தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Thursday, December 9, 2021

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

“இலங்கையில் பொலிஸாரினால் தவறாக வழிநடத்தப்படும் நீதிமன்றங்கள்.” – செல்வராசா கஜேந்திரன்

இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

சர்வதேச நாடுகளில் பொலிஸ் மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கும் கவசமாக இருக்கும் நிலையில், இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக அவை செயற்படுகின்றன என அவர் குற்றம் சுமத்தினார்.

பொலிஸ் துறையினால் நீதிமன்றங்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.அவர்கள் தவறாக நீதிமன்றங்களை வழிநடத்துகிறார்கள் எனத் தெரிந்தும் அரசாங்கத்தின் இறுக்கம் காரணமாக நீதிமன்றங்கள் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.அதற்கமைவாகவே, மாவீரர்கள் தின நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பல லட்சம் ரூபாய் ஆலய ஊழல்: வாள் வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நேற்று சரணடைந்தார்!

யாழ் சித்தங்கேணியில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ரஜீவன் நேற்று யூலை 14 இல் சரணடைந்தார். யுலை 11 இல் வாள் வெட்டு இடம்பெற்றது முதல் தலைமறைவாக இருந்த இவர் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவரினால் வாள்வெட்டுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டுக்கு வந்துள்ளார்.

சித்தங்கேணி பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற மாகும்பாபிஷேகத்தையொட்டி உலகெங்கும் இருக்கும் ஆலயத்தின் அடியவர்களிடம் சேகரிக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வாக்கு வாதத்திலேயே ரஜீவன் வாள்வெட்டில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. மகா கும்பாபிஷேகத்திற்கு ஊரில் நிதிப் பங்களிப்புசெய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் வெளிநாடுகளில் இருந்து நிதிப்பங்களிப்பு செய்த பலரின் பெயர்கள் வெளிவரவில்லை. வெளிநாட்டில் இருந்து நிதிப்பங்களிப்புச் செய்தவர்கள் ஆலயத்துடன் தொடர்புகொண்டு தாங்கள் நிதிப் பங்களிப்புச் செய்ததை நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கும்பாபிஷேக நிதி கணக்குகளுக்கு பொறுப்பாக இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ரஜீவன் குழுவினருக்கும் ஆலயத்தின் நிர்வாகத் தலைவராக இருந்த குலரத்தினம் குலசிங்கத்திற்கும் இடையே சிறிதுகாலமாக முறுகல் நிலை காணப்பட்டது.

யூன் 11 மாலை வாள்வெட்டு நடப்பதற்கு முன்னரும் இவர்கள் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டு நேரடியாக பார்த்துக்கொள்வதாக ரஜீவன் குலரத்தினத்திற்கு சவால்விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே அன்றைய தினம் மாலை 3:30 மணியளவில் அருகில் இருற்த சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் ரஜீவன் வாள் கொண்டுவந்து குலரத்தினத்தை தாக்கி உள்ளார்.

ஆலய வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் 2வது நாளாகவும் தலைமறைவு!

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் ரஜீவன் நடத்திய வாள்வெட்டு கோயிலில் இருந்த சிசிரிவி இல் பதிவாகி உள்ளது. அதனை ஆலய அடியவர் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்திருந்தார்.

மேலும் தாக்குதல் நடத்திய ரஜீவன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் ஆகியோரின் புகைப்படங்களையும் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்தார். யூன் 11 மாலை 3:30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தலைமறைவான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் இன்னமும் தலைமறைவிலேயே உள்ளார் என உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் சம்பந்தப்பட்ட இருவரும் தொலைபேசியல் வாக்குவாதப்பட்டு பின் வாளோடு தாக்குதல் நடத்தும் நோக்கத்துடனேயே வந்துள்ளாதாக தோண்றுவதாக கெ யோகச்சந்திரன் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார். சம்பந்தப்ட்ட இருவருமே ஆலய நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் இவ்வாறான செயல்களால் ஆலயத்தின் நன்மதிப்பு மிகவும் பாதிக்கப்படுவதாகவும் யோகச்சந்திரன் தனது அதிருப்தியயை வெளியிட்டார். பொறுப்பற்ற மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் இருக்கக் கூடாது என்பதையும் யோகச்சந்திரன் வலியுறுத்தினார்.

இது விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மாநகரசபை மேயர் மணிவண்ணனும் இன்னமும் மௌனமாகவே உள்ளனர். பட்டப்பகலில் ஆலய வளாகத்தில் வாளால் வெட்டிவிட்டு தப்பித்துக் கொள்ளலாம், யாரும் கேட்க முடியாது என்றுதான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கருதுகிறது என தன்னை அடையாளம் காட்ட விரும்பாத இன்னுமொரு ஆலய அடியார் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

“சர்வதேச சமூகம் எங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும். அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்” – தர்மலிங்கம் சுரேஸ்

“சர்வதேச சமூகம் எங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும். அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (05.01.2021) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியுள்ளதாவது,

“தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டுள்ள இன அழிப்பு விவகாரங்கள் அனைத்தும், ஒரு காலகட்டத்தில் சர்வதேச சமூகத்தினால் விசாரணை செய்யப்படும். அதன்மூலம் சர்வதேச சமூகம் எங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும். அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

தமிழ் மக்களின் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் தரப்புகளையோ தமிழ் மக்களின் போராட்டம் வீணாண போராட்டம் என்று கூறுபவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்ககூடாது. நாங்கள் சுமார் 50ஆயிரம் மாவீரர்களையும் ஒரு இலட்சத்து 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களையும் யுத்தத்தில் இழந்திருக்கின்றோம். இதற்கான சரியான பரிகாரத்தினைப் பெறவேண்டுமானால் தமிழ் மக்களுக்கு சரியான தலைமைத்துவம் தேவை.

கடந்த காலத்தில் அது நடைபெறவில்லை. முள்ளிவாய்க்காலில் போராட்டம் மெளனிக்கப்பட்டு 10வருடங்களை கடந்துள்ள நிலையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் தமிழ் தலைமைத்துவத்தினால் முன்னெடுக்கப்படவில்லை.

தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவுசெய்த தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்த காலத்திலும் தற்போதைய காலத்திலும் உள்ள அரசாங்கங்களை பாதுகாத்து சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பவைத்துள்ளார்களே தவிர பூகோள அரசியல் நிலைமைக்கு ஏற்ப தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை.

மாறாக இந்த அரசாங்கத்தினையும் போரில் குற்றமிழைத்தவர்களையும் சர்வதேச விசாரணைகள் ஊடாக விசாரிக்கப்படவேண்டியவர்களையும் பாதுகாத்துள்ளார்களே தவிர இதுவரையில் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.

இன்றுள்ள அரசியல் தலைமைகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று தமிழ் மக்களின் அரசியல் இருப்பினையும் தமிழ் மக்களுக்கு நடந்த அநியாயங்களையும் இனப்படுகொலை விவகாரங்களையும் வெளிப்படையாக சர்வதேசமும் தென்னிலங்கை மக்களும் அறியும் வகையில் தனது கருத்துகளை பதிவு செய்து வருகின்றார். ஜெனிவா விவகாரத்தில் கூட தமிழ் மக்களின் குரல் ஒன்றாக ஒலிக்கவேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு முடிவினை எடுத்துள்ளார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் முகமாக எந்த தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செல்வதற்கு தயாராகயிருக்கின்றோம்.

மாறாக இந்த அரசாங்கத்தினை பாதுகாக்கும் வகையிலும் தமிழ் மக்களுக்கு நடந்த அநீயாயங்களை மூடிமறைக்கும் வகையிலும் நகர்வுகளை மேற்கொண்டால் அவ்வாறானவர்களுடன் என்றைக்கும் கூட்டிணைந்து செயற்படமாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.