நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த அனுமதிக்க கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டத்தரணி மணிவண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் திலீபனின் நினைவிடத்திற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில்,இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இதன் போது சட்டத்தரணி மணிவண்ணன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சியில் உள்ள வழக்கொன்றுக்காக சென்றதால் இந்த வழக்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
அத்துடன் எதிராளிகள் தரப்பில் மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தலைமையில் சட்டத்தரணிகள் திருக்குமரன், மகிந்தன், றமணன், ரிசிகேசன், கௌதமன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையானார்கள்.
இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் ஏ.ஆனந்தராஜா, 2011ஆம் ஆண்டு புலிச் சின்னங்களைப் பயன்படுத்த தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது .எனினும் இறந்தவர்களின் நினைவேந்தல் நடத்த தடை இல்லை. இதன் பின்னர் 13 வருடங்களாக மக்கள் நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர். அவற்றைத் தடுப்பதற்கு ஜனாதிபதியோ, பாதுகாப்பு அமைச்சோ, பாராளுமன்றமோ எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்து வருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் காலம் என்பதால், அதைக் கருத்திற்கொண்டு அஞ்சலிக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் பொலிஸார் கோரினார்கள்.இதற்கு, தேர்தல் காலத்தின்போது வாகனப் பேரணிகள் நடத்துவதற்கு மட்டுமே தடை விதிக்க முடியும் என்று தெரிவித்த நீதிவான் அவ்வாறு வாகனப் பேரணிகள் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதங்களை எதிர்த்தரப்பினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அத்துடன் வழக்கை நீதிவான் முடிவுறுத்தினார்.
“மேலும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கும் அதிகாரம் பொலிஸாரிடம் இருப்பதால், இது தொடர்பில் பொலிஸாரே இறுதி முடிவை எடுக்கலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றுப் பகுதியில் வைத்து மறித்த சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை குறித்த வாகன ஊர்தி இடம்பெற்றபோதே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு 15ம் திகதி தொடக்கம் 27 ம் திகதிவரையில் திலீபன் வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் பொத்துவில் இருந்து யாழ் நல்லூர் திலீபன் பூங்கா வரையிலான அவரின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு பொத்துவில் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தலில் வணபிதா சக்திவேல், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன். கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி காண்டீபன், மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு திலீபனின் உருவப்படத்தின் முன்னாள் ஈகை சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி வாகன ஊர்தியை ஆரத்பித்து வைத்தனர்.
பொத்துவில் இருந்து திருக்கோவில் வரையுள்ள கோமாரி, ஊறணி, சங்கமம்கண்டி திருக்கோவில் வரையும் வீதிகளில் வாகன ஊர்திக்காக காத்திருந்த மக்கள் அதனை வீதிகளில் மறித்து திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து கல்முனையை நோக்கி அக்கரைப்பற்றின் ஊடாக மாலை 5 மணியளவில் பயணித்து வாகன ஊர்தியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் திடீரென 7 பேர் கொண்ட ஒரு குழுவினர் வீதியால் சென்ற வாகன ஊர்தியை வழிமறித்து இலங்கையின் தேசியக் கொடியுடன் புலிகளின் மிருகத்தனமான சித்தாந்தங்களை எமது கிழக்கு மாகாண அமைதியான சமூகத்திற்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கமாட்டோம்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக புலிகளின் கொடூர கொலைகளை வன்மையாக கண்டிக்கின்றோம், அக்கரைப்பற்று முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள் நடாத்திய அட்டூழிங்களுக்கு எதிராக விசாரணை நடாத்துமாறு சர்வதேசத்தையும் யு.என்.எச்.சி.ஆர், வலியுறுத்துகின்றோம் என சுலோகங்கள் ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களுடன் சுமார் 5 நிமிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில் வாகன ஊர்தி அங்கு ஒர் இரு நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டதுடன் மாற்று வீதியால் வாகன ஊர்தியை பயணித்து கல்முனை பாண்டிருப்யை சென்றடைந்தது.
அங்கு வீதியில் ஊர்திக்காக காத்திருந்த மக்கள் ஊர்தியை மறித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதையடுத்து அம்பாறை மாவட்ட ஊர்தி பவனி நிறைவுக்கு வந்திருந்தது. இன்றையதினம் சனிக்கிழமை இரண்டம்நாள் கஞவாஞ்சிக்குடியில் வாகன ஊர்தி ஆரம்பித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு சென்று அங்கிருந்து வாகரை ஊடாக திருகோணமலையை சென்றடையவுள்ளது.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 14 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 16:
தேசம்: 83 க்குப் பிறகான காலகட்டம், ஈழவிடுதலை அரசியலைப் பொறுத்தவரைக்கும் கடுகதி வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த அரசியல் தானே. அரசியல் நகர்வுகள் அல்லது அந்த அரசியல் சூழல் வேகமாக மாறிக் கொண்டிருந்தது. 84 இந்திராகாந்தி மரணம் அடைந்தார். அதற்குப் பிறகு இலங்கை ராணுவம் திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொண்டது. 15 பேர் கொல்லப்படுகிறார்கள். ஒதிய மலையில் கொல்லப்படுகிறார்கள். அதேபோல தமிழீழ விடுதலை இயக்கங்கள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கினம். இன உணர்வு என்பது மிகக் கொதிநிலையில் இருந்த காலங்கள். இந்த காலப்பகுதியில் சகோதரப் படுகொலைகளும் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மிகவும் உக்கிரமாக பேசப்பட்ட படுகொலை, சுழிபுரம் 6 பேரின் படுகொலை. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது அனுதாபிகள் ஆறு பேர் கொல்லப்பட்டது. எந்தவிதமான விடயங்கள் இந்த படுகொலைகளை நோக்கி நகர்த்தி இருக்குது. அந்த நேரம் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். யார் அந்த நேரம் புளொட்டுக்குப் பொறுப்பாக இருந்தது?
அசோக்: அந்த காலகட்டத்தில் தோழர் கேசவன் தளப் பொறுப்பாளராக இருந்தார். மாவட்ட பொறுப்பாளராக தோழர் நேசன் இருந்தவர். இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஸ் இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பின் தளத்திலிருந்து படைத்துறைச் செயலர் கண்ணன் யோதீஸ்வரனும் வந்து நின்றவர். 84 டிசம்பர் காலகட்டம் என்று நினைக்கிறேன், இந்த காலத்தில் சுழிபுரத்தில் உமாமகேஸ்வரனும் வந்து தங்கி இருந்தார்.
தேசம்: அதால தான் படைத்துறைச் செயலர் உட்பட முக்கியமான ஆட்கள் எல்லாம் வந்து நின்றவை…
அசோக்: அதற்கு முதலே படைத்துறைச் செயலர் கண்ணன் வந்துட்டார். வந்து தளத்தில் சந்திப்புகள் எல்லாம் செய்து கொண்டிருந்தவர். அதற்குப் பிறகுதான் உமாமகேஸ்வரன் வாறார். வந்து சுழிபுரத்தில் தான் தங்கி இருக்கிறார். அது ஒரு ரகசியப் பயணம் தான். யாருக்குமே சொல்லப்படாமல் வந்த ரகசியப் பயணம். கிளிநொச்சி வங்கி கொள்ளை நகையின் ஒரு பகுதியை உமாமகேஸ்வரன் தன் பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் புதைத்து வைத்திருந்தார். அதை எடுக்கவே இந்த ரகசிய பயணம். வந்த உமாமகேஸ்வரனுக்கான பாதுகாப்பை புளொட்டின் ராணுவப் பிரிவு சங்கிலி – கந்தசாமி தலைமையில் சுழிபுரத்தைச் சேர்ந்த ஆட்கள்தான் கொடுக்குறாங்க.
தேசம்: சுழிபுரம் அந்த நேரம் புளொட்டின் ஒரு கோட்டையாகவும் இருந்தது?
அசோக்: பூரண பாதுகாப்பாகவும் அந்த இடம்தான் இருந்தது. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 6 பையன்கள் சுவரொட்டி ஒட்ட போயிருக்கிறார்கள். அந்தப் பையன்களை இவங்கள் உளவு பார்க்க வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்து படுகொலை செய்து புதைசிட்டாங்க. யாருக்குமே தெரியாது. இந்தப் படுகொலை நடந்து இரண்டு மூன்று நாட்களில், தங்களின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இந்த மாணவர்களை காணவில்லை என்று சொல்லி புலிகள் தேட தொடங்கிட்டாங்க. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்புக்கு பொறுப்பாக இருந்தது திலீபன்.
தேசம்: திலீபன் அப்ப உங்கட பேனா நண்பர்…
அசோக்: திலீபன் பேனா நண்பர் இல்லை. புலிகளில் இருந்த என் பேனா நண்பியின் மூலம் ஏற்பட்ட உறவு. இது பற்றி முன்னர் கதைத்திருக்கிறன். எங்களிட்ட தனிப்பட்ட உறவு இருந்தது, கதைப்பம் பேசுவோம். தனிப்பட்ட பிரச்சனை எல்லாம் கதைக்கக் கூடிய உறவு ஒன்று இருந்தது. திலீபனின் மூத்த அண்ணன் ஒருவர் புளொட்டில் பின் தளத்தில் இருந்தவர். பிற்காலத்தில் திலீபன் பற்றி விமர்சனங்கள் வரும்போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இவனா என்று சொல்லி. அந்தக் காலகட்டத்தில் திலீபனிடம் வித்தியாசமான குணாதிசயங்கள் இருந்தது. திலீபன் அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாக இருந்தவர்.
சுழிபுரம் பக்கம் போன இந்த மாணவர்களை காணவில்லை என்றவுடன், இவங்களுக்கு சுழிபுரம் புளொட் ஆட்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. அவங்க கைது செய்திருப்பாங்க என்ற சந்தேகம் இவங்களுக்கு வந்து விட்டது. அந்த நேரம் உமாமகேஸ்வரன் அங்க வந்து நிற்கிறது இவங்களுக்கு தெரியாது.
தேசம்: திலீபன் ஆட்களுக்கு…
அசோக்: ஒம். உண்மையிலேயே அவர்கள் உளவு பார்க்க போக வில்லை. சுழிபுரத்தை அண்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சேர்ந்த பையன்கள் அவர்கள். விக்டோரியா கொலேஜ்சில் படித்துக் கொண்டிருந்தவர்கள். சுவரொட்டி ஒட்டுவதற்காகத்தான் போய் இருக்கிறார்கள். அவங்களுக்கு உமாமகேஸ்வரன் வந்து நிற்கும் விடயம் எதுவுமே தெரியாது.
பிறகு யாழ்ப்பாண யுனிவர்சிட்டியில் மாணவர்கள் மத்தியில் இப்பிரச்சனை வருகின்றது. யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளில் ஒன்று இருந்தது என்ன என்றால், பிரச்சனை என்றால் கதைக்கலாம். உரையாடல் தளம் ஒன்று இருந்தது எல்லோர் மத்தியிலும். அப்போ திலீபன் ஆட்கள் வந்து கதைக்கிறார்கள், சுழிபுரம் பகுதிகளுக்கு சுவரொட்டி ஒட்ட போன மாணவர்களைக் காணவில்லை என்று சொல்லி. முகுந்தன் வந்து நிற்பதை இந்த நேரத்தில அவர்கள் அறிந்து விட்டனர். அப்ப அவங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. புளொட்தான் கைது செய்திருக்கும் என்று.
சுழிபுரம் புளொட் ஏரியா. அதற்குள் இவர்கள் சென்று விசாரிக்க முடியாது. என்னைத்தான் சென்று விசாரிக்க திலீபனும், கிட்டுவும் கூப்பிடுகிறார்கள். நான், சுழிபுரம் போய் விசாரித்து விட்டு வாரன் என்று இவர்களிடம் சொன்னேன். தாங்களும் வருவதாக சொன்னாங்க. நானும், திலீபனும், கிட்டுவும் அங்கு போகின்றோம். புளொட் ராணுவம் வளைத்து நிற்கிறது. சித்தன்கேணி கோயிலடியில் சந்தியில சென்ரி நின்ற ஆட்களை கேட்டதும், அப்படி யாரும் வரவில்லை என்று சொல்லிப் போட்டாங்க. ரெண்டு பக்கமும் பெரிய வாய்த்தர்க்கம். புளொட் காரங்க மிக மோசமாக நடந்து கொண்டாங்க. இவங்களை கூட்டி வந்ததற்கு என்னையும் பேசினாங்க. நான் இடையில நின்று சமாதானப்படுத்தி திலீபனையும், கிட்டுவையும் கூட்டிட்டு வந்துட்டேன். வரும்போது அவங்க சொன்னாங்க, அவர்களுடைய கதைகள் பேச்சிலிருந்து புளொட் தான் ஏதோ செய்திருக்கு என்று தாங்க நம்புவதாக. அவங்கள் ஒரு முடிவுக்கு வந்துட்டார்கள் புளொட் தான் ஏதோ செய்து விட்டது என்று…
தேசம்: திலீபனும், கிட்டுவும் ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க
அசோக்: ஓம். பிறகு தோழர் கேசவனிடம் நான் போய் நடந்த முழு கதையும் சொன்னேன். அந்த நேரம் கேசவன் சொன்னார், புளொட் கைது செய்திருக்காது, எதுக்கும் நான் சுழிபுரம் போய் விசாரித்து கொண்டு வாரேன் என்று சொல்லி, சுழிபுரம் போனவர். போயிட்டு வந்து சொன்னார், புளொட் கைது செய்யல என்றுதான் சொல்லுறாங்கள் என்று. அந்த நேரம் படைத்துறைச் செயலர் கண்ணனும் சுழிபுரம் போய் விசாரிக்கின்றார். அவரும் வந்து, கேசவன் தோழர் சொன்ன மாதிரியே சொல்கிறார். அப்ப கொந்தளிப்பான காலகட்டம். மக்களுக்கு, எங்க தோழர்களுக்கு இச் சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்த துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிட வேண்டும் என்று சொல்லி கண்ணன், நேசன் எல்லாருடைய முடிவோடையும் துண்டு பிரசுரம் ஒன்று அடிக்கப்படுது, ஒன்றுபட்டு செயற்படுவோம் என்ற தலைப்பில.
தோழர் கேசவன்தான் அந்த துண்டுப் பிரசுரத்தை எழுதுகின்றார். அதன்ற உள்ளடக்கம் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. காணாமல் போன மாணவர்கள் தொடர்பான விடயத்தில், புளொட்டிக்கு எந்த சம்பந்தமும், தொடர்புகளும் இல்லை என்றும், இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் எழுதப்பட்டதாக நினைக்கிறன்.
தேசம்: அந்த துண்டுப் பிரசுரம் வரேக்க அவர்களுடைய உடல் எடுக்கப்பட்டுட்டுதா?
அசோக்: இல்லை இல்லை. அந்த நேரம் எதுவுமே தெரியாது. என்ன நடந்தது என்றே தெரியாது. அந்த காலகட்டத்தில் தான் இந்த துண்டுப் பிரசுரம் வருகிறது. நாங்களும் உண்மையாவே நம்புறோம் புளொட் செய்ய வில்லை என்று.
பிறகு உடல் தோண்டி எடுக்கப்படுது. உமாமகேஸ்வரன் பின் தளம் போனதற்குப் பிறகு, அந்த இடங்களெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் போகுது. பிறகு நாய்கள் கடற்கரையில் மோப்பம் பிடித்து தோண்டிய இடத்தில் உடல்கள் காணப்படுது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களும் பார்த்திருக்கிறாங்க அவங்கதான் படங்கள் எடுத்தார்கள் என்று சொன்னார்கள்.
தேசம்: நான் நினைக்கிறேன் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இல் இருந்த கொன்ஸ்ரன்ரைன் இப்ப லண்டனில் இருக்கிறார். அவர் அந்த காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் ஈழமுரசில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அந்தப் படத்தை அவர்தான் எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அசோக்: எனக்கு நல்ல ஞாபகம், இந்த சம்பவம் நடந்ததற்கு பிறகு, நான் நீர்வேலி என்ற கிராமத்தில் இருந்தன். திலீபன் என்னை தேடி வந்தவர். அதுக்கு முதல் திலீபன் கிட்ட நான் சொல்லிட்டேன் மாணவர்கள் காணாமல் போனதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று. ஆனால் அவங்களுக்கு சந்தேகம் இருந்தது. அப்ப திலீபன் என்னை கண்டதும் அழத் தொடங்கிட்டார். படத்தை காட்டி சொன்னார், இப்ப என்ன சொல்லுறீங்க? நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள். சுழிபுரத்தில் தான் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கு என்று சொல்லி. எதுவுமே கதைக்கல நான். என்ன கதைக்க முடியும்? கதைக்க வார்த்தையும் வரல. ரெண்டு பேருக்குமான உறவு அதோட முடிந்து போயிட்டது. இறந்து போன மாணவர்களை புலிகளின் மாணவர் அமைப்பினுள் கொண்டு வந்தது திலீபன்தான். இவங்களோடு நெருக்கமாகவும் இருந்துள்ளார்.
தேசம்: இந்த திலீபன் தான் பின்னாட்களில் உண்ணாவிரதம் இருந்தவர்?
அசோக்: உண்ணாவிரத திலீபன். பிற்காலத்தில் திலீபனுடைய வாழ்க்கை முறையும் வேறயா போயிட்டுது. டெலோ அழிப்பில் முன்னுக்கு நின்றவர் என்டு சொல்லி பயங்கர குற்றச்சாட்டுகள்.
தேசம்: அப்போ எப்ப உங்களுக்கு தெரியும் இதில் புளொட் ஈடுபட்டது என்று சொல்லி?
அசோக்: சுழிபுரத்துக்குள்ள தானே இது நடந்திருக்கு. எனக்கு டவுட் வந்துட்டுது இவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லி. அன்றைக்கு கிட்டு, திலீபனுடன் நடந்த உரையாடல் ஆரோக்கியமாக இருக்கல. இவங்கள் நிதானமாக கதைத்தவங்கள். புளொட் ஆட்கள் அதுல நடந்துகொண்ட முறை சரியான பிழை. அப்பவே கொஞ்சம் சந்தேகம் இருந்தது.
தேசம்: யார் யார் அதில் சார்பாக உரையாடலில் ஈடுபட்டது.
அசோக்: அதுல சங்கிலி உட்பட பெரிய குழு. அவங்களோட பெயர் ஞாபகம் இல்லை இப்போது. எப்படி நீ இவங்கள கூட்டிட்டு வருவாய், எங்க ஏரியாக்குள்ள புலிகளை எப்படி கூட்டிட்டு வருவாய் என்று சொல்லி என் மீது படு கோபம். மிக மோசமாக நடந்துகொண்டனர். அப்ப அவங்களை பொறுத்தவரை புளொட்டின்ட ஏரியா, இவங்களை எப்படி கூட்டிட்டு வரலாம் என்றுதான். மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்கள்.
தேசம்: அந்தக் காலகட்டத்தில் மீரான் மாஸ்டர் எல்லாம் அங்கு முன்னணியில் இருந்த உறுப்பினர்கள் என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக நீங்கள் யாருடனாவது கதைத்தீர்களா?
அசோக்: பிற்காலத்தில் மீரான் மாஸ்டரை நான் இங்க பாரிசில் சந்தித்தேன். அப்ப அவர் நோர்வேயில் இருந்தவர். எனக்கு மீரான் மாஸ்டரும் அதில் சம்பந்தப்பட்டவர் என்று படுகோபம் இருந்தது. அவரை சந்திக்கவே நான் விரும்பவில்லை. பிறகு பிரண்ட்ஷிப்பா சந்திக்கலாம் என்றுதான் சந்தித்தேன்.சந்தித்த இடத்தில் சுழிபுரம் தொடர்பான கதை வந்தது. மிக மறுத்தார் அவர். சம்பவம் நடந்த இடத்தில் அவர் இருந்திருக்கிறார். சங்கிலி கந்தசாமி ஆட்களோடு சண்டை பிடித்திருக்கிறார்.
தேசம்: சம்பவம் நடந்த நேரத்திலா?
அசோக்: ஓம். அவருக்கு அவர்கள் அப்பாவி பையன்கள் என்று தெரியும்.
தேசம்: அவருடைய மாணவர்களா?
அசோக்: நான் நினைக்கிறேன் அவருக்கு தெரிந்த மாணவர்களாக இருக்கலாம். இவர் பயங்கரமாக சண்டை பிடித்து இருக்கிறார், செய்யக்கூடாது என்று சொல்லி. அப்ப சங்கிலி மற்ற ஆட்கள் எல்லாம் இவரை சுட வெளிக்கிட்டு இருக்கிறார்கள். இந்த இடத்தை விட்டுப் போ, இல்லாவிட்டால் உன்னையும் சுட வேண்டி வரும் என்று சொல்லி இருக்காங்க. இவரை வெளியேற்றிப் போட்டுத்தான் இந்த சம்பவங்கள் நடந்திருக்கு. மீரான் மாஸ்டர் இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும்போது நான் நம்பவில்லை. ஆனால், பிற்காலத்தில் வேற ஆட்கள் இந்த சம்பவம் பற்றி கதைக்கும் போது, இப்படி மீரான் மாஸ்டர் சண்டை பிடித்தவர் என்று சொல்லியும், அதில் மீரான் மாஸ்டருக்கு தொடர்பில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் மீரான் மாஸ்டர் அதில் தொடர்பு என்று சொல்லித்தான் வதந்தி. மீரான் மாஸ்டருக்கு பிடிக்காதவர்கள் அந்த குற்றச்சாட்டை பரப்பிவிட்டுட்டாங்கள்.
தேசம்: இந்தப் படுகொலை விஷயத்தில் உமா மகேஸ்வரன் அந்த பகுதியில் இருந்ததால்தான் இது நடந்தது என்று சொல்லப்படுது. அவர்கள் விசாரிக்கப்பட்டு சுடப்பட்டு, மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு, அவர்களது உடல்களும் வெட்டப்பட்டு இருந்திருக்கு. அது இலங்கை ராணுவம் செய்கின்ற கொடுமையிலும் பார்க்க மிக மோசமான கொடுமை.
அசோக்: பயங்கரமாக சித்திரவதை செய்து தான் கொலை செய்திருக்கிறார்கள். இந்த சித்திரவதை மனோபாவம் ஒரு விடுதலை இயக்கத்தில் இருக்கிறது என்பதே பெரிய அதிர்ச்சியான விஷயம்தான். இதுதான் காலப்போக்கில் பயிற்சி முகாம்களில் சித்திரவதை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கு. உண்மையிலேயே இந்த நபர்களை பார்த்தீர்களென்றால், இவங்கள் எப்படி புளொட்டுக்குள்ள வந்தார்கள் என்றே தெரியாது. சங்கிலியை கொண்டு வந்தது சந்ததியார். வவுனியாவில் கடையில வேலை செய்து கொண்டிருந்தவர். இவங்கள் சண்டியர்கள் ஆக இருந்தார்களேயொழிய…
தேசம்: கொண்டு வாறத்துல பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு அரசியல் விழிப்புணர்வும் கொடுக்கல.
அசோக்: என்னதான் அவங்கள் பிழையான திசையிலிருந்து வந்தாலும் கூட, அவங்களை அரசியல் கல்வி ஊட்டி, நல்வழிப்படுத்தி இருக்கலாம். புளொட்டினுள் கொலைகளையும், சித்திரவதைகளையும் செய்த நபர்கள் பலர் தோழர் சந்ததியாரினால் இயக்கத்தினுள் கொண்டு வரப்பட்டவங்க. இதைப்பற்றி முன்னமே சொல்லி உள்ளேன். இவர்கள் தனிநபர் விசுவாசிகள் ஆக்கப்பட்டு, பிற்காலத்தில் முகுந்தனால் பயன்படுத்தப்பட்டார்கள். சங்கிலி கந்தசாமியோட பழகின ஆட்களை காலப்போக்கில் சந்திக்கும்போது தனிப்பட்ட வகையில் மிக நல்லவர் என்று தானே சொல்கிறார்கள். ஆனால் அவர் மிகக்கொடூரமான கொலை கார மனுஷனாக இருந்திருக்கார் . உளவியல் சார்ந்த நோயாகவே போயிட்டுது இந்த கொலைகள்.
வரலாற்றில் பார்த்தோமானால் இப்படிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகையில் தங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லவர்களாக பண்பானவர்களாகத்தான் இருந்திருக்காங்க. இது ஒருஉளவியல் சார்ந்த பிரச்சனை. புளொட்டில் பலர் கொடுர சாடிஸ்டுகளா இருந்திருக்காங்க. உண்மையில இதை அமைப்பு சார்ந்த பிரச்சனையாகத்தான் பார்க்க வேணும். ஆயுத இயக்கங்கள் அரசியல் சித்தாந்த மார்ச்சிய வழிகாட்டல் இல்லாமல், அரசியல் கல்வி இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறையில்லாமல், இயக்கம் நடாத்த வெளிக்கிட்டால் இப்படி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.
தேசம்: இந்தப் படுகொலை தொடர்பாக மத்திய குழுவில் பேசப்பட்டிருக்கா?
அசோக்: விவாதம் எல்லாம் நடந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்று சொல்லி. ஏனென்றால் சங்கிலி கந்தசாமி மத்திய குழுவில் இருக்கிறார் தானே.
தேசம்: வேற யார் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஆட்கள்.
அசோக்: வெங்கட் என்று நினைக்கிறேன். மத்திய குழுவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கல.
“கைதுகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடக்க முடியாது.” என தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று திலீபனுடைய நினைவுத்தூபி அமைந்திருந்த இடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் மேலும் இருவரையும் கைது செய்ததுடன் சில பெண்களையும் தாக்கி மிகக் கீழ்த்தரமாக காட்டுமிராண்டித்தனமாக பொலிசார் நடந்துகொண்ட காணொளி காட்சிகளை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. உலகத்திலே நினைவேந்தல் உரிமையை மறுப்பது என்பது ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கையாகும்.
ஆட்சித் தலைவரான ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் உரையாற்றி விட்டு அங்கிருக்கின்ற நேரத்தில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் தடையுத்தரவு இன்று ஆரம்பிப்பதற்கு முந்தைய தினமே பொலிஸார் தடைபோட ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடக்க முடியாது. எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் கட்சி பேதங்களைக் கடந்து நினைவேந்தல்களை பாரியளவில் செய்வதுதான் இவர்களுக்கான சரியான பதிலடியாக இருக்கும் என்றார்.
ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர். வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும், தேசத்தின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ரெலோ அமைப்பின் தலைவரை கொன்றது யார் என்பதை வெளிப்படுத்த முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பாராளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
நாங்கள் பகிரங்கமாகவே சொல்லி வந்திருக்கின்றோம். அது ஒரு சகோதரப் படுகொலை. விடுதலைப் புலிகள் தான் எமது ரெலோ இயக்கத்தின் தலைவரான ஸ்ரீசபாரத்தினத்தினை கொலை செய்தார்கள். இது உலகறிந்த உண்மை.
பாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு புதிதாக சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. நாங்கள் ஏற்கனவே அதனை சொல்லியிருந்தோம். விடுதலைப் புலிகள் இருக்கின்ற போதும் நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றோம். உண்மையை நாம் மறக்க முடியாது. இதனை நாம் வெட்ட வெளிச்சமாக சொல்லிக் கொள்கின்றோம்.
வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும் இந்த தேசத்தின் விடுதலைக்காக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம்.
இதேவேளை போராட்டத்தின் உச்சகட்டத்தில் இலங்கை அரசாங்கம் போராடிக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் விடயத்தில் கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் மெத்தனப்போக்கினை காட்டியமையினாலேயே இந்த நிலமை உருவாகியுள்ளது.
மக்களை பாதுகாப்பதில் இருந்து அவர்கள் தவறியிருக்கின்றனர். வைரஸை தடுப்பதற்காக களனிப்பாலத்தில் முட்டிகளை போட்டு மூடநம்பிக்கைகளை கொண்டுள்ளவர்களை இந்த அரசாங்கம் அமைச்சர்களாக வைத்துள்ளது. எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் மெத்தனப்போக்கினையே காட்டி வருகின்றது.
வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் வடக்கில் நடக்கும் போது தென்னிலங்கையில் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள். ஆனால் இன்று தென் இலங்கையில் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது. இவ்வாறான சம்பவங்களை யாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்பது எனது கருத்து என்றார்.