திரிபோஷா

திரிபோஷா

வழமைக்கு திரும்பியது திரிபோஷா உற்பத்தி விநியோகம் – 13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி !

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் தற்போது மாதமொன்றுக்கு 13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார் .

 

ஒரு மாதத்திற்குத் தேவையான திரிபோஷவை உற்பத்தி செய்ய 15 கிலோ மெற்றிக் தொன் சோளம் தேவைப்படுவதாகவும், அதனை உள்நாட்டில் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

 

பெரும்பாலான உள்ளூர் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டாலும், அறுவடைக்கு பின் தேவையான தொழில்நுட்ப அறிவு இல்லாததால், சரியான தரத்துடன் சந்தைக்கு பயிரை வழங்க முடியாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

மாதாந்தம் 19 இலட்சம் திரிபோஷ பொதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் 13 இலட்சம் பொதிகளை தயாரிக்கமுடிவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தேவையான அளவு சோளம் கிடைத்தால் 19 இலட்சம் பொதிகளையும் தொடர்ச்சியாக 20 நாட்களுக்குள் இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

ஒரு வருடமாக முடங்கிப் போயுள்ள திரிபோஷா திட்டம் !

திரிபோஷா உற்பத்தி மீண்டும் தொடங்கும் வரை, ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு மாற்று உணவாக முட்டை அல்லது பிற தானியங்களை வழங்குமாறு அரசாங்கத்தின் குடும்ப நலச் சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோருகிறது.

ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவது சுமார் ஒரு வருட காலமாக முடங்கியுள்ளதாக சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் திரிபோஷா கொடுக்கும் வரை, முட்டை, தானியங்கள் மற்றும் பிற சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு மாற்று உணவாக வழங்குவது முக்கியம் என்று குடும்ப நலச் சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

குழந்தைகளுக்கான திரிபோஷா தயாரிப்பதற்கு ஏற்ற சோளத்தை பெற முடியாத காரணத்தால், திரிபோஷ தயாரிக்க முடியாது என திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கிடைக்கும் மக்காச்சோளத்தின் இருப்பு திரிபோஷா தயாரிப்பிற்கு ஏற்ற தரத்தில் இல்லை என்றும் நிறுவனம் குறிப்பிடுகிறது.

தாய்மார்களுக்கான திரிபோஷாவில் நச்சுத்தன்மை என்பதில் உண்மை இல்லை – சுகாதார அமைச்சர் கெஹலிய

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திரிபோஷ தயாரிப்பு நிறுவனம் அவற்றை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், திரிபோஷாவை வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
திரிபோஷ உற்பத்தி நடவடிக்கையின்போது, அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என்றும், அதற்கமைய குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
திரிபோஷா தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

மூடப்பட்டது ‘திரிபோஷா’ தொழிற்சாலை !

தானியங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்திற்கு சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவே திரிபோஷா ஆகும்.

சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ள நிலையில் திரிபோஷவை உற்பத்தி செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் சோளம் அறுவடை செய்யப்பட்டவுடன் புதிய இருப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இதேவேளை நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு மிக சிக்கலான பிரச்சினையாக எதிர்காலத்தில் மாறும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்கிறது என வைத்தியர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.