தமிழ் அரசியல் கைதிகள்

தமிழ் அரசியல் கைதிகள்

தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் – சபையில் மனோகணேசன் கோரிக்கை!

“தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டும்.” என மனோ கணேசன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச. 08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்நது தெரிவிக்கையில்,

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தெரிவிக்கும்போது, இன்னும் 40 பேரே அவ்வாறு சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பான விசாரணைகள் சம்பந்தமாகவும் தெரிவித்தார்.

எனினும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை கட்டங்கட்டமாக அல்லாமல் ஒரே தடவையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும். அத்தகைய நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் மூலமே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும்.

ஏற்கனவே கடந்த தீபாவளியின் போது எட்டுப் பேரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தது போன்று எதிர்வரும் பொங்கல் தினத்திலும் மேலும் சிலரை விடுதலை செய்யுமாறு நாம் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதேவேளை அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் வரவு -செலவுத் திட்டத்தில் மலையக தோட்டப்பகுதி மக்கள் தொடர்பில் எத்தகைய வேலை திட்டங்களும் முன் வைக்கப்படவில்லை.

தற்போதைய நிலைமையில் நிவாரணங்களை வழங்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றாவது குறிப்பிட்டிருக்க வேண்டும்.

நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் பேசப்படும் நிலையில், கிராமப் புறங்களில்  அது 36 வீதமாகவும் நகர்ப்புறங்களில் அது 46 வீதமாகவும் காணப்படுவதுடன் மலையகத் தோட்டப்புறங்களில் அது 53 வீதமாகவும் காணப்படுகின்றது.

அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதுடன் தோட்டப் பகுதி மக்களுக்காக அரசாங்கம் எத்தகைய திட்டத்தை முன்னெடுக்கப் போகின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமுர்த்தி உதவி வழங்குவது முறைப்படுத்தப்பட வேண்டும் அதற்காக தற்போதுள்ள சமுர்த்தி பட்டியலை நீக்கிவிட்டு மின் கட்டண பட்டியலை வைத்து அதற்கான செயற் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் நியாயமானதாக அமையும் என்பதால் அதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

“தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பாக அடுத்தவாரம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் விரிவான பேச்சு ” – மாவை சேனாதிராஜா

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பேச்சு நடத்தியுள்ளார். இது தொடர்பில் அடுத்த வாரம் விரிவான சந்திப்பொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அவர் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்ததாவது:-

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தொலைபேசியூடாக என்னைத் தொடர்புகொண்ட வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நேரில் பேசுவோம் என்று கூறினார். அவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட நான், பேச்சை உடன் ஒழுங்கு செய்யுங்கள் என்று அமைச்சரிடம் தெரிவித்தேன்.

இந்தத் தகவலை நான் உடனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரிடம் தெரிவித்திருந்தேன். நாடாளுமன்றத்தில் அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பில் உரையாட வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அதற்கமைய அவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை நாடாளுமன்றத்தில் சந்தித்தனர்.

சிறைச்சாலைகளில் கொரோனாத் தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களைப் பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

தமிழ் அரசியல் கைதிகளைப் பிணையில் விடுவிப்பது தொடர்பில் அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது எனவும், அது பற்றி ஆராய்ந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் கூறினார்.

அதற்கான முன்னேற்பாடாக அடுத்த வாரம் தனது அமைச்சில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விரிவான பேச்சுக்கு ஒழுங்கு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை என்னைத் தொலைபேசியில் மீண்டும் தொடர்புகொண்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சில நிமிடங்கள் பேசினார். இந்த விவகாரம் தொடர்பில் அடுத்த வாரம் தனது அமைச்சில் விரிவான பேச்சுக்கு ஒழுங்கு செய்யப்படும் என்றும், அதற்கான திகதியை அறிவிப்பேன் என்றும் அவர் என்னிடமும் கூறினார்.

அரசின் நடவடிக்கைக்கமைய தமிழ் அரசியல் கைதிகள் பிணையிலாவது விடுவிக்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும். இதை அமைச்சர் தினேஷிடம் நேற்று நான் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தேன் – என்றார்.

இது ஒருபுறமிருக்க “அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர். எனினும் எந்தவித வழக்கும் தொடராது நீண்டகாலமாக இவர்களுக்கு பிணை வழங்காது தடுத்து வைக்கவும் முடியாது  என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் அண்மயில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் அரசியல் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிணையாளர்களாக நிற்பதற்கு நாங்கள் தயார்” – சார்ள்ஸ் நிர்மலநாதன்

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிணையாளர்களாக நிற்பதற்கு நாங்கள் தயார்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம்(06.01.2021) உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பதற்காக அவர்கள் அனைவரையும் உடனடியாக பிணையில் விடுதலை செய்யவேண்டும்.  விடுதலை செய்பவர்களிற்கு பிணையாளர்களாகயிருப்பதற்கு நாங்கள் தயார்.

கொரோனா தொற்றிலிருந்து உயிர்களை பாதுகாக்கவேண்டியதன் நிமித்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நாட்டில் இடம்பெற்றது உரிமை போர்.சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளிற்கு கொரோனா ஆபத்து உருவாகியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

“எமது விடுதலையை துரிதப்படுத்தி, எமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுங்கள்” – கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோள் !

“எமது விடுதலையை துரிதப்படுத்தி, எமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுங்கள்” என  கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இந்த அவசர கோரிக்கையை ஊடகங்கள் வாயிலாக அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களிடம் முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளும் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் ஜி.எச். விடுதிகளில் 48 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். கொழும்பு நகரப் பகுதிகளிலும் சிறைச்சாலைகளிலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாத் தொற்று காரணமாக நாம் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதிகளிலேயே எமக்கான சுயதனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்து வந்தோம். எனினும், கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து அரசியல் கைதிகளுக்கும் கடும் காய்ச்சலுடன் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

நேற்று எமது விடுதிகளைச் சேர்ந்த சிலருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

ஆகவே, மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனச் சிறைச்சாலையில் பொதுச் சுகாதாரப் பிரிவு கவனப்படுத்தியுள்ளது.

போதிய தொற்று நீக்கல் செயற்திட்டம் மற்றும் ஊட்டச்சத்தான உணவு பராமரிப்பு இன்மைகளுக்கு மத்தியில் நாம் தொடர்ந்து விடுதிகளிலேயே சுயதனிமைப்படுத்தல் முறையை மேற்கொண்டு வருகின்றோம்.

நீண்டகாலம் சிறைத்தடுப்பிலுள்ள எம்மவர்களுள் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் வயதானவர்களும் இருப்பதால் அரசியல் கைதிகள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதனைத் தெரியப்படுத்துகின்றோம்.

இவ்வேளையில் அரசியல் கைதிகளான எமது விடுதலையைத் துரிதப்படுத்துவதுடன், எமது உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரி நிற்கின்றோம்” – என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை” – அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில திட்டவட்டம் !

“அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதால் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கமும் அரசுக்கு இல்லை”  என அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (08.12.2020) அரச தகவல் திணைக்களத்தினால் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாட்டின் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. ஆகவே அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை பூச்சியமாகவுள்ளது. தமது தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்களே அரசியல் கைதிகள் எனப்படுவர்.

ஆனால் நாட்டின் அரசமைப்பின் அடிப்படையில் பார்க்கும்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே நாட்டின் சிறைகளில் உள்ளனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டியது அவசியமானதாகும். அத்துடன், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதால் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கமும் அரசுக்கு இல்லை.

எந்தக் கைதிகளும் சிங்கள, தமிழ் கைதிகள் என வேறுபடுத்தப்படுவதில்லை. மாறாக அவர்களது குற்றச்செயல்களின் அடிப்படையிலேயே சிறை வைக்கப்படுள்ளனர். அந்த வகையில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை கைதிகளின் நடத்தை தொடர்பான அறிக்கையின்படி அவர்களின் தண்டனைக் காலத்தை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆனால் கடந்த காலத்திலிருந்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே தான் சிறைச்சாலைகள் அமைச்சர் இந்த நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளார். அதற்கமைய மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அவர்களது நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலம் குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகவும், பின்னர் ஆயுள் தண்டனை வருட அடிப்படையில் 20 வருட தண்டனையாகவும் குறைக்கப்படும் .

இந்தச் செயற்பாடுகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பொருந்தாது. ஆனால் போதைப்பொருள் பாவனையாளர்கள் இதனுள் உள்ளடக்கப்படுவர். அவர்களுக்கு புனர்வாழ்வழிக்கும் நடவடிக்கை இடம்பெறும்” என்றார்.

அதே நேரம் தமிழ் அரசியல்கைதிகளை விடுவிக்குமாறு கோரி இன்றையதினம் (09.12.2020) தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து சந்திப்பை நடத்தியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

“தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது” – மனோ கணேசன்  ட்வீட் !

அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் மீண்டும் சூடு பிடிப்பதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தனது அதிகாரபூர்வ டுவிற்றர் பக்கத்தில் பதிவொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

மறக்கப்பட்ட தமிழ் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரம் தொடர்பில் அமைச்சர்களான நாமல் ராஜபக்சவிடம் யாழ்ப்பாணத்திலும், டக்ளஸ் தேவானந்தாவிடம் மட்டக்களப்பிலும் ஊடங்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் கைதிகள் விவகாரம் குறித்து ஊடகங்களினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாலும், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம் எழுதியுள்ளதன் மூலமாகவும் தற்பொழுது அரசியல் கைதிகளை விடுதலை செய்வது சூடு பிடிக்கிறது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பான மனுவில் கையெழுத்திட்டிருந்த மனோகணேசன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவே அதில் கையெழுத்திட்டதாக குறிப்பிட்டிருந்தமையானது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்ததை தொடர்ந்து அந்த மனுவில் தான் இட்ட கையெழுத்தை வாபஸ் வாங்குவதாக மனோகணேசன் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.