திலும் அமுனுகம

திலும் அமுனுகம

“மக்களின் துயர்துடைக்கவே கோட்டாபய ராஜபக்ச ஆட்சி பீடமேறினார்.” – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, மக்களின் துயர் துடைக்கவே ஆட்சிப்பீடம் ஏறியது. மக்களின் வயிற்றில் அடிப்பது இந்த அரசின் நோக்கமல்ல.” என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலையில், மக்கள் மீது சுமையை இறக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா என்று கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாளுக்கு நாள் எரிபொருள் விலை அதிகரிக்குமானால் அது பாரிய பிரச்சினையாக மாறிவிடும். டீசலின் விலையை  அதிகரித்தால் பஸ் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும். எரிபொருள் விலையை அதிகரிப்பது அவசியம் என்றாலும் தற்போதைய நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படக்கூடாது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால், பஸ் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினை ஏற்படும். கடந்த காலங்களில் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று பஸ் உரிமையாளர்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும், நாட்டின் தற்போதைய நிலையில், மக்கள் மீது சுமையை இறக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்கள் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவில்லை.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் துயர் துடைக்கவே நாம் ஆட்சிப்பீடம் ஏறினோம். மக்களின் வயிற்றில் அடிப்பது எமது நோக்கமல்ல. எதிரணியினரின் ஆசைகள் நிறைவேற நாம் ஒருபோதும் இடமளியோம்- என்றார்.

“ஜனாதிபதியையும் ஹிட்லரையும் இணைத்து கூறப்பட்ட கருத்து இராஜாங்க அமைச்சருடைய தனிப்பட்ட கருத்தேயாகும்.” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

“ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரைப் பற்றி இராஜாங்க அமைச்சர் ஒருவர் அண்மையில் வெளியிட்ட கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல.” என அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பாகும். அவர் அவ்வாறு செயற்படாமையின் காரணமாகவே அவர் மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையிலேயே மேற்குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஹிட்லர் ஆகியோரைப் பற்றி தெரிவிக்கப்பட்டது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார். இந்த கருத்து அரசாங்கத்தின் கூட்டு நிலைப்பாடு அல்ல என்றும் அரசாங்கத்தின் முன்னோக்கு என்று கருதக்கூடாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில் அவை தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்து இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதுவருடன் முரண்பாட்டை ஏற்படுத்தாது என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.

“ஜனாதிபதிக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் அவர் ஹிட்லரைப் போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர்.” – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் அவ்வாறு செயற்படாமையின் காரணமாகவே அவர் மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது” எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஏதேனுமொரு வகையில் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பார் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர்.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு ஹிட்லரைப் போன்று செயற்படாமையின் காரணமாகவே அவர் மீது குற்றஞ்சுமத்துகின்றனர். எவ்வாறிருப்பினும் தற்போது நாட்டிலுள்ள சில துறைகளின் செற்பாடுகளால் ஜனாதிபதி ஹட்லராகும் நிலைக்கு தள்ளப்பட்டால் அவர் அவ்வாறு செயற்பட வாய்ப்புள்ளது என்று நான் எண்ணுகின்றேன். அவ்வாறெனில் யாரும் அவர் மீது குற்றஞ்சுமத்தமாட்டார்கள்.

தேர்தல் காலத்தில் மகா சங்கத்தினரும் ஹிட்லர் ஆட்சியானாலும் கவலையில்லை என்றவாறான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். ஜனாதிபதிக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் அவர் ஹிட்லரைப் போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர்.

எனினும் அவ்வாறு ஆட்சியை முன்னெடுக்க ஜனாதிபதி விரும்புவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. மாறாக அவர் அந்த நிலைக்கு தள்ளப்பட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்றார்.