தமிழ் தேசியவாதம்

தமிழ் தேசியவாதம்

தமிழ் வாக்காளரின் மின் அதிர்ச்சி வைத்தியத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்; இரு அமைச்சர்கள் உட்பட 11 பேர் அகற்றப்பட்டுள்ளனர்!

 

இலங்கை எங்கும் என்பிபி சுனாமி! தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்கில் மரண அடிவாங்கியது!! தமிழரசு சாணக்கியன் தேர்தலில் விசேட சித்தி!!!

சென்ற பாராளுமன்றத்திற்கு தெரிவான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஜனா, பிள்ளையான், ராமநாதன் அங்கஜன், டக்ளஸ் தேவானந்தா, செல்வராஜா கஜேந்திரன், எம் ஏ சுமந்திரன் இத்தேர்தலில் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளனர். விக்கினேஸ்வரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இருவரும் பார்பெமிட் விவகாரம் வெளியானதும் தாங்களாகவே தோல்வியை எதிர்பாரத்து தேர்தலில் இருந்து விலகினர். இரா சம்பந்தன் மரணத்தை தழுவினார். இப்படியாக இலங்கைப் பாராளுமன்றத்திலிருந்து 11 பழைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கடந்து அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவவையாகும். ஒரு இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி சுவீகரித்துக்கொண்டுள்ளது. விதிவிலக்காக மட்டக்களப்பில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் மண் கவ்வுகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் தேசிய மக்கள் சக்தி வாக்குகளைக் குவித்து ஆசனங்களையும் குவித்துள்ளது. தமிழ், முஸ்லீம், மலையகக் கட்சிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தேசிய நல்லிணக்கத்தில் நின்று போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா மட்டுமே தமிழர்கள் மத்தியிலிருந்து சென்றும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் வாக்குகளையும் பெற்று மூவின மக்களின் செல்வாக்கோடும் பாராளுமன்றம் சென்ற ஒரே தமிழ் வேட்பாளராக உள்ளார். திருகோணமலையில் என்பிபி திசைகாட்டி இரு ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி ஒரு ஆசனத்தையும் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கட்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது இதுவே முதற் தடவையாகும். இந்நிலை யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று நாட்டில் மட்டுமல்ல தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசங்களிலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி யாழில் மூன்று ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி வீடு, தமிழ் காங்கிரஸ் சைக்கிள், ஊசி சுயேட்சைக் குழு தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இத்தேர்தலில் விதிவிலக்காக இலங்கையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் எம் ஏ சுமந்திரனின் நண்பரான இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60,000க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளளார். அவருக்கு அடுத்த படியாக ஞானமுத்து சிறினேசன் முன்னணி வகிக்கின்றார். வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் கூடுதல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி வீடு மூன்று ஆசனங்களையும் என்பிபி ஒரு ஆசனத்தையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய தமிழ்தேசிய அரசியலானது கிழக்கை நோக்கி நகரத்தப்பட்டுள்ளதையே இது காட்டுவதாக பலரும் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பாரம்பரிய தமிழ் ஊடகங்களால் புனையப்பட்ட தமிழ் தேசியவாதக் கதையாடல்கள் எதற்கும் தமிழ் மக்கள் செவிமடுக்கவில்லை. ஜோதிலிங்கம், நிலாந்தன் போன்ற ஊடகவியலாளர்கள் விமர்சகர்களின் கருத்துக்களை வடக்கு கிழக்கு மக்கள் கணக்கில் கொள்ளவில்லை. அதனால் அங்குள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காத தமிழ் மக்களை அறிவற்றவர்கள், துரோகிகள், கற்பனாவாதிகள் என தமக்கு வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை வைக்கின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தனது ஊடகத்தை முடுக்கிவிட்ட ஐபிசி பாஸ்கரனின் கருத்துநிலைப்பாட்டை மக்கள் முற்றாக ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழரசு வீடு எம் ஏ சுமந்திரன் அல்லது சிறிதரன் தங்கள் வீட்டுக்கே அனுப்பப்பட்டுள்ளார்க்ள். ஈபிடிபி வீணை டக்ளஸ் தேவானந்தா, ரஎம்விபி பிள்ளையான் ஆகியோர் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளனர். சங்கு இத்தேர்தலில் தன்னுடைய அத்தனை பாராளுமன்ற ஆசனங்களையும் இழந்துள்ளது. செல்வம் அடைக்கலநாதன் மட்டும் தன்னுடைய ஆசனத்தை தக்க வைத்துள்ளார். வன்னியில் திசைகாட்டிக்கு இரண்டு ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் சங்குக்கு ஒரு ஆசனமும் கங்காருவுக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது. வீட்டிலிருந்து வெளியேறி சங்கில் போட்டியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஜனா ஆகியோர் தங்கள் ஆசனங்களை இழந்தனர். வீட்டிலிருந்து வெளியேறி வெவ்வேறு கட்சிகளிலும் போட்டியிட்ட அனைவரும் தேர்தலில் மண் கவ்வினர். வீட்டிலிருந்து பிரிந்து சென்ற சைக்கிளில் சவாரி செய்து அதிலிருந்து பிரிந்து மானில் நின்றவர்கள் யாவரும் தோல்வியடைந்தனர். சைக்கிளில் டபிள்ஸ் போனவர்கள் இப்போது சிங்கிளாகத்தான் போகவேண்டியுள்ளது. இதில் இனி யார் போறது என்ற சண்டை உருவாகி சைக்கிள் திருப்பியும் உடையலாம் எனவும் தகவல்கள் கசிகின்றது. சைக்கிளில் டபிள்ஸ் சென்ற செல்வராஜா கஜேந்திரன் ஆசனங்களை இழந்துள்ளர். தபால் பெட்டி கட்சியில் நின்ற ராமநாதன் அங்கஜன் முகவரியற்றுப்போனார்.

பத்தாவது பாராளுமன்றத் தேர்தலை கிலுகிலுப்பாக சுவாரஸ்யமாக வைத்திருந்த ஊசிக்குழு இத்தேர்தலில் ஒரு ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளது. அண்மைய வரலாற்றில் சுயேட்சைக் குழவில் ஒருவர் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகியிருப்பது இதுவே முதற்தடவை. நேற்று மத்திய கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையத்துக்குச் சென்றும் அர்ச்சுனா பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார். ஒரு ‘கொமடிப்பீஸ்’ ஆக மாறிவரும் அர்ச்சுனா தனது சொந்தக் குடும்ப விவகாரங்களையும் சமூக வலைத்தளத்திலேயே பதிவேற்றி வருகின்றார். அவருடைய படுக்கையறையும் கழிவறையும் மட்டுமே இன்னமும் சமூகவலைத் தளங்களில் வரவில்லையெனப் பலரும் நகைக்குமளவுக்கு அவர் ஒரு சமூகவலைத்தளப் பிரியராக உள்ளார். மருத்துவ மாபியாக்களை எல்லாம்விட்டுவிட்டு இப்போது அவர் மாப்பிளை மாபியாவாக பாராளுமன்றம் செல்ல உள்ளார். அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கிறாரோ இல்லையோ அரசியலை சுவாரஸ்யமாக்கி தமிழ் மக்களை முட்டாள்களாக்கிவிடுவரோ என்ற அச்சத்தில் பலர் உள்ளனர்.

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழவதும் சராசரியாக மூன்றில் ஒரு மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. தேசிய மக்கள் சக்தி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுவிடும் என்பதால் சிலர் தங்களுடைய வாக்குகள் அவசியமில்லை எனக் கருதியிருக்கலாம். இன்னும் சிலர் வயோதிபம் காரணமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு போய்வருவதற்கான வசதிகள் இல்லாததால் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது விட்டுள்ளனர். மேலும் கணிசமான வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில கட்சிகள் பெற்ற வாக்குகளிலும் பார்க்க செல்லாத வாக்குகள் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் என்பிபி அலையை முடக்கிவிட்டதில் அதன் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் பங்களிப்பு கணிசமானது. ஒரு குறுகியகாலத்தில் தெற்கில் இருந்த என்பிபி அலையை வடக்குக்கும் மடைமாற்றி விட்டவர் இராமலிங்கம் சந்திரசேகர் என்பதை ஜனாதிபதி அனுராவும் யாழ் வந்திருந்த போது குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ் மற்றும் தமிழ் மக்களின் நலன்சார்ந்த வீதிகளைத் திறப்பது, காணிகளை விடுவிப்பது, மாகாணசபையை அமுல்படுத்துவது போன்ற தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களை கட்சியின் மேல்மட்டங்களுக்கு கொண்டு சென்றதில் வடக்கில் ராமலிங்கம் சந்திரசேகரும் கிழக்கில் அருண் ஹேமசந்திராவும் குறிப்பிடத்தக்கவர்கள். இராமலிங்கம் சந்திரசேகர் தேசியப் பட்டியலூடாக பாராளுமன்றம் செல்லவுள்ளார். அருண் ஹேமச்சத்திரா திருகோணமலையிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இருவரும் நவம்பர் 21 இல் கூடும் புதிய பாராளுமன்றத்தில் அமைச்சர்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அருண் ஹேமச்சந்திரா ஜேவிபி – என்பிபி க்குள் வளர்ந்து வருகின்ற மூவின மக்களாலும் வரவேற்கப்படுகின்ற ஒரு தலைவராக வளர்ந்து வருகின்றார். ஒரு காலத்தில் இலங்கையின் ஆட்சிபீடத்திற்கும் அவர் வரலாம் என சிலர் கட்டியம் கூறுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் பாராளுமன்றத் தேர்தல் அது நேற்று முடிவடைந்துவிட்டது. அடுத்து பிரதேச சபைத்தெர்தலுக்கு நாடு தயாராகப் போகின்றது. ”வெற்றி மீது வெற்றி வந்து எம்மைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் மக்களைச் சேரும்” என்ற களிப்பில் உள்ள தேசிய மக்கள் சக்தி ஜனவரியில் பிரதேச சபைத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து மாகாணசபைத் தேர்தலையும் நடாத்த உள்ளது. பாரானுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதால் அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கள்ள ஒரே தடை பொருளாதாரமே. ஆனால் அதற்கான மாற்றுவழிகளை அவர்களால் ஏற்பாடு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். நவம்பர் 21 முதல் பாரிய முன்னேற்றகரமான மாற்றங்களை நோக்கி நாடு நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசம்நெற் எதிர்வு கூறிய பல்வேறு அம்சங்களும் இத்தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.