந்து கொணடிருப்பாங்க.
தேசம்: இந்தக் காலகட்டங்களில் தலைவர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்காக கைகளைப் கிழித்துக் கொள்ளும் அளவிற்கு எழுச்சிமிக்க இளைஞர்கள் அலை ஒன்று வடக்கில் இருந்தது. இதேபோன்றுதான் நிலை கிழக்கிலும் இருந்ததா…?
அசோக்: ஓ ஓ…, கிழக்கிலும் உணர்ச்சி அரசியல் இருந்தது. எங்களின் கிராமத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டங்கள் நடைபெற்றபோது நிறைய இளைஞர்கள் கைகளைப் கிழித்துக்கொண்டு ரத்தத்தை நெற்றியில் பூச கூடிய அளவிற்கு காசி ஆனந்தனுக்கு – அமிர்தலிங்கம் ஆகியோருக்கு எல்லாம் பெரிய ஆதரவு இருந்தது.
தேசம்: நீங்கள் குறிப்பிடக்கூடிய இந்த நிலையில் பின்னர் மாற்றங்கள் ஏதாவது வந்ததா…?
அசோக்: அந்த காலத்திலிருந்த தலைமுறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் வந்திருக்கவில்லை. என்னுடைய தலைமுறையினரிடம் மாற்றம் வந்ததே ஒழிய முன்னையவர்களிடம் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. இன்றைய காலத்தில் தமிழரசு கட்சியின் வாக்கு வங்கி அவர்கள்தான். இந்தத் தலைமுறையினர் தான் இன்று 65 – 75 வயது தலைமுறையினராக உள்ளனர். இவர்களுடைய வாக்குவங்கி தான் தமிழரசுக்கட்சியின் பெரும் வாக்கு வங்கியாக உள்ளது. அதற்குப் பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் அரசியல் ரீதியாக வளர்க்கப்பட்ட – ஓரளவு சிந்திக்ககூடியவர்களாக இருந்தனர். இவர்கள்தான் தமிழரசுக் கட்சி மீதான அரசியல் விமர்சனங்கள் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். மற்றும்படி தமிழரசுக் கட்சிக்கான வாக்கு வங்கி என்றுமே உறுதியாக இருந்துள்ளது. பேரினவாதத்தின் ஒடுக்குமுறை, புறக்கணிப்பு இருக்கும் வரை தமிழ் அரசுக் கட்சி வாழும். அதற்கு மேல ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.
இன்றும் கூட கடுமையாக நாங்கள் தமிழரசுக் கட்சியை விமர்சிக்கிறோம். ஆனாலும், ஒரு பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குகள் தமிழரசு கட்சிக்கு தான் போகின்றது. அதற்கு மாற்றீடாக எந்த கட்சிகளுமே இல்லை.
தேசம்: நீங்கள் சொல்கின்ற அந்த 82 – 83 கால கட்டங்களிலும் இதே நிலைதானா…? இளைஞர் இயக்கங்கள் அல்லது அமைப்புகள் பெரிய அளவிறகு மக்களின் மனதை வென்றெடுக்கவில்லை என்டுறீங்க.?
அசோக்: ஆம். வென்றெடுக்கவில்லை. ஏனென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணி க்கு மாற்றீடான ஒரு கட்சியை இளைஞர்களால் உருவாக்க முடியவில்லைத்தானே…
குறைந்த பட்சம் ஒரு வெகுஜன அமைப்பைக் கூட உருவாக்க இல்லைத்தானே. இளைஞர்கள் உருவாக்கிய ஆயுத இயக்கங்களிடம் இருந்து பெரும்பாலும் மக்கள் அன்னியப்பட்டு பார்வையாளர்களாகத்தான் இருந்தாங்க. பங்களிப்பாளர்களாக ஒரு காலமும் இருந்ததில்லை.
மக்களுக்கு இயக்கங்கள் தொடர்பாய் பிரமிப்பும், பயமும் இருந்ததே தவிர நெருக்கமான உறவு இருக்கல்ல. சில இயக்கங்கள் மக்களிடம் எஜமான் தன்மையுடன்தான் நடந்துகொண்டன. மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் மக்களுக்கு தண்டனை வழங்கின. மரண தண்டனை கூட கொடுத்தாங்க. அதிகார ஆணவத்தோடு இந்த இயக்கங்கள் நடந்து கொண்டன. பிறகு எப்படி இவை மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்கமுடியும்.
ஒரு விடுதலைப் போராட்டத்தில் மக்கள் பங்களிப்பின் முக்கியத்துவம், அதன் அவசியம் இயக்கங்களால் உணரப்படவே இல்லை. அரசியல் சார்ந்த வெகுஜன அமைப்ப கட்டியெழுப்பேல. ஆயுதம் இருந்தால் காணும் என்ற எண்ணம்தான் இருந்தது.
என்றாலும், புளொட், ஈபிஆர் எல் எப் இரண்டும் மக்கள் பங்களிப்பு, அணிதிரட்டல் போன்ற வெகுஜன வேலைத்திட்டங்களில் ஆர்வம் கொண்டிருந்தன.
காந்தியத்தை தடை செய்யாமல் விட்டிருந்தால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றான அமைப்பாக காந்தியம் வளர்ந்திருக்கும். ஒருவேளை அது ஒரு எழுச்சியாக அமைந்திருக்கும். ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து அரசியல் சமூக மேம்பாட்டு இயக்கமாக அது வந்திருக்க முடியும். காந்தியத்துக்கு இருந்த பெரிய பிரச்சனை ஒரு ஆயுத இயக்கம் அதுக்குள் போகும் போது ஒரு வெகுஜன இயக்கத்திற்கும் ஆயுத இயக்கத்துக்குமான பரஸ்பர உறவு முறையாக – கவனமாக கையாளப் பட்டிருக்க வேண்டும். அது புளொட்டிலும் இல்லை.
தேசம்: இதை இப்படி பார்க்கலாமா…? தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு மிதவாத அரசியலை செய்ததாக இருந்த நிலை மாற்றம் கண்டு ஆயுத அரசியல் தான் தமிழர்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்ற போக்கு தான் அந்த கால கட்டத்தில் இருந்ததா…? அதாவது இவர்கள் அரசியலுக்கானவர்கள்..
அசோக்: தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கம், தமிழர் விடுதலைக்கூட்டணியின், இதனுடைய ஒரு பகுதியாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். இளைஞர் பேரவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உபகுழுவாகதான் உருவாக்கப்பட்டது. பிறகு தமிழ் இளைஞர் பேரவைக்கும் – தமிழர் விடுதலைக் விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு புஷ்பராஜா, வரதராஜப்பெருமாள், முத்துக்குமாரசாமி எல்லாம் பிரிந்தது வேறு வரலாறு. ஆனால், அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உப குழுவாக தான் உருவாக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் போதாமை காரணமாக தான் ஆயுத இயக்கங்கள் உருவெடுத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலில் காணப்பட்ட போதாமை இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஆயுத குழுக்களிலும் காணப்பட்டது.
தனி நாடு, தமிழ் ஈழம், பிரிவினை இப்படித்தான் எங்கள் நோக்கமும் இருந்ததே தவிர உலக அரசிலை யதார்த்தத்தை நாங்கள் அக்காலத்தில புரிஞ்சி கொள்ளல. எந்த ஒரு அரசியல் விழிப்பூட்டல்களும் இடம்பெறவில்லை. ஆயுத இயக்கங்கள் திடீர் வளர்ச்சியடைந்தன.
தேசம்: யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய தமிழர் மாவட்டங்களில் காந்தியத்தின் மீதான ஈடுபாடு காணப்பட்டதும் பிறகு பல இளைஞர்கள் அரசியல் மயப் படுத்தப்பட்டனர் என்ற போக்கு ஒன்று இருக்குது. அதே சமயம் வடக்கிலிருந்து காந்தியம் செய்யப்படல. அங்க வந்து மாணவர் இயக்கங்கள் தான் ஏற்பட்டிருந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பி கொண்டிருந்தார்கள். இவர்களின் அரசியலும் ஆயுத அரசியலாகத்தான் இருந்ததுவா?
அசோக்: மாணவர் அமைப்பு கெஸ் வந்து ஓரளவு அரசியல் வகுப்பு நடாத்தி இருக்கும் என நினைக்கிறன். எல்லா மாணவர் அமைப்புக்களும் ஆயுத போராட்டத்தை நோக்கித்தான் அரசியல் மயப்படுத்தப்பட்டன. அன்றைய காலத்தில் வெகுஜன அமைப்புக்கள் இயக்கங்களால் தொடங்கப்பட்டாலும் அவற்றிக்கு தனித்துவமான வெகுஜன அரசியல் இருக்கல்ல. இயக்கங்களின் கிளைகளாகத்தான் அவை இருந்தன.
யாழ்ப்பாணத்தில் புளொட் மாணவர் அமைப்பான தமிழிழ மாணவர் பேரவை TESO கலவரத்திற்கு பிறகுதான் தீவிரமாக தொடங்குகிறது. TESO தனித்துவமான வெகுஜன அமைப்பாக செயற்பட முயன்றும் தலைமை இடம் கொடுகல்ல.புளொட்டின் யாழ் மாவட்ட அரசியல்பற்றி பின்னர் கதைக்கும் போது இதுபற்றி சொல்றன். புளொட்டின் தொழிற்சங்க அமைப்புக்களும் இப்படித்தான்.
தேசம்: கெஸ்ல இருந்த எல்லாருமே கடைசியா ஈபிஆர் எல்எப் ல போய்ச்சேருகினமா…
அசோக்: அப்படித்தான் கெஸ் , ஈபிஆர் எல்எப் ஆக மாற்றம் பெறுகிறதென நினைக்கிறன். அதன்ற வரலாறு எனக்கு தெரியல்ல. கெஸ் வந்து மாணவர்களுக்கூடாக கட்டமைக்கப்பட்டதால் ஓரளவு அரசியல் தேர்ச்சி அவங்களுட்ட இருந்திருக்கு. ஏனென்டால் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள் நிறைய பேரோட கதைக்குறப்போ அரசியல் ரீதியான உரையாடல்களை செய்யக்கூடியதாக இருந்தது. மற்ற அமைப்புகள்ட்ட அது இருக்கல.
தேசம்: அப்ப இந்த தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புகளின் அரசியல் வளர்ச்சி…
அசோக்: தமிழ் இளைஞர் பேரவைட்ட தமிழரசு கட்சியின்ற வலதுசாரி அரசியல்தான் இருந்தது. . இடதுசாரி அரசியல் அவங்களிட்ட இல்லை. இடது சாரி அரசியல் கொண்டவங்க காலப்போக்கில் புளொட்டிற்கும் ஈபிஆர்எல் எப்பிக்கும் போறாங்க.
தேசம்: இளைஞர் பேரவை யாழ்ப்பாணத்துக்கு வெளியிலயும் பலமாய் இருந்ததா…?
அசோக்: ஓம் . பலமாய் இருந்தது. மட்டக்களப்பில தமிழ் இளைஞர் பேரவையை காசி ஆனந்தனோடு சேர்ந்து உருவாக்கியதில வசந்தகுமார் முக்கியமானவர். இவர் ரியுட்டரி வைத்திருந்து படிப்பித்தவர். இவருக்கூடாகத்தான் நிறையபேர் தமிழ் இளைஞர் பேரவைக்கு வாறாங்க. காசி ஆனந்தனோடு சிறைக்கு சென்று கடுமையான சித்திரவதைகளை அனுபவிச்சவர்.ஆனா அவர் பெயர் மறக்கப்பட்டுவிட்டது. இவங்களையெல்லாம் பதிவு செய்ய வேணும். நடேசானந்தம், வாசுதேவா, வேணுதாஸ், பரமதேவா, சிவநாதன், ராம்ராஜ் எல்லாம் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தாக்கள் தானே இயக்கங்களுக்கு வந்தது.வாசுதேவா, சந்ததியார், வரதராஜபெருமாள், கி.பி அரவிந்தன், தங்ககேந்திரன் எல்லாம் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தாக்கள்தானே. புஸ்பராஜா, வரதராஜபெருமாள், கி.பி அரவிந்தன் தங்ககேந்திரன் எல்லாரும் ஈபிஆர்எல்எஃப் க்கு போய்ட்டாங்கள். சந்ததியார், வாசுதேவா, ராம்ராஜ் போன்றவங்க புளோட்டுக்கு வந்துட்டாங்கள். காசி ஆனந்தன், வேணுதாஸ் பரமதேவா எல்லாரும் எல் ரீ ரீ ஈ க்கு போறாங்க.
தேசம்: அப்ப இந்த இயக்கங்கள்ட வளர்ச்சிக் கட்டத்தில இந்த இயக்கங்கள்ன்ட பொருளாதார தேவைகள் எல்லாம் என்னென்று நிறைவேற்றப்படுது…? ஒரு தொகையான இளைஞர்கள் அதுக்குள்ள இருக்கேக்குள்ள… ஏற்கனவே அங்கு வங்கிக் கொள்ளைகள் எல்லாம் நடந்திருக்கு. இதெல்லாம் எவ்வளவு தூரம் சமூகத்தில பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கு…?
அசோக்: புளோட்டை பொருத்தவரை மக்கள்ட்ட தான் தங்கியிருந்தது. நாங்க மக்கள் மத்தியில தான் சாப்பாடு எல்லாம். பெரிய செலவில்லை. நாங்க போற இடத்தில மக்கள் மத்தியில் சாப்பிடுறது, பிரச்சாரம் பண்றது. ஏனைய அரசியல் வேலைத்திட்டங்களுக்கு, கூட்டங்களுக்கு பலர் அன்பளிப்பு நிதி தந்து உதவினாங்க. ஆயுத ரீதியான இயக்கம் ஒன்றுக்குத்தான் பணம் தேவை. வெகுஜன இயக்கங்களுக்கான ஆதரவு பொருளாதார உதவி மக்களுட்ட இருந்து கிடைத்தது. எல்லாத்தையும் மக்களிட்டையே பெற்றுக் கொண்டோம். வெகுஜன அமைப்பாக தொடங்கி ஆயுத இயக்கமாக மாறுகின்ற போது தான் பணம் தேவைப்படுது. அந்தக் கட்டத்தில்தான் கிளிநொச்சி வங்கி கொள்ளை அடிக்கப்படுது புளோட்டால. எப்ப வந்து நீங்க ஒரு ஆயுத இயக்கமா செயல்பட ஆரம்பிக்குறீங்களோ அப்பதான் பணம் ஒரு தேவையா தெரிய தொடங்குது.
தேசம்: அந்த நேரத்தில் பெரும்பான்மையான அமைப்புக்கள் வங்கிக் கொள்ளையில – தவறு என்றும் சொல்ல ஏலாது . இது ஆனால் சர்வசாதாரணமாக நடைபெற்று இருக்குது.
அசோக்: ஓம். நடந்திருக்கு. வங்கிக்கொள்ளைல ஈடுபட்டிருக்காங்க.அது சர்வசாதாரணமாக நடந்தது. வெகுஜன அமைப்புகள் மக்கள் மத்தியில் போய் பேசுதல், அவர்களோடு உறவுகளை வளர்த்தல், மக்களின்ர பங்களிப்பு, மக்களை அணிதிரட்டுதல் மக்கள் போராட்டம் என்ற ஒரு படிமுறை வளர்ச்சி கூடத்தான் ஆயுதப் போராட்டம் நடக்கும்.இப்ப நீங்க கியூபா, வியட்நாம் உட்பட எல்லா இடமும் பார்த்திங்க என்டா நீண்டகால படிமுறை வளர்ச்சி ஒன்று இருக்கு.
எங்க போராட்டத்தில மக்கள் மயப்பட்டபோராட்டங்களில நம்பிக்கை இருகல்ல. ஆயுதப்போராட்டம் ஒன்றுதான் தீர்வென நம்பினோம். அப்ப ஆயுதங்களுக்கு, பயிற்சிகளுக்கு பணம் வேணும் . ஒரே தீர்வு வங்கிக் கொள்ளைகள்தான். அதனோட ஜூலை கலவரம் வந்துட்டு உடனடியாக… அப்ப இங்க அந்த நீண்ட கால வெகுஜன இயக்கத்துக்கான அவகாசம் இல்லாம போயிட்டு.
தேசம்: ஆயுத இயக்கங்கள் கிட்டத்தட்ட ஒரு short cut அதான் பார்க்குறினம் என. மக்கள்கிட்ட போய் அரசியல் செய்யாமல் வங்கிகளையும் சிலஇயக்கங்கள் தனிப்பட்ட மக்கள் சொத்துக்களையும் கொள்ளையிட்டு உள்ளன.
அசோக்: சில இயக்கங்கள் செய்துள்ளன. முழுக்க முழுக்க ஆயுத இயக்கங்கள் என்னதான் சித்தாந்தங்கள், மக்கள் போராட்டம் என்றெல்லாம் அணி திரட்டுதல் என்றெல்லாம் கதைத்தாலும் கூட அவர்கள் முழுவதும் ஆயுத கவர்ச்சியோடதான் இருந்தாங்க.. ஆயுத பலத்தின் ஊடாக புரட்சி செய்து தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் எல்லா இயக்கத்திடமும்இருந்தது. அந்த நம்பிக்கை தான் எங்ககிட்ட கூட இருந்தது. ஆனால் இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது விமர்சனத்துக்குரியதாகத்தான் இருக்குது.
தேசம்: இந்த வங்கிக் கொள்ளைகள் இதுகளால மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு இருக்காங்க. வங்கிக் கொள்ளைகள் மட்டுமில்ல. சங்க கடைகள் கூட அடித்து உடைக்கப்பட்டிருக்குது. இதனால் சாதாரண மக்கள் எவ்வாறான பாதிப்பை எதிர் கொண்டார்கள். நான் நினைக்கிறேன்; களுதாவளை உங்களுடைய கிராமத்தில் கூட மக்கள் சேமிப்புக்காக கொடுத்திருந்த நகைகளை கூட கொள்ளை அடிப்பதற்காக திட்டம் ஒன்றும் இருந்தது.
அசோக் : ஓம். அது வேறு ஒரு அமைப்பு ஒன்று. அப்ப நாங்க JVP ல இருந்து வெளியேறி இருந்த காலகட்டத்தில், வெவ்வேறுபட்ட அமைப்புகள் வந்து எங்கள சந்திப்பாங்க. இப்ப வெளிப்படையா கதைக்கலாம். ஈரோஸ் அமைப்பு அன்னலிங்கம் ஐயா எங்களோட உறவு வைத்திருந்தவர். அவருடைய பிரதானமான நோக்கமாய் இருந்தது எங்க ஊர் வங்கியை கொள்ளை அடிப்பது. இப்படியான கிராமிய வங்கிகளில நகைகளை ஈடு வைச்சிருக்கிறவங்க ஏழை விவசாயிகள்தான். அவங்களுக்கு இந்த கிராமிய வங்கிகளினால் நஷ்ட ஈடு கொடுக்கமுடியாது; பாவம் மக்கள். மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டீங்க என்டு சொன்னா அது எங்களை மக்கள் மத்தில இருந்து அன்னியப்படுத்திவிடும். தடையாக போயிடும். நீங்க இப்படியான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டு போலீசுக்கு தெரியவந்தால் உங்களால அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் போய்விடும். ஆனா இந்த அமைப்புகள் முழுக்க, மக்கள் இயக்கங்களை கட்டமை த்து மக்களிடம் ஆதரவும் நிதியும் பெறுவதை விடுத்து , பொருளாதார ரீதியான வங்கிக் கொள்ளைகளில் தங்கியிருந்தனர். பொருளாதார ரீதியாக மத்தியில் மக்கள் நிதி திரட்டவும், மக்கள் மத்தியில் தங்கி வாழ்வதற்கான சாத்தியங்கள் இருந்தது.அப்படியான நேரத்தில் இந்த வங்கிக் கொள்ளைகள செய்ய நாங்க விரும்பல.
தேசம்: அப்ப வங்கி கொள்ளை இடம் பெற்றதா…?
அசோக்: ஓம் அது நடந்தது வேறு இடத்தில். ஆனால் அது நாங்கள் கடுமையாக எதிர்த்தனாங்க.
தேசம்: இந்த வங்கிக் கொள்ளைகளில் எடுக்கப்பட்ட பணமும் நகையும் எப்படிப் பயன்படுத்தப்பட்டது இந்த இயக்கங்களால…?
அசோக்: அனேகமான வங்கிக் கொள்ளைகள் அனைத்தும் பயிற்சிகளுக்கு ஆயுதங்களுக்கு செலவழிக்கப்பட்டிருக்கு. . தனிநபர் ரீதியாக அது எங்கேயுமே பயன்படுத்தப்படல. ஒரு சில சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் சின்ன சின்ன தவறுகள் நடந்து இருக்கலாமே தவிர , மற்றும்படி அந்தத் தங்கங்களையும், பணங்களையும், நகைகளையும் இயக்கங்கள் தமக்காகவே பயன்படுத்தினர். அதேநேரம் தனிநபர்க்கூடாக பயன்படுத்தப்பட்டது என்று சொன்னா அது யாழ்ப்பாண ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தான்.
தேசம்: அவர்களுடைய அரசியல் செயற்பாடுகளும் வலு மட்டுப்படுத்தப்பட்டதாக தான் இருந்தது. இராணுவ நடவடிக்கைகளும் அவர்கள் மேற்கொள்ளல என …
அசோக்: அது மட்டுப்படுத்தப்பட்ட காலங்களில்தான் கொள்ளைகளும் அடிக்கப்பட்டது. அதுக்குப்பிறகு இயக்கமும் இல்லாம போயிட்டுது. பணமும் அதுக்குள்ள பயங்கர சிக்கலுக்கு உள்ளாகிட்டுது.
தேசம்: மற்ற அமைப்புகளுக்கு அது வழங்கப்பட்ட தாக சொல்லப்படுகிறதே…
அசோக்: தீப்பொறி இயக்கத்திற்கு கொடுக்கப்பட்டதா சொல்லப்படுது. ஐயருக்கு ஊடாக அது கொடுக்கப்பட்டதாக…!
தேசம்: அதைவிட வேற நான் நினைக்குறேன், ரெலி ஜெகன் எல்லாரும் அவர்களுடைய அமைப்பு சார்ந்து சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில் சில தனி நபர் அமைப்புகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு இருந்த காலகட்டம் இருக்கு தானே… குறிப்பாக யாழ்ப்பாணத்தில.
அசோக்: இந்த இயக்கங்களின் அதிகரித்த உருவாக்கம் இருக்குதானே.., அது எங்க நடக்குது என்று சொல்லி சொன்னா ஒருவிதமான அதிகார மோகத்தினால, ஆயுத கவர்ச்சியாலதான் இந்த இயக்கங்களின் உருவாக்கம் அமைந்திருந்தது. அதனோட மத்தியதர வர்க்க மனோபாவமான ஹீரோசியம் சுயபிரபல்யம் ஒரு காரணமாக இருக்கு. ஈபிஆர்எல்எஃப் , ஈரோஸ் , புளோட் , ரெலோ புலிகள் எல்லாம் இயக்கங்களாக உருவாக்கப்பட்டிருக்குது. குறைந்தபட்சம் இந்த இயக்கங்களிடம் அதற்கான சித்தாந்தங்கள், அரசியல், இருக்குது. இனிமே புதுசா ஒரு இயக்கம் வருதென்டா இந்த இயக்கங்களின் கொள்கைகள் சித்தாந்தங்களை நடைமுறைகளைவிட வலுவான ஒரு காரணம் தேவையாய் இருக்கும். அப்படியான ஒன்றுமே இல்லை. அப்ப புதுசா இயக்கங்கள் வாரத்துக்கான நோக்கம் எங்க உருவாகுதென்டா நான் சொன்ன இந்தக் காரணங்கள்தான். அதேநேரம் அந்தக் காலத்திலே இயக்கம் என்பது பிரமிக்கத்தக்க ஒரு குறியீடாக போயிட்டு. அதால நிறைய இயக்கங்கள் அந்த காலத்தில வருது. அவற்றை தமிழர்களின் விடுதலைக்கான இயக்கங்களாக பார்க்க இயலாது என்று தான் நான் நினைக்கிறேன். ஏனென்டா உண்மையா அவங்க விடுதலைக்கான உந்துசக்தியாக வரவேண்டும் என்று நினைத்திருந்தால் ஏற்கனவே இருந்த இயக்கங்களில் எதுலயாவது சேர்ந்திருப்பார்கள். ஏதாவது ஒரு அமைப்பை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்படி இல்லாட்டி புதிய அமைப்பை உருவாக்குகின்ற போது ஏற்கனவே உருவாக்கப்பட்ட அமைப்புகளை விமர்சனத்திற்கு ஊடாக கற்றிருக்கோனும். பாக்கப் போனா எல்லாரும் தனிநபர் தாக்குதல்களை நடத்தினார்கள். எல்லாம் தனிநபர் பயங்கர வாதச் செயல்களாகத்தானே இருந்திருக்கு.
தேசம்: நான் நினைக்கிறேன் இயக்கங்கள்ட எண்ணிக்கை அதிகரித்தது இந்த ஜூலை கலவரத்துக்கு முன்னமே தானே.
அசோக்: ஈரோஸ் , ஈபி.ஆர்.எல்.எப், புளோட் ,ரெலோ – எல்ரிரீ இந்த இயக்கங்கள்ட தோற்றம் வருது. நான் நினைக்கிறேன் எவ்வளவு இயக்கம் வந்ததே எங்கட போராட்டத்தினுடைய தோல்விதான். ஒரே கோட்பாட்டுக்காக – ஒரே கொள்கைக்காக ஒரே லட்சியத்திற்காக போறம் என்று சொன்னால் ஈபி.ஆர்.எல்.எப்- ம் மார்க்சிசம் கதைக்குது , ஈரோசும் மாக்சிசம் கதைக்குது , புளோட்டும் மாக்சிசம் கதைக்குது ஆனா எல்லாம் வெவ்வேறு பட்ட அமைப்புக்களா தானே இருக்குது. குறைந்தபட்சம் உடன்பாடுகள் கூட இல்லை தானே. ரெலோவும் – எல்ரிரீயும் ஆயுதம் சார்ந்து சிந்திக்கும் இயக்கங்கள். என்றாலும்கூட இவர்களுக்கு இடையிலான ஒருமைப்பாடு எங்கேயும் இருக்கல்ல தானே. எல்லாமே மத்திய தரவர்க்க குணாம்சங்களோடு உறைந்து போன இயக்கங்கள்தான். அதன்ர வெளிப்பாடுதான் இத்தனை இயக்கங்களும், முரண்பாடுகளும், சண்டைகளும் , அதிகாரப் போட்டிகளும், அழிவுகளும். மக்கள் நலன்களைவிட தனிநபர் மேலாதிக்க மனோபாவம் , சுயநலம், அதிகார ஆசைகள்தான் நம்ம போராட்ட இயக்கங்களை அழிச்சது.இன்றும் தமிழ்க் கட்சிகளிடம் இதுதானே மேலோங்கி இருக்கு.
தேசம்: அப்ப இப்படியான சூழலில் உங்களைப் போன்றவர்கள் அரசியல் செய்கின்ற போது எப்படியான பிரச்சனைகளை எதிர் கொண்டீர்கள்..? மற்ற இயக்கங்க ங்கள் ஆட்களை உள்வாங்கேக்குள்ள எப்படி உங்கள வித்தியாசப்படுத்துறீங்க…;
அசோக்: ஜூலை கலவரத்துக்குப் பிறகு இயக்கங்களோட ஆட்சேர்ப்பு என்பது கடும் விமர்சனத்துக்கு உரியதுதான். இவர்கள் சித்தாந்த ரீதியாக வந்த ஆட்கள் இல்லை தானே. ஒரு ஆர்வம் இருக்கும் தானே .
அதுலயும் நிறையபேர் ஆயுத கவர்ச்சி காரணமாக எந்த இயக்கத்திற்கும் போகத் தயாராக இருந்தார்கள். ஓரளவு சித்தாந்த ரீதியாக அரசியல் ஆர்வம் உடையவர்கள் ஈபிஆர்எல்எஃப் ஐ தேர்ந்தெடுப்பார்கள் – ஈரோசை தேர்ந்தெடுப்பார்கள் – புளோட்டை தேர்ந்தெடுப்பார்கள். வெறும் ஆயுத கவர்ச்சி கவர்ச்சி உடையாக்கள் அதிகமாக ரெலோவுக்கும், எல்ரிரிக்கும் தான் போனார்கள். எங்களைப்போன்ற சிந்தனை கொண்டவர்களுக்கு இந்த ஆள் சேர்ப்பு பெரிய சிக்கல்தான். இந்தியா ,பின்தள பயிற்சி எல்லாம் எங்கட சிந்தனைகளுக்கு, செயற்பாடுகளுக்கு இடம்இல்லாமல் செய்து விட்டது. என்டாலும் 83 ஜூலை கலவரத்திற்கு பின் அந்த நேரத்திலும் நாங்க யாழ்ப்பாணத்தில அரசியல் வகுப்புக்கள் வெகுஜனஅமைப்புக்கள் என்று ஏதோ நம்பிக்கையில வேலை செய்ய தொடங்கி இருந்தம்.
தேசம்: அப்ப 1983 ஜூலை கலவரம் – திருநெல்வேலி தாக்குதல் வரைக்கும் பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்று நினைக்கிறேன். அப்படித்தான..?
அசோக்: 83 திருநெல்வேலி தாக்குதல் நடந்த வரைக்கும் பாரிய இராணுவ தாக்குதல் அதுவரைக்கும் நடக்கல. 13 பேர். எல்ரீரியிட முதல் தாக்குதல் அதுதான் என நினைக்கிறன்.
தேசம்: நான் நினைக்கிறேன் அடுத்த பதிவில் அதை செய்யலாம் என்று.